ஜெங்கியின் கடைசிக்காதல்

மார்கெரித் யூர்ஸ்னார் புகழ்பெற்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர். இவரது கீழை நாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை க்ரியா பதிப்பகம் 2006ல் வெளியிட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதைத் தொகுப்புகளில் இதுவே தலைசிறந்தது என்று சொல்வேன். நேரடியாகப் பிரெஞ்சு மொழியிலிருந்து வெ. ஸ்ரீராம், எஸ், ஜனகநந்தினி, மனிஷா நாராயண், துர்கா சங்கர் ஆகியோர் சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

ழான் போல் சார்தர், சிமோன் தெ போவார், ஆல்பெர் காம்யூ ஆகியோரின் சமகால எழுத்தாளர் யூர்ஸ்னார். பெல்ஜிய தாயிற்கும் பிரெஞ்சு தந்தைக்கும் மகளாகப் பிறந்தவர். கிரேக்கம், லத்தீன், இத்தாலி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி கொண்டவர். கவிஞராகவே தனது இலக்கிய வாழ்க்கையைத் துவங்கினார். இவரது உரைநடையிலும் கவித்துவம் மிகுந்த காணப்படுகிறது.

ஒரியண்டல் என அழைக்கப்படும் கீழை நாட்டின் இலக்கியங்கள், தொன்மங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் பாதிப்பிலிருந்தே இந்தச் சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார், ஒவ்வொரு கதையும் ஒரு தேசத்தினைச் சார்ந்தது. இந்தியப் புராணத்திலிருந்து எடுத்துக் கையாண்ட காளி பற்றிய இவரது சிறுகதை சர்ச்சைக்கு உள்ளானது.

இந்தியாவிற்கு இருமுறை வந்திருக்கிறார். கவிஞர் அம்ரிதா ப்ரீதம் இவரது தோழி. மார்கெரித் யூர்ஸ்னார் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை மகாகவி தாகூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அக் கவிதைகளைப் படித்துப் பாராட்டிய தாகூர் 1921ல் சாந்தி நிகேதனில் வந்து தங்கியிருக்கும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். அப்போது மார்கெரித் யூர்ஸ்னாரின் வயது 18. தனியே நீண்ட பயணம் செய்ய இயலாது என நினைத்த அவர் இந்தியாவிற்கு வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால் என் வாழ்க்கையும் சிந்தனைகளும் மாறியிருக்கக்கூடும் என்று நினைவு கூறுகிறார் மார்கெரித் யூர்ஸ்னார்

கீழைநாட்டுக்கதைகளின் தொகுப்பு 1938ல் வெளியானது. வாழ்க்கையின் உண்மையான ஆழத்தைக் கீழைத்தேய நாடுகளே கற்றுத் தருவதாகக் கூறுகிறார் மார்கெரித்.

இந்தத் தொகுப்பில் இளவரசர் ஜெங்கியின் கடைசிக்காதல் என்றொரு சிறுகதையுள்ளது. அபாரமான சிறுகதை. இக்கதை ஜப்பானிய நாவலாசிரியர் முராசகி ஷிகிபுவின் கெஞ்சிக்கதை நாவலினை அடிப்படையாகக் கொண்டது. ஜப்பானின் முதல் நாவலாகக் கொண்டாடப்படும கெஞ்சிக்கதையில் வரும் இளவரசன் ஜெங்கி மனைவியை இழந்து உலகப்பற்றை விடுத்து பனிமலையின் அடிவாரத்தில் ஒதுங்கி வாழ்வதாக நாவலில் குறிப்பிடப்படுகிறது. அந்த நிகழ்வையே மார்கெரித் தனது கதையின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்.

ஒளிரும் ஜெங்கி எனப்படும் இளவரசன் காதல் நாயகனாகக் கொண்டாடப்படுகிறான். அவனுக்கு நிறைய ஆசை நாயகிகள். கதை துவங்கும் போது அவனது இரண்டாவது மனைவியின் இறப்பிற்குப் பிறகு ஜெங்கி தனிமையில் வாழுகிறான். முதுமை கனத்த சுமையாக இருக்கிறது.

ஒளிரும் ஜெங்கிக்கும் வயதாகிவிட்டது. பார்வைக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்று உலகோர் அறிந்தால் தன்னைப் பற்றிய பிம்பம் பறிபோய்விடுமே என்று பயந்து யாருக்கும் தெரியாமல் வாழுகிறான் ஜெங்கி.

பனிமலை ஒன்றின் அடிவாரத்தில் சிறிய மரக்குடில் ஒன்றில் தனியே வாழும் அவருடன் முன்னாள் ஆசைநாயகிகளில் சிலர் வந்து தங்கி நினைவுகள் நிறைந்த அவரது தனிமையைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்கள். ஆனால் அதை ஜெங்கி விரும்பவில்லை.

அவரது ஆசைநாயகிகளில் ஒருத்தியாக இருந்த பூக்கள் உதிரும் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி முதுமையில் ஜெங்கியோடு உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக அவரைச் சந்திக்க விரும்பினாள். ஜெங்கியோ அதை விரும்பவில்லை.

ஒரு நாள் அந்தப் பெண் வயலில் வேலை செய்யும் பணிப்பெண் போலத் தன்னை உருமாற்றிக் கொண்டு மண்பானைகள் நிரம்பிய கூடை ஒன்றைச் சுமந்தபடியே ஜெங்கியை தேடி வந்தாள். ஜெங்கிக்கு அவள் யார் எனக் கண்டறிய முடியவில்லை. பாதையோரம் அழுது கொண்டிருக்கும் அவளை ஆறுதல் படுத்தித் தன்னோடு அழைத்துக் கொண்டு போனார். குளிருக்காக இருவரும் நெருப்பின் முன்னால் அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் பேசத்துவங்கிய போது உண்மையைச் சொல்லிவிடுகிறாள் அந்தப் பெண். ஜெங்கி அவளைத் துரத்திவிடுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வேறு உருவத்தில் அவரது குடிசையைத் தேடி வருகிறாள் அந்தக் கிராமத்துப் பெண். அவருக்கு விருப்பமான பாடல்களைப் பாடுகிறாள்.. அதனால் ஜெங்கி அவளை ஏற்றுக் கொள்கிறார். அவளிடம் பேசிக் கொண்டிருந்த போது இளவரசன் ஜெங்கி பற்றி அவள் அறிந்திருக்கிறாளா என்று கேட்கிறார். அப்படி ஒரு பெயரைக் கூடத் தான் அறியவில்லை என்கிறாள். இவ்வளவு சீக்கிரத்தில் தான் மக்கள் நினைவிலிருந்து மறந்து போவோம் என என்பது அவருக்கு அதிர்ச்சியளிக்கிறது.

அவர்கள் இனிதாக நாட்களைக் கழிக்கிறார்கள். கிராமத்துப் பெண் ஜெங்கியை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறாள்.

முடிவில் ஒரு நாள் இளவரசன் ஜெங்கி தன்னோடு பழகிய அழகிய பெண்களின் நினைவுகளிடமிருந்து விடைபெற விரும்புகிறார். ஒவ்வொரு பெண்ணாக நினைத்துப் பார்த்து அவள் தந்த மகிழ்ச்சிக்காக மனதிற்குள் அவளுக்கு நன்றி சொல்கிறார். ஆனால் இப்போதும் கூடவே இருந்து அவரைக் கவனித்துக் கொள்ளும் அந்தக் கிராமத்துப் பெண்ணைப் பற்றி அவருக்கு ஒரு நினைவும் இல்லை. அவள் இதனால் அதிர்ச்சியடைந்து நினைவுபடுத்த முயல்கிறாள். அவருக்கு அப்படியொரு பெண்ணை நேசித்ததாக நினைவேயில்லை என்கிறார். அவள் வெடித்து அழுகிறாள்.

யார் நம்மை நிஜமாக நேசிக்கிறார்களோ அவர்களை நாம் நினைவு வைத்துக் கொள்வதேயில்லை என்பது கதையில் மிக அழகாக வெளிப்படுத்தப்படுகிறது.

ஏன் சிலரைப் பற்றிய நினைவுகள்  மனதில் பதியவேயில்லை. சிலரது நினைவுகளோ நாம் விரும்பாத போதும் மனதில் கொந்தளித்துக் கொண்டேயிருக்கின்றன. நினைவை ஒரு மனிதன் நிர்வகிக்க முடியுமா என்ன.  சந்தோஷமான விஷயங்கள் மனதில் நிற்பதில்லை. வேதனையான, துயரமான நினைவுகளே மனதின் ஆழத்தில் வேரூன்றியிருக்கின்றன. மனிதர்கள் நினைவுகளாலே வழிநடத்தப்படுகிறார்கள். நினைவு முழுமையானதில்லை. கற்பனை அதை முழுஉருவம் கொண்டது போல சித்தரிக்கிறது.  நீருற்று தனக்குள்ளே பொங்கி வழிந்து கொண்டிருப்பது போன்றதே நினைவுகளும்.

புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை தன்னுடைய கடந்த கால நினைவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நினைவே அவருக்கும் அவரது மனைவிக்கும் ஆறுதல் தருகிறது.

காதல் இளவரசனாக கருதப்படும் ஜெங்கி அந்த பிம்பத்தோடு வாழவே விரும்புகிறார். காலம் அவரது தலைமயிரை நரைக்க வைப்பதையோ, கண்பார்வை குறைவதையோ உலகம் அறியாமல் இருக்கட்டும் என்கிறார்.  மன்னர்களின் முதுமை மிகத்துயரமானது.  அதுவும் அதிகாரப் போட்டியில் தான் கொல்லப்படக்கூடும் என்ற பயம் அவர்களை வதைக்ககூடியது. ஜெங்கி அதை விடவும் தன் கடந்த  கால சந்தோஷங்கள் இனி கிடைக்கப்போவதில்லை என்பதில் தான் துயரமடைகிறான்.  இளமையின் உடல் திரும்ப கிடைத்துவிடுமா என்ன. யயாதி ஆசைப்படுவதும் இதற்கு தானே.

ஏன் ஜெங்கி தன்னை நேசித்த பெண்களின் நினைவுகளிடமிருந்து விடைபெற முயற்சிக்கிறார். நினைவுகள் உள்ள வரை ஆசை இருந்து கொண்டே தானிருக்கும். நினைவுகள் விலகிப்போவதே உண்மையான துறவு. ஆகவே தான் வாழ்வின் கடைசி படிக்கட்டில் நிற்கும் ஜெங்கி தன் காதல் நினைவுகளுக்கு பிரியா விடை கொடுக்கிறார். அதுவே இக்கதையின் மகத்துவம்.

மார்கெரித் யூர்ஸ்னார் இக்கதையை ஜப்பானிய எழுத்துமுறை போலவே நுண்மையான சித்தரிப்புகள், உணர்ச்சி வெளிப்பாட்டுடன் எழுதியிருக்கிறார்.

இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அதன் புராணங்கள், தொன்மங்கள், நாட்டார் கதைகளை நவீன படைப்புகளாக மீள் உருவாக்கம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. உண்மையில் அவர்களிடமிருப்பது மாபெரும் கதைக்களஞ்சியம். அதுவே ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான ஆதார வளம் என்கிறார் மார்கெரித் யூர்ஸ்னார்

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: