அஞ்சலி

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் மனைவி கணவதி அம்மாள் இன்று புதுச்சேரியில் காலமானார்.

அவரது மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

கி.ராவிற்கு உற்றதுணையாக இருந்தவர் கணவதி. கடந்தவாரம் கி.ரா வீட்டிற்குப் போயிருந்த போது உடல்நலமற்றிருந்த கணவதி அம்மாவைச் சந்திதேன். படுக்கையில் தானிருந்தார். நினைவு தப்பியிருந்தது. அவரது உடல் நலம் குறித்த கவலையும் வேதனையும் கி.ரா முகத்தில் படிந்திருந்ததைக் காணமுடிந்தது.

ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனது குடும்பச் சூழல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வீட்டில் எழுதுவதற்கான சூழல் கிடைக்காத எழுத்தாளர்களே அதிகம். படிப்பையும் எழுத்தையும் அவ்வளவு சீக்கிரமாக வீடு அங்கீகரித்துவிடுவதில்லை. அவ்வகையில் கி.ரா அதிர்ஷ்டசாலி.   சிறந்த வாழ்க்கைதுணையாக கணவதியை பெற்றிருந்தார்.

கணவதி அம்மாள் குறித்து ‘கி.ரா இணைநலம்’ என்ற பெயரில் எஸ்.பி.சாந்தி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘அகரம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. . ஓர் எழுத்தாளரின் மனைவி குறித்து, தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் இதுவே.

காசநோயாளியாக இருந்த கி.ராவை நம்பிக்கையுடன் தைரியமாகத் தான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதையும், தங்களுடைய கல்யாணத்துக்குப் போட்டோ கிடையாது, மேளதாளம் கிடையாது, சடங்குகள் எதுவும் கிடையாது, விருந்து சாப்பாடு கூடக் கிடையாது. முகூர்த்தப் பட்டுப் புடவைகூட நூல் புடவைதான். கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவு 200 ரூபாய் மட்டுமே எனக் கணவதியம்மாள் நினைவுகூர்கிறார்.

விவசாயப் பணிகளுக்கு ஓடியோடி உதவிகள் செய்தது, நோயாளியான கணவரைக் கவனித்துக்கொண்டது, பிள்ளைகளை நோய் நொடியிலிருந்து காத்து வளர்க்கப் பாடுபட்டது, வீடு தேடிவரும் இலக்கியவாதிகளுக்கு விருந்து உபசாரம் செய்தது, விவசாயச் சங்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு கி.ரா சிறைப்பட்டபோது ஒற்றை ஆளாகக் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டது… என நீளும் கணவதி அம்மாளின் பல்வேறு நினைவுகளின் ஊடாக, ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பு மிக்க மனதும் போராட்டமான வாழ்க்கையும் முழுமையாக வெளிப்படுகிறது.

ஆனந்த விகடன்’ இதழில் முத்திரை கதை எழுதிக் கிடைத்த 100 ரூபாயில், கி.ரா தனக்குக் காஞ்சிபுரம் பட்டுப் புடவை எடுத்துத் தந்தது, எங்கே சென்றாலும் தன்னை உடன் அழைத்துப் போனது, ஹிந்தி படங்களுக்குக் கூடத் தன்னை அழைத்துப் போனது, கடிந்து பேசாமல், முகம் சுளித்துத் திட்டாமல், தன்னைக் கவுரவமாக, மரியாதையாக நடத்தியது. திருமணமானது முதல் இன்று வரை தனது விருப்பங்களை மதித்து நடந்துகொள்ளும் அன்பான கணவராகக் கி.ரா திகழ்வதை மகிழ்ச்சியுடன் நூலில்  நினைவுகூர்கிறார் கணவதி அம்மாள்.

செப்டம்பர் 16-ம் கிராவின் திருமண நாள். அவரது பிறந்த நாளும் அதுவே. கிராவை கணவதி அம்மாள் திருமணம் செய்து கொண்ட போது அவரது வயது 19.கிரா தம்பதிக்கு திவாகர், பிரபாகர் என இரண்டு பையன்கள்.

கி.ராவின் எழுத்துகளுக்கு முதல் வாசகியாக இருந்தவர் கணவதி அம்மாள்.  தன் வீடு தேடி வரும் விருந்தினர்களுக்குக் கணவதி அம்மாளைப் போல உபசரிப்பு செய்பவரைக் காணமுடியாது அவரது சமையல் அமிர்தமாக இருக்கும். தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் அந்த அன்பில் கரைந்து போனவர்களே.

தன் அருந்துணையை இழந்து வாடும் கி.ராவிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

இயற்கை அன்னை அவரையும் குடும்பத்தையும் ஆற்றுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

Archives
Calendar
June 2020
M T W T F S S
« May    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: