பனியில் ஒரு யாத்திரை

1974 ஆம் ஆண்டு இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்கிற்குப் பாரீஸில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது. அதில் அவரது நண்பரான லோட்டே ஐஸ்னர் என்ற எண்பது வயது பெண்மணி மரணப் படுக்கையில் இருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் இறந்து போய் விடுவார் என்று தகவல் தெரிவிக்கபட்டது

தனது தோழி சாகக் கூடாது. அவரைச் சாக விடமாட்டேன் என்று லோட்டே ஐஸ்னரைக் காண ம்யூனிச் நகரிலிருந்து பாரீஸிற்கு பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டார் இயக்குனர் வெர்னர் ஹெர்சாக். (WernerHerzog).

கடுங் குளிர்காலத்தில் 840 கிலோமீட்டர் தூரத்தை இருபத்தியேழு நாட்களில் நடந்து சென்றிருக்கிறார்.

தான் நேசிக்கும் ஒருவர் நலம் அடைய வேண்டி புனிதப்பயணம் மேற்கொள்வது தொன்று தொட்டு வரும் மரபு. பெரும்பாலும் புனித ஸ்தலங்களுக்கு இப்படி நடைப்பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் ஹெர்சாக் தனது பிரார்த்தனையை மனதில் சுமந்தபடி பாரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த லோட்டேயைக் காண 840 கிலோமீட்டர் நடந்து சென்றார். இந்த அரிய அனுபவத்தைச் சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்.

Of Walking in Ice  என்ற இப் புத்தகம் ஹெர்சாக்கின் பயணத்தில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை விவரிக்கிறது.

ஹெர்சாக்கின் திரைப்படங்களும் இது போன்ற சாத்தியமற்ற விஷயங்களைச் சாத்தியப்படுத்தும் முயற்சிகளே. போராட்ட குணமே ஹெர்சாக்கின் இயல்பு.

உலக அரங்கில் ஜெர்மானிய சினிமாவிற்குப் புதிய அடையாளத்தை உருவாக்கியவர் லோட்டே ஐஸ்னர். யூதரான இவர் ஹிட்லரின் நாஜிக் கொடுமைக்குப் பயந்து நாட்டை விட்டுத் தப்பிப் பாரீஸில் குடி புகுந்தார். அங்கிருந்தபடியே இளம் இயக்குனர்களின் படங்களைத் தேடிப்பிடித்துப் பார்த்து அவற்றைச் சர்வதேச அரங்கில் கவனம் பெறச் செய்தார். தொடர்ந்து சினிமா விமர்சனங்களை எழுதியிருக்கிறார். முக்கிய ஜெர்மானிய இயக்குனர்கள் குறித்துப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

Cinémathèque Française என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். திரைப்பட ஆவணக் காப்பங்களின் சேகரிப்பாளராகப் பணியாற்றிய நாட்களில் சிறந்த ஜெர்மானிய படங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தினார்.

ஒரு சிறிய பயணப்பை, ஒரு திசைகாட்டி. வரைபடங்கள். குளிராடை. கொஞ்சம் பணம். இவ்வளவு தான் ஹெர்சாக் வீட்டிலிருந்து புறப்பட்டபோது வைத்திருந்தார். வெளியே பருவநிலை மோசமாக இருந்தது. பிரதான சாலையை விட்டு விலகி நடக்கத் துவங்கிய பிறகு ஹெர்சாக் ஒரு பறவையைப் போல உணர்ந்ததாகக் கூறுகிறார்.

எங்கே தங்கப் போகிறோம். ஒரு நாளில் எவ்வாறு தூரம் நடக்கப்போகிறோம். என்ன இடர்பாடுகள் வரும் என எதுவும் தெரியாது. மனதில் ஒரே பிரார்த்தனை. லோட்டேயின் உயிர் காப்பாற்றபட வேண்டும்.

பனிக்காற்றுக் கடுமையாக வீசிய சாலையில் தனி ஆளாக நடந்தார். முதல்நாள் இரவு கிடைத்த இடம் ஒன்றில் தங்கிக் கொண்டார். இந்தப் பயணத்தின் போது சாலையில் கார்கள் ஏன் இவ்வளவு சப்தமாகச் செல்கின்றன. இவ்வளவு கார்கள் எப்படி வந்தன என வியந்து போனதாகவும் காரில் சென்று வந்த இத்தனை வருஷங்களில் இதைத் தான் உணரவேயில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

அத்துடன் சாலையோரம் நின்றபடியே காரில் செல்லும் யாராவது தன்னை ஏற்றிக் கொண்டு போவார்களா எனக் காத்திருக்கும் மனிதர்களை அப்போது தான் உண்மையாகப் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார். காற்றும் பனியும் முடிவற்ற நிலப்பரப்பும் அவரை உத்வேகம் கொள்ளச் செய்கின்றன. கால் வலியை பொருட்படுத்தாமல் நடக்கிறார். காட்டுமரங்களையும் பனிக்காலத்து கிராமங்களின் தனிமையையும், முதியவர்களின் கவலை தோய்ந்த முகங்களையும் கடந்து போகிறார்.

அவரது பயணத்தில் விதவிதமான மனிதர்களைச் சந்திக்கிறார்.  சிலர் அவரை வரவேற்று உணவு தந்து உபசரிக்கிறார்கள். இப்படி ஒரு மனிதன் ஒரு உயிரைக் காக்க நடக்கிறானே என்று வியக்கிறார்கள். சில இடங்களில் தங்க இடமின்றி இடிபாடுகளுக்குள் தங்குகிறார். அவரோடு ஒரு பூனையும் சேர்ந்து உறங்குகிறது. கடுமையான பனிப்புயலில் சிக்கிக் கொள்கிறார். அடைக்கலம் தரும் வீடுகளில் உள்ள பெண்களின் அன்பையும் உபசரிப்பையும் வியந்து எழுதியிருக்கிறார். பயணத்தின் போது ஒரு மரத்தில் அண்டக்காக்கை ஒன்று தனியே நிற்பதை காணுகிறார். அதுவும் தன்னைப் போலவே இருப்பதாக உணருகிறார். பனியில் நடந்து நடந்து காலில் வெடிப்புகள் உருவாகிறது. குதிங்கால் பிடித்துக் கொள்கிறது. தொடைகளில் வலி உருவாகிறது. ஆனால் அவர் உறுதியான மனதோடு நடந்து கொண்டேயிருக்கிறார். ஒரு இடத்தில் நல்ல மழை. எதிரேயுள்ள சாலை தெரியவில்லை. விடாமல் பெய்யும் மழையில் மாட்டிக் கொள்கிறார். நனைந்தபடியே போக்கிடம் இன்றித் தவிக்கிறார்.

இன்னொரு இடத்தில் காலைச்சூரியனின் வெம்மையை அனுபவித்தபடியே பனிக்காலத்தில் பறவைகள் பாடும் பாடலை ரசிக்கிறார். எளிய விவசாயிகள். கூலிகள். சிறு தொழிலாளர்கள் எனப் பலரையும் வழியில் சந்தித்துக் கடந்து போகிறார். ஒவ்வொரு இரவிலும் லோட்டேவை நினைத்துப் பிரார்த்தனை செய்து கொள்கிறார்.

ஒரு இடத்தில் வெள்ளை மயில் ஒன்றைக் காணுகிறார் ஹெர்சாக். அது தன் தோகையை விரித்து ஆடுகிறது. பயணத்தின் வழியே அவர் வாழ்க்கையின் நிஜத்தை அறிந்து கொள்கிறார்.

பாரீஸை நெருங்க நெருங்க அவரது கால்கள் தள்ளாடுகின்றன. மனஉறுதியோடு மருத்துவமனைக்குப் போகிறார். இதற்குள் லோட்டேயிடம் ஹெர்சாக்கின் பயணம் பற்றி முன்னதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தனக்காக ஒருவர் இவ்வளவு தூரம் நடந்தே வந்திருக்கிறார் என்று நோயுற்ற நிலையிலும் நெகிழ்ச்சியோடு வரவேற்று கைகளைப் பற்றிக் கொள்கிறார். லோட்டேயை சந்தித்த ஹெர்சாக் அவர் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

அந்த வாழ்த்து உண்மையாகியது. அதன் பிறகு எட்டு ஆண்டுகள் லோட்டே உயிருடன் வாழ்ந்தார். தனது மரணத்தின் சில மாதங்கள் முன்பாக அவர் ஹெர்சாக்கைச் சந்திக்க  வரும்படி அழைத்திருக்கிறார்.

அந்தச் சந்திப்பின் போது தனக்கு இப்போது பார்வை போய்விட்டது. வாழ்நாள் எல்லாம் நேசித்த புத்தகங்களையும் சினிமாவையும் விட்டு விலகி விட்டேன். இனி இந்த வாழ்க்கைக்கு என்ன பயன். என் உயிரைக் காப்பாற்றி வைத்திருப்பது உனது பிரார்த்தனை மட்டுமே. நீ அதை விலக்கிக் கொண்டுவிடு. நிம்மதியாக இறந்து விடுகிறேன் என்றார் லோட்டே.

அக் குரலில் இருந்த தவிப்பைப் புரிந்து கொண்ட ஹெர்சாக் உங்கள் விருப்பம் அதுவென்றால் என் பிரார்த்தனையை விலக்கிக் கொள்கிறேன் என்றார். இது நடந்த சில மாதங்களில் லோட்டே இறந்து விட்டார்

எந்தச் சினிமா பின்புலமும் இல்லாமல் சுயமாகச் சினிமா கற்றுக் கொண்டு தனது சம்பாத்தியத்தில் படம் எடுக்கத் துவங்கியவர் ஹெர்சாக். அவரது முதற்படத்தைத் தற்செயலாகப் பார்த்த லோட்டே அது மிகச்சிறந்த படம் எனப் பல்வேறு திரைப்பட விழாக்களுக்குச் சிபாரிசு செய்த்தோடு ஹெர்சாக்கை திரைப்பட விழாக்களுக்கு அழைக்கவும் செய்தார். அந்த நாட்களில் ஹெர்சாக் அவரை நேரில் கண்டதேயில்லை. புகழ்பெற்ற இயக்குனராக உருவான பிறகே அவர் லோட்டேயைச் சந்தித்தார். லோட்டேயின் முயற்சியால் ஹெர்சாக் சர்வதேச அரங்கில் மிக முக்கிய இயக்குனராக அடையாளம் காணப்பட்டார்.  அந்த நன்றிக்கடனே இப்படியொரு யாத்திரை செய்ய வைத்தது

இந்த நிகழ்வு ஒருவருக்காக மற்றவர் செய்யும் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும் என்பதற்கான சாட்சியம் போலிருக்கிறது. நன்றியை ஒருவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்ற வியப்பையும் உருவாக்குகிறது.

தனது நீண்ட பயணத்தின் முடிவில் லோட்டேயை நேரில் ஹெர்சாக் காணும் பகுதியை வாசிக்கும் போது நம் மனது கனத்துப் போய்விடுகிறது.

இந்தச் சிறிய நூலை அப்படியே ஒரு திரைப்படமாக எடுக்கலாம். எந்த மொழியில் எடுக்கபட்டாலும் இந்தப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.

ஹெர்சாக் என்ற மகத்தான இயக்குனர் தனது திரைப்படங்களில் மட்டுமில்லை சொந்த வாழ்விலும் வெகு உண்மையாக இருந்திருக்கிறார். இளம் இயக்குனர்களுக்கு ஹெர்சாக் சொல்லும் ஒரே அறிவுரை இதுவே

“Read, read, read, read, read, read, read, read, read, read, read, read, read…if you don’t read, you will never be a filmmaker.”

― Werner Herzog

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: