நான் தஸ்தாயெவ்ஸ்கி

தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி மூன்று நாடகங்களை நான் எழுதியிருக்கிறேன். ஒன்று பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் முருகபூபதி பயிலும் போது அவரது தயாரிப்பிற்காக notes from underground குறுநாவலை மையமாகக் கொண்டு மரணவீட்டின் குறிப்புகள் என்ற நாடகத்தை எழுதித் தந்தேன். அது பல்கலைக்கழக வளாகத்திலே நாடகமாக நிகழ்த்தப்பட்டது. பின்பு தஸ்தாயெவ்ஸ்கியின் காதலை முதன்மைப்படுத்தி தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்ற பெயரில் நாடகம் எழுதினேன். அதுவும் சென்னையில் மேடையேற்றப்பட்டது. தியேட்டர் லேப் நாடகக்குழுவின் ஜெயராவ் விருப்பத்திற்காகத் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்க்கையைப் பற்றிய நாடகத்தை எழுதிக் கொடுத்தேன். அது ஒரு மணி நேர அளவிற்குச் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

இந்த மூன்று நாடகப்பிரதிகளையும் ஒன்றாக இப்போது ஒரே நூலாக வெளியிடலாம் என்று சிறிய திருத்தங்கள் செய்து கொண்டிருக்கிறேன்.  நூலின் தலைப்பு நான் தஸ்தாயெவ்ஸ்கி. தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.

இந்நாடகங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய ஒரு நண்பர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவருக்கு மெயில் அனுப்பிய போது அவர் ஒரு நாடகத்தை பற்றி எழுதியிருந்தார். அது Diane Stubbings எழுதிய THE PARRICIDE என்ற நாடகம். அதுவும் தஸ்தாயெவ்ஸ்கியின் காதலையும் வாழ்வையும் பற்றியதே. அதை முன்னதாக வாசித்திருக்கிறேன்.

அப்பிரதி 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. FEDYA ,ANNA/KATYA, KOLYA/MITYA, ELENA/GRUSHENKA , KARAKOZOV/ALYOSHA என ஐந்து கதாபாத்திரங்கள். கரமசோவ் சகோதரர்கள் நாவலை வாசிக்கும் போது ஏற்பட்ட உந்துதலிலிருந்து இந்த நாடகத்தை எழுதியிருப்பதாகச் சொல்கிறார் Diane Stubbings.

1860 இல் பீட்டர்ஸ்பெர்க்கில் நாடகத்தின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல் ஜோசப் பிராங்க் எழுதிய Dostoevsky: A Writer in His Time. இந்நூல் 1000 பக்கத்தில் வெளியாகியுள்ளது. இது சுருக்கப்பட்ட பதிப்பு. விரிவாக 2400 பக்கங்களில் ஐந்து தொகுதிகளாக எழுதியிருக்கிறார். இது போன்ற துல்லியமான வாழ்க்கை வரலாறு நூல் எவருக்கும் எழுதப்பட்டதில்லை. ஜோசப் பிராங்க் நூலில் உள்ள தகவல்களே தஸ்தாயெவ்ஸ்கியை பற்றிய ஆய்வுப்பூர்வமான உண்மைகள். தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய நாடகத்தை எழுதுவதற்கு இதையே ஆதாரமாகக் கொண்டேன்.

Diane Stubbings நாடகப்பிரதி சிறப்பாகயில்லை. தஸ்தாயெவ்ஸ்கியை அவர் ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றியது. பெரிய பொருட்செலவில் அதை நாடகமாக நிகழ்த்தியிருக்கிறார்கள்.

நவீனத் தமிழ் நாடகவுலகில் காத்திரமான இயக்குநர்கள். நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான பொருளாதார உதவிகள் இல்லை. அரங்க வசதிகள் இல்லை.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பின்பகுதியில் சிறப்பான திறந்தவெளி அரங்கு உள்ளது. நூலகம் கட்டிய நாளிலிருந்து இதுவரை அந்த அரங்கு மூடப்பட்டேயிருக்கிறது. அந்த அரங்கினை நவீன நாடக நிகழ்வுகளுக்குக் கொடுத்தால் சிறந்த நாடகங்களை அரங்கேற்றலாம். அது உரை நிகழ்த்தவும் பொருத்தமான இடம். அரசு அனுமதித்தால் நாடகக்கலைஞர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: