மார்க்வெஸின் மஞ்சள் ரோஜாக்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வாழ்க்கையை விவரிக்கும் GABO: THE CREATION OF GABRIEL GARCIA MARQUEZ என்ற ஆவணப்படத்தினைப் பார்த்தேன்.

கொலம்பியாவின் வடபகுதியிலுள்ள அரகடகா என்ற சின்னஞ்சிறிய ஊரில் பிறந்து எவ்வாறு உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராக உருவானார் என்பதைப் படம் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

மார்க்வெஸின் ஊருக்கு ரயில் வரும் காட்சியைக் காணும் போது அவரது செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம் என்ற கதை நினைவில் வந்து போனது.

அரகடகா வாழைத்தோட்டங்கள் நிரம்பிய நிலப்பரப்பு. யுனைடெட் புரூட் கம்பெனியின் நிர்வாகத்திலிருந்தன தோட்டங்கள், அரகடகாவில் நடந்த தொழிலாளர் போராட்டம், துப்பாக்கிச் சூடு, சேவற்சண்டை நடக்கும் மைதானம், மார்க்வெஸிற்குப் பிடித்த வண்ணத்துப்பூச்சி எனப் படம் அவரது தனிமையின் நூற்றாண்டுகள் நாவலின் களத்தைத் துல்லியமாக நமக்கு அடையாளம் காட்டுகிறது.

அரகடகாவினை காட்சியாக நாம் காணும் போது இதை ஏற்கனவே பார்த்திருக்கிறோமோ என்பது போலத் தோன்றுவதற்கு அவரது எழுத்தின் வலிமையே சான்று.

அவரது தந்தையான கேப்ரியல் எலிகியோ கார்சியா தாய் லூயிசா சாண்டியாகா மார்க்வெஸ் இகுவாரன் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தக் காதலைப் பற்றி How my father won my mother என மார்க்வெஸ் விரிவாக எழுதியிருக்கிறார்.

கார்சியா மார்க்வெஸ் பிறந்த உடனேயே, அவரது தந்தை தனது வேலையின் பொருட்டுப் பாரன்குவிலாவுக்குச் சென்றுவிட்டார் மார்க்வெஸை அவரது தாய்வழி தாத்தா பாட்டிகளான டோனா டிராங்குவிலினா இகுவாரன் மற்றும் கர்னல் நிக்கோலஸ் ரிக்கார்டோ மார்க்வெஸ் மெஜியா ஆகியோர் வளர்த்தனர்.

பாரன்குவிலா, அரகடகா ஆகியவை இப்போது வளர்ச்சியடைந்துள்ளன. மார்க்வெஸ் வசித்த வீடு இப்போது நினைவுச்சின்னமாக உள்ளது.

கார்சியா மார்க்வெஸின் நாவலில் அவர் கற்பனையாக உருவாக்கிய மகாந்தோ என்ற ஊர் இடம்பெறுகிறது. அது அவரது சொந்த ஊரான அரகடகாவை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இந்த ஆவணப்படத்தில் மார்க்வெஸ் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தது விரிவாகக் காட்டப்படுகிறது. ஒரு காட்சியில் காஸ்ட்ரோவுடன் நெருக்கமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் மார்க்வெஸ்.

1930-களில் ‘எல் எஸ்பெக்டடோர்’ என்ற தினசரிச் செய்தித்தாளில் மார்க்வெஸ் பத்திரிக்கையாளராகப் பணியாற்றியானர். அந்த அலுவலகம். அவர் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள். அவரது முதற் சிறுகதை மற்றும் மார்க்வெஸ் குடும்பத்தின் அபூர்வமான கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் என ஆவணப்படம் அவரது வாழ்க்கைச் சித்திரத்தை அழகாகப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆவணப்படத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் தனக்கு மார்க்வெஸின் One Hundred Years of Solitude நாவல் எப்படிக் கிடைத்தது, நாவல் எவ்வளவு பிடித்திருந்தது என்பதை வியந்து சொல்கிறார்.

இப்படத்தில் பத்திரிக்கையாளர் ஜான் லீ ஆண்டர்சன் மற்றும் மார்க்வெஸின் சுயசரிதையை எழுதி ஜெரால்ட் மார்ட்டின், மார்க்வெஸின் சகோதரி ஐடா, சகோதரர் ஜெய்ம் கார்சியா மார்க்வெஸ் ஆகியோர் மார்க்வெஸ் பற்றிய நினைவுகளை, எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காபோ 2016 சிகாகோ திரைப்பட விழாவில் “சிறந்த ஆவணப்படம்” விருதை வென்றிருக்கிறது.

பிப்ரவரி 1927 மார்ச் 6 அன்று காலை 9 மணிக்கு மார்க்வெஸ் பிறந்த போது தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றப்பட்டதால் அவரது பிறப்பு சிக்கலானது. அந்த நிகழ்வு தன் மனதில் அறியாத பயமாக உறைந்திருப்பதாக மார்க்வெஸ் குறிப்பிடுகிறார். அவர் பிறந்த தினத்தன்று அராக்கடக்கில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது என்பதைக் கூடத் தனது எழுத்தில் மார்க்வெஸ் பதிவு செய்திருக்கிறார்.

அவரது தந்தை ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றுவதற்காக அரகடகாவுக்கு வந்தார். ஆனால் போதுமான பணம் இல்லாததால், சில மாதங்களுக்குப் பிறகு அவர் தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறி பாரன்குவிலாவுக்குச் சென்றார்..

ஒரு இளம் தாய் தனது பிறந்த குழந்தையைத் தனது பெற்றோர் பொறுப்பில் வீட்டில் விட்டுச் செல்ல எப்படி முடிவு செய்தார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம், ஆனால் கணவரின் நெருக்கடியான பொருளாதார வாழ்க்கை காரணமாகவே மார்க்வெஸின் தாய் அந்த முடிவினை எடுக்க நேர்ந்தது.

மார்க்வெஸ் தனது குழந்தைப் பருவம் மிகவும் தனிமையாக இருந்ததை நினைவு கூறுகிறார். அவரது தாத்தா கர்னல் நிக்கோலஸின் பெரிய வீட்டில் உறவினர்கள் நிறைய இருந்தார்கள். தாத்தாவின் வீடு மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது.,

ஒரு பகுதியில் நிக்கோலஸ் மார்க்வெஸின் அலுவலகமும் சிறிய ஓய்வு எடுக்கும் அறையும் இருந்தது, வீட்டின் பின்னால் சிறிய தோட்டம், அதன் பின்னால் இரண்டாவது பகுதி கட்டிடம் இருந்தது, அதில் மூன்று அறைகள் இருந்தன. அவற்றில் ஒன்று தாத்தா பாட்டிகளின் படுக்கையறை, மற்றும் குழந்தைகளின் படுக்கையறை.. மூன்றாவது அறையில் மார்க்வெஸ் குடும்பத்திற்குச் சொந்தமான நினைவுச் சின்னங்கள் சேமித்து வைக்கபட்டிருந்தன.

தோட்டத்தினை ஒட்டி மற்றொரு வீடும் இருந்தது, அதில் ஆறு அறைகள் இருந்தன. அங்கே விருந்தினர்களுக்கான அறை பெரியதாக இருந்தது. இந்த வீட்டினை ஒட்டியே தாத்தாவின் நகை பட்டறை இருந்தது. அவர் இறக்கும் வரை அவர் தனது விருப்பமான கைவினைப் பணியில் ஈடுபட்டிருந்தார். பிரமாண்டமான சாப்பாட்டு அறை அவர்களின் குடும்ப வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தது.

தோட்டத்தினை ஒட்டி ஒரு நீச்சல் குளம் இருந்தது. அதன் அருகிலே கொய்யமரங்கள் இருந்தன. அதைப்பற்றிக் கூட மார்க்வெஸ் எழுதியிருக்கிறார். சிறுவயது முழுவதும் மார்க்வெஸ் பெண்களால் வளர்க்கபட்டவர். அதன் பாதிப்பை அவரது எழுத்தில் காண முடியும்.

அரகடகா பரப்பளவில் சிறியதாக இருந்தது, பத்து சிறு பகுதிகள் கொண்ட பிரதேசமது. அதில் ஒரு பகுதியில் அமெரிக்க வாழை நிறுவனத்தின் நிர்வாகிகள் குடியிருந்தார்கள், அப்பகுதி வெகு ஆடம்பரமாக அமைக்கப்பட்டிருந்தது. பசும் புல்வெளிகள், டென்னிஸ் கோர்ட் மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கிளப் ஒன்றும் அங்கிருந்தது. அங்கே வாரந்தோறும் இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மார்ச் 1937 இல், தாத்தா கர்னல் மார்க்வெஸ் மூச்சுக்குழாய் சீர்கேட்டில் இறந்தார். இதனால் அவர்களின் முழுக் குடும்பமும் பாரன்குவிலாவுக்குச் இடம் மாறியது.

பாரன்குவிலாவில் உள்ள சான் ஜோஸ் பள்ளியில் மார்க்வெஸ் சேர்க்கப்பட்டார். அங்கே படித்த காலத்தில் தான் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொள்ளத் துவங்கினார். அத்தோடு பள்ளி வாழ்க்கையைப் பற்றிச் சிறிய குறிப்புகளை எழுதத் தொடங்கினார், அவரது முதல் கவிதை மாணவர்களுக்கான செய்தித்தாளில் வெளியிடப்பட்ட போது அவருக்கு வயது பதினாறு.

1943 இல் மார்க்வெஸ் கொலம்பியாவின் தலைநகருக்குச் சென்றார். அந்தப் பயணம் நீண்டது. அவரது தந்தை அவரைப் போகோட்டா செல்லும் ரயிலில் கொட்டும் மழையோடு அழைத்துச் சென்றார். அந்த நினைவை மார்க்வெஸ் ஒரு கட்டுரையில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்

கார்சியா மார்க்வெஸ் குடும்பம் 1944 ஆம் ஆண்டில் சுக்ரேவிலிருந்து மகங்காவுக்கு இடம் மாறியது., இங்கே தான் அவர் தனது வருங்கால மனைவி மெர்சிடிஸைச் சந்தித்தார். அந்த நேரத்தில் அவள் ஒரு பள்ளி மாணவி, அவளைத் துரத்தித் துரத்தி காதலித்து முடிவில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார் மார்க்வெஸ்.

வாலிப வயதில் சகோதரனுடன் இணைந்து ஒரு இசைக்குழுவை உருவாக்கி இனிமையாக நாட்களைக் கழித்ததாக நினைவு கொள்கிறார் மார்க்வெஸ். பின்னர்க் கொலம்பியாவின் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க முடிவு செய்தார். அவர் சட்டம் படித்த பொகோட்டா பல்கலைக்கழகத்தில் சுமார் நான்காயிரம் மாணவர்கள் படித்தனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏழைகள்.

தனது முதல் ஆண்டில், கார்சியா மார்க்வெஸ் வகுப்புகளைப் புறக்கணித்து மது, பெண்களுடன் பொழுதுபோக்கு என ஆனந்தமாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். அவரது வகுப்புத் தோழர் லூயிஸ் வில்லர் போர்டா பல ஆண்டுகளுக்குப் பிறகு இதை நினைவு கூர்ந்து சொல்லும் போது, நாங்கள் மதுவிடுதியில் அமர்ந்து நாளெல்லாம் குடித்தபடியே இலக்கியம் பேசிய நாட்களவை. ஹெமிங்வே, பாக்னர், , தாமஸ் மான், தஸ்தாயெவ்ஸ்கி இவர்களைப் பற்றிக் காரசாரமாக விவாதம் செய்தோம் என்கிறார்.

அந்த நேரத்தில் கொலம்பியாவில் மிகவும் பதட்டமான அரசியல் நிலைமை இருந்தது. இதனால் தீவிரமான அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினார் மார்க்வெஸ். ஏப்ரல் 29, 1948 இல் நாட்டில் பெருங்குழப்பம் ஏற்பட்டது, ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

கவிஞர் ஹெக்டர் ரோஜாஸ் எராசோ ஒரு செய்தித்தாளில் பணியாற்றினார். அவரது நட்பின் காரணமாகவே மார்க்வெஸிற்குப் பத்திரிக்கையில் பணியாற்ற வாய்ப்பு உருவானது. இதனால் கேப்ரியலின்  புதிய வாழ்க்கை தொடங்கியது.

ஊரடங்கு உத்தரவு பத்திரிகையாளர்களுக்குப் பொருந்தாது, ஆகவே அவர் இரவில் வேலை செய்வதும் பகலில் தூங்குவதுமான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டார்.

செய்தித்தாளைப் பொறுத்தவரை முதல் நாளிலிருந்து அவர் தனது சகாக்களிடையே தனித்து நிற்கத் தொடங்கினார். கொலம்பியாவில் கடுமையான தணிக்கைமுறை இயங்கியது. மார்க்வெஸ் தனது முதல் கட்டுரைகளில் தனது இடதுசாரி கருத்துக்களைத் தெளிவாகக் காட்டினார். அவர் தனது அரசியல் கருத்துக்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை

போகோட்டாவிலிருந்த சலேமியா போர்டாவின் வேண்டுகோளின் பேரில், மார்க்வெஸ் “மரணத்தின் மறுபக்கம்” என்ற சிறுகதையை எழுதினார், அக்கதை 1948ல் வெளியானது. அக்கதை அவருக்கு மிகுந்த பாராட்டினை பெற்றுத் தந்தது

அப்போது ஒரு நாள் எழுத்தாளரான அல்வாரோ செபெடாவின் வீட்டில் ஒரு இரவு மார்க்வெஸ் தங்கினார். அவர்கள் ஒரே வயதிலிருந்தனர், செபெடா மார்க்வெஸைப் போலவே, வண்ணமயமான சட்டையை அணிந்திருந்தார், அவருக்கு நீண்ட தலைமுடி இருந்தது. சபேடாவின் ஆலோசனையின் பேரில், மார்க்வெஸ் வர்ஜீனியா வூல்ஃப் மற்றும் வில்லியம் பாக்னர் ஆகியோரின் புத்தகங்களைத் தீவிரமாகப் படிக்கத் துவங்கினார், இது அவர் எழுத்தினைப் புதியதாக மாற்றியது.. மார்க்வெஸின் எழுத்து நடை வர்ஜீனியா வூல்ஃப் மற்றும் வில்லியம் பாக்னர் இருவரின் பாதிப்பில் உருவானதே.

1980 களில், மார்க்வெஸ் பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்து, கியூபாவில் ஒரு லத்தீன் அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்தார். 1986ஆண்டு ஹவானா திரைப்பட விழாவின் போது, புதிய லத்தீன் அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் ஹவானாவில் உருவாக்கப்பட்டது. அது போலவே கியூபாவில் சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பள்ளி ஒன்றும் திறக்கப்பட்டது ஸ்பானிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் மார்க்வெஸின் பல படைப்புகளைப் படமாக்கியிருக்கிறார்கள். தொலைக்காட்சி தொடராகவும் அவரது கதைகள் வெளியாகியுள்ளன.

2005 இல், கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட, மார்க்வெஸ் இனி எழுத மாட்டேன் என்று அறிவித்தார். ஆனால், 2009 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மார்க்வெஸ் நான் எழுதுவதை நிறுத்தியதாக சொன்னது பொய். உண்மை என்னவென்றால் நான் புதிய நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் எனக்குறிப்பிட்டார்

அந்த நாவலை எழுதி மார்க்வெஸ் பதிப்பகத்தில் ஒப்படைத்துவிட்டார். ஆனால் அது முழுமையாக இல்லாத காரணத்தால் வெளியிட அவரது குடும்பம் மறுத்து விட்டது என்கிறார்கள்.

2007 ஆம் ஆண்டு லத்தீன் அமெரிக்காவில் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. அவரது படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி திரைப்படங்களுடன் நாடெங்கும் திருவிழாக்கள் நடைபெற்றன.

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் ஏப்ரல் 17, 2014 அன்று மெக்சிகோவிலுள்ள தனது வீட்டில் தனது 88வது வயதில் காலமானார். அவரது மனைவி மெர்சிடிஸ் மற்றும் அவர்களின் மகன்களான கோன்சலோ மற்றும் ரோட்ரிகோ உடனிருந்தார்கள். மார்க்வெஸ் இறுதிச்சடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அவருக்கான நினைவஞ்சலி ஏப்ரல் 21 அன்று மெக்சிகோ நகரத்தில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்துகளைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது சொந்த ஊரிலும் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இப்போது அரகடகா ஒரு சுற்றுலா ஸ்தலமாக உருமாறியிருக்கிறது.

மார்க்வெஸின் கதைகளின் பின்புலத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்த ஆவணப்படம் ஒரு வழிகாட்டியாகவே உள்ளது

***

21/11/2019

Archives
Calendar
December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: