சைக்கிள் கமலத்தின் தங்கை


திருவல்லிக்கேணிக்குள் ஒராயிரம் சந்துகள் இருக்கின்றன. எந்தச் சந்திற்குள் கவிஞர் ஞானக்கூத்தன் வீடிருக்கிறது என அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஒருமுறை பைகிராப்ட் சாலையிலுள்ள நடைபாதை புத்தகக் கடை ஒன்றில் தேடிக் கொண்டிருந்த போது அருகில் ஞானக்கூத்தன் ஒரு ஆங்கிலப்புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொண்டிருப்பதை நாதன் கவனித்தான்.

அவர் ஞானக்கூத்தன் தானா?. அவரது கவிதைகளை வாசித்தவன் என்ற முறையில் அவரோடு பேச விரும்பினான். ஆனால் எப்படிப் பேசுவது. எவ்விதம் தன்னை அறிமுகம் செய்து கொள்வது எனத் தெரியவில்லை.

நாதனுக்குத் திக்குவாய். சிறுவயதிலிருந்தே யாருடனும் பேசுவதற்குத் தயங்குவான். பேச வேண்டிய அவசியம் வந்துவிட்டால் தட்டுதடுமாறி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான். சிலர் அவன் பேசுவதைக் கேட்டு கேலி செய்வார்கள். சிலர் ஒண்ணுமே புரியலை எனக் கடிந்து கொள்வார்கள். அந்தத் தாழ்வுணர்ச்சி அவனை வாட்டியது.

பலநேரங்கள் இக்குறையை நினைத்து அழுதிருக்கிறான். பள்ளியில் மாணவர்கள் கேலி செய்கிறார்கள் என்பதாலே ஒன்பதாவது வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டுவிட்டு மெடிகல் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். கடையில் ஆளுக்கு ஆள் அவனை வேலை ஏவிக் கொண்டேயிருப்பார்கள், அவனுக்கு நண்பர்களேயில்லை.

ஊரில் அப்பா இறந்து போன பிறகு அவன் சென்னைக்கு வேலைக்கு வந்தான். மேன்ஷனில் அறை எடுத்துக் கொண்டு வேலைக்குப் போய் வரத்துவங்கினான். அவனது பார்மசி ஷாப் பெல்ஸ் ரோட்டிலிருந்தது. காலை எட்டுமணிக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்கே திரும்பி வரமுடியும். மதிய நேரங்களில் மருந்துக்கடையில் கூட்டமிருக்காது. அப்போது ஏதாவது பத்திரிக்கை படிக்கலாம்.

அவனது அறைத்தோழனாக இருந்தவன் கோபால். அவன் தீவிரமாக இலக்கியம் படிப்பவன். கவிதைகள் எழுதுகிறவன். அவன் படித்துப் போட்ட புத்தகங்களை, சிற்றிதழ்களைத் தேடி எடுத்துவந்து கடையின் ஒய்வு நேரத்தில் நாதன் படித்துக் கொண்டிருப்பான். அப்படித்தான் ஞானக்கூத்தன் அவனுக்கு அறிமுகமானார்.

அவரது அன்று வேறுகிழமை கவிதைத் தொகுப்பை படித்திருக்கிறான். ஆனால் இந்தத் திக்குவாயை வைத்துக் கொண்டு அவரிடம் எப்படிப் பேசுவது. ஒரு வார்த்தை வருவதற்குள் திண்டாடிவிடுகிறதே என அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர் எழுந்து நின்று கொண்டு புத்தகத்தை அங்குமிங்கும் புரட்டியபின்பு தனது ஜிப்பா பையிலிருந்து இருபது ரூபாயை எடுத்து நீட்டினார். கடைக்காரன் வாங்கிக் கொண்டபடியே அந்தக் கட்டுல பழைய புத்தகம் இருக்கு அதைப் பாத்தீங்களா சாமி என்றான். எதற்காக அவரைச் சாமி எனக் கடைக்காரன் அழைத்தான் எனப்புரியவில்லை.

அவர் ஒரமாக இருந்த புத்தகக் கட்டை திரும்பி பார்த்தார். அட்டை கிழிந்து போன பழைய புத்தகங்கள். இறுக்கமாகச் சணல் கயிறு கொண்டு கட்டியிருந்தார்கள். அதை அவிழ்க்க அவரால் இயலவில்லை. நாதன் அவருக்கு உதவி செய்ய முனைந்தான். கட்டை அவிழ்த்துக் கொடுத்தவுடன் அவர் மெல்லிய குரலில் தேங்ஸ் என்றார்.

பிறகு ஒவ்வொரு புத்தகமாகக் கையில் எடுத்து அதன் முகப்பை உற்று கவனித்தார். ஒரு புத்தகத்தைப் புரட்டி அதிலுள்ள ஒரு கவிதையை அவர் படிக்கும் சப்தம் முணுமுணுப்பாகக் கேட்டது. நாதன் ஒரக்கண்ணால் அது என்ன புத்தகம் எனப் பார்த்தான். திருவரங்கக் கலம்பகம் என அச்சிடப்பட்டிருந்தது.

அந்த ஒன்றை மட்டும் அவர் வாங்கிக் கொண்டார்.

“நான் உங்கள் கவிதைகளை வாசித்திருக்கிறேன்“ என அவரிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் நாக்கு அசையவில்லை

கடந்து செல்லும் பசுமாடு ஒன்றை வேடிக்கை பார்த்தபடியே ஞானக்கூத்தன் நின்றிருந்தார். பிறகு மெதுவாக ஒரு சந்திற்குள் நடந்து போகத்துவங்கினார். அவர் பின்னாடியே போனால் என்னவென்று தோன்றியது.

ஒரு கவிஞனை பின்தொடர்வது என்றால் அவன் கவிதைகளை மட்டும் தொடர்வது என யார் சொன்னது. அவரது பின்னால் நாதனும் நடக்கத் துவங்கினான். தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வருகிறான் என்பதை அவர் அறியவேயில்லை. ஏதோவொரு கனவுநிலையில் நடப்பவரை போலவே நடந்து போய்க் கொண்டிருந்தார்.

அவரது நடை வீடு திரும்புகிறவரைப் போலில்லை. மொத்த திருவல்லிகேணியும் தனது உலகம், அங்கே தான் நகர்வலம் சென்றுகொண்டிருக்கிறேன் என்பது போலிருந்தது. இந்த வீதிகளில் பாரதியும் ஒரு காலத்தில் இப்படித்தான் நடந்திருப்பார். ஒருவேளை மானசீகமாகப் பாரதியோடு பேசிக் கொண்டபடியே தான் ஞானக்கூத்தன் நடந்து கொண்டிருக்கிறாரோ என்னவோ, இப்படிக் கற்பனை செய்து கொள்வது சுகமாகதானிருக்கிறது.

சென்னைக்கு வந்த பிறகு தான் நாதன் கவிதைகள் படிக்க ஆரம்பித்தான். கதைகளை விடக் கவிதையே அவனுக்குப் பிடித்திருந்தது. சில நேரம் கோபாலைத் தேடி வரும் இளம் எழுத்தாளர்கள் மணிக்கணக்கில் இலக்கியம் பேசிக் கொண்டிருக்கும் போது நாதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பான்.

எதற்காக இப்படி மாய்ந்து மாய்ந்து இலக்கியம் பேசுகிறார்கள். சண்டைபோடுகிறார்கள். பேசி என்ன செய்துவிட முடியும். ஒரு கவிதையை இப்படி எல்லாம் வாசிக்க முடியுமா என்ன. இவர்களாக ஆளுக்கு ஒரு அர்த்தம் கொள்கிறார்களா என்று நாதன் யோசித்துக் கொண்டிருப்பான்.

ஆனால் அதைப்பற்றிக் கோபாலிடம் பேசிக் கொண்டது கிடையாது. சிற்றிதழ்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நாதனின் உலகம் கலைய ஆரம்பித்தது. ரகசியமாக ஒரு பெண்ணைப் பின்தொடர்வதைப் போன்ற ஆர்வத்தை உருவாக்கியது.

நாதன் அன்று வேறு கிழமை கவிதை புத்தகத்தை மருந்துக்கடைக்கே கொண்டுவந்து வைத்துக் கொண்டான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் புரட்டிப்படித்தான். யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அதற்கு ஒரு அட்டை போட்டுக் கொண்டான். சில கவிதைகளைப் படிக்கும் போது அவனுக்குச் சிரிப்பாக வரும். சில கவிதைகளை வாசித்துமுடித்தவுடன் வியந்து போய்விடுவான்.

ஒருமுறை அவனும் கோபாலும் ஆந்திராமெஸ்ஸிற்குச் சாப்பிடப்போன போது எதிரில் ஞானக்கூத்தனும் இன்னொரு நபரும் பேசியபடியே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கோபால் வேகமாகச் சாலையைக் கடந்து அவர்கள் முன்பாகப் போய் நின்று ஏதோ சொன்னான் ஞானக்கூத்தன் தலையாட்டியபடியே அவனிடம் ஏதோ சொன்னார். கிழே கிடந்த சிகரெட் அட்டை ஒன்றில் அவன் அவரது முகவரியை எழுதிக்கொண்டான். திரும்பி வந்த கோபால். அவர் கவிஞர் ஞானக்கூத்தன் இங்கே தான் பக்கத்து தெருவில இருக்கிறார். பெரிய பொயட். போய்ப் பாக்கணும் என்றான்.

நாதன் அந்த முகவரியை அறிந்து கொள்ள விரும்பினான். ஆனால் கேட்டுக் கொள்ளவில்லை. அன்று தான் முதன்முதலாக ஞானக்கூத்தனை நேரில் பார்த்தான்.

அதன் பிறகு சில முறை ஞானக்கூத்தனை அண்ணாசாலையிலும் கண்டிருக்கிறான். ஒருமுறை அவனது பார்மசிக்கே வந்து இருமல் மருந்து வாங்கிப்போனார். ஒருமுறை அவர் சிகரெட் பிடித்தபடியே நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ஆனால் அவரை இப்படி ஒருநாள் பின்தொடர்வோம் என நினைத்துகூடப் பார்க்கவில்லை

தனக்குப் பிடித்தமான ஒரு எழுத்தாளரை அவர் அறியாமல் பின்தொடர்ந்து நடப்பது ஒரு இன்பம். அதை நாதன் முழுமையாக அனுபவித்தான். ஒரு பூனை ஞானக்கூத்தனை குறுக்கிட்டு கடந்து போனது. அது நாதனை நின்று திரும்பி பார்த்துப் போனது ஏன் எனப்புரியவில்லை. திருவல்லிகேணியில் எந்த வீதிகளும் பழமையின் சின்னங்களாகவே இருந்தன. ஞானக்கூத்தன் ஆளற்ற சாலையிலும் ஒரு ஒரமாகவே நடந்து போய்க் கொண்டிருந்தார். கவிஞர்களுக்குப் பல நிழல்கள். அவரது வாசகர்கள் எல்லோரும் அவரது நிழல்கள் தானோ

திடீரென ஒரு சந்திற்குள் ஞானக்கூத்தன் காணாமல் போய்விட்டார். எப்படி மறைந்தார். எது அவருடைய வீடு. திகைத்துப் போய் நின்ற போது ஒரு தெருநாய் அவனை ஏறிட்டு பார்த்துக் குரைத்தது.

“சே. எப்படித் தவறவிட்டேன். “ ஒருவேளை இந்தச் சந்திற்குள் தான் அவரது வீடு இருக்கிறதா எனக் குழப்பத்துடன் நின்றிருந்தான். இனி என்ன செய்வது எனச் சில நிமிஷங்கள் யோசித்தான். விளையாட்டு முடிந்து போன சிறுவனைப் போல இருந்தது அவனது மனநிலை.

அறைக்குத் திரும்புவதற்காக நடந்த போது பார்த்தசாரதி கோவில் கோபுரம் தெரிந்தது. அறைக்குத் திரும்பியதும் வழியில் ஞானக்கூத்தனை பார்த்தேன் என்றான். எங்கே எனக் கோபால் கேட்டுக் கொள்ளவேயில்லை. அவன் தாசியும் தபசியும் நாவலை படித்துக் கொண்டிருந்தான்

அவரை நேரில் பார்த்த இரவு அவரது கவிதைகளை மறுபடி வாசிக்கும் போது அது வேறுவிதமாகப் புரிய ஆரம்பித்தது. அவரது குரலில் அந்தக் கவிதை ஒலிப்பது போலிருந்தது. ஒருவேளை அப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறேனா. ஒரு கவிஞனை சந்திப்பதன் வழியே அவன் கவிதைகளின் குரல் மாறிவிடுமா. எப்படியோ அந்த அனுபவம் அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

••

ஆனால் அதன்பிறகு ஞானக்கூத்தன் நடந்த வீதியில் அடிக்கடி நடந்து போகத் துவங்கினான். திரும்ப அவரைச் சந்திக்க முடியாதா என்ற ஏக்கம் அவனுக்குள் உருவாகத் துவங்கியது. இந்தத் திருவல்லிகேணியில் எத்தனையோ ஆயிரம் பேர்கள் வசிக்கிறார்கள் அவர்களில் ஒருவர் தான் கவிஞருமா. அதை நாதனால் ஏற்றுக் கொள்ள முடியவேயில்லை.

ஏன் கவிஞர்கள் இப்படிச் சின்னஞ்சிறு அறைகளில், வீடுகளில் வசிக்கிறார்கள். தனியே நடந்து அலைகிறார்கள். பழைய புத்தகக் கடைகளில் தேடி பத்து ரூபாய்க்குப் புத்தகம் வாங்குகிறார்கள். இவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள்.

இந்தத் திருவல்லிகேணியில் டூப்ளிகேட் வாசனை திரவியம் விற்பவன் கூடப் பைக்கும் பாக்கெட் நிறையக் காசுமாக இருக்கிறானே. எழுத்தாளர்கள். கவிஞர்கள் மட்டும் ஏன் கஷ்டப்படுகிறார்கள். இந்த நகரை உறிஞ்சிவாழும் வணிகர்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் துளி கூட இந்த நகரை பெருமைப்படுத்தும் கலைஞர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை. நாதனுக்கு வருத்தமாகயிருந்தது.

திருவல்லிகேணியில் இன்றும் கிளிகள் இருக்கின்றன. சில வீடுகளின் கூரையில் இருந்தபடி கிளி கத்துவதைக் கேட்டிருக்கிறான். கவிஞர்களும் திருவல்லிகேணியின் கிளிகள் தானா.

தனது கவிதைகளில் வெளிப்படுத்தும் உக்கிரத்தை. கோபத்தை வாழ்வில் அவர்கள் வெளிப்படுத்தவே மாட்டார்களா. இதை எல்லாம் பற்றி யாரிடம் கேட்பது, தெளிவுபடுத்திக் கொள்வது. கோபாலிடம் பேசலாம் போலிருந்தது.

ஆனால் அவன் அனாசின், அசித்ரோசின் விற்கிற உனக்கு எதுக்குடா கவிதை என்று கேலி செய்வான். சில நேரம் தனக்குத் தெரியாமல் ஏன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு போனாய் எனக் கோவித்துக் கொள்ளவும் கூடும்.

ஒருமுறை அவனது புத்தகத்தின் மீது ஒரு சொட்டு டீ சிந்திவிட்டது என்பதற்காகத் தன்னை மிக மோசமாகத் திட்டியது நினைவிலிருந்தது. ஆகவே நாதன் கவிதைகளை மனதிற்குள்ளாக வாசித்து மகிழ்ந்து கொண்டான்.

தண்ணீர் பட்டவுடன் மண் மிருதுவாகிவிடுவது போலக் கவிதைகள் படிக்கத் துவங்கியதும் மனது நெகிழ்வு கொண்டுவிடுகிறது. தண்ணீர் அதிசயமானதில்லை. ஆனால் மழை அதிசயமானது, அதுவும் நீர்துளி தான். ஆனால் எங்கிருந்து எப்படி வருகிறது எனத்தெரியவில்லை. அதைவிடவும் மழைத்துளி ஒரு வடிவம் கொண்டிருக்கிறது. ஒரு துளி என்பது முழுமையான வடிவம். அது தான் அழகை தருகிறது. எவ்வளவு முறை பார்த்தாலும் மழை பிடித்தேயிருக்கிறது. கவிதையும் மழை போலத் தானா. காலில் தார் ஒட்டிக் கொண்டது போலச் சில கவிதைகள் மனதில் ஒட்டிக் கொண்டுவிடுகின்றன. அதை எளிதில் விலக்கமுடியாது. ஞானக்கூத்தன் கவிதையும் அப்படித்தான் என நினைத்துக் கொள்வான்

கதை கவிதைகளைப் படிக்கிற எல்லோரும் எழுத வேண்டும் என ஆசைப்படுகிறவர்களில்லை. சிலர் படிப்பதை மட்டுமே விருப்பமாகக் கொண்டவர்கள். அதன் வழியே தன்னை அறிந்து கொண்டவர்கள். தானும் அதில் ஒருவன் என நாதன் நம்பினான்

மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இலக்கியங்களைத் தேடித்தேடி வாசிக்கும் கோபால் மிகுந்த முன்கோபியாக இருந்தான். எப்படி இவ்வாறு இருக்கமுடிகிறது. சொந்தவாழ்க்கையை இலக்கியம் பாதிக்காதா. அதே கோபால் சில நாட்கள் அவனுக்கும் சேர்ந்து சாப்பாடு வாங்கிக் கொண்டுவருவதுடன் அவனது உடைகளைக் கூடச் சேர்த்து துவைத்துப் போடுவதும் உண்டு. நவீன இலக்கியம் மட்டுமில்லை அது சார்ந்து இயங்குபவர்களையும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே நிஜம்.

எறும்பு ஒவ்வொரு அரிசியாக இழுத்துக் கொண்டு போவதை போல நாதன் ரகசியமாகச் சிற்றிதழ்களை ஒவ்வொன்றாகத் தனது கடைக்கு எடுத்துப் போய்ப் படிக்கத் துவங்கினான். சிற்றிதழ்களின் வழியே வாழ்வில் ஒருபோதும் கேட்டிராத சொற்கள், வரிகள் அறிமுகமாகத் துவங்கின. சலூனில் முடிவெட்டுக் கொண்டு திரும்பும் நேரம் ஒரு புத்துணர்வு வருமில்லையா. அது ஒவ்வொரு கவிதை படிக்கும் போது அவனுக்கு உருவானது. இலக்கியம் படிக்கத் துவங்கிய பிறகு திடீரென அந்தத் திருவல்லிகேணி பேரழகான இடம் போலத் தோன்றியது. எல்லா மனிதர்களையும் பிடித்திருந்தது.

ஒரேயொரு முறை ஞானக்கூத்தனை சந்தித்துவிட வேண்டும் என அவன் முடிவு செய்து கொண்டதற்கு முக்கியக் காரணம் அவரது சைக்கிள் கமலம் கவிதை. அதைப் படிக்கும் போது நாதனுக்குத் தோன்றியது.

இந்தக் கவிதை சைக்கிள் விடும் கமலத்தைப் பற்றியதில்லை. ஊரைப்பற்றியது. ஊர் மாற்றம் அடைகிறது, அதன் அடையாளமாகப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது.

எங்கள் ஊரில் என்ற சொற்களைக் கவிஞர் அதற்காகத் தான் போட்டிருக்கிறார் என நினைத்தான்.

சைக்கிள் கமலம் மாற்றத்தின் அடையாளம். தொழில்நுட்பம் வந்தபிறகே பெண்களின் வாழ்க்கை மாற ஆரம்பிக்கிறது. தானே அவள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறாள். சைக்கிள் விடுவது அவளது சுதந்திரம். அதை முழுமையாக அனுபவிக்கிறாள். ஆண்கள் சைக்கிள் ஒட்டுவது தேவை கருதி. ஆனால் சைக்கிள் கமலம் வீட்டிற்குள் அடங்கிக் கிடந்த பெண் தானில்லை என நிரூபிக்கச் சைக்கிள் ஒட்டுகிறாள்.

அக்கவிதையில் அவனுக்கு ரொம்பவும் பிடித்தவரிகள்

குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்

எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

இதைத் திருவல்லிகேணியில் வசித்தவர்களால் தான் முழுமையாக உணர முடியும். எவ்வளவு பசுமாடுகள். ஆச்சரியமாக இருக்கும். அவை பேருந்துகளின் ஊடாகவும் ஆட்டோக்களின் முதுகை உரசிக் கொண்டும் தன்னியல்பாக நடந்து அலைகின்றன. திருவல்லிகேணி ஒரு பழைய கிராமம் என்பதன் அடையாளம் போலவே அந்தப் பசுக்கள் நடந்து செல்கின்றன.

இது போலவே சிறார்கள், மின்மினிப்பூச்சிகளைப் போல அசலாக ஒளிரக்கூடிய சிறுவர்கள் திருவல்லிகேணியில் வசிக்கிறார்கள். அவர்கள். பேச்சில், சிரிப்பில், வேகத்தில் தனியழகு உள்ளது.

நாதன் சென்னைக்கு வந்தபோது ஏன் திருவல்லிகேணியில் தங்கினோம் என வருத்தப்பட்டிருக்கிறான். ஒரே குப்பை. கொசுக்கள். தெருநாய்கள். பூனைகள் வாகன நெருக்கடி. மாலையானதும் திருவல்லிகேணி ஒரு நூற்றாண்டின் பின்னால் போய்விடும். ஏலம் போடுகிற ஆளின் குரல் கேட்கும். பந்தங்களுடன் சாமி ஊர்வலம் வரத்துவங்குவார். திடீரென ஏராளமான பிச்சைக்காரர்கள் அலைந்து கொண்டிருப்பார்கள். திருவல்லிகேணியின் ஒரே ஆறுதல் நல்ல சாப்பாட்டுக் கடைகள். டீக்கடைகள். ஆனால் ஞானக்கூத்தன் குடியிருக்கிறார் என்றபிறகு அவனுக்குத் திருவல்லிகேணியில் வசிப்பது பெருமைக்குரியதாகத் தோன்றியது

கவிஞர்கள் தான் வாழ்விடத்தை உன்னதமாக்குகிறார்கள். சொற்களைக் கொண்டு வண்ணம் தீட்டுகிறார்கள். கலங்கரை விளக்கை போல அன்பின் வெளிச்சத்தைக் கவிதையினுள் சுழலவிடுகிறார்கள். சே. இது என்ன கவிதைகள் படித்துப் படித்து அதைப் போலவே நானும் யோசிக்கிறேனே என நாதனுக்கு வியப்பாகவும் கூச்சமாகவும் இருந்தது

அந்தக் கவிதையை வாசித்தபிறகு ஞானக்கூத்தனை சந்தித்துக் கைகுலுக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் கூச்சம் தடுத்துக் கொண்டிருந்தது.

பின்பு ஒரு ஞாயிற்றுகிழமை மாலை திடீரென அவர் வீடுதேடி போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்னவென்று தோன்றியது. தேய்த்த சட்டை ஒன்றை மாட்டிக் கொண்டு கிளம்பினான். அன்று வேறுகிழமை புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாமா எனத் தோன்றியது. இது என்ன சாட்சியமா என இன்னொரு கேள்வி கூடவே மனதில் தோன்றியது. புத்தகத்தை அறையில் வைத்துவிட்டு தனியே நடந்தான்.

பார்த்தசாரதி கோவில் அருகேயுள்ள வீதியில் தான் அவரது வீடிருக்கிறது. அதைக் கண்டுபிடித்துவிடலாம் தான் என்று தான் நினைத்தான். ஆனால் அவன் நினைத்தது போல அவ்வளவு சுலபமாகயிருக்கவில்லை. ஒரு ரிக்ஷாகாரனிடம் ஞானக்கூத்தன் வீட்டினை விசாரித்தான்

“அப்படி யாரும் இல்லை. அவரு யாரு டாக்டரா “ எனக்கேட்டான் ரிக்ஷாகாரன்

“இல்லை கவிஞர் “

“சினிமாவுல எழுதுவாரா“

“இல்லை. புத்தகம் எழுதியிருக்காரு“

“தெரியலை. அந்த முக்குகடையில் கேட்டுபாரு“

அந்த முக்குகடைக்காரரிடம் கேட்டபோது தான் ஐம்பது வருஷமாக அங்கே வசிப்பதாகவும் அப்படி யாரும் இங்கே குடியிருக்கவில்லை என்றார். யாரிடம் கேட்பது எனத்தெரியாது குழம்பி நின்ற போது ஒரு சந்துக்குள்ளிருந்து சைக்கிளில் ஒரு சிறுமி வேகமாக வருவது தெரிந்தது. அவள் பச்சை பாவாடை அணிந்திருந்தாள். பத்து பனிரெண்டு வயதிருக்கும். ஒடிசலாக இருந்தாள். தலைமயிரை இரட்டை சடையாகப் பின்னியிருந்தாள். அவள் சைக்கிள் ஒட்டும் விதம் சிரிப்பாக இருந்தது. அவள் சைக்கிள் பிரேக் பிடிக்காமல் வீட்டுசுவர் ஒன்றின் மீது மோதியது. அவள் கிழே விழுந்தாள்.

தானே எழுந்து கொண்டு சைக்கிளிடம் பேசஆரம்பித்தாள்

“உன்னை எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சுவர்ல போய் ஏன்டா மோதி மண்டைய உடைச்சிகிடுறே“ எனச் சைக்கிளை தடவிக் கொடுத்தாள்

நாதனுக்கு அதைப் பார்க்க சிரிப்பு வந்தது. அருகில் போய்த் திக்கிதிக்கி பேசியபடியே அடிபட்ருச்சா எனக்கேட்டான்

“இல்லை அங்கிள்“ என்றாள் அச்சிறுமி

“யாரோட சைக்கிள்“ எனக்கேட்டான்

“அக்காவோடது “

“உங்கவீடு எங்க இருக்கு“ எனக்கேட்டான்

அவள் பதில்சொல்லாமல் ஒரு வீட்டினை கைகாட்டினாள்

“எங்க போய்கிட்டு இருக்கே“ எனக்கேட்டான்

“எங்கேயும் போகலை. சும்மா சுத்திகிட்டு இருக்கேன். நீங்க யார் வீட்டுக்கு போகணும்“ எனக் கேட்டாள்

“ஒரு வீட்டை தேடிக்கிட்டு இருக்கேன்“ என்றான் நாதன்

“யாரு வீடு“

“கவிஞர் ஞானக்கூத்தன்“

“பாட்டுபாடுறவரா“ எனக்கேட்டாள் சிறுமி

“இல்லை பாட்டு எழுதுறவர்“ என்றான் நாதன்

“அப்படி யாரும் இங்கே கிடையாது. எனக்கு இந்த வீதியில் இருக்கிற எல்லோரையும் தெரியும். எத்தனை காக்கா குருவி வருதுனு கூட எண்ணி வச்சிருக்கேன். “

“கண்ணாடி போட்டு இருப்பார். அறுபது வயசிருக்கும். “

“ஜிப்பா போட்டு இருப்பாரா“

“ஆமா“

“அந்த மாமா பேரு ஞானக்கூத்தன் இல்லே. ரங்கநாதன்“ என்றாள் அச்சிறுமி

“அப்படியா“ எனக்கேட்டான் நாதன்

“ஆமா. எங்க அக்காவுக்கு அவரை நன்னா தெரியும்“

“உங்க அக்கா பேரு“

“சைக்கிள் கமலம்“

என்று சொல்லி சிரித்தபடியே ஒரு வீட்டினை அடையாளம் காட்டினாள்

சைக்கிள் கமலம் என்றொருத்தி இங்கே வசிக்கிறாளா. அவளைப்பற்றித் தான் கவிஞர் எழுதியிருக்கிறாரா. அந்தச் சிறுமி தனது சைக்கிளை எடுத்து தள்ளிக் கொண்டு நடக்க முயன்றாள்

நாதன் அவள் கைகாட்டிய வீட்டினை நோக்கி சென்றான்

ஞானக்கூத்தன் வீட்டிலிருந்தார். அவரைப்பார்த்து புன்னகைத்தபடியே என் பேரு நாதன் என்றான்

“இப்படி உட்காருங்க“ என ஒரு முக்காலியை காட்டினார். சிறிய ஹால். ஒரு டேபிள் ஃபேன். பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது போன்ற மேஜை. அதில் நிறையப் புத்தகங்கள். சாய்வு நாற்காலி. அதன் அருகே ஒரு தண்ணீர் சொம்பு. பாதித் திறந்துகிடக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகம்.

அவர் புன்னகையுடன் “உங்க ஊரு“ எனக்கேட்டார்

“திருப்புல்லாணி“ என்றான் நாதன்

“ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில் இருக்கில்லே. ஒருதடவை வந்துருக்கேன்“ என்றார்

ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் என்ன பேசுவது எனப்புரியவில்லை. அவர் மெல்லிய புன்னகையுடன் நாதனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தலைகுனிந்து கொண்டான்

அவனது தயக்கத்தை உடைப்பது போலச் சொன்னார்

“உங்களைப் பழையபுத்தகக்கடையில பாத்துருக்கேன். “

“கொஞ்சம் படிப்பேன் சார்“

“சார் எல்லாம் வேணாம். ஞானக்கூத்தன்னே கூப்பிடலாம். மேன்ஷன்ல தங்கியிருக்கீங்களா“

“ஆமா. நோபல் மேன்ஷன்“

“ஐஸ் ஹவுஸ்லயா“ எனக்கேட்டார்

“ஆம்“ எனத்தலையாட்டினான்.

“லோர்க்காவை கேள்விபட்டு இருக்கீங்களா, நல்ல பொயட். அரசாங்கத்தை எதிர்த்து கவிதை எழுதுனான்னு சுட்டு கொன்னுட்டாங்க. எங்கே யார் சுட்டாங்கன்னு இப்பவும் தெரியலை. அவன் கவிதைகளைத் தான் படிச்சிகிட்டு இருக்கேன். ரொம்ப நல்லாயிருக்கு. “

எனக் கிழே இருந்த ஆங்கிலக் கவிதைப்புத்தகத்தை எடுத்துக்காட்டினார். தலையாட்டிக் கொண்டபடியே திக்கி தயங்கி அவரிடம் சொன்னான்

“உங்க கவிதை எல்லாம் படிச்சிருக்கேன், ரொம்ப நல்லாயிருக்கு“

“சந்தோஷம். வேற யாரெல்லாம் படிச்சிருக்கீங்க“

“பாரதியார், சி.மணி. ஒன்றிரண்டு பசுவய்யா, தேவதச்சன்“.

“கவிதை எழுதுவீங்களா“ எனக்கேட்டார்

“இல்லை“ என வேகமாகத் தலையாட்டினான்

“அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நம்ம எல்லோரோட மனசும் சில தருணங்களிலே கவித்துவத்தை உணருது. ஆனா அதை வார்த்தைகள்ல வெளிப்படுத்த முடியுறதில்லை. அதுக்கு மொழியைக் கையாளத் தெரியணும். “

அப்படியா என்பது போல நாதன் தலையாட்டிக் கொண்டான்

“புதுக்கவிதைக்கு ஐம்பது வயது முடிஞ்சிருச்சி. 1958ல ஆகஸ்டு மாத சரஸ்வதி இதழில் க.நா.சு ஒரு கட்டுரை எழுதுனார் பேரு ‘புதுக்கவிதை’ அப்படித் தான்‘புதுக்கவிதை’ என்ற பெயர் புழக்கத்துக்கு வந்தது. பக்தி இலக்கியத்துக்குப் பின்னாடி தோன்றிய மிகப் பெரிய இலக்கிய இயக்கம் புதுக்கவிதை தான் , தமிழ் புதுக்கவிதைகள் வாசகனிடத்தில் விசாலமான, உயர்வான, செறிவான பாதிப்பை உருவாக்கியிருக்கு. க.நா.சு. ஒரு கவிதை எழுதியிருக்கிறார் பேரு ‘அபஸ்வரம். கவிதையில ஹியூமரை கலந்து தர்றதுக்கு அது தான் முன்னோடி. “

என அவர் கடகடவெனப் பேசிக் கொண்டேயிருந்தார். இடையில் அவர்கள் இருவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தார் ஒரு பெண். அவரை நாதன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“சுகர் போதுமான்னு பாத்துக்கோங்க“ என்றார் ஞானக்கூத்தன்.

எவ்வளவோ காலமாக வந்து போகிற மனிதரை உபசரிப்பது போல இருந்தது அந்தத் தொனி. காபி மிகவும் சூடாகயிருந்தது. கையில் காபி டபராவை வைத்தபடியே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான் நாதன்.

“காரிக் கண்ணனார்னு ஒரு சங்ககாலப்புலவர். அவரு ஒரு கவிதை எழுதியிருக்கிறார், அதுல கடல் அலைகள் இறால் மீன்களைக் கரையில் போட்டுவிட்டு அதற்குப் பதிலாக ஒரு பூமாலையைக் கடலுக்குள்ளே திரும்ப எடுத்துட்டு போவது போல எழுதியிருக்கிறார். இது தான் கவிதை உருவாக்கி தர்ற புது அனுபவம். ஒரு இயற்கை நிகழ்வு ஒரு மொழியில் புது அவதாரம் எடுக்கிறது. அதுக்குப் பேரு தான் கவிதை“

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒரு ஆள் வாசலில் நின்று கூப்பிடுகிற சப்தம் கேட்டது. ஞானக்கூத்தன் எழுந்து போனார். அந்த ஆள் ஒரு பேரேட்டில் உள்ள விபரங்களை அவரிடம் சொல்லி சரிபார்ப்பது கேட்டது. அவர் போன பிறகு அதே சிரிப்புடன் திரும்ப வந்த ஞானக்கூத்தன் சொன்னார்

“எலக்ஷன் வரப்போறது இல்லையா. அதான் வோட்டர்ஸ் லிஸ்ட் செக் பண்ணுறாங்க. நீங்க ஒட்டு போட்டு இருக்கீங்களா“

“இல்லை“ என்றான் நாதன்

“உங்களுக்கு எத்தனை வயசாகுது“

“இருபத்தியொன்று“

“கவிதையுடைய வாசகனுக்கு எப்பவும் 21 வயசு தான் தெரியுமா. இந்த வயசுல தான் கவிதை மேல ஈடுபாடு வரும். அதைத் தொலைச்சிராம வச்சிகிடுறவங்க கம்மி. தமிழ்கவிதையுடைய வாசகன் ரொம்பத் திறமைசாலி. அவன் சாதாரணமா எந்தக் கவிதையும் ஏத்துகிட மாட்டான். நிறைய டெஸ்ட் வச்சி செக் பண்ணி தான் அங்கீகாரம் பண்ணுவான். கவிதைங்கிறது ரொம்பக் கவனமாகச் செய்யக்கூடிய செயல்பாடு. நவீன கவிஞர்கள் கட்டாயம் தொல்காப்பியம் படிக்கணும். ரொம்ப முக்கியமான பொஸ்தகம். “

நாதன் அவர் பேசுவதைப் பிரமித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் பேச்சை பாதியில் துண்டித்துவிட்டு பீச்சுக்கு போவமா எனக்கேட்டார். நாதன் தலையாட்டினான். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு சந்தின் முனையில் சுவரில் பெரியதாக முருகன் படம் வண்ணத்தில் வரையப்பட்டிருந்தது. அதைக்காட்டி சொன்னார்

“நிறைய சந்துகள்ல இது போலச் சாமி படம் வரைஞ்சிருப்பாங்க ஏன் தெரியுமா. யாரும் வந்து மூத்திரம் பெய்யக்கூடாதுனு தான். இது ஒரு கவுன்சிலரோட ஐடியா. மனுசங்க எப்படி எல்லாம் யோசனை பண்ணுறாங்க பாருங்க எனசிரித்துக் கொண்டார்“

திருவல்லிகேணியில் நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள். வீட்டுக்கு இருவர் இருக்ககூடும். அவர்கள் மாலை நேரத்தில் வீதியை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார்கள்.

மெலிந்து எலும்புகள் துருத்திக் கொண்ட உடலுடன் நடுத்தரவயதில். முதிய வயதில் மனநலமற்றவர்கள் அதிகம் திருவல்லிக்கேணியிலிருக்கிறார்கள். இவர்களில் சிலர் சங்கிலி போட்டு கட்டப்பட்டிருப்பதையும் நாதன் கண்டிருக்கிறான்

அவர்களைக் கடந்து, விளையாடும் சிறுவர்களைக் கடந்து, பசுமாடுகள். ரிக்ஷாகாரர்கள். தள்ளுவண்டி கடைகள். பிரியாணி கடைகள். தெருவோர மீன்விற்பவர்களைக் கடந்து கடற்கரையை நோக்கி நடந்தோம். அவர் திடீரென அவனது தோளில் கைபோட்டுக் கொண்டார். ஒரு தந்தை மகனை அழைத்துக் கொண்டு போவதை போலிருந்தது

கடற்கரையில் ஏகப்பட்ட கூட்டம். அவர்கள் மணலில் நீண்ட தூரம் நடந்து கடலை ஒட்டிய இருட்டிலிருந்த மணல்மேட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சில நிமிஷங்களுக்குப் பிறகு சொன்னார்

“பிரிட்டிஷ்காரங்க ஆட்சியில அரசாங்கமே எழுத்தாளர்களை நாவல் எழுத சொல்லி தூண்டியது. இதைப் பற்றித் தெலுங்கில் ஓர் அறிக்கை கூட வெளியிட்டு இருக்காங்க.. சிறுகதை, நாவல் வடிவங்களில்தான் பிரஜைகளை என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எப்படி நடந்துகிடுறாங்கன்னு தெரிஞ்சிகிட முடியுது. அதனாலே நிறைய நாவல், கதைகள் எழுதப்படணும்னு அந்த அறிக்கை சொல்லுது., டி.எஸ். இலியட் கூடக் கவிதை உரைநடையைப் போல் இருக்கணும் சொல்றார். . இதைத்தான் வர்த்தமானம்னு சமஸ்கிருதம் சொல்லுது. பாரதியார் கூட வசனகவிதைனு சொல்லுறார் பார்த்தீங்களா. “

இருட்டில் அவரது குரலை கேட்டுக் கொண்டிருப்பது அபூர்வமான அனுபவமாகயிருந்தது. கவிஞன் தன்னைத் தேடிவருபவனிடம் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிடுவானா. ஏன் இந்த மனிதர் இத்தனை அரிய விஷயங்களைத் தன்னைப் போன்ற ஞானசூனியத்திடம் கொட்டுகிறார். தன்னை ஏன் இத்தனை பரிவோடு நடத்துகிறார். எவ்வளவு படித்திருக்கிறார். எவ்வளவு மேதமை. அவன் யோசித்துக் கொண்டேயிருந்தான்.

இடையிடையே அவர் பேச்சை நிறுத்திவிட்டு கடல் அலைகளின் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு தொடர்பற்ற விஷயம் ஒன்றை பேச ஆரம்பித்துக் கவிதையுலகிறகுள் வந்துவிடுவார். அவனுக்குப் பசித்தது. அவருக்கும் பசித்திருக்கும் தானே. கடற்கரையில் ஆட்கள் குறைந்திருந்தார்கள்.

அவர் திடீரெனக் கேட்டார்

“என் வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சீங்க“

“தேடி கண்டுபிடிக்கமுடியலை. பிறகு உங்க தெருவுல ஒரு பொண்ணுகிட்ட கேட்டேன். அவ தான் வழி சொன்னா. அந்தப் பொண்ணு சைக்கிள் கமலத்தோட தங்கச்சி“

“யாரு. சைக்கிள் கமலமா“ என ஆர்வத்துடன் கேட்டார்

“அப்படி தான் சொன்னா“.

“எத்தனை வயசிருக்கும்“

“பத்து பனிரெண்டு. பச்சை பாவாடை போட்டுருந்தா. பழைய சைக்கிள் வச்சிருந்தா“

“ஆச்சரியமா இருக்கே. சைக்கிள் கமலம் என் கவிதையில வர்ற பொண்ணு. நிஜத்துல யாரும் அப்படிக் கிடையாது“

“அவ சொன்னாளே“ எனச் சந்தேகத்துடன் கேட்டான் நாதன்

“சைக்கிள் கமலத்தோட தங்கைனு சொன்னாளா“ எனத் திரும்பவும் கேட்டார்

“ஆமா. அவ உங்க தெருவுல தான் இருக்கா, வீடு கூடத் தெருமுனையில் இருக்கு“

“எனக்கு தெரிஞ்சி எங்க தெருவுல அப்படி யாருமில்லை. அதுவும் முனைவீட்ல இருக்கிறது ஒரு குஜராத்தி பேமிலி. அந்த வீட்ல குழந்தைகளே கிடையாது. “

“அவங்க அக்காவுக்கு உங்களைத் தெரியும்னு சொன்னாளே“ என்றான் நாதன்

“நிச்சயம் தெரிஞ்சிருக்கும். அவ என் கவிதையில வர்ற பொண்ணு இல்லையா“ எனச் சொல்லிச் சிரித்தார்

தான் கண்ட சிறுமி உண்மையில்லையா. இல்லை. ஞானக்கூத்தன் தன்னோடு விளையாடுகிறாரா

நாதன் குழப்பத்துடன் கேட்டான்

“சைக்கிள் கமலம் நிஜத்துல இல்லையா“

“இருக்கலாம்“ என்றார் ஞானக்கூத்தன்

இது என்ன பதில். தான் பார்த்த சிறுமி அவளது தங்கை என்று தானே சொன்னாள்

அவர் யாரிடமோ சொல்வது போலச் சொன்னார்

“17,18 வயசுலயே எங்க ஊர்ல அப்படி ஒரு பொண்ணைப் பாத்துருக்கேன். அவ பேரு கமலம் இல்லை. கமலம்னா என்ன அர்த்தம் தாமரை. சைக்கிள் கமலம் நாம கும்பிடுற கடவுள் சரஸ்வதியாகக் கூட இருக்கலாம்லே. சைக்கிள் ஒட்டுகிற சரஸ்வதி. “

ஏனோ நாதனுக்கு அவரைத்தொட வேண்டும் போலிருந்தது. ரகசியமாகத் தன் கைவிரல்களை நீட்டி அவரது புறங்கையைத் தொட்டான்.

அவர் “நேரமாகிருச்சா“ எனக்கேட்டார்

அவன்“ ஆமாம் “எனத் தலையாட்டினான்

திரும்பி வரும் போது அவனிடம் “உங்களுக்கு ஏதாவது புஸ்தகம் வேணும்னா என்கிட்ட இருந்து வாங்கிகிடலாம். ப்ரீயா இருக்கும் போது வாங்க“ என்றார் ஞானக்கூத்தன்.

அவர் வீடு வரை கூடவே நடந்துவந்தான். வாசலுக்கு வந்த போது அவரது முகம் இறுக்கமாகியிருந்தது, வேகமாக உள்ளே சென்று கதவை மூடுவது தெரிந்தது.

திரும்பி அறைக்குப் போக நடந்த போது அவனுக்குத் தோன்றியது. எங்கே வேலை பார்க்கிறாய், எவ்வளவு சம்பளம் எனத் தன்னைப் பார்த்து அவர் ஏன் கேட்கவேயில்லை.

ஒரு வாசகனாக இருப்பது இத்தனை கௌரவமான விஷயமா.

திருவல்லிகேணியின் வீதியில் அந்த இரவிலும் ஒரு பசுத் தனியே காகிதம் ஒன்றை மேய்ந்து கொண்டிருந்தது. அருகில் போய் அதைத் தடவிக் கொடுத்தான் நாதன். திடீரெனச் சப்தமாக ஞானக்கூத்தன் கவிதையைச் சொல்லத் துவங்கினான். கவிதை சொல்லி முடிக்கும் வரை ஒரு சொல் கூடத் திக்கவேயில்லை.

ஒரு மனிதன் ஏன் இருட்டில் நின்றபடியே கவிதையைப் புலம்பிக் கொண்டிருக்கிறான் எனப்புரியாதது போலப் பசு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது

****

நன்றி

https://www.gnanakoothan.com/
Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: