எலியா கஸான்.

East of Eden திரைப்படத்தில் ஒரு தந்தை தனது பிள்ளைகளிடம் அம்மா இறந்துவிட்டார் என்று பொய் சொல்லி வளர்க்கிறார். ஆனால் அம்மா இறந்து போகவில்லை. அப்பாவோடு சண்டையிட்டு விலகிப் போய்விட்டார். இப்போது அம்மா அருகிலுள்ள ஊர் ஒன்றில் சூதாட்டவிடுதி ஒன்றை நடத்துகிறார் என்பதை அறிந்து அம்மாவைக் காணச் செல்கிறான் இளையமகன்.

அம்மாவைச் சந்திப்பது எளிதாகயில்லை. நிறைய கெடுபிடிகள். அவள் தனது கடந்தகாலத்தை மறைத்து வாழுகிறாள். அந்தச் சூதாட்ட விடுதிக்குள் ரகசியமாக நுழைந்து அம்மாவை சந்திக்கிறான். எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறாய். என்ன வேண்டும் என அம்மா கேட்கிறாள்.

நீ என் அம்மா தானா என அறிந்து கொள்ள வேண்டும் அவ்வளவே என்கிறான் மகன்.

அம்மா நடந்த உண்மைகளைச் சொல்கிறாள். அம்மாவை புரிந்து கொள்கிறான் கார்ல் எனும் இளையமகன். தந்தையிடம் இது குறித்துப் பேச விரும்புகிறான். ஆனால் தந்தையோ அவனை வெறுக்கிறார். முரடனாக வளர்ந்திருக்கிறான் என்று கோவித்துக் கொள்கிறார். அவனை விடவும் அவனது மூத்த சகோதரனை அதிகம் நேசிக்கிறார். வெறுக்கும் தந்தைக்கும் பிரிந்திருக்கும் தாயிற்கும் இடையில் ஊசலாடும் இளைஞன் கதாபாத்திரத்தில் ஜேம்ஸ் டீன் அற்புதமாக நடித்திருக்கிறார். East of Eden ஹாலிவுட் சினிமாவின் உன்னதங்களில் ஒன்று. எழுத்தாளர் ஜான் ஸ்டெயின்பெக் நாவலை எலியா கஸான் படமாக்கியிருக்கிறார்.

East of Eden படத்தில் ஒரு காட்சியில் அப்பாவோடு ஊஞ்சலாடியபடியே ஜேம்ஸ் டீன் பேசுவார். அப்போது ஊஞ்சலில் முன்னும் பின்னுமாக வந்து போனபடியே தனது கோபம். வெறுப்பு. உண்மையைச் சொல்லும் விதம் என அக்காட்சி மிக அற்புதமாகப் படமாக்கபட்டிருக்கும்.

East of Eden திரைப்படத்தை எப்போது பார்த்தாலும் வியப்பு குறைவதேயில்லை. இப்படி ஒரு படம் எடுத்தால் போதும் என்று அன்றைய அமெரிக்க இயக்குனர்கள் பலரும் நினைத்தார்கள். ஆனால் எலியா கஸான் இந்தப் படம் ஒன்றில்லை. A Streetcar Named Desire (1951), On the Waterfront (1954), and East of Eden (1955). Viva Zapata. America America Baby Doll , Panic in the Streets என்று பெரும் வெற்றிப்படங்களின் வரிசையைத் தந்திருக்கிறார்..

எலியா கஸான் (Elia Kazan). குறித்து A Letter to Elia என்ற ஆவணப்படம் ஒன்றை மார்டின் ஸ்கார்ச்சி இயக்கியிருக்கிறார். இப்படம் எலியா கஸானின் திரைப்பங்களிப்பு மற்றும் வாழ்க்கை குறித்து மிக நேர்த்தியாக விவரிக்கிறது

தனது பள்ளிவயது முதல் சினிமா பார்ப்பதை வாழ்க்கையாகக் கொண்டவர் மார்டின் ஸ்கார்சசி. சினிமா வழியாகவே தான் உலகை அறிந்து கொண்டேன் என்கிறார் ஸ்கார்சசி. அவரது இளமைக்கால ஆதர்ச இயக்குனர் எலியா கஸான்.

சினிமாவை எந்த அளவு மார்டின் ஸ்கார்ச்சி நேசிக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ஆவணப்படம். ஸ்கார்ச்சியின் நினைவுகள்  வழியாகவே கஸானின் வாழ்க்கை வெளிப்படுகிறது, தனது துல்லியமான நினைவிலிருந்தே  கஸானின் படங்களில் வரும் முக்கியக் காட்சிகள் அத்தனையும் ஸ்கார்ச்சி விவரிக்கிறார்.

கஸானின் திரைப்படங்கள் உணர்ச்சிப் பூர்வமானவை. நாடகத்தன்மை கொண்டவை. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவை. கச்சிதமான நாவலைப் போலச் சினிமாவை உருவாக்கினார் கஸான்.

A Streetcar named Desire (1954) படத்தில் மார்லன் ப்ராண்டோவின் கதாபாத்திரம் எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது பாருங்கள். அதே பிராண்டாவை On the Water front படத்தில் நாம் காணும் போது அவரது நடிப்பு முற்றிலும் வேறுபட்டதாகயிருக்கிறது. பிராண்டோவின் நடிப்பு Viva Zapataவில் புதிய பரிமாணம் கொள்கிறது. இது மார்லன் பிராண்டோவின் சாதனை மட்டுமில்லை, அந்த நடிப்பை அவரிடமிருந்து பெற்ற எலியா கஸானின் சாதனை என்றே சொல்வேன்.

எலியா கஸான் நாடகமேடையில் நடிகராக இருந்தவர். எட்டு ஆண்டுகள் நடிகராக வாழ்ந்திருக்கிறார். அந்த நாட்களில அவரே .A Streetcar named Desire நாடகத்தை இயக்கியிருக்கிறார். லீ ஸ்ட்ராஸ்பெர்க் தலைமையில் மெதட் ஆக்டிங் என்ற நடிப்பு பயிற்சியைப் பெற்றிருக்கிறார். இந்த நடிப்பு முறையைச் சினிமாவில் சிறப்பாக எலியா கஸான் கைக்கொண்டார்.

Viva Zapata வின் ஆரம்பக்காட்சி திரைமாணவர்களுக்கு ஒரு பாடம். ஹெர்சாக் தனது பயிற்சி வகுப்பில் இந்த ஆரம்பக் காட்சியைத் தான் தேர்வு செய்து விளக்குகிறார். அதிபரைக் காணச்செல்லும் விவசாயிகள் கூட்டத்தில் ஒரு ஒரமாக நிற்கிறார் மார்லன் பிராண்டோ. அவரது தோற்றத்தை கேமிரா காட்டுவதேயில்லை. விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிட்டு விவசாயிகள் கலையும் போது பிராண்டோ உறுதியான குரலில் பேசுகிறார். அப்போது தான் அவர் திரையில் அறிமுகமாகிறார். எந்தச் சலனமும் இல்லாமல் சிற்பம் போலிருக்கிறது அவரது தோற்றம். அதிபருக்கு எதிராக உறுதியான குரலில் அவர் பேசும் விதம், அந்தக் கண்களில் வெளிப்படும் எதிர்ப்புணர்வு. அவரது கம்பீரம் என உறுதியான கதாபாத்திரமாக அறிமுகமாகிறார் பிராண்டா.

எதிர்த்துப் பேசும் அவரது பெயரை அதிபர் கேட்கும் போது ஜபாடா என்று அலட்சியமாகச் சொல்கிறார். அதிபர் தனது பேரேட்டில் அந்தப் பெயரை அடிக்கோடிட்டுக் கொள்கிறார். முதற்காட்சியிலே இவருக்குமான மோதலை எலியா கஸான் அழகாகக் காட்சிப்படுத்தி விடுகிறார். இந்த மோதல் படத்தில் வளர்ந்து உச்சநிலையை அடைகிறது.

எந்த காட்சியில் அதிபர் கோபத்துடன் விவசாயியை நடத்தினாரோ அதே போல தான் அதிபரான பிறகு தன்னை சந்திக்க வரும் விவசாயிகளை ஜபாடா நடத்தும் இன்னொரு காட்சியிருக்கிறது. அக்காட்சியே ஆரம்ப காட்சியை மிகவும் வலிமையுள்ளதாக்குகிறது. படத்தின் போக்கினை திசைமாற்றம் கொள்ளவைக்கிறது. அதிகாரத்தின் இயல்பை இதை விட சிறப்பாக திரையில் யாரும் காட்டியதில்லை.

மார்லன் பிராண்டோவின் திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களாகக் கருதப்படும் Viva Zapata, The Street car named Desire .On the Water front ஆகிய மூன்றும் எலியா கஸான் இயக்கிய படங்களே. அப்படங்களில் மார்லன் பிராண்டோவின் நடிப்பு நிகரற்றது. இன்றுவரை அக்கதாபாத்திரங்கள் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாகக் கற்பிக்கபட்டு வருகிறார்கள். எலியா கஸானைப் படிக்காத திரை மாணவர்களேயில்லை.

East of Eden படத்தை மார்டின் ஸ்கார்சசி ஹாலிவுட்டின் இதிகாசம் என்றே கொண்டாடுகிறார். எவ்வளவு கொண்டாடினாலும் அதற்குத் தகுதியான திரைப்படம் ஈஸ்ட் ஆப் ஈடன். அதில் நடித்துள்ள ஜேம்ஸ் டீனைப் போல ஒரு நடிகனை காண்பது அரிது. பேரழகன். அவனது வேகம். துடிப்பு. அலட்சியம். எத்தனை மகத்தான நடிகன். இளவயதில் ஜேம்ஸ் டீன் கார் விபத்தில் இறந்து போனது துரதிருஷ்டமே.

தந்தைக்கும் மகனுக்குமான உறவு இப் படத்தில் மிக அழகாகச் சித்தரிக்கபட்டிருக்கிறது. குறிப்பாக அம்மா உயிருடன் இருப்பதை அறிந்த டீன் தனது சகோதரனை அவளிடம் அழைத்துக் கொண்டு வந்து அறிமுகம் செய்யும் காட்சி சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்று.

அது போலவே அப்பா இழந்த பணத்தைத் தானே சம்பாதித்து அதை அவரிடம் ஒப்படைக்க ஜேம்ஸ் டீன் வீட்டில் காத்திருப்பதும் அவரது பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்வதுமான காட்சியும் நிகரற்றது.

எலியா கஸான் பற்றிய ஆவணப்படத்தில் மார்டின் ஸ்கார்ச்சி East of Eden படத்திலிருந்து தான் என்ன கற்றுக் கொண்டேன். அதை எப்படித் தனது படத்தில் பயன்படுத்தினேன் என்று மிகவும் வெளிப்படையாகக் கூறுகிறார்.

தனது முன்னோடி இயக்குனரைப் புகழ்ந்து பேசுகிறோம் என்பதைத் தாண்டி தனது சொந்தத் தந்தையை நேசிப்பதைப் போல எலியா கஸானை நேசிக்கிறார் மார்டின் ஸ்கார்ச்சி. அதிலும் குறிப்பாக அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சியும், ஆஸ்கார் மேடையில் அவருக்கு விருது வழங்கும் தருணத்தில் உடன் இருந்ததை ஸ்கார்ச்சி நினைவு கொள்வதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

முந்தைய தலைமுறை இயக்குனர்கள் இப்படி தங்கள் ஆசான்களோடு இப்படி ஆழமான உறவு கொண்டிருந்தார்கள். மூத்த கலைஞர்களை உளமாற நேசித்தார்கள், கொண்டாடினார்கள். இன்று காணமுடியாத அபூர்வமான உறவு.

எலியா கஸானின் திரைப்படங்களில் எனது வாழ்க்கையை நான் கண்டு கொண்டேன். அவரே சினிமா எடுப்பதற்காக ஆர்வத்தை எனக்குள் உருவாக்கியவர். என் இளமைக்காலம் முழுவதையும் எலியா கஸானின் சினிமாவோடு தான் கழித்தேன். இன்றும் எனது திரைப்படங்களில் ஏதாவது ஒரு காட்சியோ, நிகழ்வோ நிச்சயம் கஸானின் பாதிப்பில் இருந்து உருவாக்கபட்டிருக்கும். அவர் தான் என்னை வழிநடத்துகிறார் என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறுகிறார் மார்டின் ஸ்கார்சசி.

ஹாலிவுட்டின் மகத்தான ஒரு இயக்குனரை இதைவிடச் சிறப்பாகக் கௌரவிக்க முடியாது. அவ்வளவு சிறப்பான ஆவணப்படம் A Letter to Elia.

••

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: