நுவ்வை

பிரெஞ்சு எழுத்தாளரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான ஜீன் க்ளாட் காரியரின்(jean claude carrier) நேர்காணல் ஒன்றை கண்டேன். அதில் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் தொன்றுதொட்டு பின்பற்றிவரும் ஒரு பழக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் போது அந்தச் சந்தோஷத்தின் அடையாளமாக ஒரு மரம் வைக்கப்படுமாம்.

காரியர் பிறந்த போது அவரது தந்தை வால்நட் மரத்தை வைத்திருக்கிறார். அது பதினெட்டு ஆண்டுகள் வளர்ந்து பின்பு விழுந்துவிட்டது என்கிறார் காரியர்.

அத்தோடு காரியர் தனது மகள் இருவர் பிறந்த போதும் தான் இரண்டு வால்நட் மரங்களைத் தனது சொந்த ஊரில் சொந்த நிலத்தில் நட்டுவைத்ததாகவும் இன்றும் அது உறுதியாக வளர்ந்து நின்று பழம் தருவதாகவும் கூறுகிறார்.

ஒருவகையில் அந்த மரங்கள் இரண்டும் காரியரின் பிள்ளைகளே.

இந்த உரையாடல் எனக்குச் சங்க இலக்கியத்தில் நற்றிணை பாடல் 172 யை நினைவுபடுத்தியது. அதில் ஒரு விளையாட்டுச் சிறுமி புன்னை மரக்கொட்டையை மணலில் புதைத்துவிடுகிறாள். அந்த மரம் தானே வளரத் துவங்குகிறது. அம்மரத்தை சிறுமியின் உடன்பிறந்தவளாகச் சொல்கிறாள் தாய். அதிலிருந்து மரத்திற்கும் பாலை ஊற்றி வளர்க்கிறாள் தாய். மரம் வளர்ந்து நிற்கிறது. சிறுமியும் வளர்க்கிறாள். காதலுற்ற அப்பெண்ணைக் காண காதலன் வருகிறான்

சகோதரியான இந்த மரத்தின் முன்பாக உன்னோடு நான் எப்படிச் சேர்ந்திருப்பது எனக் கேட்கிறாள் அந்தப் பெண்.

புன்னை நெய்தல் நிலத்தின் மரம். அடர் பச்சை இலைகளையுடையது. இனிய நறுமணம் கொண்ட இம்மரத்தின் பூக்கள் வெண்ணிறமாகயிருக்கும் ,

மரத்தை சகோதரியாக, தந்தையாக மூதாதையராக நினைக்கும் பழக்கம் பழங்குடிகளிடம் உள்ளது. மூத்தோர்கள் தான் மரமாகி தங்களுக்கு வழிகாட்டுவதாக நினைக்கிறார்கள்.

கிளாட் கேரியர் சொன்னதில் மறைமுகமாக ஒரு செய்தியிருக்கிறது. அவர்கள் நிலத்தில் உள்ள மரங்களே அவர்களின் குடும்பத்தின் அடையாளம். ஒருவகையில் அந்த மரங்களே அவர்கள் குடும்பத்தின் இரட்டை, அல்லது மறுஉருவங்கள். தன் பொருட்டு வைக்கபட்டமரத்தை ஒருவன் பராமரிக்க வேண்டும் என்பது விதி. மரங்களின் ஆரோக்கியமே மனிதர்களின் ஆரோக்கியம் என்ற நம்பிக்கை நெடும்காலமாகவே இருந்து வருகிறது

ஒருவன் உண்மையான தேடல் கொண்டவனாக இருந்தால் மரத்திலிருந்து அவன் தனக்கான வாழ்வியல் வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ள முடியும்.

விளையாட்டு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முனை அகைய

நெய்பெய்து தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

நற்றிணை (172)

இந்தப் பாடலில் தாய். அந்தப் புன்னை மரம் உனக்கு நுவ்வை (உன்னுடன் பிறந்தவள்) என்கிறாள்

நுவ்வை என்ற சொல் இப்போது வழக்கில் இல்லை. ஆனால் அச்சொல்லை உச்சரிக்கும் போது அத்தனை இனிமையாக இருக்கிறது.

**

0Shares
0