பணமே சாட்சி

ஜப்பானியர்கள் சிங்கப்பூரினைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது குறித்த வரலாற்றை மீளாய்வு செய்து ஹேமா எழுதியுள்ள வாழைமர நோட்டு என்ற புத்தகத்தை வாசித்தேன்.

ஹேமாவின் முதல் புத்தகம் இதுவென்று அறிய நேர்ந்த போது வியப்பாக இருந்தது. மிகச் சிறப்பாக வரலாற்றை எழுதியிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த ஹேமா தனது பணியின் நிமித்தமாகத் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார்.

சிங்கப்பூரை ஏன் ஜப்பானியர்கள் தாக்கினார்கள். எவ்வாறு தாக்குதல் நடைபெற்றது என்பதைப் பற்றிய வரலாற்று உண்மைகளைத்  துல்லியமாக விவரித்திருக்கிறார். அத்துடன் சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானிய ராணுவம் அங்கு வசித்த மக்களை எவ்வளவு கொடுமைப்படுத்தியது, குரூரமாகக் கொன்று குவித்தது என்ற அறியப்படாத செய்திகளையும் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார்

எழுத்தாளர் ப.சிங்காரம் தனது புயலிலே ஒரு தோணி நாவலில் ஜப்பானின் கெம்பித்தாய் ராணுவம் பற்றி எழுதியிருக்கிறார். கெம்பித்தாய் அதிகாரிகள் மலேசிய மக்களை மிக, கொடூரமாக நடத்தினார்கள் என்பதைச் சிங்காரம் வழியாக அறிந்திருக்கிறேன். ஹேமா ஒரு படி மேலே சென்று ஜப்பானிய ராணுவம் சிங்கப்பூரில் கையாண்ட ஒடுக்குமுறைகளை, வன்முறைகளை,  பாலியன் கொடுமைகளை

ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார்

சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானிய ராணுவம் சந்தேகத்தின் பேரில் பலரையும் அழைத்துச் சென்றுக்கு எந்த விசாரணையுமின்றிக் கொன்று கடலில் வீசியிருக்கிறது. சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு. லீ குவான் யூ ஜப்பானியரிடம் பிடியில் சிக்கி தந்திரமாக மீண்டிருக்கிறார் என்பதை ஹேமா சுட்டிக்காட்டுகிறார்.

ஜப்பானிய ராணுவம் தாங்களே அச்சடித்த பத்து டாலர் நோட்டுகளில் வாழைமரத்தின் படம் போட்டிருந்தார்கள். அந்தப் பணத்தை மக்கள் வாழைமர நோட்டு என்று அழைத்தார்கள். தொடக்கத்தில் வரிசை எண்களுடன் அடிக்கப்பட்ட இந்த நோட்டுகள் பின்பு வரிசை எண்கள் இல்லாமலும் வெளியிடப்பட்டன. இதனால் கள்ளப்பணம் பெருகியது. வாழை மர நோட்டின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. சிறு பொருளை வாங்குவதற்குக் கூட மக்கள் பை நிறைய நோட்டுகளைத் தூக்கிச் சென்றார்கள். ஒரு முட்டையின் விலை 200 வெள்ளிகளைத் தாண்டியிருந்தது என்கிறார் ஹேமா. அத்தோடு ஜப்பான் சரணாகதி அடைந்த போது இந்த நோட்டுகள் செல்லாமல் போய்விடவே வாழைமர நோட்டு வைத்திருந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்

சிங்கப்பூரின் இந்த வரலாற்று உண்மைகளைத் தேடி ஹேமா நிறைய நூல்களை வாசித்திருக்கிறார். கள ஆய்வு செய்திருக்கிறார். விரிவான துணைநூல்களின் பட்டியலையும் கொடுத்திருக்கிறார்.

A Baba Boyhood என்ற வில்லியம் க்வீ. ( William Gwee) எழுதிய நூலும் சிங்கப்பூரினை ஜப்பானியர்கள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திய நாட்களையே விவரிக்கிறது. இந்த நூலை நான் முன்னதாக வாசித்திருக்கிறேன். ஜப்பானிய ஆதிக்கமிருந்த நாட்களில் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 20 கட்டிகள் சுண்ணாம்பு கலந்த அரிசி கொடுக்கப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல உணவுப்பஞ்சம் ஏற்பட்டு ஆண்களுக்கு 8 கட்டிகள் பெண்களுக்கு ஆறு கட்டிகளாகக் குறைக்கப்பட்டது என்ற வில்லியம் க்வீ எழுதிய தகவலைத் தனது நூலில் ஹேமா பதிவு செய்திருக்கிறார்,

இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூரில் செயல்பட்ட விதம் அதன் நினைவகம் பற்றி எழுதிய கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது.

சிங்கப்பூரின் இளந்தலைமுறையும் எழுத்தாளர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது.

நூலிற்கு மிகவும் பொருத்தமான அட்டை வடிவமைப்பு செய்த சந்தோஷ் நாராயணனுக்கு எனது பாராட்டுகள்.

சிங்கப்பூரின் வரலாறு சார்ந்து தமிழில் அதிக நூல்கள் எழுதப்படவில்லை. இது தான் ஜப்பானிய ஆதிக்கம் பற்றி வெளியான முதல் நூல் என நினைக்கிறேன். இந்த வரலாற்று ஆய்வினை மேற்கொண்டதற்கும் அதைச் சிறப்பாகப் பதிவு செய்தமைக்கும் ஹேமா மிகுந்த பாராட்டிற்குரியவர்

••

0Shares
0