திருவல்லிகேணி

புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மகன் சாரங்கன் அவர்களைச் சந்தித்தேன். அவரோடு பல ஆண்டுகளுக்கு முன்பாகப் பள்ளியில் படித்த நண்பர்கள் சிலரும் உடனிருந்தார்கள்.

சாரங்கன் தனது தந்தையைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்து வருகிறார். விளம்பரப் படங்கள். ஆவணப்படங்கள் எடுப்பதில்  சாரங்கன் முன்னோடி கலைஞர்.

எந்தப் பள்ளியில் படித்தீர்கள் என்று கேட்டேன். திருவல்லிகேணி ஹிண்டு ஹைஸ்கூல் என்றார் சாரங்கன். எங்கள் பேச்சு திருவல்லிகேணியைப் பற்றித் திரும்பியது.

சென்னையில் திருவல்லிகேணி மட்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றேன்

எப்படிக் எனக்கேட்டார். பேச்சு விரியத்துவங்கியது.

எனக்குத் திருவல்லிகேணியை மிகவும் பிடிக்கும். அது எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், கணித அறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலரும் வாழ்ந்த இடம். சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் முதன்மையானது.

பாரதி அங்கே தான் வசித்தார். உ.வே. சாமிநாதய்யர், சி.சு.செல்லப்பா, ஞானக்கூத்தன், கு.அழகிரிசாமி, வைமுகோ, பிரபஞ்சன், சின்னக்குத்தூசி, எனப் பலரும் திருவல்லிகேணி வாசிகள்.

திருவல்லிகேணி இன்றும் தனது பழமையைக் காப்பாற்றி வைத்துள்ளது. மாலையானதும் திருவல்லிகேணி இந்த நூற்றாண்டிலிருந்து பின்னோக்கி போய்விடுகிறது. இன்றும் தெருவில் குழந்தைகள் ஒடிவிளையாடுகிறார்கள். ஏதோ ஒரு வீட்டில் பாட்டு சொல்லித் தருவது கேட்கிறது. யாரோ வீணை வாசிக்கிறார்கள். தள்ளுவண்டிக்காரன் சப்தமிடாமல் பழம் விற்றுப் போகிறான். அசைவற்ற பசுமாடுகள் சுவரோரம் நிற்கின்றன. தெருநாய்கள் தலை தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொள்கின்றன. அழகிய கோலமிட்ட வீட்டு வாசல்கள். பெரிய தூண்கள் கொண்ட வீடுகள். பழங்கால பெயர்பலகைகள். சுவரில் தொங்கும் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் அதை ஒட்டிய மாட வீதிகளும், குளமும், கரையோரம் அமர்ந்துள்ள முதியவர்களும் எனக் காலம் பின்னோக்கிப் போய்விட்டது போலவேயிருக்கிறது

திருவல்லிகேணி பகலும் இரவும் சுவையான உணவு தரும் உணவகங்களைக் கொண்டிருக்கிறது. பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்பது திருவல்லிகேணி தானே. எத்தனை விதமான மெஸ்கள். ஆந்திரா மெஸ்ஸில் தரப்படும் பருப்பு பொடியும் சுடு சோறும் இன்றும் நினைவில் மணக்கிறது.

திருவல்லிகேணியில் வசிப்பவர்களுக்கு முழுச் சென்னையும் தேவையில்லை. சிறிய குடித்தனம் என்றாலும் நிறைவாக வாழுகிறார்கள். நான்குமாடிகள் படியேறி போனாலும் அலுத்துக் கொள்வதில்லை. திருவல்லிகேணியில் கிடைக்காத பொருளேயில்லை. எல்லாமும் ஒரு வீதி தாண்டி போனால் கிடைத்துவிடும். கடற்கரைக்கு மிகவும் அருகில் என்பதால் அன்றாடம் மாலை நடந்து கடற்கரைக்குச் செல்பவர்கள் இருக்கிறார்கள். சேர்ந்து வாழுவதில் இன்பம் காணுகிறவர்கள் திருவல்லிகேணிவாசிகள்.

ஒரு காலத்தில் கடற்கரை தான் எழுத்தாளர்களின் சங்கமம். புதுமைபித்தன். மௌனி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன், ஆத்மநாம், ஆனந்த் எனப்பலரும் அதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். மௌனி கதையில் வரும் மெரினா கடற்கரை மயக்கமூட்டக்கூடியது..

ஒருகாலத்தில் அரசியல் கூட்டங்கள். தலைவர்களின் பேச்சு எல்லாமும் கடற்கரையில் தான். அங்கே மகாத்மா காந்தி பேசியிருக்கிறார். திலகர் பேசியிருக்கிறார். பாரதி பேசியிருக்கிறார். வ.உ.சியும் சுப்ரமணிய சிவாவும் ராஜாஜியும், காமராஜரும் பேசியிருக்கிறார்கள். அந்த நினைவுகளுடன் தான் கடற்கரை விரிந்துகிடக்கிறது

நான் திருவல்லிகேணியில் நான்கு ஆண்டுகள் இருந்தேன். மேன்ஷன் வாழ்க்கை. வேறுவேறு மேன்ஷன்கள். இதில் சில மாதம் அறையெடுக்காமல் எவரது அறையிலாவது தங்கிக் கொண்டிருந்தேன். சுற்றிலும் மெஸ். எந்த நேரமும் போக்குவரத்து வசதி. பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். ஆளுக்கு ஒரு கனவு. ஆளுக்கு ஒரு கவலை.

திருவல்லிகேணியின் பைகிராப்ட்ஸ் ரோடில் ஞாயிறு மாலை பழைய புத்தகக் கடைகள் வரிசையாகக் காணப்படும். சில கடைகளில் எந்தப் புத்தகம் எடுத்தாலும் பத்து ரூபாய் தான். நிறைய நல்ல புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். திருவல்லிகேணி ஹைரோடில் உள்ள MUHAMMADAN PUBLIC LIBRARY 1850 துவங்கப்பட்ட மிகப்பழமையான நூலகமாகும்.

பைகிராப்ட்ஸ் ரோடு ஆயிரம் கதைகள் கொண்டது. எழுதித் தீராத நிகழ்வுகள் கொண்டது.  சர் தாமஸ் பைகிராப்ட் 1862 முதல் 1867 வரை சென்னை சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினராகப் பணியாற்றிய ஒரு பிரிட்டிஷ் நிர்வாகி. பைகிராப்ட் அந்தப் பகுதியில் வசித்தவர் என்பதால் அந்த வீதிக்கு அவர் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

டிசம்பர் ஜனவரி இரண்டு மாதங்களிலும் திருவல்லிகேணி மிகுந்த அழகோடு காணப்படும். காலை நேரங்களில் வீதியில் நடந்து போனால் அத்தனை ரம்மியமாக இருக்கும்.  வீதியில் திருப்பாவை கேட்கலாம்.

ரத்னா கபேயின் இட்லி சாம்பாரும் காபியும் சாப்பிடுவதற்காகவே திருவல்லிகேணியில் வசிப்பவர்களுண்டு. இட்லியின் மீது சாம்பாரை பெரிய குவளை நிறையக் கொண்டுவந்து ஊற்றுவார்கள். பெல்ஸ் ரோடிலுள்ள முரளி கபே பொங்கலுக்காகக் காத்துக்கிடப்பவர்கள் தனிரகம். விநாயகா மெஸ்ஸில் மஞ்ச டோக்கனை, வெள்ள டோக்கனாக மாத்தி  காத்திருந்து சாப்பிடுவது தனிவுலகம்.

ஒருமுறை கொலு வைக்கும் போது நண்பனின் அழைப்பிற்காக அவனது வீட்டிற்குப் போயிருந்தேன். சிறிய குடித்தனம். மாடிப்படி அருகே சிறியதாக ஒரு கொலு. அழகழகான பொம்மைகள். பள்ளி மாணவி போலிருந்த ஒரு சிறுமி அபாரமாகப் பாடினாள். உன்னையல்லால் வேறு தெய்வம் இல்லையம்மா என்ற அந்தப் பாடலைக் கேட்டு முடிக்கையில் கண்ணீர் ததும்பியது. பாடி முடித்தபிறகு அவள் மீண்டும் பள்ளி சிறுமியாகி வெட்கத்துடன் தேங்ஸ் அங்கிள் என்றாள். அவளைப் போல எத்தனையோ சிறந்த பாடகிகள் திருவல்லிகேணிக்குள் வெளியுலகம் அறியாமல் இருக்கிறார்கள்.

இன்றும் சில வீடுகளில் திண்ணைகள் இருக்கின்றன. அந்தத் திண்ணையில் யாரோ ஒரு பாட்டி தெருவைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்.  காலத்தை வென்ற கண்கள்.

திருவல்லிகேணியில் நிறைய வயதானவர்களைக் காணலாம். அவர்களின் தோற்றத்தை வைத்து யார் அவர் எனக் கண்டறிய முடியாது. ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஒய்வு காலத்தில் வந்திருப்பதாகச் சொன்னார். சிலர் சமஸ்கிருத அறிஞர்கள். சிலர் கணித ஆய்வாளர்கள். விஞ்ஞானிகள். சிலர் ஆழ்ந்து தமிழ் படித்தவர்கள். பிரபந்தம் பற்றிப் பேசினால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

திருவல்லிகேணியில் ஒரு பகுதி முழுவதும் இஸ்லாமியர்கள். சொந்த சகோதரரைப் போலப் பழகக்கூடியவர்கள். திருவல்லிகேணியில் மாலையில் புறாக்களையும் கிளிகளையும் அதிகம் காணலாம். கிளிகளுக்கு உணவிடும் ஒருவர் அங்கேயிருக்கிறார். அவர் வீட்டு மாடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான கிளிகள் வருகின்றன .

பார்த்தசாரதி கோவிலைக் காணுகையில் பாரதியின் நினைவே மேலிடுகிறது. லாவண்யா என்ற பெண் யானை பாரதியை தூக்கி எறிந்தது  வரலாறு.  பாரதியே கோவில்யானை என்றொரு சிறு நாடகத்தை எழுதியிருக்கிறார். இப்படைப்பு 1920 சுதேசமித்திரன் அனுபந்தத்தில் முதன்முறையாக வெளிவந்திருக்கின்றது. அதை பேராசிரியர் மணிகண்டன்  கண்டறிந்து தற்போது மீள்பதிப்பு செய்திருக்கிறார்.

பாரதி யானையின் காலில் மிதிபட்டு இறக்கவில்லை. அதிலிருந்து மீண்டு சில மாதங்களின் பின்பு வயிற்றுப்போக்கின் காரணமாகவே உயிர் துறந்தார். அவரது மரணசான்றிதழ் இணையத்தில் காணக்கிடைக்கிறது.

மார்லன் பிராண்டோ நடித்த On the Waterfront பார்த்தவர்களுக்குப் புறாக்களை வளர்க்கும் கூண்டுகள் நிரம்பிய மொட்டைமாடியும். அங்கே தாவித்தாவி மார்லன் பிராண்டோ செல்வதும் நினைவிருக்கும். அப்படியான மொட்டை மாடிகள் திருவல்லிகேணியில் தானிருக்கிறது.

மேன்ஷனில் இருந்த நாட்களில் பெரும்பாலும் திறந்த வெளியில் வானைப் பார்த்தபடியே படுத்துக்கிடப்பேன். வானெங்கும் நட்சத்திரங்கள். கடலோசை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கேட்கத்துவங்கும். பின்னிரவில் காற்று திசைமாறும்.

விடிகாலை மூன்று மணிக்கு கடற்கரைக்குப் போயிருக்கிறீர்களா. நாங்கள் நண்பர்களாகச் செல்வோம். அடர்ந்த இருளுக்குள் கால்களை நனைத்தபடியே நின்றிருப்போம். அருகிலுள்ள சேரியில் இருந்து எருமைகளைக் குளிக்க வைக்க அழைத்து வருவார்கள். இப்போது அப்படி நடைபெறுகிறதா எனத் தெரியவில்லை. ஆனால்  விடிகாலை நான்கு மணிக்குள் கூட்டம் கூட்டமாக எருமைகள் கடற்கரைக்கு வருவதும் கடல் அலைகளை அள்ளி எருமைகளைப் பெண்கள் குளிக்க வைப்பதையும் காண்பது  அற்புதமாக இருக்கும்.

திருவல்லிகேணியில் உள்ள மருத்துவர்களில் பலரும் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக  அங்கே இருப்பவர்கள். எனது நண்பனுடன் அப்படி ஒரு மருத்துவரை காணப் போயிருக்கிறேன். நண்பனை பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார். மருத்துவ ஆலோசனை தந்துவிட்டுப் பீஸ் வாங்க மறுத்துவிட்டார். தெருமுனையில் ஒருவன் கடலைவிற்பான். ஒரு பொட்டலம் வாங்கிக் குடுத்துடு அது போதும் என்று டாக்டர் சொன்னது வியப்பளித்தது

சென்னையில் எல்லாப் பகுதிகளும் மாறிவருவதைப் போலத் திருவல்லிகேணியும் அதன் பூர்வ அடையாளத்தை இழந்து வருகிறது. ஆனால் திருவல்லிகேணியில் வசிப்பவர்களின் நினைவில் பழைய திருவல்லிகேணி அப்படியே இருக்கிறது.

1600 களில் திருவல்லிகேணி ஒரு தனிக் கிராமமாக இருந்தது. 1668 ல் அதனை மதராஸின் பகுதியாக இணைத்துக் கொண்டார்கள். 19 ஆம் நூற்றாண்டின் நடுவில், பல்வேறு கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் அமைக்கப்பட்டன. தற்போது திருவல்லிகேணி காவல் நிலையமாகப் பணியாற்றும் கட்டிடம் 1891 ஆம் ஆண்டில், மதராஸின் காவல்கட்டிடமாக இருந்தது. இதுவே சென்னையின் மிகப் பழமையான போலீஸ் நிலையமாகும். பிரிட்டீஷ் ஆட்சியில் திருவல்லிகேணியில் டிராம் ஒடியது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் திருவல்லிகேணியை அடுத்தது என்பதால் திருவல்லிகேணி வீதிகளுக்குள் நிறையக் கிரிக்கெட் விளையாடும் சிறார்களைக் காணலாம். பெரியவர்களும் கூடச் சில நேரம் சிறார்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஸ்டார் தியேட்டரும் பாரகனும் திருவல்லிகேணியின் அடையாளங்களில் குறிப்பிடத்தக்கது. ஸ்டார் 1936ல் கட்டப்பட்ட திரையரங்கு. இந்த அரங்கில் யாதோங்கி பாரத் திரைப்படம் நூறு வாரமும், மதுமதி ஐம்பது வாரமும் ஒடி சாதனை புரிந்திருக்கின்றன. இந்தி படங்களில் பெரும்பான்மை ஸ்டார் தியேட்டரில் தான் வெளியாகியிருக்கின்றன.

நான் ஸ்டார் தியேட்டரில் நிறையப் பழைய படங்களைப் பார்த்திருக்கிறேன். அதிலும் இரவுக்காட்சிக்கு வருபவர்களில் அதிகம் ஆட்டோ ஒட்டுனர்கள். உழைப்பாளிகள். உணவகத் தொழிலாளிகள் எனத் தனிரகமிருந்தார்கள். அவர்கள் ரசித்துச் சப்தமிட்டுப் படம் பார்ப்பார்கள். 2012ல் ஸ்டார் தியேட்டர் மூடப்பட்டது.

திருவல்லிகேணியைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். சாரங்கனின் நினைவில் திருவல்லிகேணி ஒருவிதமாகப் பதிந்து இருந்தது. அவருடன் வந்த நண்பர்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

சைக்கிள் கமலத்தின் தங்கை என்ற சிறுகதையைத் திருவல்லிகேணியின் நினைவாகவே எழுதினேன். அக்கதை திருவல்லிகேணிக்கு தான் சமர்பணம் என்றேன். அவர்கள் உடனே அக்கதையைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

நவீன தமிழ் கவிதையின் முன்னோடியாகக்  கொண்டாடப்படும்  ஞானக்கூத்தன் நினைவாகவே அக்கதையை எழுதினேன். அதில் திருவல்லிகேணி தான் மையப் படிமம்.

திருவல்லிகேணி பற்றி எழுதுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. நிச்சயம் எழுதுவேன்.

ஞாபகத்தின் சிமிழ் திறந்துவிட்டால் வாசனை வெளிப்படாமலா போகும்.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: