சிரிப்பின் பின்னால்.

லாரல் மற்றும் ஹார்டி (Laurel and Hardy) இருவரும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்கள். ஒல்லியான ஸ்டேன் லாரல் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். குண்டான ஆலிவர் ஹார்டி அமெரிக்கர். ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Stan & Ollie என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2018ல் வெளியான படமது.

நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையை விவரிக்கும் என்றாலும் படம் நகைச்சுவை கொண்டதாக மட்டுமில்லை. இரண்டு திரைக்கலைஞர்களின் புறக்கணிக்கபட்ட வலியை, நிராகரிப்பின் வேதனையை மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது திரைப்படம்.

காந்தி படம் எடுத்த Richard Attenborough சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கியிருக்கிறார். 1992ல் வெளியான அப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. சாப்ளின் வாழ்வில் நடத்த முக்கிய நிகழ்வுகள் படத்திலுள்ளன. ஆனால் சாப்ளினின் ஆளுமை படத்தில் வெளிப்படவில்லை. குறிப்பாகச் சாப்ளின் செய்யும் வேடிக்கைகளுக்குப் பின்னுள்ள அவரது சோகம் படத்தில் சரியாக அடையாளப்படுத்தபடவில்லை. அந்த வகையில் ஸ்டென் அண்ட் ஓலி படம் இரண்டு கலைஞர்களின் ஆளுமையைச் சிறப்பாக அடையாளப்படுத்தியுள்ளது.

ஜோன் எஸ்.பேர்ட் (Jon S. Baird) இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் Laurie Rose. நிஜமான லாரல் அண்ட் ஹார்டி போலவே இரண்டு நடிகர்களைக் கண்டறிந்து நடிக்க வைத்திருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஸ்டீவ் கூகன் (Steve Coogan) லாரலாகவும் ஜான் சி.ரய்லி( John C. Reilly) ஹார்டியாகவும் நடித்திருக்கிறார்கள். அப்படியே லாரல் ஹார்டியின் உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படம் லாரல் அண்ட் ஹார்டியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கவில்லை. அவர்களின் திரைவாழ்வின் முக்கியத் தருணம் ஒன்றில் படம் துவங்குகிறது.

ஹால் ரோச் ஃபிலிம் ஸ்டூடியோவுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின் காரணமாக இரட்டையர்கள் ஒன்றாகத் திரையில் தொடர்ந்து நடித்து வந்தார்கள். அந்த ஒப்பந்தம் முறையாகயில்லை. தாங்கள் பொருளாதார ரீதியாக ஏமாற்றப்படுகிறோம் என்று உணர்ந்த ஸ்டேன் ஹால்ரோச் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள விரும்புகிறார். ஆனால் ஹார்டி அதை விரும்பவில்லை. அவருக்கு ஒப்பந்தம் தொடர வேண்டும் என்பதே ஆசை. ஆனால் இரட்டையர்கள் ஒன்றாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் ஸ்டேன்.

1937ல் அந்த ஒப்பந்தம் முறிகிறது. அதன்பிறகு அவர்கள் வேறு நிறுவனப்படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார்கள். தொடர்வெற்றிகள். பணமும் புகழும் வந்து சேருகின்றன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நகைச்சுவை நடிகர்களின் வருகையையும் தலைமுறை இடைவெளியும் அவர்களைத் திரையுலகை விட்டு ஒதுக்குகின்றன.

அவர்கள் நாடக மேடையை நோக்கி நகருகிறார்கள். நகைச்சுவை நாடகம் நடத்த வேண்டி ஒப்பந்தம் செய்து கொண்டு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்ல கடற்பயணம் புறப்படுகிறார்கள்.

புகழ்பெற்ற நட்சத்திரங்களாக இருந்தவர்கள் மலிவான விடுதி ஒன்றில் தங்க வைக்கபடுகிறார்கள். முறையாக நடத்தப்படுவதில்லை.நாடக ஒருங்கிணைப்பாளர் அவர்களை ஏமாற்றுகிறான். அவர்கள் நாடகம் நடக்கவுள்ள அரங்குகளும் இரண்டாம் தரமானவை. கால்வாசி அரங்கு கூட நிறையாத நிலையில் நாடகம் நடத்துகிறார்கள்.

இரட்டையர்களில் ஸ்டென் அறிவாளி. அவரே நகைச்சுவையை எழுதுகிறார். எப்போதும் தனது அறையில் புதிது புதிதாக நகைச்சுவை காட்சிகளை எழுதிக் கொண்டேயிருக்கிறார். சகிப்புத்தன்மை மிக்க அந்தக் கலைஞன் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஹார்டி அப்படிப் பட்டவரில்லை. பெண்கள், குடி, உல்லாசம் எனச் சந்தோஷமாக நாட்களைக் கழிக்க விரும்பும் எளிய மனிதன். அவரது உடல் தான் அவரது பலம். அவரது பலவீனம். ஆனால் தான் குண்டாக இருக்கிறோம் என ஒரு போதும் அவர் கவலை கொள்ளவேயில்லை. மாறாகத் தனது பருத்த உடலைக் கொண்டு அவர் மேற்கொள்ளும் எத்தனிப்புகள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கின்றன.

சாப்ளின் உடல் ரப்பர் என்றால் ஹார்ட்டியின் உடல் ஒரு பந்து. அது உதைபடும் போதெல்லாம் மக்கள் சிரிக்கிறார்கள். லாரலும் ஹார்டியும் எதற்கெல்லாம் மக்கள் சிரிப்பார்கள். எதை அதிகம் விரும்புகிறார்கள் என்று விரிவாகத் திட்டமிடுகிறார்கள். ஒத்திகை பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும் வம்பு இழுப்பதும் மக்களுக்குப் பிடிக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் சண்டை ஒருபோதும் வன்முறையாகாது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குள் நடப்பது பொய்ச்சண்டை. ஒரு கைகுலுக்கல். ஒரு முத்தம்போதும் அதை நிறுத்தி முடித்துக் கொள்வதற்கு.

ரயில் நிலைய காத்திருப்பில் ஒருவரையொருவர் தேடும் நகைச்சுவை காட்சி ஒன்று படத்தில் இருக்கிறது. சிறிய இடம் தான் ஆனால் வேறுவேறு பாதைகளில் சுற்றி இருவரும் செய்யும் வேடிக்கைகள் நம்மை மறந்து சிரிக்க வைக்கின்றன. காரணம் இதே அனுபவத்தை நாம் ஷாப்பிங் மால்களில் பெரிய பல்பொருள் அங்காடிகளில் அனுபவித்திருக்கிறோம். பல நேரம்  நாம் வாகன நிறுத்துமிடத்தில் காரை எங்கே நிறுத்தினோம் என அறியாமல் தேடியது இது போன்ற நகைச்சுவை தானே

சாப்ளின் படங்களில் சாப்பிடும் காட்சி ஒன்று கட்டாயமிருக்கும். அது போலவே லாரல் அண்ட் ஹார்டியும் உணவை முன்வைத்து நிறைய நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்திலும் நோயாளியைப் பார்க்க வந்தவர் அவித்த முட்டையை உண்ணும் வேடிக்கை காட்சி இருக்கிறது. சாப்பிடும் முறையை, உணவின் அளவை கேலி செய்வது உலகெங்கும் இருந்து வரும் பழக்கம். சிலநேரம் இந்த நகைச்சுவை பெருத்த அவமானமாக மாறிவிடுவதும் உண்டு.

அன்றாட வாழ்க்கை பொருட்களால் நிரம்பியது. அதைக் கையாளுவது எளிது என்று நினைக்கிறோம். அப்படி எளிதானதில்லை. எந்தப் பொருளும் எப்போதும் கைநழுவிப் போய்விடும். எளிதாகக் கையாள முடியாமல் சிக்கலாகிவிடும் என்ற உண்மையை லாரல் அண்ட் ஹார்டியின் நகைச்சுவை அடையாளப்படுத்துகிறது.

குழப்பமான நேரத்தில் நாம் எதைச் செய்தாலும் அது மேலும் குழப்பமாகவே இருக்கும் என்பதை அவர்கள் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். எளிய விஷயங்களைச் சிக்கலாக்கிக் கொள்வதுடன் அதிலிருந்து விடுபட முடியாமல் அவர்கள் திணறுகிறார்கள். வாழ்க்கையில் நாம் பெரிய விஷயங்களை எதிர்கொண்டுவிட முடியும் ஆனால் சின்னஞ்சிறு குழப்பங்கள். சிக்கல்களை எதிர்கொள்வது எளிதில்லை என்று புரிய வைக்கிறார்கள்.

ஒரு ஸ்பூனை, பூவை, காலணியை நாம் உபயோகப்பொருளாக மட்டுமே கருதுகிறோம். அவர்கள் அதை உபயோகப் பொருளாக மட்டுமின்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அடையாளமாகக் கருதுகிறார்கள். ஒரு பெண்ணிடம் பூவை கொடுப்பதற்குப் பதிலாகக் காலணியைத் தருகிறார் ஹார்டி. அவள் அதைத் தூக்கி எறிகிறாள். அது ஒரு ஆள் மீது படுகிறது. அவன் அந்த இளம் பெண்ணை அடிக்க வருகிறான். ஹார்டி தலையிட்டு அவனுடன் சண்டைபோடுகிறார். அவன் ஒடிவிடவே அந்தப் பெண் ஹார்டி மீது காதல் கொள்கிறாள். இப்போது காலணியை அவள் ஆசையாக எடுத்து முத்தமிடுகிறாள். காலணி இப்போது காதலின் அடையாளமாகிறது. அது தான் நகைச்சுவையின் வெற்றி.

லாரல் மற்றும் ஹார்டியின் அடையாளம் அவர்களின் தொப்பி. அதை வேண்டுமென்றே அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள். தொப்பியால் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். வலியை மறைக்கத் தொப்பியால் முகத்தை மூடிக் கொள்ளுகிறார்கள். அழகான பெண்ணைக் கண்டால் தொப்பியை ஆட்டி அழைக்கிறார்கள். பிடிக்காதவர் மீது தொப்பியை வீசுகிறார்கள். அந்தத் தொப்பி அவர்களின் முகமூடி போலவே செயல்படுகிறது.

தங்களின் இங்கிலாந்து பயணத்தின் ஊடே தாங்கள் விரும்பிய படி ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் எனக் கனவு கண்டு அதற்காகத் தயாரிப்பாளரை வேண்டி அலைகிறார்கள். எந்தத் தயாரிப்பாளரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.

ஒரு காட்சியில் ஸ்டென் தயாரிப்பாளர் ஒருவரைக் காணச் செல்கிறார். தன்னை அந்த நிறுவனம் வேண்டுமென்றே துரத்தியடிக்கிறது என்ற போதும் அவர் தான் விரும்பியதைத் தெரிவிக்காமல் போகக்கூடாது என்பதற்காக வேடிக்கைகள் செய்கிறார். ஒரு கட்டத்தில் பலவந்தமாக அறைக்குள் நுழைந்துவிடுகிறார். அப்படியும் தயாரிப்பாளரைக் காணமுடியவில்லை. ஆனால் அவரது உதவியாளர் மென்மையான குரலில் தயாரிப்பாளருக்குப் படம் தயாரிக்க விருப்பமில்லை என்று சொல்லித் துரத்தியடிக்கிறார்.

இந்தக் காட்சி ஒரு புறம் நடைபெறும் போது மறுபுறம் ஹார்டி தன் மனைவிக்கு நகை வாங்க ஒரு நகைக்கடையில் காத்திருக்கிறார். பணமில்லை என்று தெரிந்தும் அழகிய நகை ஒன்றை வாங்க முனைகிறார். இது இருவரது இயல்பையும் வெளிப்படுத்தும் சிறப்பான காட்சி. படம் முழுவதும் தனது ஏமாற்றங்களை, அவமதிப்பை தனக்குள்ளாக புதைத்துக் கொள்கிறார் ஸ்டென். ஆனால் ஹார்டி சின்னஞ்சிறு விஷயங்களைக் கூடத் தாங்கிக் கொள்ளமுடியாமல் உணர்ச்சிவசப்படுகிறார். கோபம் கொள்கிறார்.

இரண்டு நகைச்சுவை நடிகர்களும் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளரால் ஏமாற்றப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இதை நினைத்துச் சோர்ந்து போகவில்லை. தங்கள் நகைச்சுவை நடிப்பிற்கு இன்றும் இடமிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறார்கள். முழுமையான அர்ப்பணிப்புடன் நடிக்கிறார்கள். மெல்ல அவர்கள் நாடகத்திற்குக் கூட்டம் அதிகமாகிறது.

மக்கள் வரவேற்பினைத் தொடர்ந்து பெரிய அரங்கில் நாடகம் நடைபெற ஏற்பாடாகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இருவரது மனைவியரும் லண்டன் வந்து சேருகிறார்கள். அவர்கள் தான் படத்தின் திருப்புமுனை. இருவர் நடந்து கொள்ளும் விதமும் அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளும், ஹார்டியின் மனைவியின் பரிசுத்தமான அன்பும் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஒரு காட்சியில் படுக்கையில் தனது மனைவியை அணைத்தபடியே ஹார்டி படுத்துக்கிடக்கிறார். Beauty and the Beast படத்தில் வரும் அன்பிற்காக ஏங்கும் அரக்கனைப் போலிருக்கிறார். ஹார்டியின் மனைவி பொம்மை போலத் தெரிகிறார். இது போலவே உடல்நலமற்ற ஹார்டியின் படுக்கையில் தானும் உடன்படுத்துக் கொண்டு ஸ்டேன் அவரது கைகளின் குளிர்ச்சியைப் போக்கும் காட்சியும் மறக்கமுடியாதது

உடல்நலமற்ற ஹார்டிக்கு பதிலாகப் புதிய நடிகருடன் இணைந்து நாடகம் செய்ய லாரலுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை அவர் ஏற்க மறுக்கிறார். ஒரு நிலையில் ஹார்டியே இதற்கு அனுமதி வழங்கிய போதும் லாரலுக்கு மனமில்லை. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடாகிறது. நாம் இரட்டையர்கள். ஒருபோதும் பிரியக்கூடாது என்று லாரல் கொள்ளும் தவிப்பு அந்நிகழ்வு முழுவதும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாரல் அண்ட் ஹார்டியின் சினிமா எடுக்கும் கனவு என்னவானது. அவர்கள் வாழ்வின் கடைசி நாட்கள் எப்படியிருந்தன என்பதை நோக்கி படம் இறுதியில் செல்கிறது.

உலகெங்கும் மக்களைச் சிரிக்க வைத்தவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் இத்தனை துயரங்களை, வேதனையைத் தான் எதிர்கொண்டார்கள் என்ற நிதர்சனத்தைப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.

எந்த நகைச்சுவை நடிகருக்குச் சொந்தவாழ்க்கை சிறப்பாகவில்லை என்பதற்கு இந்த இரட்டையர்களும் எடுத்துக்காட்டே. சாப்ளினுக்கும் இதுவே நேர்ந்தது. சாப்ளினிற்கு நிறையக் காதலிகள். நான்கு மனைவிகள். நிறையக் குழந்தைகள். குடும்பப் பிரச்சனைகளிலிருந்து அவரால் கடைசி வரை மீளமுடியவேயில்லை.

1930 – 60 களின் தலைமுறை லாரல் மற்றும் ஹார்டியை ரசித்துக் கொண்டாடியது. இன்றும் அமெரிக்கச் சிறார்கள் இவர்களின் தொலைக்காட்சி காணொளிகளை விரும்பி ரசித்தே வருகிறார்கள். சிறந்த நகைச்சுவைக்குக் காலவரம்புகள் கிடையாது தானே.

அன்றாட வாழ்வில் நாம் அடையும் குழப்பங்களே லாரல் மற்றும் ஹார்டி நகைச்சுவையின் ஆதாரம். இந்தக் குழப்பத்தை அவர்கள் விளையாட்டாக, வேடிக்கையாக, அபத்தமாக உருமாற்றுகிறார்கள். நாம் அதே சூழலை, நிகழ்வை எதிர் கொண்டிருக்கிறோம் என்பதால் அந்த நகைச்சுவையை ரசித்துச் சிரிக்கிறோம்.

மௌனப்பட யுகம் துவங்கி சிறியதும் பெரியதுமாக நூறு படங்களுக்கும் மேலாக லாரல் மற்றும் ஹார்டி ஒன்றிணைந்து நடித்திருக்கிறார்கள்.

“தி லக்கி டாக்” திரைப்படத்தில் தான் லாரலும் ஹார்டியும் முதன் முறையாக இணைந்து நடித்தார்கள். இதன் வெற்றியே அவர்களை ஒன்றிணைத்தது.

ஹால் ரோச் ஃபிலிம் ஸ்டூடியோவுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின் காரணமாக இருவரும் தொடர்ந்து இணைந்து நடிக்கத் தொடங்கினர். 25 ஆண்டுகள் வெற்றிகரமாகத் திரை வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி பின்பு மெல்ல ரசிகர்களின் புறக்கணிப்பிற்கு உள்ளாகினர். 1944ல் இறுதியில் நகைச்சுவை நாடகங்கள் நடத்தத் துவங்கினார்கள்.

ஹார்டியின் மரணத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் ஸ்டென் உயிர்வாழ்ந்தார். ஆனால் வேறு எவருடனும் இணைந்து நாடகமோ, படமோ நடிக்கவில்லை. திரையில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் அவர்கள் இணையற்ற ஜோடியாகவே வாழ்ந்தார்கள்.

If any of you cry at my funeral, I’ll never speak to you again என்பது  லாரலின் பிரபலமான மேற்கோள் . அது இரட்டையர்களின் வாக்குமூலம். மரணத்திற்குப் பிறகும் அவர்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: