விரான்ஸ்கியின் காதல்

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவல் முப்பது முறைகளுக்கும் மேலாகத் திரைப்படமாக்கபட்டிருக்கிறது. இம்முறை பிரம்மாண்டமாக Anna Karenina: Vronsky’s Story என ரஷ்ய தொலைக்காட்சித் தொடராக உருவாக்கபட்டிருக்கிறது. இதன் முழுநீள திரைவடிவமும் வெளியிடப்பட்டுள்ளது.

அன்னாவின் காதலன் விரான்ஸ்கியின் பார்வையில் உருவாக்கபட்டுள்ள இப்படம் அன்னாகரீனினா நாவலைப் புதிய கோணத்தில் அணுகுகிறது.

நாவலில் அன்னா தற்கொலை செய்து கொண்டு இறக்கும் போது அவளது மகன் செர்ஜி கரீனினுக்கு எட்டு வயது. அவன் வளர்ந்து தற்போது ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறான். 1904ல் ரஷ்ய ஜப்பானியப் போரின் போது காயம்பட்டவர்களுக்குச் சிகட்சை அளித்து வருகிறான்.

ஒரு நாள் மருத்துவமுகாமியில் காலில் காயத்துடன் அனுமதிக்கபட்ட ராணுவ அதிகாரியைக் காணுகிறான். அவர் தனது தாயின் காதலன் விரான்ஸ்கி என அறிந்து கொள்கிறான். தன் தாயின் வாழ்க்கையில் ஏன் விரான்ஸ்கி குறுக்கிட்டார். எதனால் தாய் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறான். இது குறித்து பேச விரான்ஸ்கியைத் தேடி வருகிறான்.

அவனைக் கண்டவுடன் “நீ என்னைத் தேடி வருவாய் என நினைத்தேன்“ என்று சொல்கிறான் விரான்ஸ்கி.

மௌனமாகத் தலையாட்டுகிறான் செர்ஜி.

“நீ அன்னாவின் மகன் தானே “எனக் கேட்கிறான் விரான்ஸ்கி.

“இல்லை செர்ஜி கரீனின் “என்று தந்தையின் பெயரைச் சொல்கிறான்.

“என்னிடம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாய்“ என்று விரான்ஸ்கி கேட்கிறான்.

“உண்மையை“ என்று செர்ஜி சொல்லவே, “முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. நமக்கு எது உகந்ததோ அந்த நினைவுகளை மட்டும் தானே நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம். எந்த உண்மையை நான் உன்னிடம் சொல்வது“ எனக்கேட்கிறான் விரான்ஸ்கி.

“எனக்கு என் அம்மாவை பிடிக்காது. நான் அவளை வெறுத்தேன். அவளைப் பற்றி நான் தெரிந்து கொண்டவை எல்லாமும் மோசமான விஷயங்கள். உன்னையும் நான் வெறுத்தேன். உன்னைக் கொல்ல வேண்டும் என்று கூட நினைத்தேன். அதற்காக ஒரு துப்பாக்கி கூட வாங்கினேன். ஆனால் எல்லாமும் காலம் கடந்து போய்விட்டது. இப்போதாவது என்ன நடந்தது என்று சொல்“ எனக்கேட்கிறான் செர்ஜி.

இவர்கள் உரையாடலின் நடுவே அடுத்த படுக்கையில் ஒருவன் வலி தாங்க முடியாமல் மயக்கத்தில் ஏதோ புலம்புகிறான். அதே நிலை போன்று தான் விரான்ஸ்கி கடந்தகாலத்தைப் பற்றிச் சொல்லத் துவங்குகிறான்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தான் ரயில் நிலையத்திற்கு அழைத்துப் போகப்பட்டதாகவும் அங்கே மரமேஜை ஒன்றில் ரயிலில் பாய்ந்து செத்துப் போன ஒரு பெண்ணின் உடல் கிடத்தப்பட்டிருந்ததையும் அது அன்னா எனத் தான் கண்டறிந்ததையும் சொல்கிறான். அத்துடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அவளது உடல் சிதைந்து போயிருந்தது. ஆனால் முகம் சிதைவுறவில்லை. அதே அன்னாவின் முகத்தைச் சலனமற்று நான் கண்டேன் என்கிறான்

சிதைந்த உடலாக அவளை ரயில் நிலையத்தில் கடைசியாகக் கண்டேன். அது போலவே இன்னொரு ரயில் நிலையத்தில் தான் அன்னாவை முதன்முறையாகச் சந்தித்தேன் என அவனது முதல் சந்திப்பை நினைவு கொள்கிறான்,

விரான்ஸ்கி தனது தாயை அழைத்துவர மாஸ்கோ ரயில் நிலையம் செல்கிறான். அதே ரயில் பெட்டியில் வரும் அன்னாவைச் சந்திக்கிறான். அது சம்பிரதாயமான சந்திப்பு. ஆனால் அப்போதே அவளது நிகரற்ற அழகு விரான்ஸ்கியைக் கவருகிறது.

பின்பு நடனவிருந்தில் கலந்து கொள்கிறான் விரான்ஸ்கி. நடன அரங்கமும் நடனமாடும் காட்சிகளும் மிகப்பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அன்னா மிகச்சிறப்பாக ஆடுகிறாள். அது தான் அவர்களின் நெருக்கத்தின் துவக்கபுள்ளி. பின்பு அன்னாவிற்காகவே அவள் செல்லும் ரயிலில் உடன் பயணிக்கிறான் விரான்ஸ்கி. அவன் மீது அன்னா காதல் கொள்ளத்துவங்குகிறாள்.

அன்னா கரீனினாவின் காதல் சரியானதா ?. திருமணத்திற்குப் பிறகு இப்படி அவள் நடந்து கொள்ளலாமா? என்ற கேள்வி, நாவல் வெளியான காலத்தில் இருந்து கேட்கப்பட்டு வருகிறது.

“சரி, தவறு என நாம் தீர்மானிக்கமுடியாது. அதை முடிவு செய்ய வேண்டியவள் அன்னா மட்டுமே“ என்று டால்ஸ்டாய் சொல்கிறார்.

அன்னா கரீனினா நாவல் வெளியாவதற்கு முன்பு பிரெஞ்சில் “மேடம் பவாரி“ நாவல் ( Madame Bovary) வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதுவும் திருமணத்திற்குப் பிறகான எம்மா என்ற இளம்பெண்ணின் காதலைப் பற்றியதே. இதிலும் முடிவில் எம்மா தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறாள். டால்ஸ்டாய்க்கு மேடம்பவாரி போன்ற நாவல் தூண்டுதல் அளித்திருக்ககூடும். அன்னாகரீனினா போலவே மேடம் பவாரியும் பலமுறை திரைப்படமாக்கபட்டிருக்கிறது.

தன்னைவிட இருபது வயது மூத்த அலெக்சி கரீனினை அன்னா திருமணம் செய்து கொள்கிறாள். அது பெற்றோர் முடிவு செய்த திருமணம். அவனுடன் வாழ்ந்து பிள்ளையும் பெற்றுவிடுகிறாள். காதலே இல்லாத குடும்ப வாழ்க்கையது. விரான்ஸ்கியை சந்தித்துப் பழகிய பின்பு அவனுடன் இருக்கும் தருணத்தில் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக அன்னா உணருகிறாள். அன்னா காதலால் பீடிக்கப்படுகிறாள். குடும்பமோ, மகனோ, சமூகமோ எதுவும் அவள் நினைவில் இல்லை.

விரான்ஸ்கியோடு சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறாள். விரான்ஸ்கிக்கும் அவள் மீது காதல் உண்டு. ஆனால் அவன் திருமண உறவில் நம்பிக்கையற்றவன் போலவே நடந்து கொள்கிறான். தனது விருப்பத்தின் படியே வாழ வேண்டும் என்று நினைப்பவனாக இருக்கிறான்.

விரான்ஸ்கியின் கடந்தகாலத்தைப் பற்றி அன்னா தெரிந்து கொள்ளவேயில்லை. அது தான் அவள் செய்த தவறு. பாதுகாப்பற்றவள் போலத் தன்னை உணரும் அன்னா விரான்ஸ்கியோடு எதையும் விரிவாகப் பேச மறுக்கிறாள். அவனைச் சந்தேகம் கொள்கிறாள். அவனைத் தன்வசப்படுத்த எளிய தந்திரங்களைக் கைக்கொள்கிறாள். விரான்ஸ்கி அவளைத் தொந்தரவாக நினைக்க ஆரம்பிக்கிறான். விலகிப் போகிறான்.

தனது காதல் வாழ்க்கை ஏமாற்றத்தில் முடிந்ததை எண்ணி வருந்துகிறாள். தனது முடிவைத் தானே தேடிக் கொள்வது என ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள் அன்னா.

அன்னாவின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த விரான்ஸ்கி தனது நினைவுகளைச் சொல்லி முடிக்கையில் அவன் வெறும் கருவி என்பது புரிகிறது. அன்னாவை அவள் கணவனும் புரிந்து கொள்ளவில்லை. விரான்ஸ்கியும் புரிந்து கொள்ளவில்லை. சமூகம் அவளைக் குற்றவாளியாக்குகிறது. தன் செயல்களுக்குத் தானே பொறுப்பு என முடிவு எடுக்கிறாள் அன்னா. தன்னைப் புரிந்து கொள்ளாத உலகில் இருந்து விடைபெறுகிறாள். தனது தாயின் மனத்தவிப்பையும் அவளது காதலின் தீவிரத்தையும் அன்னாவின் மகன் செர்ஜி புரிந்து கொள்கிறான்.

இப்படத்தில் யுத்தகளக்காட்சிகளும் விரான்ஸ்கியின் நினைவுகளும் இடைவெட்டாக வந்து போகின்றன.

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டு திரைப்படத்தினை இயக்கிய Karen Shakhnazarov இப்படத்தை இயக்கியிருக்கிறார். தொலைக்காட்சி தொடராக வெளிவந்த போது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அதன் திரைவடிவம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

நாவலின் வழியாக லெவின் – கிட்டி தம்பதிகளையும் அவர்களின் ஆதர்ச வாழ்க்கையையும் டால்ஸ்டாய் வியந்து கொண்டாடுகிறார். ஆனால் எந்த திரைவடிவத்திலும் அவர்களைப் பற்றிய காட்சிகள் கிடையாது. அது போலவே வாசகர் மனதிலும் லெவின் -கிட்டி வாழ்க்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவேயில்லை.  இலட்சிய மனிதர்களாகவே அவர்கள் எஞ்சுகிறார்கள்.

விரான்ஸ்கியை நாயகன் ஆக்கியதன் மூலம் டால்ஸ்டாய் கற்பனை செய்யாத ஒரு கோணத்தில் இந்நாவலை அணுகியிருப்பது படத்தின் சிறப்பு.  அன்னாவின் கதை என்றும் தொடரும் காதலின் அடையாளம். அதன் காரணமாக இன்றும் அன்னாகரீனினா  விரும்பி வாசிக்கபடுகிறது.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: