நாசகார உலகம்.

தி.ஜானகிராமன் சிறுகதை ஒன்றினை இன்று வாசிக்கும் போது ஒரு வரி சட்டென்று நிறுத்தியது. அந்த வரியைக் கடந்து போக முடியவில்லை. வாசித்தவுடன் முதலில் சிரிப்பு வந்தது. பின்பு மெல்ல சிரிப்பு மறைந்து இது உண்மையிலே நாசகாரச் செயல் தான் என்று உறைக்கவும் செய்தது.

சண்பகப் பூ என்றொரு சிறுகதை.

1948ல் எழுதியிருக்கிறார்.

கதை முழுவதும் ஒரு பெண்ணின் அழகைப் பற்றிய வியப்பு. ஆராதனை தான். லா.ச.ராவை படிக்கிறோமோ என்று எண்ணும்படியாக இருந்தது. ஆனால் லா.ச.ரா பெண்ணை தெய்வநிலைக்குக் கொண்டு சென்றுவிடுவார். ஆனால் தி.ஜா இவ்வளவு அழகான ஒரு பெண் எப்படிப் பிறந்தாள் என்று வியக்கிறார். அவளது சௌந்தர்யத்தைக் கொண்டாடுகிறார். நெருப்புக்கு வடிவு கொடுத்தது போல இருந்தாள் என்று சொல்கிறார். உலகம் தவறிப் பிறந்தவள் என்று அவளை அடையாளப்படுத்துகிறார். தேவலோகத்தின் சிறப்புக் கடவுள்களால் அல்ல அதன் அழகான பெண்களால் தானே அடையாளப்படுத்தபடுகிறது.

கதையை விவரிப்பவர் ஒரு கிழவர். அவர் அந்தப் பெண்ணோடு ஆடு புலி ஆட்டம் ஆடுகிறார். அவளுடன் பாசமாகப் பழகுகிறார். ஆனால் மனதிற்குள்ளாக எளிய நடுத்தரக்குடும்பத்தில் இவ்வளவு அழகான பெண் எப்படிப் பிறந்தாள் என்று ஆச்சரியப்படுகிறார். அதிக அழகு ஆபத்தானது என்று உள்ளுற நடுங்குகிறார்.

ரோஜாப்பூவை அரைத்துக் குல்கந்து தின்கிற நாசகார உலகத்தில் ஒருவன் இவளை வந்து தொட்டு ஆண்டு, தாயாக்கி, பாட்டியாக்கி எல்லோரையும் போ மனுஷியாக்கத்தான் போகிறான் என்று நீள்கிறது அந்த வரி

ரோஜாப்பூவை குல்கந்து ஆக்குவது என்ற படிமம் மனதைக் கவ்வுகிறது.

ரோஜாப்பூவை தி.ஜாவிற்கு மிகவும் பிடிக்கிறது. இன்னொரு கதையில் ரோஜாவைப் பற்றி ஒரு வரி வருகிறது

ரோஜாப்பூவை வாரி வச்சிண்டிருக்கியே அது இருக்கிறவரைக்கும் மணமாக வீசி பிரளயமாடிவிட்டு தானே போப்போறது

ரோஜாவின் மணம் பிரளயமாக எழுகிறது திஜாவிற்கு. ஆகவே தான் யாரோ ரோஜா இதழ்களை அரைத்துக் குல்கந்து செய்து சாப்பிடுவதை நாசகார உலகம் என்று சொல்கிறார். எல்லா மென்மைகளும் இப்படி யார் கையிலோ சிக்கி அரைபடத்தானே செய்கின்றன.

அழகான பெண்களுக்குப் பொருத்தமான துணை ஏன் ஒரு போதும் அமைவதேயில்லை என்று அரற்றுகிறார்.

நாசகாரக் கும்பல் என்று புதுமைப்பித்தன் ஒரு கதைக்குத் தலைப்பு வைத்திருப்பார்.கதைக்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இருக்காது. ஆனால் அந்தச் சொற்பிரயோகம் கதைக்கு ஒரு கனத்தை உருவாக்கிவிடும். திஜா கதையைப் பெரிதும் உரையாடல் வழியாகக் கொண்டு போகிறவர். அதிலும் பெண்களின் உரையாடலை மிக நுட்பமாக, துல்லியமாக எழுதுகிறவர்.

சண்பகப்பூவை முகர்ந்தால் ஒருவன் ரத்தம் கக்கி இறந்துவிடுவான் என்ற நம்பிக்கையை ஒரு குறியீடாக வைத்துக் கதையில் வரும் பெண்ணை மணந்தவன் திடீரென இறந்து போனதைக் குறிப்பிடுகிறார். திஜாவின் ஆரம்பக் கதைகளில் இதுவும் ஒன்று. தந்தி வருவதில் கதை துவங்கி அந்தப் பெண் ஊரைவிட்டுப் போவதில் முடிகிறது. கதையில் வரும் சில காட்சிகள், வரிகள் கதையை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

தி.ஜானகிராமனின் மொத்தக் கதைகளை மறுவாசிப்புச் செய்து வருகிறேன். நிறையக் கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அபாரமான கதைகள்.

••

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: