எல்லை கடக்கும் சர்க்கஸ்

ஹாலிவுட்டின் நிகரற்ற இயக்குனர் எலியா கஸான். இவரது திரைப்படங்கள் இன்றும் திரைப்பள்ளிகளில் பாடமாகப் பயிலப்படுகின்றன. நடிகர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதிலும், காட்சிகோணங்களைப் புதிதாக வடிவமைப்பதிலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அழுத்தமாகக் கையாளுவதிலும் எலியா கஸான் தனித்துவமிக்கவர். மார்லன் பிராண்டோவை திரைநட்சத்திரமாக உருவாக்கியவர் இவரே.

போரும் வாழ்வும், குற்றமும் தண்டனை, மேடம் பவாரி போன்ற செவ்வியல் நாவல்களை வாசிக்கும் போது நாம் கதாபாத்திரங்களின் உருவாக்கம் மற்றும் கதையை எடுத்துச் செல்லும் விதத்தைக் கண்டு வியக்கிறோம். பாராட்டுகிறோம். அதே அனுபவத்தைத் திரையில் உருவாக்குபவர் எலியா கஸான். இவரது படங்களில் இரண்டு காட்சிகளில் தோன்றி மறையும் சிறுகதாபாத்திரம் கூட முழுமையாக  வடிவமைக்கபட்டிருக்கும். எலியா கஸானின் புகழ்பெற்ற படங்கள் என்றில்லை அதிகம் கவனப்படுத்தபடாத படங்களில் கூட இதைக் காண இயலும்.

சிம்பொனி இசைக்கோர்வையைப் போலக் கச்சிதமான திரைக்கதையைக் கொண்டவை இவரது படங்கள். அகதியாக அமெரிக்காவிற்கு வந்து நாடகநடிகராகத் தன்னை உருவாக்கிக் கொண்டு பின்பு திரையுலகிற்கு வந்தவர் கஸான். ஆகவே அவரது படங்களின் நாயகர்கள் போராட்டக் குணமிக்கவர்கள். எந்த அதிகாரத்திற்கும் பயப்படாதவர்கள். அன்பிற்காக ஏங்குபவர்கள்.

ஹாலிவுட் எவரையும் எளிதாக அங்கீகரித்துவிடாது. அந்த மாயஉலகிற்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடியவர் கஸான்.

Man on a Tightrope கஸானின் திரைப்படங்களில் மிக முக்கியமானது. பெரிய வெற்றியைப் பெறாத போதும் இப்படம் திரைவரலாற்றில் முக்கியமான திரைப்படமாகவே கருதப்படுகிறது.

சர்க்கஸ் பற்றிய திரைப்படங்களை நான் விரும்பி பார்க்ககூடியவன். சர்க்கஸ் சிறுவயது முதல் தொடரும் ஒரு கனவு. இன்றைய சிறுவர்களுக்குச் சர்க்கஸ் பற்றிய வியப்பு எதுவுமில்லை . ஆனால் கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்த என் போன்றோருக்குச் சர்க்கஸ் என்பது தீராத விந்தை.

குள்ளர்களையும் சிங்கத்தையும் சைக்கிள் விடும் கரடியையும், பந்து விளையாடும் யானையையும், அந்தரத்தில் நடக்கும் பெண்ணையும், கத்தியை விழுங்கும் மனிதனையும், சிவப்பு மூக்குள்ள கோமாளியையும், காண்டாமிருகத்தின் மீது நின்றுவரும் அழகியையும் சர்க்கஸில் தான் கண்டேன். குறிப்பாகச் சர்க்கஸில் உள்ள குரங்கு ஒன்று தொப்பி அணிந்தபடியே சிகரெட் பிடிப்பதை வியந்து பார்த்திருக்கிறேன்.

சர்க்கஸில் வேலை செய்கிறவர்கள் வானத்திலிருந்து வந்து இறங்கிய மனிதர்களைப் போலத் தெரிந்தார்கள். சர்க்கஸ் கூடாரமும் கூண்டுகளும் உடைகளும் பேண்ட் வாசிப்பவர்களின் மயக்கும் இசையும் இன்றும் மனதில் பசுமையாகவே உள்ளது.

ஊர் விட்டு ஊர் சர்க்கஸ் போவதைக் காண வியப்பாக இருக்கும். அது போலவே சர்க்கஸ் நடந்து முடிந்தபிறகு அந்தக் காலி மைதானத்தைக் காணும் போது மனதில் சொல்லமுடியாத வலி பிறக்கவே செய்யும்.

சர்க்கஸ் ஒரு தனியுலகம். இப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு சர்க்கஸ் உரிமையாளன் சொல்கிறார்

“சர்க்கஸ் தான் நமது மதம். நமக்குள் எவ்வளவு சண்டைகள் சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் நாமெல்லாம் சர்க்கஸ் கலைஞர்கள். அது தான் நமது ஒரே அடையாளம்.“

அது உண்மை. சர்க்கஸ் கலைஞர்கள் எங்கே சந்தித்தாலும் நட்பாகவே பழகுகிறார்கள். சர்க்கஸை விட்டுவந்த போதும் அந்த நினைவுகள் மறப்பதேயில்லை.

சர்க்கஸ் ஊருக்கு வந்திருப்பதை விளம்பரம் செய்யப் பேண்ட் வாத்தியக்குழு அலங்காரமாக ஊருக்குள் வருவார்கள்.  சில நேரம் யானை, புலி, கரடிகளை உடன் அழைத்துக் கொண்டு வருவார்கள். அந்த அணிவகுப்புக் காட்சி தரும் மனவெழுச்சி நம்மையும் கூடவே நடக்க வைக்கும்.

இன்று நடைபெறும் சர்க்கஸ் பெயரளவில் மட்டுமே நடக்கிறது. அதுவும் கலை நிகழ்ச்சி போலவே நடத்தப்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த சர்க்கஸ் போன்ற பிரம்மாண்டம் இன்றில்லை.

சர்க்கஸ் பற்றி ஹாலிவுட்டிலும் இந்தியாவிலும் நிறையத் திரைப்படங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன. சில திரைப்படங்களில் சர்க்கஸ் முக்கியப் பகுதியாக இடம் பெற்றிருக்கிறது.

The Circus (1928),3 Ring Circus At the Circus (1939) Barnum! , Twilight of a Clown (Ingmar Bergman, 1953), The Big Circus (1959), Carnival Story (1954) Circus World (1964), ,The Greatest Show on Earth (1952),La Strada (1954),Trapeze (1956),Under the Big Top (1938),Sawdust and Tinsel (1953),7 Faces of Dr. Lao The Clown (2011), Mera Naam Joker (1970), The Big Cage, Ringlings Bros, Kings of the Circus , Water for Elephants போன்றவை சர்க்கஸை முதன்மைப்படுத்திய திரைப்படங்கள். இந்தப் படங்களில் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் காதல், அவர்களுக்குள் ஏற்படும் மோதல். பொருளாதார நெருக்கடி போன்றவையே பிரதானமாகப் பேசப்பட்டிருக்கின்றன.

ஆனால் Man on a Tightrope படம் அரசியலைப் பேசுகிறது. குறிப்பாக அதிகாரம் சர்க்கஸ் கலைஞர்களை ஒடுக்க முற்படும் போது அதை எதிர்த்த சர்க்கஸ் கலைஞனின் வாழ்க்கையைப் பேசுகிறது. ஒட்டுமொத்த சர்க்கஸையும் அரசின் கட்டுப்பாடுகளை மீறி எல்லைக் கடக்க செர்னிக் செய்யும் முயற்சிகளே படத்தின் மையக்கதை. Neil Paterson எழுதிய நாவலுக்கு Robert E. Sherwood திரைக்கதை அமைத்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட் அதிகாரத்தின் கட்டுபாட்டில் இருந்த செக்கோஸ்லேவியா நாட்டில் சர்க்கஸ் முழுமையான நாட்டுடமையாக்கபடுகிறது. Cirkus Cernik என்ற சர்க்கஸ் குழுவின் உரிமையாளரான செர்னிக் தனது குடும்பச் சொத்தாக இருந்த சர்க்கஸை இழக்கிறார். அரசுடமையாக்கிக் கொண்டபிறகு அதன் மேலாளராக மட்டும் பொறுப்பு வகிக்கிறார்.

சர்க்கஸ் கலைஞர்கள் எவ்வாறு நிகழ்ச்சி நடத்த வேண்டும். என்ன நகைச்சுவை செய்ய வேண்டும். யார் யார் சர்க்கஸில் பங்கேற்ற வேண்டும் என்பதை அரசின் பிரச்சாரத்துறை கட்டுபடுத்துகிறது. சர்க்கஸ் தங்கள் பிரச்சாரத்திற்கானது மட்டுமே என கூறுகிறது. அத்தோடு அதை மீறுகிறவர்கள் கடுமையாக தண்டிக்கபடுவார்கள் என்றும் மிரட்டுகிறது.

செர்னிக்கை இப்படி தான் காவல்துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். அத்துடன் சர்க்கஸில் உள்ள சீனப்பெண்ணை, பிரெஞ்சு பெண்ணை விலக்க உத்தரவிடுகிறார்கள்.

அதைக் கேட்ட செர்னிக்  உறுதியான குரலில் சொல்கிறார்

circus people aren’t like other people.

The only nationality we have,

the only religion we have is the circus

அவரது பதிலைப் பொருட்படுத்தாமல் காவல்துறை அதிகாரிகள் அவரை மிரட்டுகிறார்கள். சர்க்கஸ் நடைபெறும் போது உள்ளே புகுந்து உளவு பார்க்கிறார்கள்.  அவரது சர்க்கஸை முடக்கிவிடப்போவதாக எச்சரிக்கை செய்கிறார்கள்.

கோமாளியாக வேஷமிடும் செர்னிக் காவல்துறை விசாரணையைச் சந்திக்கும் காட்சி அபாரமானது. அப்போது அவரது முகத்தில் வெளிப்படும் கலக்கம், பயம். அதே நேரம் அதிகாரம் தன்னை ஒன்று செய்யமுடியாது என்ற உறுதி அத்தனையும் ஒரே காட்சியில் சிறப்பாக வெளிப்படுத்தபட்டிருக்கிறது

படத்தின் துவக்ககாட்சியும் இறுதிக்காட்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. சர்க்கஸ் வாகனங்கள் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது ராணுவத்தினர் குறுக்கிடுகிறார்கள். பொருட்களைத் தள்ளிவிடுகிறார்கள். தங்களின் அராஜகத்தை வெளிப்படுத்துகிறார்கள். எரிச்சலும் கோபமுமாகவே அதைச்  செர்னிக் எதிர்கொள்கிறார்.

சர்க்கஸ் நிகழ்ச்சி துவங்குகிறது. பார்வையாளர்கள் உற்சாகமாக பாராட்டுகிறார்கள். ஆனால் காவல்துறை கண்காணிப்பிற்கு ஆட்களை அனுப்பி வைக்கிறது. அதை கோமாளிகள் தெரியப்படுத்தும் காட்சி மிக அழகாக உருவாக்கபட்டிருக்கிறது.

தங்கள் சர்க்கஸிற்குள் ஒரு உளவாளி இருக்கிறான் என செர்னிக் சந்தேகம் கொள்வதும் அதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதும், இறுதியில் உண்மையை அறிவதும் திரைக்கதையின் அழுத்தமான சரடு.

அதிகாரத்தை எதிர்த்து சண்டையிடும் கலைஞனை முதன்மைப்படுத்திய கதையில் அவனது மகளும் இரண்டாவது மனைவியும் எப்படி அவனது அகத்தைப் பாதிக்கிறார்கள் என்பதையும் சொன்னதில் தான் கஸான் முக்கியமானவராகப் படுகிறார்.

குறிப்பாக மகள் தெரசாவின் காதலை ஏற்கமுடியாமல் செர்னிக் படும் நெருக்கடியும் ஒரு காட்சியில் தெரசா அவரது முகத்திற்கு நேராகத் தான் இப்போதும் சிறுமியில்லை. வளர்ந்த பெண். என் வாழ்க்கை பற்றி நானே முடிவு செய்து கொள்ள முடியும் எனும் போது அவரது முகத்தில் வெளிப்படும் வருத்தமும் இயலாமையும் அபாரமானது.

சர்க்கஸ் குள்ளர்களில் ஒருவன் அதிகச் சம்பளம் கிடைக்கிறது என வேறு சர்க்கஸிற்கு வேலைக்குப் போகிறான். விரும்பியபடி போகட்டும் என அனுமதிக்கிறார் செர்னிக். படத்தின் கடைசிக்காட்சியில் அவன் மனம் திருந்தி அவரிடமே வந்து சேருகிறான். அக்காட்சியில் அவர்களுக்குள் உள்ள நேசம் அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது

இது போலவே சிங்கத்திற்குப் பயிற்சி தரும் கலைஞன். சதா சிங்கத்துடன் பேசிக் கொண்டேயிருக்கிறான். ஒரு காட்சியில் அவனைப் பார்த்து செர்னிக் சொல்கிறார். சிங்கத்துடனே இருந்தாலும் நீ ஒரு கோழை. தைரியமற்றவன். அது எனக்கு நன்றாகத் தெரியும் என்கிறார். படத்தின் முடிவில் அவன் தான் யார் என்பதை உலகிற்குப் புலப்படுத்துகிறான்.

செர்னிக்கின் இரண்டாம் மனைவி ஒரு அழகி. அவளுக்கும் அவருக்குமான உறவும். அவள் சர்க்கஸில் உலா வரும் போது மற்ற பெண்கள் அவளைப் பற்றிப் வம்பு பேசிக் கொள்வதும். அவள் சிங்கத்திற்குப் பயிற்சி தருகிறவனின் உடற்கட்டினை ரசிப்பதும், அடிவாங்கிப் படுக்கையில் விழுந்த போது செர்னிக்கை அவள் கட்டிக் கொள்வதும் என  தனித்துவமிக்க கதாபாத்திரமாக உருவாக்கபட்டிருக்கிறாள்

படத்தின் முக்கியக் காட்சி ஒன்றில் போட்டி சர்க்கஸின் உரிமையாளன் Barovik செர்னிக்கைக் காண வருகிறான். அவர்களுக்குள் நடக்கும் உரையாடலும். பொய்யாக அவர்கள் அடித்துக் கொள்வதும் சண்டையின் போது தனக்குப் பரிசாக அளிக்கபட்ட சிலை உடைபடாமல் பாதுகாத்துக் கொள்வதும் ஒரு சிறந்த காட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு உதாரணம்

படத்தின் இறுதிக்காட்சியில் தங்கள் ஊருக்குச் சர்க்கஸ் வந்திருப்பதை வரவேற்க சிறுவர்கள் புல்வெளியில் ஒடிவருகிறார்கள். அந்தச் சப்தம் தான் செர்னிக் கேட்கும் கடைசிச் சப்தம். அவரது முகத்தில் மலர்ச்சி உண்டாகிறது. இன்றிரவு உற்சாகமாகச் சர்க்கஸ் நடக்கட்டும் என்று முணுமுணுக்கிறார்.

படத்தின் இறுதிக்காட்சியில் பொம்மை அழகியோடு ஒருவன் இணைந்து நடனமாடியபடியே செல்கிறான். அந்தப் பொம்மை செர்னிக்கின் பெண்தோழி. அக்காட்சியில் பேண்ட் வாத்தியம் முழங்க சர்க்கஸ் குழு முன்னேறிப் போகிறது. மனதில் சொல்லமுடியாத சந்தோஷமும் வலியும் ஒரு சேர உண்டாகிறது.

Man on a Tightrope படத்தில் மறக்கமுடியாத கதாபாத்திரம் செர்னிக்கின் அம்மா. தீர்க்கமான அந்த முகம். உறுதியான அவரது நடை. மகன் மீது கொண்ட பாசத்தால் தனது சிலுவையைக் கழட்டி அணிந்துவிடும் பாங்கு. இறுதிக்காட்சியில் தாங்கள் எல்லை கடந்துவிட்டோம் எனும் போது முகத்தில் தெரியும் சந்தோஷம், அந்தத் தாய் அதிகம் பேசுவதில்லை. ஆனால் அழுத்தமான கதாபாத்திரமாக உருவாக்கபட்டிருக்கிறார்.

செர்னிக்கை கண்காணிக்கும் காவல்துறை அதிகாரி திடீரெனப் படத்தின் இறுதியில் கைது செய்யப்படுகிறார். அப்போது அவர் நிமிர்ந்து தேசக்கொடியை பார்க்கிறார். பிறகு அபத்தமான புன்னகையோடு சொல்கிறார் இன்று எனக்கு நடப்பது நாளை உனக்கும் நடக்ககூடும். ஒரு நிமிசம் அவரைக் கைது செய்யும் இளம் அதிகாரியின் முகம் மாறுகிறது. பிறகு அவன் வன்மத்துடன் அவரைக் காரினுள் தள்ளி கதவை அடைக்கிறான்.

கஸானின் நோக்கம் சர்க்கஸ் கலைஞர்களைப் பற்றியது மட்டுமில்லை. மோசமான அதிகாரம் எப்படித் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். Fredric March செர்னிக்காக மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார். கோபம். இயலாமை, பிடிவாதம். தைரியம், பயம், மகள் மீதான அன்பு, இரண்டாம் மனைவி மீதான ஈர்ப்பு என அவரது முகத்தில் தான் எத்தனை மாறுபட்ட உணர்ச்சிகள். அற்புதமான நடிப்பு.

சில திரைப்படங்கள் படம் பார்த்து முடித்த சில நாட்களுக்கு வேறு ஒரு படத்தையும் பார்க்கவிடாமல் செய்துவிடும். Man on a Tightrope அப்படியொரு படமே.

••

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: