நேர நெறிமுறை நிலையம்

நேர நெறிமுறை நிலையம் என்ற துருக்கி நாவல் நான்கு ஆண்டுகளின் முன்பாக வெளியாகியுள்ளது. காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் மிக முக்கிய எழுத்தாளரான அகமத் ஹம்தி தன்பினார் எழுதிய நாவலிது. தன்பினாரின் மொழியும் கதை சொல்லும் விதமும் அபாரம். தமிழில் எத்திராஜ் அகிலன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

எத்திராஜ் அகிலன் நான் பெரிதும் மதிக்கும் மொழிபெயர்ப்பாளர். மிகச்சிரத்தையாக, நுட்பமாக, மூலத்திற்கு மிகவும் நெருக்கமாக மொழியாக்கம் செய்யக்கூடியவர். இந்நாவல் அவரது மொழிபெயர்ப்பின் சாதனை என்றே சொல்வேன்.

தன்பினார் இஸ்தான் புல்லில் பிறந்தவர். தந்தை நீதிபதியாக இருந்தவர். அதனால் பணி நிமித்தமாக தன்பினாரின் குடும்பம் பல இடங்களில் வசிக்க நேரிட்டது. கல்லூரியில் இலக்கியம் பயின்ற தன்பினார்  பின்பு இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

நேர நெறிமுறை நிலையம் நாவலின் கதாநாயகன் ஹயரி இர்டால். இவர் நேர நெறிமுறை நிலையத்தின் பணியாளனாக வேலை செய்கிறார்.  இவரது இளமைக்காலம் துவங்கி முதுமை வரை நாவல் விவரிக்கிறது.

நேரநெறிமுறை நிலையம் தேசம் முழுவதும் ஒரே நேரம் அமுல்படுத்தபட வேண்டும் என்பதற்காக உருவாக்கபட்ட ஒரு அமைப்பு . எதற்காக அப்படி ஒரு நிலையத்தை உருவாக்குகிறார்கள் என்றால் அதிகாரம் காலத்தைத் தன் கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறது.

துருக்கியில் கடிகாரத்தின் தேவை என்பது தொழுகைக்கான நேரம் காட்டுவதற்காகவே எனப் பலரும் நினைக்கிறார்கள் . துருக்கி பன்னாட்டு கடிகார விற்பனையின் முக்கிய மையம். ஆகவே விதவிதமான கடிகாரங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அரசாங்கம் ஆளுக்கு ஒரு நேரம் உள்ள கடிகாரத்தைப் பயன்படுத்துவது தவறானது. தேசத்தின் எல்லாக் கடிகாரங்களும் ஒரே நேரத்தை தான் காட்ட வேண்டும். தவறாகக் காட்டும் கடிகாரங்களை அணிந்தவர்கள் அபாரதம் விதிக்கபடுவார்கள் என்று அறிவிக்கிறது. இதற்காக  நேர நெறிமுறை நிலையம் உருவாக்கபடுகிறது. அங்கே தான் இர்டால் வேலை செய்கிறார்.

அந்த நேர நெறிமுறை நிலையம் உருவாக்கபட்டதன் பின்புலம். அங்கே நடந்த விஷயங்கள், அதன் பணியாளர்கள். அது மூடப்பட்ட விதம் பற்றி ஒரு நூலை எழுதுகிறார் இர்டால். அதுவே கதையின் மையம். ஒன்றுமற்ற விஷயங்களில் அரசு எவ்வளவு கவனம் செலுத்துகிறது. கடின உழைப்பு தராத பொருளாதார வசதியை ஒன்றுமற்ற வேலை தருகிறது என்பதே தன்பினார் சுட்டிக் காட்டுகிறார்.

நேரநெறிமுறையைக் கொண்டாடுவது போலத் தோற்றம் கொள்ளும் கதையின் போக்கு அதிகாரத்தின் அபத்தமான முடிவுகளை விமர்சிக்கிறது. கேலி செய்கிறது. முட்டாள்களாக மக்கள் எல்லாக்கட்டுபாடுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அடங்கிப் போய்விடுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

கட்டுப்பெட்டியான பழைய வாழ்க்கை ஒரு புறம் மேற்கத்திய பண்பாட்டின் தாக்கத்தால் உருவான புதிய வாழ்க்கை மறுபுறம். இரண்டுக்கும் நடுவே துருக்கி மக்கள் ஊசலாடுகிறார்கள். ஹயரி மேற்கத்திய பழக்கங்களை விரும்புகிறார். பழமையில் ஊறிக்கிடக்கும் சமூகம் அதை விமர்சிக்கிறது.

அரசாங்கம் ஏன் நேரத்தை கட்டுபடுத்த நினைக்கிறது. ஒரு காலத்தில் சீனாவில் இருந்த ஒரு அரசன் தன் ஆட்சியில் இருந்தே வரலாறு துவங்கப்பட வேண்டும் என்பதற்காக அதன் முன்பு உள்ள அத்தனை வரலாற்று நூல்களையும் தீக்கிரையாக்கினான். அது போன்ற ஒரு அபத்தமான எண்ணமே காலத்தைக் கட்டுபடுத்தித் தனதாக்கிக் கொள்வதும்.

கடிகாரம் காட்டும் காலம் என்பது புறவயமானது. மனித உடலே ஒரு கடிகாரம் தான். அ து சதா ஒரு காலவுணர்வை உருவாக்கியபடியே இருக்கிறது. காலத்தைத் தன் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொண்டு சமயம் நல்லநேரம் கெட்டநேரம் நல்ல நாள் கெட்ட நாள் என்று பாகுபாடு செய்கிறது.  விவசாயிகள் ஒரு காலக்கணக்கை வைத்திருக்கிறார்கள். ஜோதிடர்கள்  ஒரு காலக்கணக்கை கொண்டுள்ளார்கள்.

ஜப்பானில் உள்ள தீவு ஒன்றினை ஆட்சி செய்த அதிகாரி ஒருவன் மக்களிடம் உள்ள கடிகாரங்கள் யாவையும் உடைத்துவிட்டு தன் ஒருவனிடம் மட்டுமே கடிகாரம் வைத்துக் கொண்டான். காரணம் அவன் காலத்தின் அதிபதி என எண்ணியதே. அப்படித்தான் இந்நாவலில் அரசு நடந்து கொள்கிறது. நேரநெறிமுறை நிலையம் ஒரு புதிய ஒழுங்கை கொண்டுவர முயற்சிக்கிறது. அந்த முயற்சியின் அபத்தம் வாசிப்பவரை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.

ஐநூறு பக்கமுள்ள நாவல் துருக்கி அரசின் அதிகார நிலைப்பாட்டினையும் மக்களின் சுரணையற்ற வாழ்க்கையையும் இடைவெட்டாகப் பேசுகிறது. இதன் ஊடாகப் புத்தகம் எழுதுவது, படிப்பு. மேற்கத்திய பழக்கங்களின் சாதகப் பாதகங்கள், வறுமையான வாழ்க்கை சூழல் போன்றவையும் பேசப்படுகின்றன.

நாவலின் ஒரு இடத்தில் ஹயரி இப்படிச் சொல்கிறான்

நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு மனம் ஒத்து வாழும் வரை, வறுமை என்பது நாம் கற்பனை செய்து கொள்வதைப் போல், பயங்கரமானதாகவோ, சகித்துக் கொள்ள முடியாததாகவோ இருப்பதே இல்லை. வறுமை எனக்களித்த அனுகூலங்களிலேயே மிக உன்னதமானதென நான் கருதுவது, சுதந்திரத்தைத்தான்

இந்த வரிகள் தந்த மனவெழுச்சி மகத்தானது. இது போல நாவலில் பல இடங்கள் மிகுந்த உண்மையோடு எழுதப்பட்டுள்ளன.

1962 ல் எழுதப்பட்ட இந்த நாவல் 2013இல்தான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. சர்வதேச இலக்கிய உலகம் இந்நாவலை கொண்டாடியது. தமிழில் இந்நாவல் போதுமான கவனம் பெறவில்லை என்பது வருத்தமானதே. புதிய வகை நாவலை வாசிக்க விரும்புகிறவர்கள் அவசியம் இதனை வாசிக்க வேண்டும்.

தமிழுக்கு இதுபோன்ற அடர்த்தியான நாவலை சிறப்பாக மொழியாக்கம் செய்து தந்த எத்திராஜ் அகிலன் மிகுந்த பாராட்டிற்குரியவர்.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: