சண்டையிடும் சாப்ளின்

அகிரா குரசேவா படங்களில் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற தொஷிரோ மிபுன் குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன். Mifune: The Last Samurai (2015) என்ற ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் Steven Okazaki.

கிழிந்த உடையுடன் வறுமையில் சுற்றித்திரிந்த இளைஞன் எப்படிப் புகழ்பெற்ற நடிகனாக உருவாகிறான் என்பதை ஆவணப்படம் விரிவாக எடுத்துச் சொல்கிறது.

ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பு பாணி பெரிதும் முகபாவத்துடன் மட்டுமே தொடர்புடையது. மார்லன் பிராண்டோ போன்ற அரிதான நடிகர்களே மொத்த உடலையும் காட்சிக்கேற்ப மாற்றவும் பயன்படுத்தவும் கூடியவர்கள். அவர்களின் உடல்மொழி சிறப்பானது

viva zapata படத்தில் வரும் மார்லன் பிராண்டோவையும் On the Waterfront படத்தில் வரும் பிராண்டோவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டு மாறுபட்ட மனிதர்கள் நடித்திருப்பது போலவே இருக்கும்.

மிபுனேவின் சிறப்பு அவரது உடல்மொழி. குறிப்பாக அகிரா குரசேவாவின் SEVEN SAMURAI, RED BEARD, KAGEMUSHA, THRONE OF BLOOD, STRAY DOG ஆகிய ஐந்து படங்களிலும் மிபுனின் நடிப்பு முற்றிலும் மாறுபட்டது. அவரது நடை, முகபாவனை, வசனம் பேசும் விதம். சண்டையிடும் விதம் என அத்தனையிலும் தானொரு தனித்துவமிக்க நடிகர் என்பதை நிரூபணம் செய்திருப்பார்.

சார்லி சாப்ளின் தனது நடை உடை மற்றும் செயல்களின் வழியே பார்வையாளர்களை ரசிக்கச் செய்யக்கூடியவர். ஆனால் எந்தப் படத்தில் எந்த வேஷம் செய்திருந்தாலும் அது சாப்ளின் தான் என்று பார்வையாளர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அது தான் அவரது பலமும் பலவீனமும்.

தனது கடைசி காலப் படங்களில் சாப்ளின் தனது நடை உடையை மாற்றிக் கொண்டபோது அப்படங்கள் தோல்வியடைந்தன.

குறிப்பாக சாப்ளின் A Countess from Hong Kong படத்தில் மார்லன் பிராண்டோவை இயக்கிய போது பிராண்டோ தனது நடிப்பை மாற்றிக் கொண்டு சாப்ளின் போல நடித்திருப்பார். படம் படுதோல்வியைச் சந்தித்தது.

தொஷிரோ மிபுனேவை சண்டையிடும் சாப்ளின் என்றே அழைக்க விரும்புகிறேன்.. நடிப்பில் இருவருக்கும் நெருக்கமான ஒப்புமைகள் இருக்கின்றன. குறிப்பாக வேகமான உடல்மொழி, சட்டென முகபாவத்தை மாற்றிக் கொள்வது தனிச்சிறப்பு.

செவன் சாமுராய் படத்தில் கட்டுபடுத்த முடியாத ஒரு விலங்கினைப் போலவே மிபுன் நடித்திருப்பார்.

குரசேவாவின் படங்கள் அளவிற்கு வேறு படங்கள் அவருக்குப் புகழ்பெற்றுத் தரவில்லை. ஆனால் நிறைய வெளிப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த ஆவணப்படம் மிபுனின் ஹாலிவுட் பிரவேசம் பற்றியும் அந்தப் படங்கள் அவருக்கான வெற்றியைத் தரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது

தொஷிரோ மிபுன் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ல் ஷாண்டோங், சீனாவில் ஜப்பானியப் பெற்றோருக்குப் பிறந்தார். அவரது ததந்தை மெத்தடிஸ்ட் மிஷனரியாகப் பணியாற்றினார்

இளமை பருவத்தில் சில காலம் புகைப்பட ஸ்டுடியோ ஒன்றில் பணியாற்றிய மிபுன் பின்பு இம்பீரியல் ஜப்பானிய இராணுவ விமானப் பிரிவில் வான்வழிப் புகைப்படம் எடுக்கும் பணியில் சேர்ந்து பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போரின் பின்பு ஜப்பானின் புகழ்பெற்ற டோஹோ ஸ்டுடியோ புதுமுக நடிகர்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தது. அதில் கலந்து கொண்டார் மிபுன் . அப்போது தான் அவர் அகிரா குரசேவாவை முதன்முறையாகச் சந்தித்தார். பின்பு அவரால் அறிமுகப்படுத்தபட்டு வரிசையாகப் படங்களில் நடிக்கத் துவங்கினார். ஜப்பானியச் சினிமாவின் உச்சநட்சத்திரமாக அவரை உருவாக்கியது குரசேவாவே.

இந்த ஆவணப்படத்தில் மிபுனோடு நடித்த நடிகைகள், திரைப்படத் துணை இயக்குனர்கள். சண்டைபயிற்சி கலைஞரின் நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. அத்தோடு ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்பீல்பெர்க், மார்டின் ஸ்கார்சசி ஆகிய இருவரது நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. ஸ்கார்சசி ஏன் மிபுனேவை தனக்குப் பிடித்திருக்கிறது என்பது குறித்துச் சிறப்பாக விளக்கியிருக்கிறார். குரசேவா முறையாக வாள்பயிற்சி பெற்றவர் என்பதால் தான் அவரது படங்களில் சண்டைகாட்சிகள் அத்தனை துல்லியமாக, சிறப்பாகப் படமாக்கபட்டன என்பது படத்தில் வெளிப்படும் கூடுதல் தகவல்.

அகிரா குரசேவாவின் பதினாறு படங்களில் நடித்திருக்கிறார் மிபுன். அதில் எட்டுபடங்கள் பெரும் வெற்றி பெற்றவை. ஆனால் திடீரென அவர்களின் உறவு துண்டிக்கபட்டது. தனது கடைசி காலப்படங்களில் ஏன் அவர் மிபுனை அழைக்கவில்லை. அவர்கள் இருவக்குள்ளும் என்ன பிரச்சனை என ஒருவருக்கும் தெரியவில்லை.

இந்த ஆவணப்படத்தில் இது குறித்த கேள்வி கேட்கப்படும் போது குரசேவாவின் மகன் Hisao Kurosawa பதில் சொல்கிறார். அதில் தந்தையின் கடைசி காலகட்டப் படங்களில் மிபுனிற்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை. ஆகவே அவரைத் தந்தை அழைக்கவில்லை என்று சொல்கிறார்.

ஆனால் திரைப்படத்திற்கு வெளியே அவர்கள் உறவிலும் இந்த இடைவெளி கடைசிவரை இருந்து வந்தது. முறிந்த கிளை போல அந்த உறவு ஒட்டவேயில்லை

என்ன விரிசல் என்று ஒருவராலும் கணிக்கமுடியவில்லை. குரசேவாவின் நிழல் தன் மீது விழுந்து கொண்டேயிருப்பதை மிபுன் விரும்பவில்லை. ஆகவே அவரே தான் விலகிப் போனார் என்கிறார்கள்.

குரசேவா தீவிரமாக இலக்கியத்தை நேசித்தவர். குறிப்பாகத் தஸ்தாயெவ்ஸ்கி மீது அவர் கொண்டிருந்த மரியாதை அபரிமிதமானது. ஒரு நேர்காணலில் தான் இடியட் நாவலைப் படமாக்க முயன்ற போது படப்பிடிப்பில் ஒரு நடிகை குறிப்பிட்ட ஒரு காட்சியில் தனது முகபாவம் எந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டதாகவும், அது தனக்குத் தெரியவில்லை என்பதால் உடனே நாவலை எடுத்து வாசித்துப்பார்த்த போது குறிப்பிட்ட காட்சியில் அந்தப் பெண்ணின் முகத்தில் என்ன உணர்ச்சி வெளிப்பட்டது என்று தஸ்தாயெவ்ஸ்கி துல்லியமாக எழுதியிருப்பதை அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

அகிரா குரசேவாவின் படங்களுக்கு உயிர்கொடுத்தவர் மிபுன். அவரது நடிப்பே இந்தப் படங்களை உன்னதமாக்கியது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பார்க்கும் போதும்Throne of Bloodல் வரும் மெக்பெத் கதாபாத்திரத்தைத் தொஷிரோ மிபுன் நடித்த்து போல உலகச் சினிமாவில் யாரும் நடித்ததில்லை.

இளம்நடிகர்களும். இளம் இயக்குனர்களும் அவசியம் காணவேண்டிய ஆவணப்படமிது.

***

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: