லூக்கா எனும் மருத்துவர்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பெர் லாகர்குவிஸ்ட் (Pär Lagerkvist) எழுதிய நாவல் அன்பு வழி (Barabbas ) .இதை தமிழில் மொழி பெயர்த்தவர் க நா சு. இந்நாவல் பாரபாஸ்  என்ற குற்றவாளியின் கண்ணோட்டத்தில் இயேசுவின் வாழ்க்கையை விவரிக்கக் கூடியது. பாரபாஸ் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. தனக்குப் பதிலாக இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் என்பதை அறிந்த பாரபாஸ் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதே நாவலின் மையக்கதை. பல லட்சம் பிரதிகள் விற்றுள்ள இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

இந்த நாவலுக்கு நிகரான இன்னொரு நாவலை வாசித்தேன். அது புனித லூக்காவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய Dear and Glorious Physician என்ற நாவல். டெய்லர் கால்டுவெல் என்ற பெண் எழுத்தாளர் எழுதியது.

இந்த நாவலை எழுதி முடிக்க 46 வருஷங்கள் ஆனது என்கிறார் டெய்லர் கால்டுவெல். சிறுவயதில் இருந்தே லூக்காவின் மீது தனக்கு மிகுந்த விருப்பம் என்பதால் பனிரெண்டு வயதில்  அவரைப்பற்றி எழுத ஆரம்பித்துப் பல்வேறு வயதுகளில் எழுதியதை திருத்தித் திருத்தி தனக்கே திருப்தி வராமல் தூக்கி எறிந்து விட்டதாகவும், முடிவாக லூக்கா பயணம் செய்த இடங்களுக்கு நேரில் பயணம் செய்து விரிவாக ஆய்வுகள் செய்து எழுதியதே இந் நாவல் என்கிறார்.

புதிய ஏற்பாட்டின் மூன்றாவது சுவிசேசத்தை எழுதியவர் புனித லூக்கா. கிறிஸ்துவத் திருச்சபை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு இவர் பெயர் சூட்டப்படுவதுண்டு. மதுரையில் கூட லூக்கா மருத்துவமனை இருக்கிறது. எதற்காக இவரது பெயர் மருத்துவமனைக்கு வைக்கபடுகிறது என யோசித்திருக்கிறேன். இந்நாவலை வாசித்தபிறகே தெரிந்து கொண்டேன் லூக்கா ஒரு மருத்துவர்.

இயேசுவின் சீடர்களில் இவர் ஒருவரே யூதரில்லை. அத்தோடு இவர் நேரடியாக இயேசுவை சந்திக்கவுமில்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்ட ஒரு ஆண்டிற்குப் பிறகு அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரது அற்புதங்களை அறிந்து கொள்ளப் பயணம் செய்து இயேசுவின் சீடர்கள். அவரது தாய் மரியாள் உள்ளிட்ட பலரையும் சந்தித்திருக்கிறார் லூக்கா.

இந்நாவல் அந்தத் தேடுதலையே முதன்மைப்படுத்தியிருக்கிறது.. தான் கண்டறிந்த மனிதர்களின் வழியாக அவர் இயேசுவை அறிந்து கொள்கிறார். தனது அனுபவத்தில் அறிந்தவற்றையே சுவிசேசமாக எழுதியிருக்கிறார் லூகாவின் பூர்வீகம் அந்தியோகியா. அவர் லூகானஸ் என அழைக்கபட்டார்.  மருத்துவத்தில் மிகுந்த தேர்ச்சி கொண்டிருந்தார் லூகானஸ்.

நாவல் லூக்காவின் தேடுதல் வழியாக இயேசுவின் வாழ்க்கையை விவரிக்கிறது. நாவலைப் படிக்கும் போது பென்ஹர் திரைப்படம் நினைவில் வந்தபடியே இருந்தது. வரலாற்று பூர்வமாக மிகத் துல்லியமாக எழுதப்பட்ட நாவலிது.

இயேசுவின் காலத்தில் ஒடுக்கப்பட்டோராக யார் யார் கருதப்பட்டார்களோ அவர்கள் மீது இயேசு தனிக் கரிசனையும் அன்பும் காட்டினார் என்று லூக்கா கூறுகிறார். குறிப்பாக அடிமைகள். ஏழைகள், ஆதரவற்றோர், பெண்கள், நோயாளிகள் போன்றோர்களை இயேசு எவ்வாறு அரவணைத்துக் கொண்டார் என லூக்கா விரிவாகக் கூறுகிறார்.

டெய்லர் கால்டுவெல் இங்கிலாந்தில் ஸ்காட்டிஷ் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். ஆறு வயதிலே சார்லஸ் டிக்கன்ஸ் பற்றிய ஒரு கட்டுரையினை எழுதி பரிசு பெற்றிருக்கிறார். 1907 ஆம் ஆண்டில் டெய்லர் கால்டுவெல் குடும்பம் அமெரிக்காவிற்குக் குடியேறியது

1919 ஆம் ஆண்டில் அவர் வில்லியம் எஃப். காம்ப்ஸை மணந்து கொண்டார். அதன்பிறகு சில ஆண்டுகள் நீதிமன்ற செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளராகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு நாவல்கள் எழுத துவங்கி புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானார். நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். A Pillar of Iron இவரது புகழ்பெற்ற நாவல்.  .

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: