பெலினி காத்திருக்கிறார்

பெலினியின் நண்பரும், ஒவியரும், சக அலுவலருமான Ettore Scola இயக்கத்தில் உருவான ஆவணப்படமான How Strange to Be Named Federico பெலினியின் கலை மற்றும் திரைவாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது. குறிப்பாகப் பெலினியின் திரைப்படம் போலவே முன்பின்னாகவும், கனவுத் தன்மை கொண்டதாகவும் ஆவணப்படத்தை ஸ்கோலா உருவாக்கியிருக்கிறார்.

ஸ்கோலா இத்தாலிய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். மாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

பெட்ரிக்கோ பெலினி (Federico Fellini) இத்தாலிய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர். பெலினியின் திரைப்படங்கள் பெரிதும் வித்தியாசமான மனிதர்களைப் பற்றியதே. குறிப்பாகச் சர்க்கஸ் கலைஞர்கள். பாடகர்கள். கோமாளிகள். இசைக்கலைஞர்கள், நாடக நடிகர்கள் எனத் தனித்திறமை கொண்ட கலைஞர்களின் வாழ்வையே படமாக்கியிருக்கிறார். சர்க்கஸ். திருவிழா, மேஜிக் ஷோ, இந்த மூன்று கலந்த கலவை போலவே அவரது திரைப்படங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன.

பெலினி தனது திரைப்படங்களுக்கான திரைக்கதையை எழுதி வைத்திருப்பதில்லை. காட்சிகளாக வரைந்து கொள்கிறார். அதுவும் முழுமையானதில்லை. அவ்வப்போது தோன்றிய எண்ணங்களை ஒவியமாக வரைந்து கொண்டு அவற்றைத் தான் படமாக்கினார்.

ஐந்து முறை ஆஸ்கார் பரிசைப் பெற்ற பெலினி தன்னை ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம் போலவே கருதினார். காமிக்ஸ் கதைகளின் நாயகர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களால் எந்தச் சாகசத்தையும் எளிதாகச் செய்ய முடியும். அந்த நாயகனைப் பெண்கள் அதிகம் விரும்புவார்கள். குடி, அழகிய பெண்கள். ஊர்சுற்றல் என அவனது வாழ்க்கை சுவாராஸ்யங்கள் நிரம்பியதாக இருக்கும் என்று சொல்கிறார் பெலினி.

காமிக்ஸ் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாளில் இடம்பெற்ற வேடிக்கை துணுக்குகள், கார்டூன்களை விரும்பிப் படித்துத் தானும் அதைப் போல மக்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்று ஒவியராக உருமாறியவர் பெலினி.

தனது இருபதாவது வயதில் தான் வரைந்த கேலிச்சித்திரங்களுடன் ரோமில் உள்ள Marc’Aurelio என்ற பத்திரிக்கை அலுவலகத்திற்குச் சென்று வேலை கேட்டார் பெலினி.

Marc’Aurelioவில் இடம் பெறும் கேலிச்சித்திரங்கள், அரசியல் நையாண்டிகள் மிகவும் பிரபலமானவை. பெலினியின் திறமையை அறிந்து ஆசிரியர் குழுவில் அவரைச் சேர்த்துக் கொண்டார்கள். பத்து ஒவியர்கள் கொண்ட குழு அங்கே பணியாற்றியது. அவர்கள் விதவிதமான தலைப்புகளில் கேலிச்சித்திரங்கள் வரைவார்கள். வட்டமேஜையில் ஒன்றுகூடி அரசியல். சமூகம், குடி, பெண்கள் செக்ஸ் எனச் சகல விஷயங்களையும் கேலி பேசினார்கள். அந்த முடிவற்ற கேலிப்பேச்சுகள். விவாதங்கள். உரையாடல்கள் தான் பெலினியின் பிற்காலச் சினிமா வாழ்வு உருவாக அடித்தளமாக இருந்தது.

முசோலினியின் கெடுபிடியான ஆட்சி காரணமாக ஒவியர்கள் விசாரணைக்கு உள்ளாக்கபட்டார்கள். கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஆனாலும் அரசியல் நையாண்டியை அவர்கள் கைவிடவில்லை.

பெலினி கேலிச் சித்திரங்களுடன் வேடிக்கையான நடைச்சித்திரங்களையும் எழுத் துவங்கினார். வாரம் தோறும் வெளியான அவரது கேலிச்சித்திர தொடர் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நாடக உலகிற்குள் பிரவேசித்தார். அங்கே பெரிய வெற்றியை அடையமுடியவில்லை.

ஆனால் தனது அலுவலகத்தில் பணியாற்றும் திரைக்கதை ஆசிரியர் ஜவாட்டினி (Zavattini)க்குக் கோஸ்ட் ரைட்டராகப் பணியாற்றத் துவங்கி மெல்ல சினிமா உலகிற்குள் நுழைந்தார் பெலினி. ஜவாட்டினியின் நட்பின் காரணமாகஇருபது படங்களில் இணை திரைக்கதையாளராகப் பணிபுரிந்தபின் ரோபர்ட்டா ரோஸலினியின் ‘ரோம் ஓபன் தி சிட்டி’ படத்தில் இணைஇயக்குனராகவும் இணை திரைக்கதையாசிரியராகவும் பணிபுரிந்தார். அப்படம் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

அதன் பின்பு The White Sheik படத்தின் மூலமாக இயக்குனராக உருமாறினார். ஆனாலும் அவரது லா ஸ்ட்ராடா படம் அடைந்த வெற்றியே அவரை உலகமறியச் செய்தது

••

பெலினியைப் போலவே ஸ்கோலா கேலிச்சித்திர ஒவியராக அறிமுகமானவர். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒவியம் வரையத் துவங்கியவர். பெலினியோடு பத்திரிக்கையில் பணியாற்றிய காலத்தில் மிகவும் நெருக்கமான நட்பு  கொண்டிருந்தார். பெலினியோடு இணைந்து திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். ஐம்பது ஆண்டுகாலம் தொடர்ந்த அவர்களின் இணையற்ற நட்பின் நினைவாகவே இந்த ஆவணப்படத்தை ஸ்கோலா எடுத்திருக்கிறார்

••

ஆவணப்படத்தின் துவக்கத்தில் பெலினி நடிகர்களைத் தேர்வு செய்வதற்காகச் செட்டில் அமர்ந்திருக்கிறார். பெலினி நடிகர்களைத் தேர்வு செய்வது என்பது விசித்திரமானது. அவரது அலுவலகத்திற்கு அன்றாடம் மாறுபட்ட உடலமைப்புக் கொண்ட ஆண்களும் பெண்களும் வந்தபடியே இருப்பார்கள். குள்ளர்கள். உயரமானவர்கள். பருத்த ஆண்கள், பெண்கள். வழுக்கை தலையர்கள். ஒல்லிக்குச்சிகள். ஒட்டகச்சிவிங்கி போலக் கழுத்துக் கொண்டவர்கள். பருத்த வயிறு கொண்டவர்கள். ஒரு கை இல்லாதவர்கள், இரட்டையர்கள் என்று வித்தியாசமான மனிதர்களைத் தான் பெலினி நடிப்பதற்குத் தேர்வு செய்வார். அத்துடன் அவர்களுக்கு விசித்திரமான உடைகள் அணிவித்துக் கனவுலகில் இருப்பது போலக் காட்சிகளை உருவாக்குவார்.

இத்தாலியின் ஸ்டுடியோ ஒன்றின் ஐந்தாவது தளம் (theatre 5 of Cinecittà) தான் அவரது உலகம். அந்த ஸ்டுடியோவிற்குள் தான் அவரது பெரும்பான்மை திரைப்படங்கள் உருவாக்கபட்டன. தனக்குத் தேவையான அரண்மனை, போர்களம், கடற்கரை, திருவிழா என எந்தச் செட்டாக இருந்தாலும் அங்கே அமைத்துக் கொள்வார் பெலினி.

ஆவணப்படத்திலும் பெலினியின் நடிகர் தேர்வில் மாறுபட்ட உருவ அமைப்புக் கொண்டவர்கள் வந்து போகிறார்கள். ஒருவரையும் பெலினி தேர்வு செய்யவில்லை. ஆவணப்படத்தின் கதை சொல்லியாக வரும் மனிதன் பெலினியைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறான். பெலினி 20 வயது இளைஞனாக அறிமுகமாகிறார். பத்திரிக்கை அலுவலகத்தில் வேலைக்குச் சேருகிறார். சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கிறார். பணமும் புகழும் வருகிறது. புதிய கார் ஒன்றை வாங்குகிறார். அதற்குள் அத்தனை நண்பர்களும் ஒன்றாக ஏறிக் கொள்கிறார்கள். இரவெல்லாம் ஊர்சுற்றுகிறார்கள்

காரில் இரவு முழுவதும் சுற்றியலைவது பெலினியின் பழக்கம். கார் ஒட்டுவது அவருக்குப் பிடித்தமானது. பல நாட்கள் அவர் முழு இரவும் காரில் சுற்றிக் கொண்டேயிருந்திருக்கிறார். அப்படித் தான் ஆவணப்படத்திலும் காரில் போய்க் கொண்டேயிருக்கிறார்.

ஸ்கோலாவும் அவரும் ஒன்றாகக் காபி ஷாப்பில் அமர்ந்து கதை பேசுகிறார்கள். காரில் வேசை ஒருத்தியை ஏற்றிக் கொண்டு சுற்றுகிறார்கள். கனவு காண்பது குறித்து அவளுடன் பேசுகிறார்கள்.

இன்னொரு நாள் சாலையில் ஒவியம் வரையும் ஒவியன் ஒருவனைக் காரில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள். அவன் ஒவியம் வரைவதற்கு இன்ஸ்பிரேஷன் தேவை. அது கிடைத்தால் மட்டுமே ஒவியம் வரைய முடியும். கலைஞனுக்குத் தேவை இன்ஸ்பிரேஷன். அது அன்றாடம் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். கிடைக்காவிட்டால் அவனது படைப்பாற்றல் முடங்கிவிடும் என்கிறான்.

பெலினி அவனிடம் சினிமாவைப் பற்றிப் பேசுகிறார். சினிமாவும் ஒவியமும் ஒன்று தான், இரண்டும் ஒளியை முதன்மையாகக் கொண்டவை என்கிறார்.

பெலினியின் உலகம் பெண்களால் ஆனது. அவரைச் சுற்றி எப்போதும் பெண்கள் நிறைந்திருந்தார்கள். உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தார். சினிமாவில் கிடைத்த பணத்தில் சொந்தமாக ஒரு கப்பலை விலை வாங்கிக் கொண்டு அதில் உல்லாசமாக வாழ்ந்தவர் பெலினி. பெரிய மார்பகங்களும் பெரிய புட்டங்களும் கொண்ட பெண்களே அவருக்கு பிடித்தவர்கள். அவர்களைத் திரையில் பேரழகியாகக் காட்டியவர் பெலினி. மதம் மற்றும் அரசியலை அவரைப் போலக் கேலி செய்தவரில்லை.

பெலினியின் திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரமாக நடித்தவர் மார்சலோ மாஸ்ட்ரியானி. (Marcello Mastroianni) லா டோல்சே விட்டா La Dolce Vita (1960) படம் அவரது மைல்கல். மாஸ்ட்ரியானி, பெலினி, ஸ்கோலா மூவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள். அவர்களது தோழமை சிறந்த படங்கள் உருவாகக் காரணமாக இருந்தன. பெலினியின் புகழ்பெற்ற படங்கள் அவரது சுயசரிதை தன்மை கொண்டவையே. குறிப்பாக Juliet of the Spirits (1965), Satyricon (1969), Casanova (1976),மற்றும் City of Women (1980). படங்களில் காணப்படும் கனவுத்தன்மை அவரது தனித்துவமிக்க அடையாளமாகக் கருதப்படுகிறது.

ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் ராணுவ அதிகாரி ஒருவர் செட்டில் வந்து பெலினியை சந்திக்க விரும்புகிறார். அவரைப் பெலினிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அவர் பெலினியை பிரபல இயக்குனர் ரோஸலினி என நினைத்துக் கொண்டு புகழ்ந்து பேசுகிறார். பெலினி இந்த அபத்த நிகழ்வைப் புரிந்து கொண்டு புன்னகைத்தபடியே விடைதருகிறார்.

**

இந்த ஆவணப்படத்தின் முடிவில் பெலினியின் இறுதிக்காட்சிகள் காட்டப்படுகின்றன. பெலினியின் மரணத்தை ஒட்டி அஞ்சலி செலுத்த மக்கள் பெரும்திரளமாக வருகிறார்கள். மிக நீண்ட வரிசை. ஒட்டு மொத்த இத்தாலிய திரையுலகமும் அஞ்சலி செலுத்துகிறது. அதன் முடிவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. பெலினியின் இறுதி யாத்திரையோடு ஆவணப்படம் நிறைவுபெறுவதில்லை. அப்படி முடிவது பெலினிக்கு ஏற்புடையதில்லை என்று கதை சொல்லி கூறுகிறார்.

பெலினியின் உடலுக்குக் காவலாக இருந்த இரண்டு ராணுவ வீர்ர்களிடமிருந்து தப்பியோடுகிறார் பெலினி. இறந்த மனிதன் எப்படி உயிர்தப்பி ஒடுகிறான் என்று புரியாமல் அவனைத் துரத்துகிறார்கள் ராணுவ வீர்ர்கள். எங்கே ஒடி ஒளிவது எனப் புரியாமல் தனது பழைய செட்டின் உள்ளே போகிறார். அங்கே உபயோகப்படுத்தி எறிந்த பொருட்கள் குப்பையாகக் கிடக்கின்றன.

தப்பியோடி ராட்டினம் ஒன்றிலுள்ள பொம்மைக்காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு அந்தக் காரை ஒட்ட ஆரம்பிக்கிறார். மரணத்தின் பின்பும் பெலினி கார் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அவரது முகத்தில் மிகுந்த சந்தோஷம் காணப்படுகிறது. ஆவணப்படம் அப்படித்தான் நிறைவு பெறுகிறது.

ஆவணப்படத்தின் இன்னொரு காட்சியில் கதை சொல்லி மதுவிடுதி ஒன்றில் ஒன்றில் மதுப்புட்டியை வாங்கிக் குடிக்கும் போது இந்த ஆள் ஒசியில் குடிக்கிறான் என்று கடைப்பெண் கோவித்துக் கொள்கிறாள். கதைசொல்லிக்கு கட்டணமில்லை என்கிறான் கடை முதலாளி. இப்படிப் பெலினித்தனமான காட்சிகள் படம் முழுவதும் காணப்படுகின்றன

ஒரு நண்பனாகப் பெலினியை ஸ்கோலா முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஒரு கலைஞனாக அவரைக் கொண்டாடுகிறார். அந்த வகையில் பெலினியை பற்றி உருவாக்கபட்ட ஆவணப்படங்களில் இப்படம் மிக முக்கியமானதே.

••

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: