“சர்ச்சில் அண்ட் தி மூவி மொகல்” என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். பிரிட்டீஷ் இயக்குநரான அலெக்சாண்டர் கோர்டாவிற்கும் சர்ச்சிலுக்குமான நட்பையும், சினிமாவின் மீது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இருந்த ஆசையையும்விவரிக்கிறது இந்த ஆவணப்படம் .
ஹங்கேரியிலிருந்து இங்கிலாந்திற்குக் குடியேறிய யூதக்குடும்பத்தைச் சார்ந்தவர் அலெக்ஸாண்டர் கோர்டா. பிரிட்டீஷ் திரையுலகில் The Thief of Baghdad , The Third Man போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களை உருவாக்கினார். இங்கிலாந்தின் தேசபக்தியை உயர்த்திப் பிடித்தவர் என்றே இவரைத் திரையுலகம் குறிப்பிடுகிறது.
ஜான் ஃப்ளீட் தயாரித்துள்ள இந்த ஆவணப்படம் ,சர்ச்சில் எவ்வாறு தனது காலத்தின் முக்கிய ஊடகமான சினிமாவைத் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதை விவரிக்கிறது.
ரேடியோ, மற்றும் சினிமா இரண்டினையும் சர்ச்சில் மிகச் சரியான பயன்படுத்திக் கொண்டார். இந்த ஊடகங்களின் துணைகொண்டே அவர் தனது அரசியல் பாதையை உருவாக்கிக் கொண்டார். தனது எண்ணங்களை மக்களிடம் வெளிப்படுத்தினார். ஹிட்லருக்கும் இந்த ஊடகங்களின் வலிமை புரிந்திருந்தது. ஆகவே சினிமாவை அவர் முக்கியப் பிரச்சாரக் கருவியாகக் கருதினார். போர் முனையில் கூட ராணுவ வீரர்களுக்குப் பிரச்சாரப் படங்களைத் திரையிடும்படி செய்தார் ஹிட்லர்.
இங்கிலாந்தில் கோர்டா தனது ஸ்டுடியோவை நிறுவுவதற்குச் சர்ச்சில் பல்வேறு விதங்களில் உதவி செய்திருக்கிறார். இங்கிலாந்து மக்களுக்குத் தனது தேசத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்ல சினிமாவை முக்கிய ஊடகமாகப் பயன்படுத்தினார் சர்ச்சில். அதற்குக் கோர்டாவே துணையாக இருந்தார்.
சர்ச்சில் குறித்து அமெரிக்க ஊடகங்கள் எதிர்மறையான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. அந்த எண்ணத்தை மாற்றுவதற்காகக் கோர்டாவை ஹாலிவுட்டிற்கு அனுப்பி இங்கிலாந்தின் பெருமையை உணரச் செய்யும் ஒரு படத்தை உருவாக்கும் படி சர்ச்சில் ஆலோசனை சொன்னார். அதன்படியே கோர்டா அமெரிக்கா சென்று லேடி ஹாமில்டன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.
இப்படத்தினைச் சர்ச்சில் பலமுறை பார்த்திருக்கிறார். படத்தின் பிரதி ஒன்று அவரது வீட்டிலே இருந்தது. அப்படத்தை அடிக்கடி திரையிட்டிருக்கிறார்கள்.
ஹிட்லர் எவ்வாறு தனது பிரச்சார முயற்சிகளுக்குப் பெண் இயக்குனரான லெனி ரிஃபென்ஸ்டாலை நியமித்தாரோ, அது போலவே நாஜிகளுக்குப் பதிலடி கொடுக்கச் சர்ச்சில் கோர்டாவை நியமித்தார் என்கிறது இந்த ஆவணப்படம். . பிரிட்டனின் பிரச்சாரப் போர் கோர்டாவால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
திரைப்படத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்த சர்ச்சிலை தனது புதிய படம் ஒன்றின் திரைக்கதை ஆசிரியராக நியமித்தார் கோர்டா. இதற்காக£ 10,000 பணம் தந்து ஒப்பந்தம் செய்து கொண்டார். சர்ச்சிலும் முழுமையான திரைக்கதையை எழுதிக் கொடுத்தார். ஆனால் அப்படம் உருவாக்கப்படவில்லை.
சினிமா கதாநாயகன் போலவே நிஜவாழ்வில் சர்ச்சில் நடந்து கொண்டார். அவரது சுருட்டு பிடிக்கும் பிம்பமும், தொப்பியும் ,உரைகளும் சினிமாதனமாகவே இருந்தன என்கிறது இந்த ஆவணப்படம்.
That Hamilton Woman படத்தில் நெல்சன் “You cannot make peace with dictators. You have to destroy them.” என்ற வசனத்தைப் பேசுகிறார். அது சர்ச்சிலின் குரல். இக்குரலே ஹிட்லருக்கு எதிராக இங்கிலாந்தைப் போராடச் செய்தது. அமெரிக்காவையும் யுத்தகளத்திற்குள் அழைத்து வந்தது என்கிறார் ஜான் ஃப்ளீட்
••