பறவைகளின் பாதை.

ஒரு படத்தின் துவக்கக் காட்சிகள் மிகுந்த கவித்துவமாக இருந்துவிட்டால் அது ஒட்டுமொத்த படத்திற்குமான மனநிலையை உருவாக்கிவிடும் என்பதற்கு நேற்று பார்த்த Birds of Passage படமே சான்று .

சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இதுவே மிகச்சிறந்த துவக்கக்காட்சி கொண்டிருக்கிறது.

கொலம்பியாவின் வயு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜைதா என்ற இளம்பெண் தன்னுடைய முகத்தை மறைத்தபடியே இறக்கை போலத் தன்மேல் போர்த்தப்பட்ட சிவப்பு ஆடையை,  விரித்து ஆடுகிறாள். அவளது அனுமதியுடன் ஒரு ஆண் அவளைப் பின்னோக்கி வட்டமிடுகிறான். பருவம் வந்த பெண் பறக்கக் கூடியவள். அவள் சிறகுகளைப் பின் தொடரக்கூடியவனே அவளுக்குரியவன். அது தான் வயு (Wayuu) பழங்குடியினரின் பழக்கம்.

தன் சிறகுகளை விரித்து ஜைதா ஆடும் நடனம் அற்புதமாகவுள்ளது. அவள் முன்பாக வந்து நடனமாடுகிற ராபாயெட் கண்களில் காதல் பீறிடுகிறது. நடனத்தின் முடிவில் நீ தான் என் மனைவி என்று ராபாயெட் கூறுகிறான் மௌனமாக அதை ஜைதா ஏற்றுக் கொள்கிறாள்.

படத்தின் துவக்கக் காட்சியில்  தன்னை ஏன் இந்த  மக்கள் மதிக்கிறார்கள் என்பதற்கு  ராபாயெட்விடம்   உர்சுலா சொல்லும் பதில் தான் படத்தின் மையச்சரடு.

தன் இனத்திற்காக தான் எதையும் செய்வேன் என்கிறாள் உர்சுலா. அதைப் படம் முழுவதும் அவள் வெளிப்படுத்தியுள்ள விதம் அபாரம்.

நடனம் முடிந்தவுடன் பழங்குடி மக்கள் ஒன்றுகூடி குடிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். அதன்பிறகு ராபாயெட்டிற்காக ஜைதாவைப் பெண் கேட்கிறார் பெரேக்ரினோ. அந்தச் சம்பிரதாயம் துல்லியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜைதாவைத் திருமணம் செய்ய வரதட்சணையாக கால்நடைகளும் முத்துமாலையும்  தர வேண்டும் என் பெண் வீட்டார்  கேட்கிறார்ள். அதற்கு ராபாயெட் ஒத்துக் கொள்கிறான்.

தனது வரதட்சணைக்குப் பணம் சேர்க்கவே ராபாயெட் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகிறான். போதை மருந்து தேடி வரும் ஹிப்பிகளின் மூலம் அவனுக்குக் கடத்தல் தொழிலோடு தொடர்பு ஏற்படுகிறது. சியரா நெவாடாவின் அடிவாரத்தில் வசிக்கும் அவனது உறவினரான அனாபலின் மூலம் மாரிஜுவானா எனப்படும் போதைப் பொருளைச் சேகரித்து விற்பனை செய்யத்துவங்குகிறான். இதன் மூலம் பணம் கிடைக்கிறது. திருமணம் செய்து கொள்கிறான். அவனது கூட்டாளி பேராசை கொண்டு போதை மருந்து கும்பலின் தலைவனைக் கொலை செய்துவிடுகிறான். இங்கே துவங்கும் பிரச்சனை எப்படி வளர்ந்து சென்று முடிவில் அவர்களை வேட்டையாடத் துடிக்கிறது என்பதைப் படம் விரிவாக எடுத்துக் காட்டுகிறது.

••

வடகிழக்குக் கொலம்பியாவில் லா குஜிரா மாநிலத்தில் வயு என்ற பழங்குடியினர் வசிக்கிறார்கள். அதில் ஒருவரான உர்சுலா என்ற பெண் கனவுகளுக்குப் பலன் சொல்லக்கூடியவர். எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் கொண்டவர். அவரிடம் மந்திர சக்தியிருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். உர்சுலாவின் மகள் ஜைதா (நடாலியா ரெய்ஸ்) மகன் லியோனிடாஸ்.

உர்சுலா இந்தப் படத்தின் வலிமையான கதாபாத்திரம். குறிப்பாக இறுதியில் மகளைத் தேடி வந்து ராபாயெட்டிடமிருந்து மீட்கும் போது அவரது உடல்மொழியும் உறுதியான பார்வையும் கம்பீரமாகவுள்ளது. அது போலவே இறந்த உடலை மீட்கக் கறுப்பு உடை அணிந்து அவள் அனாபலின் வீட்டிற்குப் போய்ச் சமாதானம் பேசுவதும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

1960களில் கொலம்பியாவில் துவங்கிய போதைப் பொருள் கடத்தல் எப்படிப் பழங்குடி மக்களைப் பாதித்தது. அவர்கள் எப்படி மாஃபியாவோடு இணைந்து கடத்தலுக்குத் துணை செய்தார்கள். அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள்.. துரோகம். உயிரிழப்பு. பழி இவற்றையே படம் விவரிக்கிறது.

இதன் ஊடாகப் பழங்குடி மக்களின் நம்பிக்கைகள். சடங்குகள். பழக்கங்கள் அழகாகக் காட்சிப்படுத்த பட்டுள்ளன. குறிப்பாக அனபாலின் வீட்டில் இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் சடங்கிற்காக ஒன்றுகூடும் காட்சியும் ராபாயெட் புது வீடு கட்டி குடியிருக்கும் காட்சியும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தபடம் Embrace of the Serpent படத்தை எடுத்த இயக்குநர் சிரோ குவேராவின் அடுத்த படைப்பு.

ராபாயெட் ஒரு அனாதை, அவரது மாமா பெரெக்ரினோவால் வளர்க்கப்பட்டவன். பெரேக்ரினோ word messenger எனப்படும் இனத்தூதுவர். இவரைப் போன்றவர்களே பொது விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். நீதி வழங்குவார்கள். நல்லது கெட்டதை எடுத்துச் சொல்வார்கள். ஒரு காட்சியில் பெரேக்ரினோ அனபாலினைச் சந்தித்துச் சமாதானம் பேசச் செல்கிறார். அப்போது அவரைக் கொல்லத் துப்பாக்கியை உயர்த்தும் அனபாலிடம் தூதுவனைக் கொல்வது மரபில்லை என்று அமைதியாகச் சொல்கிறார். ஆனால் அனபால் அதைக் கேட்பதில்லை. பெரேக்ரினாவைக் கொன்றுவிடுகிறான். இந்த நிகழ்ச்சி பழங்குடி மக்களிடம் கோபமான எதிர்விளைவை உண்டு பண்ணுகிறது.

படத்தின் முக்கியக் கதாபாத்திரம் பெரேக்ரினோ. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கறுப்புக் கண்ணாடியும் பேசும் முறையும் அலட்டிக் கொள்ளாத நடையும் மறக்கமுடியாத கதபாத்திரமாக்கிவிடுகிறது.

இது போலவே உர்சுலாவின் மகன் லியோனிடாஸ்  அனபாலின் மகளை அடைய முயற்சிப்பதும் இதனால் தண்டிக்கபட்டு அனபாலின் வீட்டிலே வேலையாளாக இருப்பதும் தனிச்சிறுகதை போல விவரிக்கபட்டுள்ளது.

படம் ஒரு நாட்டுப்புறப் பாடலில் துவங்கி அதே பாடலில் முடிவு பெறுகிறது. உர்சுலாவின் பேத்தி ஒருத்தி  ஆடு மேய்த்துக் கொண்டு போவதுடன் படம் நிறைவுபெறுகிறது. இந்த சட்டகமே படத்தினைப் புதியதாக்குகிறது.

Narcos போன்ற வெப்சீரியல்கள் போதை மருந்து கடத்தலின் வரலாற்றைப் பேசி வரும் சூழலில் கொலம்பியாவின் பழங்குடி இனம் எப்படி இந்தத் தீவினையால் பாதிக்கப்பட்டது என்பதை அழுத்தமாகச் சொன்னதன் மூலம் தனிக்கவனம் பெறுகிறார் இயக்குநர் சிரோ குவேரா.

••

10.12.2019

0Shares
0