எட்டரை இடைவெட்டுகள்


மலையாள சினிமாவின் தனித்துவமிக்க இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ். சுவப்நாடனம், இரகல், பஞ்சவடிபாலம் , ஆதாமின்ட வாரியெலு, லேகயுடெ மரணம்:ஒரு ப்ளாஷ்பாக் , யவனிகா , கோலங்கள்,  உள்கடல், மேளா போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர். பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். எண்பதுகளில் மலையாள சினிமாவின் புதிய அலையை உருவாக்கியவர்.

கே. ஜி. ஜார்ஜின் திரைப்படங்கள் 1980களின் நிலவிய கேரள சமூகப் பண்பாட்டு, அரசியல் உலகை துல்லியமாகச் சித்தரிப்பவை. ஒருவகையில் அவையே கேரள வாழ்வின் சாட்சியங்கள்.

அரவிந்தன். பத்மராஜன். பரதன், அடூர் கோபாலகிருஷ்ணன்,  சேது மாதவன், எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற இயக்குனர் மலையாள மாற்றுசினிமாவை உருவாக்கியதில் முக்கியமானவர்கள். அந்த வரிசையில் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவர் கே. ஜி. ஜார்ஜ்.

இவரது திரையுலக வாழ்க்கை மற்றும் திரைப்படங்கள் குறித்து 8 ½ Intercuts: Life and Films of K G George என்றொரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கியிருப்பவர் லிஜின் ஜோஸ். இவர் மலையாளத்தின் இளம் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர்.

8 ½ Intercuts ஆவணப்படத்தைக் காணும்படி எழுத்தாளரும் இசை விமர்சகருமான ஷாஜி இணைய இணைப்பை அனுப்பியிருந்தார்.

இந்திய சினிமாவில் எந்த இயக்குநருக்கும் இத்தனை அற்புதமான வாழ்க்கைப் பதிவு ஆவணப்படமாக வெளியானதில்லை. லிஜின் ஜோஸ் மிகச்சிறப்பாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார். தனது ஆதர்ச நாயகன் கே. ஜி. ஜார்ஜ்க்கு லிஜின் செலுத்திய காணிக்கை இதுவென்பேன்.

கே. ஜி. ஜார்ஜ் பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற காலத்தில் நிறைய உலகத் திரைப்படங்களைக் கண்டிருக்கிறார். அவருக்கு விருப்பமான இயக்குநர் பெடரிகோ பெலினி. ஆகவே பெலினியின் 8 ½ திரைப்படத்தை நினைவுபடுத்தும் விதமாக 8 ½ Intercuts: Life and Films of K G George ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆவணப்படத்தில் தனது சொந்த வாழ்க்கை பற்றிக் கே. ஜி. ஜார்ஜ் மிகக் குறைவாகவே பேசியிருக்கிறார். ஆவணப்படம் அவரது திரை வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளை, நினைவுகளை, அனுபவங்களைத் தான் முதன்மைப்படுத்தியிருக்கிறது.

8 ½  திரைப்படத்தின் முக்கியக் காட்சியும் கே. ஜி. ஜார்ஜ் வாழ்க்கையும் இடைவெட்டாக வந்து போவது சிறப்பாகவுள்ளது.

ஆவணப்படத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் கே. ஜி. ஜார்ஜ் பற்றிய தனது நினைவுகளை மிக அழகாக எடுத்துச் சொல்கிறார். அவருடன் எழுத்தாளர் பால் சக்கரியா, விமர்சகர் வெங்கடேஸ்வரன், ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபு. நடிகை கீது மோகன் தாஸ், இயக்குனர் லெனின் ராஜேந்திரன், இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குனர் அஞ்சலி மேனன் படத்தொகுப்பாளர் பீனா பால், நடிகர் மம்முட்டி, பகத் பாசில், நெடுமுடி வேணு ஆகியோரும் ஜார்ஜின் திரைப்படங்கள் பற்றிய தங்களின் அனுபவங்களைச் சிறப்பாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படத்தில் கே. ஜி. ஜார்ஜ் அவரது மனைவி சல்மா இருவரும் மனம் திறந்து பேசுகிறார்கள். பாடகியான சல்மா அவரைத் திருமணம் செய்து கொண்ட விதம் பற்றியும் குடி மற்றும் பெண்கள் விஷயத்தில் ஜார்ஜ் மூழ்க்கிடந்தவர் என்பதையும் சல்மா வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். தனக்குக் குடும்பம் மனைவி பிள்ளை உறவினர் போன்றவற்றில் எப்போதும் ஈடுபாடு இல்லை. தான் ஒரு சுதந்திரமான கலைஞன். தனது விருப்பமும் நினைவும் சினிமா மட்டுமே என்கிறார் கே. ஜி. ஜார்ஜ்.

தன் மீது மனைவி சுமத்தும் குற்றச்சாட்டுகளைச் சிரித்தபடியே எதிர்கொள்ளும் விதம் அபாரம். இத்தனை வெளிப்படையாக எவரும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளமாட்டார்கள்.

எம்.பி. ஸ்ரீனிவாசன் இசை குறித்தும். பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு பற்றியும் கே. ஜி. ஜார்ஜ் சொல்லும் விதம் மறக்க முடியாதது. தனக்கு உளவியலில் மிகுந்த ஆர்வம் என்று சொல்லும் ஜார்ஜ் தனது முதற்படம் மனச்சிதைவு கொண்டவனின் உலகைப் பேசுவதைக் குறிப்பிடுகிறார். இது போலவே பெண்களின் வாழ்க்கை துயரங்கள் பற்றித் தனது திரைப்படங்கள் நிஜமாகப் பதிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார். ஆதாமின்டே வாரியலு படத்தின் இறுதிக்காட்சியில் பெண்கள் கூட்டமாக வெளியேறி ஓடும் போது படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஜார்ஜினை தள்ளிக் கொண்டு ஓடுவது குறிப்பிடத்தக்கது. இது பெலினியின் சாயல் உள்ள காட்சியே.

ஆவணப்படத்தின் துவக்கத்தில் கே. ஜி. ஜார்ஜ் பெலினியின் 8 ½ படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 1963ல் வெளியான அப்படம் ஒரு இயக்குநரின் மன அவஸ்தைகளைப் பற்றியது.

சுதந்திரமாக வானில் பறக்கவிரும்பிய ஒரு கலைஞனை சினிமா உலகம் எப்படித் தரையிறங்க வைத்து கனவுகளைச் சிதைத்தது என்பதையே இந்த ஆவணப்படம் அழுத்தமாக விவரிக்கிறது. இரண்டு மணி நேரம் ஒடக்கூடிய இப்படம் கவித்துமாகவும் கலைநேர்த்தியோடும் உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொருளாதாரச் சிரமங்களுடன் இதை உருவாக்கியிருக்கிறார் லிஜின்.

பெலினியைப் போலவே நாத்திகராகவும் தனித்துவமான கதாபாத்திரங்களை, திரைமொழியை உருவாக்கியவர் என்ற விதத்திலும் கே. ஜி. ஜார்ஜ் பெலினியின் சினிமா உலகைச் சேர்ந்தவராகவே கருதப்படுகிறார்.

கே. ஜி. ஜார்ஜ் குறித்து இந்த ஆவணப்படம் சர்வதேச அளவில் பல்வேறு திரைவிழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தமிழ் ஸ்டுடியோ அருண் ஏற்பாட்டில் சென்னையிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

கே. ஜி. ஜார்ஜைக் கொண்டாடும் விதமாக அருண் ஒரு நாள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். படச்சுருள் சிறப்பு இதழ் ஒன்றையும் கொண்டுவந்துள்ளது.

கே. ஜி. ஜார்ஜ் பற்றிய நிகழ்வில் கலந்து கொண்டு அவரது திரைப்படங்கள் பற்றி உரை நிகழ்த்தினேன். அன்று லிஜின் ஜோஸ் வந்திருந்தார். இரவு அவருடன் நானும் ஷாஜியும் ஒன்றாக இரவு உணவுக்குச் சென்றோம். நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தது மறக்கமுடியாத நிகழ்வாக இருந்தது. லிஜினுக்கு  மனம் நிரம்பிய பாராட்டுகள்.

இனி நான் படம் இயக்கப்போவதில்லை. எனது காலம் முடிந்துவிட்டது. நான் விரும்பிய சினிமாவை இப்போது இயக்க முடியாது. இன்றுள்ள திரையுலகம் வேறுவிதமானது என்று ஆவணப்படத்தில் கூறுகிறார் ஜார்ஜ். அவரது கடைசிப்படம் விளங்கோடு தேசம். அது பெரிய தோல்வியில் முடிந்த படம். நிறைய கசப்பான அனுபவங்களை அவருக்குத் தந்தபடம்.

மலையாள சினிமாவைப் பற்றிய ஆவணப்படமாக இருந்த போதும் எண்பதுகளின் சென்னையையும் கோடம்பாக்கத்தின் திரை வாழ்க்கையை  பற்றிய நினைவுகளையும் உண்மையாகப் பதிவு செய்துள்ளது.

தமிழை விட மலையாளத்தில் மதராஸ் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் சென்னை நிஜமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லேகயுடெ மரணம் ஒரு பிளாஷ் பேக் திரைப்படத்தைப் பாருங்கள். அதில் உள்ள கோடம்பாக்கம் தமிழ் சினிமா பதிவு செய்யாதது

கே. ஜி. ஜார்ஜ் மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர் ஷாஜி. அவரது விடா முயற்சியே இந்த ஆவணப்படத்தின் திரையிடலுக்கு முக்கிய காரணம். அவரே ஜே. ஜி. ஜார்ஜ் பற்றிய நிகழ்வை முழுமையாக ஒருங்கிணைப்பு செய்தார்.  ஷாஜிக்கு என் மனம் நிரம்பிய அன்பும் வாழ்த்துகளும்.

உள்கடலும், யவனிகாவும் பஞ்சவடி பாலமும், ஆதாமின்டே வாரியலும் மறக்க முடியாத திரைப்படங்கள். கே. ஜி. ஜார்ஜின் படங்களைப் போலவே இந்த ஆவணப்படமும் பெருமைக்குரிய கலைப்படைப்பாகவே என்றும் கருதப்படும்

••••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: