பாலைவனத்தின் நாயகன்

டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆஃப் அரேபியா ( Lawrence of Arabia )படத்தின் Uncut Original version 228 minutes ஓடக்கூடியதைப் பார்த்தேன்.  எனக்கு மிகவும் விருப்பமான படம். இது வரை நாற்பது ஐம்பது முறை பார்த்திருப்பேன். ஆனால் இப்போது தான் அதன் Uncut Original version பார்க்கிறேன்.

தியேட்டரில் இந்தப்படம் 36 நிமிஷம் குறைவாக்கப்பட்டு வெளியானது. தற்போது முழுமையான ப்ளுரே டிஸ்க் காணக் கிடைக்கிறது. ஹாலிவுட் சினிமாவின் உச்சபட்ச சாதனைகளில் ஒன்றாகவே இப்படத்தைக் கருதுகிறேன். மூன்றேமுக்கால் மணிநேரப் படம் என்றாலும் ஒரு காட்சி கூட அலுக்கவில்லை. தேவையற்றது எனத் தோன்றவில்லை.  காலத்தை வென்று நிற்கும் கலைப்படைப்பாகவே இருக்கிறது.

லாரன்ஸ் ஆஃப் அரேபியா பனிரெண்டு மில்லியன் பொருட்செலவில் 280 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உருவாக்கப்பட்ட படம். பாலைவனத்தினை டேவிட் லீன் போலக் காட்டிய இயக்குநர் எவரும் கிடையாது. மெய் மறக்க வைக்கும் காட்சிகள்.

T.E. லாரன்ஸ் புகழ்பெற்ற ராணுவ அதிகாரி. 1916 முதல் 1918 வரை நடந்த துருக்கியர்களுக்கு எதிரான அரபு புரட்சியின் போது கிளர்ச்சிப் படைகளுடன் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியவர். தனது ராணுவ அனுபவங்கள் குறித்து Seven Pillars of Wisdom என்ற நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலே இந்தத் திரைப்படம் உருவாவதற்கான முதற்புள்ளி.

லாரன்ஸிற்கு ஹாலிவுட் திரைப்படங்கள் மீது கடுமையான விமர்சனமிருந்தது. ஹாலிவுட் தயாரிப்பாளர் மிக மோசமான வியாபாரிகள், தங்கள் விற்பனைக்காக எதையும் படமாக எடுப்பார்கள், ஆகவே தன்னுடைய சாகச வாழ்க்கையை ஹாலிவுட் ஒரு போதும் படமாக்க அனுமதிக்க மாட்டேன் என்று லாரன்ஸ் வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். ஆனால் லாரன்ஸ் எதிர்பாராத விதமாகப் பைக் விபத்தில் மரணமடையவே அவரது உறவினர்களிடம் பேசி அனுமதி பெற்றுப் படத்தினை உருவாக்க முனைந்தார் தயாரிப்பாளர் சாம் ஸ்பீகல்.

லாரன்ஸின் கதையை மேடை நாடகமாக நடத்த முன்னதாகவே ஒருவர் அனுமதி பெற்றிருந்தார். அந்த அனுமதி செல்லாது எனச் சாம் ஸ்பீகல் மிரட்டி நாடகத்தை நிறுத்தினார். மூன்று மில்லியன் பொருட்செலவில் படத்தை உருவாக்குவது என முடிவு செய்தார்கள்.

டேவிட் லீன் இப்படத்தின் திரைக்கதையை எழுதுவதற்காக மைக்கேல் வில்சனை அழைத்தார். அவர் லாரன்ஸின் புத்தகத்திலிருந்து திரைக்கதையின் முதற்வடிவத்தை எழுதினார். அது டேவிட் லீனிற்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால் அந்தத் திரைக்கதை வடிவம் சாம் ஸ்பீகலுக்குப் பிடிக்கவில்லை. அவர் ராபர்ட் போல்ட் என்ற நாடக ஆசிரியரைத் திரைக்கதை எழுதுவதற்காக ஒப்பந்தம் செய்தார்.

போல்ட் அந்த நாட்களில் கம்யூனிஸ்டுகளின் தொடர்பு கொண்டிருந்தார் என்று திரையுலகை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். சாம் ஸ்பீகல் போன்ற பெரிய தயாரிப்பாளர் மூலம் தனது விடிவுகாலம் உருவாகும் என நினைத்து அவர் திரைக்கதை எழுத ஒத்துக் கொண்டார்.

அவரும் டேவிட் லீனும் இணைந்து திரைக்கதை எழுதினார்கள். ராபர்ட் போல்ட் T.E. லாரன்ஸ் புத்தகத்திலிருந்த நிறைய விஷயங்களைப் படத்திற்குத் தேவையில்லை என வெட்டித் தள்ளினார். அவர் செய்த வேலை கத்திரி போடுவதல்ல. கோடாரியால் வெட்டி தள்ளுவது என்று டேவிட் லீன் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

ராபர்ட் போல்ட் எழுதிய திரைக்கதை வடிவம் கச்சிதமாக இருந்தது. போல்ட் படத்தின் துவக்கமாக லாரன்ஸ் பைக்கில் சென்று விபத்திற்கு உள்ளாகும் காட்சி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அது டேவிட் லீனிற்கும் ஏற்புடையதாக இருந்தது.

திரைக்கதையை டைப் செய்து தந்ததோடு மொத்த திரைக்கதையையும் ராபர்ட் போல்ட் தனது குரலில் பதிவு செய்தும் கொடுத்துவிட்டார். அதை டேவிட் லீன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தார். திரைக்கதை திருப்தியாக வந்துவிட்டது என டேவிட் லீன் நினைக்கும் போது சாம் ஸ்பீகல் இன்னொரு எழுத்தாளரை ஒப்பந்தம் செய்து திரைக்கதையில் திருத்தங்கள் செய்ய உத்தரவிட்டார். அந்தப் பணி மூன்று மாத காலம் நடைபெற்றது.

லாரன்ஸாக யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்த போது ஸ்பீகல் மார்லன் பிராண்டோவைச் சிபாரிசு செய்தார். லீனும் அதை ஒத்துக் கொண்டார். ஆனால் மார்லன் பிராண்டோ இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே பல்வேறு நடிகர்கள் பரிசீலனை செய்யப்பட்டார்கள். கடைசியில் டேவிட் லீன் பீட்டர் ஓ`டூல்லை தேர்வு செய்தார். பீட்டர் ஓ டூல் பெருங்குடிகாரர். அவருக்கு ஒரு கண்ணில் பார்வைக்குறைவு இருந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அவரை முக்கிய வேஷத்தில் நடிக்க வைக்க ஸ்பீகல் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் டேவிட் லீன் பிடிவாதமாக இருக்கவே வேறு வழியின்றி ஸ்பீகல் ஏற்றுக் கொண்டார்.

ஷெரீப் அலியாக நடிப்பதற்காக ஒமர் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். அவர் எகிப்தின் முக்கிய நடிகர், ஆனாலும் படத்திற்காக அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டது. அப்போது டேவிட் லீனே மேக்கப் போட்டுவிட்டு அலியின் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பாரா எனப் படம்பிடித்துப் பார்த்தார்

படத்தின் கேமிராமேனாகப் பிரெடி யங்கை தேர்வு செய்தார் லீன். அவர்களுக்குள் முன்னதாக மனஸ்தாபம் இருந்த போதும் யங்கின் ஒழுக்கம் மற்றும் கடினவேலை டேவிட் லீனுக்குப் பிடித்திருந்தது.

படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் இரண்டு ஆண்டுகாலம் நடைபெற்றது. முடிவில் 1961ல் ஜோர்டன் பாலைவனத்திற்குப் படப்பிடிப்பிற்காக டேவிட் லீன் புறப்பட்டார். மே மாதத்தில் பாலைவனத்தில் வெயில் உச்சபட்சமாக இருந்தது. பாலைவனத்திலே முகாமிட்டு 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார். மணற்புயல் காரணமாகப் பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டேவிட் லீனின் கண்ணில் மணல் விழுந்து பார்வை குறைவு ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பிறகு இதற்காகக் கண்ணில் ஒரு அறுவை சிகிட்சை செய்து கொண்டார் டேவிட் லீன்.

படத்தின் முதற்காட்சியாகப் பீட்டர் ஒடூல் ஒட்டகத்தில் வழிகாட்டியுடன் பயணிக்கும் காட்சியை எடுத்தார்கள். வழிகாட்டியாக நடித்தவர் பாகிஸ்தானி நடிகர் ஜியா முகைதீன். பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்துவது பெருஞ்சவாலாக இருந்தது. கேமிராவில் மண் விழுந்துவிடும் என்பதால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப் போராடினார்கள்..

படப்பிடிப்பிற்கு நடிகர்களை அழைத்து வர சிறிய விமானம் பயன்படுத்தபட்டது. மேலும் நடிகர்கள், துணை நடிகர்கள். தொழில் நுட்ப குழுவினருக்கு ஐஸ் கிரீம் முதல் அத்தனை உணவு வகைகளையும் பாலைவனத்திற்குக் கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாளர் ஸ்பீகல்.

டேவிட் லீன் காலை எட்டு மணிக்குப் படப்பிடிப்பைத் துவங்கி பதினோறு மணிக்கு முடித்துவிடும். பிறகு வெயில் உக்கிரமாகிவிடும். மதியம் மூன்றரை மணிக்கு துவங்கி மாலை ஆறு வரை படப்பிடிப்பு நடக்கும். பாலைவனத்தினுள் புதிய லொகேஷன் ஏதாவது கிடைக்குமா எனக் கண்டறிய டேவிட் லீன் இரவில் சுற்றியலைந்து திரும்புவார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் இருவருக்குக் கால் உடைந்து போனது. தனக்குத் தேவையான மது கிடைக்கவில்லை என்று பீட்டர் ஒடூல் சண்டையிட்டார். இப்படி ஆயிரம் பிரச்சனைகள்.

தயாரிப்புச் செலவு அதிகமாகிவிட்டது எனப் பாதியிலே படத்தைத் தயாரிப்பாளர் முடக்கிவிட்டார். ஆனால் டேவிட் லீன் பாலைவனத்தை விட்டு வரவில்லை. எப்போது படம் துவங்குமோ அதுவரை அங்கேயே இருக்கப் போவதாக அறிவித்தார். இரண்டு வாரத்தில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. மூன்று மில்லியன் எனப் பட்ஜெட் போட்ட திரைப்படம் பனிரெண்டு மில்லியன் செலவில் முடிந்தது.

இவ்வளவு பெரும் பொருட்செலவில் செய்த படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்து ராயல் பிரிமீயர் என இங்கிலாந்து அரசகுடும்பத்தினர் படம் பார்க்க ஏற்பாடு செய்து அதற்கான நாளை குறித்தார் ஸ்பீகல். இதனால் நான்கு மாத காலத்திற்குப் படத்தை முடித்துப் பிரிமீயருக்கு தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது.

டேவிட் லீன் எடிட்டருடன் இணைந்து மூன்று மாதங்கள் வேலை செய்தார். அவரே ஒரு எடிட்டர் என்பதால் பெரும்பான்மை காட்சிகளை அவரே எடிட் செய்து படத்தை முதல்வடிவத்தை உருவாக்கினார். கஷ்டப்பட்டு எடுத்த பாலைவனக்காட்சிகளை வெட்டி எறிய அவருக்கு மனமில்லை. ஆனால் படத்தின் எடிட்டராகப் பணியாற்றிய Anne cotes கறாராகத் தேவையற்ற காட்சிகளை வெட்டி எறிந்தார். படம் தயாராகி மன்னர் குடும்பத்திற்காக விசேச காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று காலை பிரிண்ட் செக் செய்த போது ஒரு ரீலில் பிரச்சனை. இதற்காகவே மாற்றுப் பிரிண்ட் வைத்திருந்த காரணத்தால் அந்த ரீல் சரிசெய்யப்பட்டது. சிறப்புக் காட்சியில் கலந்து கொள்ள வரும்படி தனது தந்தைக்கு அழைப்பு விடுத்தார் டேவிட் லீன். சினிமா பார்க்க அவ்வளவு தூரம் வர முடியாது என வீட்டிலே இருந்துவிட்டார் டேவிட் லீனின் தந்தை. இங்கிலாந்தில் முதியவர்கள் அப்படிதான் இருந்தார்கள். அவர்களுக்குச் சினிமா ஒரு பொருட்டேயில்லை.

அமெரிக்காவில் படம் வெளியான போது மக்கள் ஆரவாரமாகப் படம் பார்த்தார்கள். ஆனால் பத்திரிக்கைகள் படம் மிகவும் சுமார். பாலைவனத்தைத் தவிர வேறு ஒன்றையும் காண முடியவில்லை. போர்களக்காட்சிகள் நீளமானவை என்று மோசமாக விமர்சனம் எழுதின. இதில் ஒரு பத்திரிக்கை இவ்வளவு குப்பையான படத்தையா இத்தனை விளம்பரம் செய்தார்கள் என்று கேலி செய்து எழுதியது. விமர்சகர்கள் தவிரவும் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பலரும் கூடப் படத்தைக் கிழி கிழி எனக் கிழித்துப் பேசினார்கள். டேவிட் லீன் விமர்சனங்களைக் கண்டுகொள்ளவில்லை

படம் மக்களுக்குப் பிடித்திருந்தது. அரங்கு நிரம்பி டிக்கெட் கிடைக்காமல் மக்கள் சாலையெங்கும் நின்றிருந்தார்கள். படம் உலகெங்கும் பெரிய வெற்றிபெற்றது. அத்தோடு பத்து ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் ஏழு ஆஸ்கார் விருதுகளைப் படம் பெற்றது. படத்தின் முக்கிய நடிகரான பீட்டர் ஒடூலுக்கும், ஒமர் ஷெரிப்பிற்கும், திரைக்கதை ஆசிரியர் போல்டிற்கும் விருது கிடைக்கவில்லை.

படத்தின் டைட்டிலில் தனது பெயர் இல்லை என்பதால் திரைக்கதையாசிரியர் மைக்கேல் வில்சன் எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். அவர்கள் விசாரித்து மைக்கேல் வில்சன் பெயரை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். படம் வெளியாகி தியேட்டரில் ஒடிக் கொண்டிருக்கிறது. ஆகவே இணைக்க முடியாது என்றார் சாம் ஸ்பீகல். ஆனால் யூனியன் வற்புறுத்தல் காரணமாகப் பின்பு மைக்கேல் வில்சன் பெயர் படத்தில் இணைக்கப்பட்டது

இவ்வளவு பெரும் வசூலைப் பெற்றபோதும் டேவிட் லீனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி வசூலில் பதினைந்து சதவீத தொகையைத் தர மறுத்தார் சாம் ஸ்பீகல். படம் ஒடவேயில்லை. தயாரிப்புச் செலவுகளில் அவருக்குத் தர வேண்டிய பணம் செலவாகிவிட்டது என்று அறிவித்தார். தனக்கு வரவேண்டிய 3 மில்லியன் டாலர் வரவில்லை என்று  டேவிட் லீன் புலம்பினார். சாம் ஸ்பீகலுக்கு எதிராக நீதிமன்றத்திற்குப் போனால் ஹாலிவுட்டில் தொடர்ந்து படம் செய்ய முடியாது என்று நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். ஆகவே டேவிட் லீன் பணத்தைக் கேட்கவில்லை

படப்பிடிப்பின் போது எந்த நடிகரையும் சிறப்பாக நடிப்பதாக டேவிட் லீன் பாராட்டமாட்டார். காரணம் அந்த நடிகர் அதன்பிறகு தன் நடிப்பை பற்றிய அபிப்பிராயத்திற்காக ஏங்கத் துவங்கிவிடுவார். சரியாக நடிக்காத போது அவரைக் கண்டிக்க முடியாது என்றார் லீன்.

படப்பிடிப்பில் வேலை செய்த அனைவரின் ஆலோசனைகளைக் காது கொடுத்து டேவிட் லீன் கேட்பார். சரியானவற்றை எடுத்துக் கொள்வார். அன்றாடம் படப்பிடிப்பு முடிந்ததும் படச்சுருள்கள் விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டது. மொத்த படப்பிடிப்பை முடித்துத் திரும்பிய பிறகே டேவிட் லீன் படத்தின் ரஷ் பார்த்தார்.

இதற்கு முன்பாகவே படத்தின் ரஷ்ஷைப் பார்த்த தயாரிப்பாளர் படம் சரியாக வரவில்லை. எடுத்தவரை அப்படியே தூக்கி எறிந்துவிடுங்கள் என்று டேவிட் லீனை சந்தித்துச் சொன்னார். அந்த அதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே தனக்கு ரஷ் அனுப்பி வைக்கும்படியாகச் சொன்னார். தயாரிப்பாளர் அதைச் செய்யவில்லை. ஆகவே தன் சார்பில் ஒருவரை அமெரிக்கா அனுப்பி ரஷ்ஷைச் செக் பண்ணும்படி சொன்னார். லேப் செய்த தவறு காரணமாகவே ரஷ் அப்படியிருக்கிறது. உண்மையில் படமாக்கப்பட்ட விதம் அபாரம் என்று லேப் அறிவித்த பிறகே டேவிட் லீன் நிம்மதியடைந்தார்.

பீட்டர் ஓ டூலுக்கு ஒட்டகம் ஒட்டத் தெரியாது என்பதால் அவருக்கு ஒரு பயிற்சியாளரை வைத்து ஒரு மாத காலம் பாலைவனத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஒருமுறை அவர் கீழே விழுந்து அடிபட்டார். பின்பு ரப்பர் பாசி ஒன்றைத் தனது இருக்கையின் அடியில் வைத்துக் கொண்டு ஒட்டகம் ஒட்டத் துவங்கினார்.

இந்தப் படம் பல அரபு மக்களைத் தவறாகச் சித்தரிக்கப்பதாகக் கூறி தடை செய்யக் கோரிக்கை எழுந்தது. இதை அறிந்த ஒமர் ஷெரிப் எகிப்தின் ஜனாதிபதி கமல் நாசர் படம் பார்க்க ஏற்பாடு செய்தார், நாசர் இந்தத் திரைப்படத்தை மிகவும் ரசித்துப் பாராட்டிய பிறகே எகிப்தில் படம் வெளியிடப்பட்டது.

ஒமர் ஷெரீப் அறிமுகமாகும் காட்சியில் பாலைவனத்தில் கானல் தோற்றத்தின் ஊடாக அவர் ஒட்டகத்தில் வெளிப்படுவார். இதற்காகக் கானலை உருவாக்குவதற்காகச் சிறப்பு லென்ஸைப் பயன்படுத்தினார்கள். இன்றும் ஒளிப்பதிவாளர்களிடையே இது “டேவிட் லீன் லென்ஸ்” என்றே அழைக்கப்படுகிறது.

படப்பிடிப்பின் கடைசிநாள் அன்று டேவிட் லீன் ஒரு க்ளோசப் காட்சியை எடுத்துமுடித்துப் படப்பிடிப்பை நிறைவு செய்தார். தனது டெண்டிற்குத் திரும்பிய டேவிட் லீன் தன்னை அறியாமல் கண்ணீர் விட்டார். சினிமா என்பது கூடிக்கலையும் சந்தை போன்றது. மக்கள் வருவார்கள். ஒன்று சேர்ந்து வேலை செய்வார்கள். பின்பு கலைந்து போய்விடுவார்கள். படம் முடிந்த பிறகு இயக்குநர் மட்டுமே தனித்துவிடப்படுவார். அவரது மனநிலை வெறுமையானது. என்று டேவிட் லீன் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்.

ஹாலிவுட்டின் இதிகாசமாகக் கருதப்படும் ஒரு படத்தை இயக்க டேவிட் லீன் மிகுந்த போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தயாரிப்பாளர், நடிகர், படப்பிடிப்பு குழு என டேவிட் லீன் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். எந்த நிலையிலும் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. பிடிவாதமாகத் தான் நினைத்தவற்றையே படமாக்கப் போராடினார். முடிவில் வெற்றியும் கண்டார்.

சினிமா வெறும் தொழில்நுட்பமாக மாறிவிட்டது. இனி ஹாலிவுட்டில் EPIC FILM உருவாகும் என்று தோன்றவில்லை என 1980களின் இறுதியில் டேவிட் லீன் தெரிவித்தார். அவர் சொன்னது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.

சினிமாவைக் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் லாரன்ஸ் ஆஃப் அரேபியா படத்தைத் திரும்பத் திரும் பார்க்க வேண்டும். அந்தப் படம் தான் என்னை உருவாக்கியது என்கிறார் ஸ்பீல்பெர்க்.

லாரன்ஸ் ஆஃப் அரேபியா போன்ற ஒரு படத்தை இயக்கினாலே போதும். சினிமா வரலாற்றில் நிரந்தர இடம் கிடைத்துவிடும். ஆனால் டேவிட் லீன் THE BRIDGE ON THE RIVER KWAI , LAWRENCE OF ARABIA, DOCTOR ZHIVAGO, RYAN’S DAUGHTER, A PASSAGE TO INDIA என ஐந்து முக்கியப்படங்களைத் தந்திருக்கிறார். சினிமா உலகில் டேவிட் லீன் ஒரு மகத்தான ஆசான். இன்றளவும் அவர் கொண்டாடப்படுவது இதனால் தான்.

••••

21.10.2019

Archives
Calendar
May 2020
M T W T F S S
« Apr    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: