இரண்டு நகரங்கள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலை விவாதிப்பதற்கென நிறையக் குழுமங்கள் இணையத்தில் இருக்கின்றன. அப்படி ஒரு குழுமத்தில் பகிரப்பட்ட கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். அது அன்னாகரீனினா மாஸ்கோவில் வாழ்ந்திருந்தால் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள் அவள் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று கூறி மாஸ்கோ, பீட்டர்ஸ்பெர்க் இரண்டு நகரங்களுக்குமான வேறுபாட்டை, அதன் வாழ்க்கை முறையைக் கொண்டு நாவலின் மையத்தை புதிய கோணத்தில் அணுகுகிறது.

அன்னாகரீனினா நாவல் 1878ல் வெளியான நாள் முதல் இன்று வரை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நாவலுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்நாவல் வெளியாகியுள்ளது. 18 முறை அன்னாகரீனினா நாவல் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ரேடியோ நாடகம், நாடகம் மற்றும் இசை நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

1873 முதல் 1877 வரை The Russian Messenger இதழில் அன்னாகரீனினா தொடர்கதையாக வெளிவந்தது. நாவல் வெளிவந்து கொண்டிருக்கும் போதே அதன் பிரெஞ்சு மொழியாக்கம் பிரெஞ்சு நாளிதழ் ஒன்றில் தொடராக வெளியானது.

ரஷ்ய இலக்கியத்தில் உருவாக்கப்பட்ட சிறந்த பெண் கதாபாத்திரங்களில் ஒன்றாக அன்னாவைக் குறிப்பிடுகிறார்கள். டால்ஸ்டாய் தனது ஐம்பதாவது வயதில் இந்நாவலை எழுதினார். இதன் முன்னதாக அவரது புகழ்பெற்ற நாவலான War and Peace வெளியாகி பெரும்வெற்றியைப் பெற்றிருந்தது

அன்னகரீனினா நாவலில் அவளது பால்யகாலம் சித்தரிக்கப்படவில்லை. அவள் எப்படி வளர்க்கப்பட்டாள். அவளது ஈடுபாடுகள் எப்படியிருந்தன. எங்கே கல்வி பயின்றாள் என்பது போன்ற விஷயங்கள் நாவலில் இல்லை. அவளது சொந்த ஊர் மாஸ்கோ. அவளது சகோதரன் அங்கே வசிக்கிறான் என்பது மட்டுமே நாவலில் உள்ளது. அவள் கணவனுடன் பீட்டர்ஸ்பெர்க்கில் வசிக்கிறாள்.

மாஸ்கோ மரபான நகரம். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கோ புதிதாக உருவாக்கபட்ட நகரம். பீட்டர் தி கிரேட் மன்னனின் விருப்பத்தால் நகரம் உண்டாக்கப்பட்டது. 1703ல் நேவா ஆற்றின் கரையில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உருவாக்கப்பட்டது 1924ல் இந்நகரம் லெனின்கிராடு என பெயர் மாற்றம் கொண்டது. 1991ல் மீண்டும் பீட்டர்ஸ்பெர்க்காக உருமாற்றம் கொண்டது. 1918 வரை தலைநகராக விளங்கியது. ஜார் மன்னர் அங்கே தான் வசித்தார்.

பிரபுக்களும் உயர்தட்டு மக்களும் மாஸ்கோவில் வசிப்பதை விரும்பினார்கள். இசை நடனம் உயர்கல்வி, விருந்துகள் என்று மாஸ்கோ பண்பாட்டு சிறப்பால் பெயர்பெற்றிருந்தது. மாஸ்கோவாசிகள் விருந்தில் ரஷ்யமொழியில் பேசிக் கொள்ளமாட்டார்கள். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு தான் விருப்பமான மொழி. வீட்டில் தனி ஆசிரியர் வைத்து ஜெர்மன் கற்றுக் கொண்டார்கள். டால்ஸ்டாய் கூட வீட்டில் தனி ஆசிரியர் மூலமே ஜெர்மனி கற்றுக் கொண்டார். மிகச்சிறந்த நாடக அரங்குகளும் இசைக்கூடங்களும் மாஸ்கோவில் இருந்தன.

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கோ நடுத்தரவர்க்க மற்றும் வறியவர்களின் வசிப்பிடமாகக் கருதப்பட்டது. வேலைப்பார்க்க பீட்டர்ஸ்பெர்க், வாழ்வதற்கு மாஸ்கோ என்ற கருத்து புரட்சிக்கு முன்பு வரை ரஷ்ய மக்களிடம் பரவலாக இருந்தது.

அன்னாவின் கணவன் பீட்டர்ஸ்பெர்க்வாசி. உயர்வகுப்பைச் சேர்ந்தவன். அவனுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே குறிக்கோள். வேலை வேலை என அதிலே முழ்க்கிடக்கிறான். அது பீட்டர்ஸ்பெர்க நகரவாசிகளின் இயல்பு.

திருமணத்தின் பிறகு மாஸ்கோவைப் பிரிந்து பீட்டர்ஸ்பெர்க்கில் வாழ்ந்து வந்த அன்னா தனது சகோதரன் வீட்டுப்பிரச்சனையைத் தீர்க்கவே மாஸ்கோ வருகிறாள். நடன விருந்தில் கலந்து கொள்கிறாள். உண்மையில் மாஸ்கோ நகரத்தின் இரவு வாழ்க்கையும் அதன் நினைவுகளுமே அவளைத் தன்னிலை மறக்க வைக்கின்றன. இளமைக்காலத்தின் ஏக்கங்கள் அவளுக்குள் தன்னை மீறி எழுகின்றன. நடனத்தின் போது தன் தான் இளமையானவள் என்பதை உணருகிறாள்.

பீட்டர்ஸ்பெர்க்கில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்தாலும் அது மாஸ்கோ வாழ்க்கை போன்றதாகயில்லை என்று உணருகிறாள். அன்னாவிற்குள் புதிய காதலை உருவாக்குவது மாஸ்கோ நகர நினைவுகளே. அதை வெளிப்படையாக அவள் உணருவதில்லை. ஆனால் அது ஒரு வலிமையான காரணம்.

அவள் காதலிக்கும் விரான்ஸ்கியும் மாஸ்கோவாசி. ஆனால் பீட்டர்ஸ்பெர்க்கில் வசிக்கிறான். ராணுவ அதிகாரியான அவனையும் அன்னாவையும் ஒன்று சேர்ப்பது மாஸ்கோ நகரப்பண்பாடும் உல்லாச நடனமும் தான். ஒப்லான்ஸ்கி மற்றும் கரீனின் இருவரும் முறையே மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பெர்க்கின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். கரீனின் கடும் உழைப்பாளி. அதிகாரத்தின் உச்சத்தை நோக்கி செல்பவன். ஆனால் ஒப்லான்ஸ்கியோ சோம்பேறி. உல்லாசமாக வாழ்க்கையைக் கழிக்க மட்டுமே விரும்புகிறான். இது வசதியான மாஸ்கோவாசிகளின் இயல்பு.

மாஸ்கோ நகரை வியந்து டால்ஸ்டாய் நிறைய எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியோ பீட்டர்ஸ்பெர்க்கை கொண்டாடுகிறார். குறிப்பாக வெண்ணிற இரவுகளில் பீட்டர்ஸ்பெர்க் நகரின் சூரியனின் முகம் காணாத வீதிகள் குறிப்பிடப்படுகின்றன. இரவிலும் சூரியன் ஒளிரும் நாட்கள் பதிவு செய்யப்படுகின்றன.

எந்த ஊரில் உங்களின் பால்ய காலம் செலவிடப்படுகிறதோ அந்த ஊரின் நினைவுகள் அழுத்தமாக மனதிற்குள் பதிவாகியிருக்கும். வேலை காரணமாகவோ, அல்லது குடும்பச் சூழல் காரணமாகவோ வேறு ஊர்களுக்கு அதிலும் மாநகரங்களுக்குச் செல்லும் பலர் தங்கள் மனதில் சொந்த ஊரின் ஏக்கத்தையே எப்போதும் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஏக்கமில்லை. ஒருவகை இழப்புணர்வு.

தமிழில் பெருநகர வாழ்க்கை மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை எழுத்தாளர்கள் நகரில் வசித்தபோதும் மனதில் அவர்களின் சொந்த ஊரே மையம் கொண்டுள்ளது.

மாநகரை எழுதுவது எளிதானதில்லை. கிராமத்தை போல அதை ஒரு குவிமையத்தினுள் அடக்கிவிடமுடியாது. கிராமம் VS நகரம் என்ற எதிர்நிலை நம்மிடம் எப்போதும் உள்ளது. கிராமங்கள் பண்பாட்டின் விளைநிலம் போலவும் நகரங்கள் பண்பாட்டினை அழிக்கக்கூடியது என்றும் ஒரு கருத்து தொடர்ந்து இருந்து வருகிறது. அது உண்மையானதில்லை.

இவ்வளவிற்கும் தமிழகத்தில் மதுரை, காஞ்சி, பூம்புகார் எனப் பெருமை மிக்க நகரங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கின்றன. நகரவாழ்க்கை பண்பாட்டுச் சிறப்புக் கொண்டதாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. நகரம் குறித்த பயம் தான் அன்றிருந்தது.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் பிறகு நகரம் பற்றிய எண்ணம் மாறத்துவங்கியது. நகரம் குறித்த எதிர்க் கருத்துகள் தீவிரமாகப் பரவத்துவங்கின. மறுபுறம் நகரை நோக்கி வருவது அதிகரித்துக் கொண்டேயிருந்தது. நகரப்பண்பாடு என்பது ஒற்றைத் தன்மை கொண்டதில்லை. பண்பாட்டு கலப்பும் பல்வகைப் பண்பாட்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்த பொதுவெளியது. நகரமக்கள் எது நடந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற எண்ணமும் இப்படி உருவாக்கப்பட்டதே. தன்னைச் சுற்றி எது நடந்தாலும் கண்டுகொள்ளாதவர்கள் நகரம் கிராமம் எனப் பேதமின்றி எங்கும் தானே இருக்கிறார்கள்.

மாஸ்கோவில் வசிப்பவர்களின் மனநிலை மதுரையில் வசிப்பவர்களின் மனநிலையைப் போன்றதே. இரண்டும் மரபான நகரங்கள். பண்பாடு தான் அந்த நகரங்களின் சிறப்பு. பல்வகைக் கலையும் விதவிதமான உணவு வகைகளும் வழிபாடும் கொண்டாட்டமும் கலந்த வாழ்க்கை. பீட்டர்ஸ்பெர்க் வாழ்க்கை சென்னையைப் போன்றது. இங்கே பல்வகைப் பண்பாடுகள் ஒன்று கலந்துள்ளன.

அன்னாகரீனினா ஒரு வேளை மாஸ்கோவில் வாழ்ந்திருந்தாள் அவள் விரான்ஸ்கியை காதலித்திருக்க மாட்டாள். அவள் வாழ்க்கை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். அவள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டாள் என்கிறது அக்கட்டுரை.

ஒரு நாவலை வாசிப்பவர்கள் எத்தனை புதிய தளங்களில், கோணங்களில் நாவலை வாசிக்கிறார்கள். புதிய விளக்கங்களைத் தருகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் நாவல்கள் இப்படிப் பல்முனைகளில் அணுகப்படவில்லை. ரசனை சார்ந்த மதிப்பீடுகளுக்கு வெளியே தமிழ் நாவல்கள் இன்னமும் விரிவாக ஆராயப்படவில்லை.

அந்த வகையில் தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் கொடுத்து வைத்தவர்கள். உலகின் ஏதோ ஒரு மூலையில் தினமும் யாரோ ஒருவர் அவர்களின் நாவலைப் பற்றி ஏதாவது எழுதிக் கொண்டேதானிருக்கிறார்கள்.

ரஷ்யாவின் அடையாளமாக அதன் எழுத்தாளர்களே கருதப்படுகிறார்கள். அவர்களின் எழுத்தின் வழியாகவே ரஷ்யா தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இப்படி வேறு தேசம் எதுவும் எழுத்தால் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: