நினைவின் உரையாடல்


ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer,) நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். இவர் இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முதன்மை எழுத்தாளராவார். 1978-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

அவரது விரிவான நேர்காணல் கொண்ட Conversations with Isaac Bashevis Singer தொகுப்பினை வாசித்தேன். எழுத்தாளராக விரும்புகிறவர்களுக்கு இந்த நேர்காணல் நல்லதொரு வழிகாட்டி. எதை எழுத வேண்டும். எப்படி எழுத வேண்டும். எழுத்தின் நுட்பங்கள் எவையெனச் சிங்கர் விரிவாக விளக்குகிறார். கூடவே இலக்கிய வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும் சமகால வாழ்க்கை குறித்த அக்கறைகள் பற்றியும் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார்.

ஐசக் பாஷவிஸ் சிங்கர் 1902-ஆம் ஆண்டு அன்றைய ரஷ்யப் பேரரசின் பகுதியாக இருந்த போலந்தின் லியோன்சின் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஹசிதிக் ஒரு மதகுரு. சிங்கரின் அண்ணன் ஒரு எழுத்தாளர். முதல் உலகப்போரில் அவரது குடும்பம் பிரிந்து போனது.

1935-ஆம் ஆண்டுச் சிங்கர் போலந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்குச் சென்றார். நியூயார்க் நகரில் பத்து ஆண்டுகாலம் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். 1938-ல் ஜெர்மானிய யூத அகதியான அல்மா வாச்சர்மானை சந்தித்தார். 1940-ல் இருவரும் காதல் திருமணம் புரிந்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சிங்கர் தீவிரமான எழுத்துப் பணியைத் தொடங்கினார். தி பார்வர்ட் பத்திரிக்கையில் தனது முக்கியப் படைப்புகளைத் தொடர்கதையாக எழுதி வெளியிட்டார் சிங்கர். Gimpel the Fool கதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் சால் பெல்லோ

••

இந்த நேர்காணலில் சிங்கர் தெரிவித்துள்ள சில முக்கியக் கருத்துகள்.‘

••

ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றியே ஆராய்ந்து கொண்டிருப்பது இலக்கியமில்லை. தன்னைச் சுற்றிய மனிதர்களின் வாழ்க்கையை. அவலங்களை, மகிழ்ச்சியை, மறைந்துள்ள கதைகளை அவதானிப்பதும் புரிந்து கொள்வதும் அவற்றை நிஜமாகப் பதிவு செய்வதுமே இலக்கியம்.

மற்றவர்களை அவதானிப்பதன் வழியே ஒருவன் தன்னைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்கிறான். அறிவுஜீவிகள் இலக்கியத்தில் வடிவத்தை மட்டுமே முக்கியமாக எடுத்துக் கொள்கிறார்கள். நான் அதை முக்கியமாக நினைக்க மாட்டேன்.

ஒரு கதை காகிதத்தில் எழுதப்படுகிறது. ஆனால் அது காகிதத்திலே உருவாவதில்லை. மக்களிடமிருந்தே கதை உருவாகிறது.

••

எழுத்தாளனுக்கு அடித்தளமாக இருப்பது அவனது பால்ய கால நினைவுகள். டால்ஸ்டாயின் Childhoodயை வாசித்துப் பாருங்கள். அவருக்கு எவ்வளவு துல்லியமாக நினைவாற்றல் இருக்கிறது என வியந்து போவீர்கள்.

சிறுவயது நிகழ்வுகளை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் சிறுவயதில் என்ன பேசினோம். அல்லது மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது.

உரையாடல்கள் காலத்தில் மறைந்து போய்விடுகின்றன. காட்சிகளே எஞ்சியிருக்கின்றன.

எழுத்தாளனாக நான் பகல் கனவு காண்பவன். இரவில் காணும் கனவை விடவும் அது முக்கியமானது என நினைப்பவன். பகல் கனவுகள் திரும்பத் திரும்ப வரக்கூடியவை. இலக்கியம் என்பது எழுத்தில் உருவாக்கப்படும் பகற்கனவு தானே.

••

எழுத்தாளனாக எனக்கு இயற்கை தான் சகலமும். இயற்கையினுள் தான் அமானுஷ்யமான விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. அதைத் தனித்துப் பார்ப்பதில்லை. ஆகவே அமானுஷ்யங்களையும் இயற்கையின் பகுதியாகவே எடுத்துக் கொண்டு எழுதுகிறேன்.

••

அன்னாகரீனினா நாவலில் அவள் கடைசியில் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறாள். அதற்காக நாவலை வாசிக்கும் எவரும் அவளை எவரும் “the late Anna Karenina” எனக் குறிப்பிடுவதில்லை. கதாபாத்திரங்கள் நாவலில் மரணடைந்தாலும் அவர்கள் மறைந்து போய்விடுவதில்லை. நாவலில் உயிருடனே இருக்கிறார்கள். அது தான் எழுத்தின் வல்லமை. நிஜவாழ்க்கையில் ஒரு மனிதன் இறந்து விட்டால் அதன் பிறகு அவன் வெறும் நினைவு மட்டுமே. கதாபாத்திரங்கள் மனித மனதில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்கள், அவர்களுக்கு மரணமில்லை.

••

காப்காவும் தஸ்தாயெவ்ஸ்கியும் இரட்டை சகோதரர்களைப் போன்றவர்கள். இருவரது உலகமும் ஒன்று போலவே இருக்கிறது. எதை யார் எழுதினார்கள் என்று பிரித்து அறிய முடியாது. ஆனால் இருவரில் தஸ்தாயெவ்ஸ்கியே உயர்ந்தவர். அவரோடு ஒப்பிட்டால் காப்கா ஒரு படி குறைவே.

••

ஒரு இளம் வாசகன் புத்தகத்திலுள்ள கதையின் மீது தான் அதிகம் கவனம் கொள்வான். அவனுக்கு எழுத்தாளன் மீது பெரிய கவனமிருக்காது. அதே நேரம் பேராசிரியர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள் எழுத்தாளன் மீது மட்டுமே அதிகக் கவனம் கொள்ளுவார்கள். புத்தகத்திலுள்ள விஷயம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமே. சிறுவர்கள் தான் உண்மையான வாசகர்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் புத்தகம் பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிடுவார்கள். பெரியவர்களால் அப்படி நடந்து கொள்ள முடியாது

••

ஹெமிங்வேயின் நாவல்களை விடவும் அதிகமும் அவரைப் பற்றிய விமர்சனப் புத்தகங்கள், அறிமுக நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை ஹெமிங்வே பற்றிப் பலநூறு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு வாசகன் ஹெமிங்வேயின் எந்தக் கதையையும் வாசிக்காமல் வெறுமனே அவரைப் பற்றிய கட்டுரையை வாசித்துக் கடந்துபோய்விடும் சூழல் அமெரிக்காவில் உள்ளது. எழுத்து தான் பிரதானமாக இருக்க வேண்டும். எழுத்தாளனைப் பற்றி இவ்வளவு புத்தகங்கள் தேவையில்லை என்றே சொல்வேன்.

••

முதலாளித்துவ நாடுகளில் பணம் மனித விழுமியங்களின் அளவீடாக மாறி வருகிறது. “நான் முந்நூறு டாலர் மதிப்புள்ள சூட் அணிந்திருக்கிறேன் என அமெரிக்காவில் தான் சொல்கிறார்கள். உலகில் வேறு எங்கும் இப்படிப் பணத்தால் உடை சொல்லிக் காட்டப்படுவதில்லை.

••

குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்னிகோவின் தாயும் சகோதரியும் அவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள். அற்புதமான கடிதமது. உண்மையில் எந்தத் தாயும் அப்படி ஒரு கடிதத்தை எழுத இயலாது.  தான் சொல்ல விரும்பியதை தஸ்தாயெவ்ஸ்கி அந்தக் கடிதம் வழியாக மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அதனால் தான் அவரை இலக்கியத்தின் நிகரற்ற மேதை என்கிறோம்.

••

புஷ்கின் மற்றும் லெர்மன்தோவ் இருவரும் தனது மனைவியை வேறு ஒருவன் இகழ்ந்து பேசினான் என்பதற்காக டூயல் எனும் துப்பாக்கிச் சண்டைக்கு அழைத்து அதில் உயிர் விட்டனர். இன்று எந்த ஆணும் தன் மனைவியின் பெயரைக் காப்பாற்ற இப்படி உயிர் கொடுக்க முன்வருவதில்லை. ஒத்தலோ இன்றைய காலத்திற்குப் பொருத்தமில்லாத கதாபாத்திரம். ஆணோ பெண்ணோ உறவில் துரோகம் செய்வதை இன்றைய சமூகம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை.அதை பெரும் அநீதியாகக் கருதுவதில்லை. இந்த விஷயத்தில் இன்றைய ஆணும் பெண்ணும் நிறையவே மாறியிருக்கிறார்கள்.

••

ஒரு மனிதன் என்ன நினைக்கிறான் என்பதை விடவும் என்ன செய்கிறான் என்பதைக் காட்டுவதே முக்கியம். தினசரி பேப்பர்கள் அதிகம் வாசிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், அதில் குற்றம் செய்த ஒருவன் என்ன நினைத்தான் என்பது குறிப்பிடப்படுவதில்லை. என்ன நடந்தது எப்படி நடந்தது என்பது மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இது எழுத்தாளருக்கு ஒரு பாடம்.

••

Archives
Calendar
December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: