நிழல் எழுத்தாளர்

ஒருவர் எழுதி அது மற்றவர் பெயரில் வெளியாகி புகழ்பெறுவது உலகெங்கும் தொடர்ந்து நடந்து வரும் இலக்கியத்திருட்டு. பிரபலமான சிலருக்காக இப்படி வேலை செய்து தரக்கூடிய கோஸ்ட் ரைட்டர்ஸ் உலகெங்கும் இருக்கிறார்கள். அந்த எழுத்தாளர் யார் என வெளியுலகம் அறியாது. அவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

பணத்திற்காக இப்படித் தன்னை மறைத்துக் கொண்டு எழுதுபவர்களும் உண்டு. கட்டுபாட்டு, மற்றும் தணிக்கை, மோசடி என்று பல காரணங்கள் இதற்கு உள்ளன. அப்படி ஒரு கதையைத் தான் சொல்கிறது கோலெட் என்ற பிரெஞ்சு திரைப்படம். 2018ல் வெளியான திரைப்படமது.

வில்லி (“Willy” ) என்ற எழுத்தாளரை திருமணம் செய்து கிராமப்புறத்திலிருந்து பாரீஸ் நகரிற்கு வருகிறார் கோலெட். ஆடம்பரமான வீடு. உல்லாசமான வாழ்க்கை. இரவு விருந்துகள். மேல்தட்டு வர்க்கத் தொடர்புகள் எனப் புதிய உலகம் அவரைத் திகைப்படையச் செய்கின்றன. கூடுதலாகக் கணவனின் காதல் லீலைகள் அவளை அதிர்ச்சி கொள்ளச் செய்கின்றன.

மேல்தட்டு வாழ்க்கை என்பது கட்டுபாடுகள் இல்லாதது. அதுவும் தான் ஒரு எழுத்தாளன் என்பதால் கட்டுபாடற்ற கலைஞனின் வாழ்க்கையை வாழ்வதாக வெளிப்படையாகச் சொல்கிறான் கணவன்.

நகரவாழ்வின் நெருக்கடி கோலெட்டை மூச்சுமுட்டச் செய்கிறது. அவள் தனது பால்ய கால அனுபவங்களை ஒரு நோட்டில் எழுதத் துவங்குகிறாள். தற்செயலாக அதைக் கண்ட கணவன் அந்தப் பதிவுகளைப் படித்துச் சில திருத்தங்கள் செய்து தொடர்ந்து எழுதும்படி சொல்கிறான். அவளும் உற்சாகமாக எழுதுகிறாள்.

அவள் எழுதிக் கொடுத்ததைத் தனது பெயரில் வெளியிடுகிறான் கணவன். அவன் ஒரு எழுத்தாளன் என்பதால் புதிதாக, வித்தியாசமாக நாவல் எழுதியிருக்கிறான் என்று பலரும் அந்நாவலைப் பாராட்டுகிறார்கள்..

கிளாடின் (Claudine) என்ற அந்த நாவல் இளம்தலைமுறைக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. குறிப்பாகப் பெண்கள் அந்நாவலை ஆராதிக்கிறார்கள். இதன் காரணமாகக் கோலெட்டை அடுத்த நாவலை எழுதித் தரும்படி ஒரு அறையில் அடைக்கிறான் கணவன். அவளும் வழியில்லாமல் இன்னொரு நாவலையும் எழுதித் தருகிறாள். அந்த நாவல் மேலும் புகழ்பெறுகிறது.

கிளாடின் என்பது நவீன பெண்ணின் அடையாளமாக உருமாறுகிறது. பொதுஇடங்களில், விருந்தில் வில்லி கொண்டாடப்படுகிறான். உண்மையாக அந்த நாவலை எழுதிய கோலெட் மௌனமாக அந்தக் கொண்டாட்டத்தினை வேடிக்கை பார்க்கிறாள்.

பணமும் புகழும் வந்து சேருகின்றன. தொடர்ந்து தன்னைக் கணவன் ஏமாற்றுகிறான் என உணர்ந்த கோலெட் அடுத்த நாவல் தனது பெயரில் வெளிவர வேண்டும் என்று சொல்கிறாள். வில்லி ஒத்துக் கொள்ள மறுக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கணவனைப் பிரிந்து தனித்து வாழ வெளியேறுகிறாள்.

அதன்பிறகு கோலெட் எப்படி எழுத்தாளராக உருவானாள் என்பதையே படம் விவரிக்கிறது.

பிரெஞ்சு சமூகத்தில் ஒரு பெண் படைப்பாளி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எந்தவிதமான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதைப் படம் மிக அழகாகச் சித்தரிக்கிறது. உண்மைக்கதை என்பதால் படம் கூடுதல் கவனம் பெறுகிறது.

கோலெட் படத்தை இயக்கியிருப்பவர். வாஸ் வெஸ்ட்மோர்லேண்ட் இப்படத்தில் கீரா நைட்லி, டொமினிக் வெஸ்ட், எலினோர் டாம்லின்சன், ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கோலெட் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். Gigi என்ற இவரது நாவல் பிராட்வேயில் இசைநாடகமாக வெளியாகி புகழ்பெற்றது. பின்பு திரைப்படமாகவும் உருவாக்கபட்டது.

1873ல் பிரான்சின் பர்கண்டி பகுதியில் பிறந்தவர் கோலெட். தந்தையின் நண்பரான எழுத்தாளர் வில்லியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். வில்லி ஏகப்பட்ட கோஸ்ட் ரைட்டர்களை வைத்திருந்தார். அவர்கள் எழுதிக் கொடுப்பதைத் தனது பெயரில் போட்டுக் கொண்டு அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து வாயை மூடிவிடுவது வழக்கம். அப்படித் தான் கொலேட்டும் பயன்படுத்தபடுகிறாள்.

இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் தனி மாளிகை ஒன்றை விலைக்கு வாங்கிய வில்லி அதைக் காட்டுவதற்காகக் கோலெட்டை அழைத்து வரும் காட்சி அற்புதமானது.

யாரோ ஒருவரின் வீட்டிற்கு அழைத்துப் போவது போலவே அந்த மாளிகைக்கு அழைத்துப் போகிறான். அழைப்பு மணியை அழுத்துகிறான். பின்பு தனது கோட் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து அவளிடம் கொடுத்து வீட்டைத் திறக்கச் சொல்கிறான். வியந்து போகிறாள் கோலெட். அந்த வீட்டின் அறைகளைச் சுற்றிப்பார்க்கிறாள். வீடு மிகவும் பிடித்திருக்கிறது.

திடீரென ஒரு அறைக்குள் அவளைத் தள்ளி அங்கேயே இருந்து அவள் ஒரு புதிய நாவலை எழுதித்தர வேண்டும் என்று கதவை மூடிவிட்டுப் போகிறான் கணவன்.

சட்டென ஒரு நிமிசத்தில் அந்த அழகிய வீடு சிறைச்சாலையாகி விடுகிறது. கோலெட் கத்துகிறாள்.. அந்த அலறல் தாங்க முடியாத துயரின் வெளிப்பாடாக உள்ளது.

கணவனே அவளது லெஸ்பியன் உறவை ஆதரிக்கிறான். அந்தப் பெண்ணைத் தேடி கோலெட் செல்லும் போது கணவனிடம் அனுமதி கேட்கிறாள். அவளைப் போய் வரச் சொல்கிறான். இரண்டு பெண்களுக்குள் ஏற்படும் அந்த நெருக்கமும் நட்பும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது போலவே கிளாடின் (Claudine) நாவல் வரிசைகள் அடைந்த வெற்றியைக் கொண்டாடும் வில்லி மேஜை மீது ஏறி நடனமாடியபடியே தனது மகிழ்ச்சியைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்க காட்சி

19ம் நூற்றாண்டு பிரெஞ்சு வாழ்க்கையைப் படம் மிகவும் கவித்துவமாகச் சித்தரித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் இசையும் அபாரம்.

கோலெட்டின் வாழ்க்கையை மட்டுமின்றிப் புத்தகங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எந்த அளவு வாசகர்களால் கொண்டாடப்பட்டது என்பதையும் படம் அழகாகச் சித்தரிக்கிறது. ஒரு காட்சியில் பூங்காவில் உள்ள பெரும்பான்மையினர் நாவல் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளரை தேடி வந்து பாராட்டுகிறார்கள். விருந்தில் அவர் கதாநாயகன் போலக் கொண்டாடப்படுகிறார்.

எழுத்தாளர்களைப் பற்றிய திரைப்படங்களில் கோலெட் முக்கியமான ஒன்றே.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: