ஆசி.கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைகள்

ஆசி. கந்தராஜா ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்துப் படைப்பாளி. சிறந்த கட்டுரையாசிரியர். சிறுகதை எழுத்தாளர். தாவரவியல் அறிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் சென்னை வந்திருந்த போது சந்தித்து உரையாடினேன். அற்புதமான மனிதர். இவரது இரண்டு நூல்களைச் சமீபத்தில் வாசித்தேன்

முதலாவது செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். இது ஆஸ்திரேலியாவில் யாழ்பாணத்து கத்திரிக்காய் ஒன்றை ஒட்டுமுறையில் விளைவிக்க முயன்றதை பற்றிய வேடிக்கையான நிகழ்வை விவரிக்கும் கட்டுரை. இதில் வரும் மாமி மறக்கமுடியாத கதாபாத்திரம். நினைவுகளில் ஊடாடிச் சென்று அறிவியலின் சாத்தியங்களைச் சொல்லும் தனித்துவமிக்கக் கட்டுரையிது..

இரண்டாவது ‘கறுத்த கொழும்பான்’ இதுவும் புனைவுக் கட்டுரைகளின் தொகுப்பே. அறிவியலையும் பண்பாட்டினையும் இணைத்து இவ்வளவு சிறப்பாக யாரும் எழுதியதில்லை. ஆசி. கந்தராஜா மிகுந்த பாராட்டிற்குரியவர்.

கறுத்த கொழும்பான் என்ற கட்டுரை யாழ்பாணத்து மாம்பழ ரகம் ஒன்றை சிட்னியில் வளர்க்க முயன்ற ஒருவரின் நிகழ்வை விவரிக்கிறது. இந்த ஒரு கட்டுரைக்குள் எத்தனை சுவாரஸ்யமான தகவல்கள். செய்திகள். வாசிக்க வாசிக்க வியப்பு மேலோங்குகிறது.

மாம்பழ ரகங்களை ஆராய்ந்து சொல்லும் இக்கட்டுரை இப்படி முடிகிறது

கறுத்த கொழும்பானின் சுவையிலும் பார்க்க தமிழ் மொழியின் சுவை மேலானதும் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றும்’

இது தான் ஆசி. கந்தராசாவின் தனித்துவம். மிகச்சிறந்த கட்டுரை. மனம் நிரம்பிய பாராட்டுகள்.

கறுத்த கொழும்பான் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்களைப் பாருங்கள்.

••

யாழப்பாணத்தில் கறுத்த கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், செம்பாட்டான், கிளிமூக்கு, விலாட்டு, அம்பலவி ஆகிய மாமரங்கள் உண்டு. இவற்றுள் கறுத்த கொழும்பானும், செம்பாட்டானுமே பெருமளவில் சந்தைக்குவரும். யாழ்ப்பாண மாமரங்களின் காய்க்கும்திறன்; பிறநாட்டு மரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. அதற்கான காரணிகள்பல. பராமரிப்பின்மை அவற்றுள் முக்கியமானது

••

பருவகாலத்தின் பின்பகுதியில் Palmer, Keitt, Kent, Pearl, Brooks ஆகிய மாம்பழ இனங்களும் சிறிதளவு அவுஸ்திரேலியச் சந்தைக்கு வருவதுண்டு.

••

சமீபகாலங்களில் Tomy Adkins எனப்படும் மாமரம் Florida – USA இல் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது

••

அவுஸ்திரேலியா உட்படப் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில், புதிதாக இனவிருத்தி செய்யப்பட்ட தாவரத்தையோ அல்லது வெளிநாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தாவரத்தையோ வணிக ரீதியாகப் பயிரிடுவதற்கு முன்பு அவற்றின் இயல்புகள்பற்றி ஆராய்வார்கள். சுவை, மணம், பழத்தின் நிறம், Shelf Life எனப்படும் அறுவடைக்குப்பின் வைத்திருக்கக்சுகூடிய காலம், பெட்டிகளில் பொதி செய்வதற்கு ஏற்ற இயல்பு என்பவற்றைக் கவனத்தில் எடுத்து ஆராய்வு செய்வார்கள். இவை எல்லாமே சந்தைப்படுத்தலுக்கு மிக முக்கிய இயல்புகளாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. பழத்தின் சுவை மட்டும் முக்கியமானதல்ல. கண்ணுக்கு அழகாக இருக்கிறதா எனவும் பார்ப்பார்கள். தோடம்பழத்தில் இலகுவாகத் தோல் உரிக்கும் இயல்பு வரவேற்கப்படும். இவை விவசாயத்துடன் சம்பந்தப்படாத பொருளாதாரத்துடன் அதிக உறவு வைத்துள்ள சந்தைப்படுத்தல் என்னும் துறையுடன் தொடர்புடையது.

••

விஞ்ஞானரீதியாகப் பழமரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை குறைகுளிர் வகை ((Low Chill), நிறைகுளிர் வகை (High Chill), குளிர் தேவையற்ற வகை (No Chill). தாவர உடற்கூறு இயல்பின்படி பீச், பிளம்ஸ், அப்பிள் போன்ற தாவரங்கள் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் குளிர் தேவை. ஆனால், மாமரம் பூப்பதற்குக் குறிக்கப்பட்டளவு வெப்பம் தேவை. ஐரோப்பாவின் குளிர் சுவாத்தியத்தில் வளர்ந்த அப்பிளையோ பீச்சையோ சிட்னி சுவாத்தியத்தில் வளர்த்தால் அவை நல்ல விளைவைக் கொடுக்கமாட்டாது. இதே போல, நுவரேலியாவில் வளரும் பிளம்ஸ் மரத்தை யாழ்ப்பாணத்தில் வளர்த்தால் அந்த மரம் பூக்காது. இதேபோன்றுதான் யாழ்ப்பாண மாமர இனங்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களில் நன்கு காய்ப்பதில்லை. இவையே பழமரங்கள் காய்ப்பதிலுள்ள சூட்சுமங்கள்!

••

டேர்பன் ஒரு துறைமுகநகரம். தென் ஆபிரிக்காவின் வெள்ளையர்களின் அரசு துறைமுக வேலைகளுக்காக இந்தியர்களைக் கூலிகளாகக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுள் தென் இந்தியர்களே அதிகம். பெரும்பான்மையானவர்கள் அன்றைய மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த தமிழர்கள். இவர்கள் தவிரக் குஜராத் மாநிலத்திலிருந்து வந்தவர்களும் தென் ஆபிரிக்காவில் வசிக்கிறார்கள். இவர்கள் கிழக்கு ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் வணிகர்களாகக் குடியேறியவர்கள். அவர்கள் தமது வணிக முயற்சிகளைத் தென் ஆபிரிக்காவின் டேர்பன் நகரம்வரை விரிவு படுத்தியுள்ளார்கள். இவர்களது வணிக நிறுவனங்களில்; முன்னால் நிற்கும் விற்பனையாளர்கள் ஆபிரிக்கக் கறுப்பர்கள். குஜராத்தி முதலாளிகள் பின்புலத்தில் இருந்து கொண்டு சூத்திரக் கயிறுகளை லாவகமாக இழுத்துக் கொண்டிருப்பார்கள். இந்தக் குஜராத்தியர்களுடைய தென் ஆபிரிக்கத் தொடர்புகளே மகாத்மா காந்தியைத் தென் ஆபிரிக்காவுக்குக் கொண்டு வந்தது என்பது தனிக்கதை. இருபதாம் நூற்றாண்டின், ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுகளில், தென் ஆபிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை கடுமையாக அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கறுப்பர்களுக்கும் இந்தியர்களுக்கும் உயர்கல்வி உட்படப் பல்வேறு உரிமைகள் அப்போது மறுக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக இந்திய நலன் விரும்பிகளின் முயற்சியால் 1960 ம் ஆண்டு University College for Indians என்னும் கல்வி நிறுவனம் தென் ஆபிரிக்காவின் Salisbury தீவில் நிறுவப்பட்டது. இன ஒதுக்கல் கொள்கைக்குப் பயந்த இந்திய மாணாக்கர்கள் இக்கல்வி நிறுவனத்தில் அப்போது குறைவாகவே சேர்ந்தார்கள். இருப்பினும் எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பத்திலே தோன்றிய இன ஒதுக்கலுக்கு எதிரான எதிர்ப்பலை பெருமளவு இந்திய மாணாக்கர்களை இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கத் தூண்டியது. இந்த எழுச்சியின் காரணமாக இந்தியர்களுக்கான பல்கலைக்கழகக் கல்லூரியாக இருந்த இந்த நிறுவனம் முழுமையான பல்கலைக்கழக அந்தஸ்;தைப் பெற்று 1971 ம் ஆண்டு University of Durban – Westville என்னும் பெயரைப் பெற்றது. 1984 ம் ஆண்டுத் தொடக்கம் இப்பல்கலைக் கழகத்தில் இந்திய மாணாக்கர் மட்டுமல்லாது கறுப்பர்களும் வெள்ளையர்களும் சேர்ந்து படித்துப் பயன் பெறுகிறார்கள். பெரும்பான்மையாக இந்திய விரிவுரையாளர்களே பணிபுரிந்த இக்கல்வி நிறுவனத்தில் தற்போது மாணாக்கர்களின் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப கறுப்பர்களும், ஒரு சில வெள்ளைக்காரர்களும் பணிபுரிகிறார்கள்.

••

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: