எழுத்தாளனின் அரசியல்

நார்வீஜிய எழுத்தாளர் நட் ஹாம்சன் ஹிட்லருக்கு ஆதரவு அளித்துப் பேசியும் எழுதியும் வந்தார் என்பது இன்றைக்கும் விமர்சிக்கபடும் விஷயம் ( இவர் பெயரை நுட் ஹாம்சுன் என உச்சரிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழில் இவர் நட் ஹாம்சன் என்றே அறியப்படுகிறார் )

நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான ஹாம்சனின் புகழ்பெற்ற நாவல் தமிழில் நிலவளம் எனக் க.நா.சு மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த அற்புதமான நாவலை க.நா.சு எப்படித் தேடிக்கண்டுபிடித்து வாசித்து மொழி பெயர்த்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது

உலகின் மிகச்சிறந்த நாவல் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படும் நிலவளம் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. மண்ணின் கதையை, மண்ணை நம்பி வாழும் மக்களின் கதையை நுட்பமாகச் சொல்லியிருக்கிறார் நட் ஹாம்சன்.  நட் ஹாம்சனின் பசி நாவலும் தமிழில் வெளியாகியுள்ளது. இதுவும் மிகச் சிறந்த நாவலே.

‘நில வளம்’ என்ற நாவலுக்காக 1920-ல், தமது 61-வது வயதில் நோபல் பரிசு பெற்றார் நட் ஹாம்சன். நார்வே தேசமே அவரைக் கொண்டாடியது. ஹாம்சன் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார். இரண்டாவது மனைவி மரியா. ஒரு நாடக நடிகை. ஹாம்சனின் படைப்புகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஹாம்சனின் நாவல்களை மக்கள் மத்தியில் வாசித்துப் புகழ்பரவச் செய்தவர். நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பம்.

ஜெர்மனியில் ஹிட்லர் புகழ்பெறத்துவங்கிய நாட்களில் ஒரு நாள் மரியா ஹிட்லரைப் பற்றிக் கேள்விபடுகிறாள். அவர் மீது தேசத்திலுள்ள பெண்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் என நாஜி அதிகாரி அவளிடம் சொல்கிறான்.. சமூக மாற்றத்திற்குத் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து உடனடியாக அந்த அதிகாரியுடன் நட்பு  கொள்கிறாள்

நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரது குடும்பம் ஹிட்லரை ஆதரிக்கிறது என்றால் ஒட்டுமொத்த தேசத்திலும் நாஜிகளுக்கு வரவேற்பு கிடைக்கும் என முடிவு செய்த நாஜி அதிகாரி மரியாவைப் பேசி மயக்குகிறான். தான் சொன்னால் நிச்சயம் ஹாம்சன் கேட்பார் என அவள் உறுதி அளிக்கிறாள். புதிய ஜெர்மனி உதயமாவது குறித்த கனவுகளை ஹாம்சனிடம் விவாதிக்கிறாள்

ஹாம்சனுக்கு பிரிட்டன் பல்வேறுநாடுகளைக் காலனியாக்கி வைத்துக் கொண்டு சுரண்டி பிழைப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அத்துடன் பிரிட்டனின் வெளிப்படையான இனவெறி, மதவெறி, மற்றும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி வைக்கும் முறை இவற்றை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆகவே அவர் பிரிட்டனை துரத்தியடிக்கக் கூடிய வல்லமை கொண்ட ஒரு எழுச்சியை விரும்புகிறவராக இருந்தார்.

மரியா அதைச் சரியாக உணர்ந்து கொண்டு ஹாம்சனை பிரிட்டனுக்கு எதிராக எழுத வைத்து அதை ஜெர்மனிய ஆதரவாக மாற்றிக் காட்டுகிறார். நாஜிகளின் கவனம் நட் ஹாம்சன் மீது விழுகிறது. அவரது நூல்களை நாஜிகள் ஒன்றுகூடி வாசிக்கிறார்கள். இதற்கிடையில் குடும்பத்தில் ஹாம்சனின் மகள் போதையில் ஆழ்ந்து போய் வாழ்க்கை வெறுத்துப் போனவளாக வீட்டிலிருக்கிறாள். மகன்களோ அம்மாவின் வழிகாட்டுதலில் நாஜி படையில் சேர விரும்புகிறார்கள்.

ஹிட்லரை நம்புவது சரியா, அவரால் புதிய மாற்றங்களை உருவாக்கிவிட முடியுமா என ஹாம்சன் யோசிக்கிறார். குழப்பமடைகிறார். ஆனால் திரளாக எழும் கூட்டம். ஆவேசப்பேச்சுகள். பிரிட்டனை வெளிப்படையாக மிரட்டும் தொனி இவை ஹிட்லர் மீது அன்பை உருவாக்குகிறது. நாஜிகளுக்காகப் பரிந்து பேசுகிறார். எழுதுகிறார்

இதற்கிடையில் ஹிட்லரின் யூத அழிப்பு நடவடிக்கை துவங்குகிறது. அதை நட் ஹாம்சன் அறிந்திருக்கவில்லை. அப்பாவி யூத இளைஞர்கள் பிடித்துக் கொண்டு செல்லப்பட்டுச் சிறைக்காவலில் வைக்கபடுவதைக் கண்டிக்கிறார். அவருக்குத் தெரிந்த இரண்டு இளைஞர்களை ராணுவம் பிடித்துப் போகவே அவர்களை விடுவிக்க முயற்சிக்கிறார். அவரது தலையீடு நாஜி அதிகாரிகளை எரிச்சல்படுத்துகிறது. ஆகவே உடனே அந்த இளைஞர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

நார்வே தேசத்தின் எதிர்காலம் பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கும் நட் ஹாம்சன் ஒரு நாள் ஹிட்லரை சந்திக்க அழைக்கபடுகிறார்.  அவரிடம் என்ன பேச வேண்டும் என்பதற்காக வீட்டிலே ஒத்திகை மேற்கொள்கிறார்.

நாஜி அதிகாரிகள் அவரை காரில் அழைத்துப் போகிறார்கள். கடுமையான பரிசோதனைகளுக்குப் பிறகு ஹிட்லரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் ஹிட்லர் தானும் அவரது வாசகன் என அறிமுகம் செய்து கொண்டு தேநீர் தருகிறார். நட் ஹாம்சனோ தனது தேசத்தின் நலன் எதிர்காலம் என மனதிலுள்ள கொந்தளிப்புகளை எந்தத் தடையுமின்றிக் கொட்டிவிடுகிறார். இது ஹிட்லரை எரிச்சல் படவைக்கிறது. நட் ஹாம்சனை அவர் துரத்தியடிக்கிறார்.

அவமானப்பட்ட ஹாம்சன் நாடு திரும்புகிறார். அப்போதும் அவரது மனைவி நாஜிகளின் மீது விடாப்பிடியான நம்பிக்கை கொண்டேயிருந்தார். ஆனால் இரண்டாம் உலகப்போரில் நாஜிகள் தோற்றுப் போகிறார்கள். ஹிட்லர் மரணமடைகிறார்.

அதை அறிந்த நட் ஹாம்சன் இறந்து போன ஹிட்லருக்கு அஞ்சலி எழுதுகிறார். இது மேலும் நார்வே மக்களிடம் மேலும் ஆத்திரத்தை உருவாக்குகிறது. தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டு மக்களால் வெறுக்கபடுகிறார். சிறார்கள் அவர் மீது பனிக்கட்டியை வாறி அடிக்கிறார்கள். எந்த மக்களால் தேசத்தின் உன்னத எழுத்தாளராகக் கொண்டாடப்பட்டாரோ அவர்களே அவரை ஏளனம் செய்கிறார்கள். வெறுத்து ஒதுக்குகிறார்கள். ஹாம்சனுக்கு மனநிலை பிசகிவிட்டது எனக் குற்றம் சாட்டுகிறார்கள்

அவர் மீது நீதி விசாரணை நடைபெறுகிறது. தனது தவற்றை அவர் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார். தனது தேசத்தின் நலனுக்காகவே தான் அவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறுகிறார். விசாரணையில் அவர் ஜெர்மனின்கு ஆதரவு அளித்த்திற்கான தண்டனையாக £ 16,250 பணத்தை அரசிற்குத் தர வேண்டும் என உத்தரவிடப்படுகிறது

நாஜி ஆதரவிற்காக ஹாம்சனின் மனைவி மரியா மூன்றாண்டு சிறையில் அடைக்கபடுகிறார். அம்னெஸ்டி தலையீடு காரணமாக ஒன்பது மாதங்களில் விடுவிக்கபடுகிறார்.

தேசத்துரோகி என அவமானப்படுத்தபட்ட ஹாம்சன் தன் பிள்ளைகளுடன் முதுமையைக் கழித்தார். மீண்டும் ஒரு நாவலை எழுதி (On Overgrown Paths )தனது எழுத்து திறமையை வெளிப்படுத்த முயன்றார். அந்த நாவல் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

ஹாம்சனின் மனைவி மரியா சிறையிலிருந்து வீடு திரும்பினார். இரண்டு முதியவர்களும் ஒன்றாகக் கடந்த காலத்தை நினைத்தபடியே சீட்டாடியபடியும் இசை கேட்டபடியும் நடைபயிற்சி மேற்கொண்டபடியும் நாட்களைக் கடத்தினார்கள்.

தன் மீது சுமத்தப்பட்ட துரோக குற்றச்சாட்டிற்கு மனைவி மரியா தான் காரணம் என ஹாம்சன் முழுமையாக நம்பினார். அந்த வருத்தம் அவருக்குள் இருந்த்து. வாழ்வின் கடைசி நிமிஷங்களில் அவர் மரியாவை மன்னித்தார். அவளது கைகளைப் பற்றிக் கொண்டே இறந்து போனார்.

எது ஒரு எழுத்தாளனை அரசியலில் ஈடுபடச் செய்கிறது. அவனது கனவுகள், லட்சியங்கள். சமூக மாற்றம் பற்றி அவனுக்குள் இருந்த கொந்தளிப்புகள். இவையே எழுத்தாளனை அரசியலில் ஈடுபடச் செய்கிறது.

சிலர் நேரடியாக அரசியல்கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். சிலர் பண்பாட்டு அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். டால்ஸ்டாய் செகாவ் போன்ற எழுத்தாளர்கள் மக்களிடம் சமூக மாற்றம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே தங்களின் அரசியல் எனச் செயல்பட்டிருக்கிறார்கள்.

ஹாம்சன் மண்ணை நேசித்தவர். ஏழை எளிய மக்களுக்கு விடிவுகாலம் வந்துவிடாத என் கனவு கண்டவர். ஆகவே அவர் எளிதாக நாஜி வலையில் வீழ்த்துவிட்டார்.

புகழுக்காக, பணத்திற்காக, அற்ப சுகங்களுக்காக அரசியலை தேடிப் போன எழுத்தாளர்கள் மிகக் குறைவே.

நாஜிகளின் எழுச்சியின் போது பல எழுத்தாளர்களும் ஹிட்லர் மகத்தான தலைவர் என்பது போன்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அப்படியான பிம்பம் திட்டமிட்டு உருவாக்கபட்டது. நாஜி பிரச்சாரத்துறை அதைக் கவனமாக வளர்த்தெடுத்த்து. அதை எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனப் பலரும் நம்பினார்கள்

ஆனால் யூத இன அழிப்பும், ஹிட்லரின் யுத்தவெறியும் அறிந்தபிறகு எழுத்தாளர்களில் பலர் நேரடியாக ஹிட்லரை எதிர்த்துச் செயல்பட்டார்கள். கட்டுரைகள் எழுதினார்கள். மக்களிடம் உரையாற்றினார்கள். இதன் காரணமாகக் கொல்லப்பட்டவர்களும் உண்டு

நட் ஹாம்சனுக்கு நாஜிக் கொடுமைகள் பற்றி எதுவும் தெரியாது. அவர் பிரிட்டனை வளர விடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தார். அதிலும் இந்தியாவைப் பிரிட்டன் சுரண்டி பிழைப்பது மட்டும் இந்தியாவை அவர்கள் செய்த ஒடுக்குமுறைகள் பற்றி ஹாம்சனுக்குப் பெருங்கோபமிருந்த்து. ஆகவே அவர் நாஜிகளை நம்பினார். அந்த நம்பிக்கை தவறு என அவரே உணர்ந்து கொண்டார். யூத வதை முகாம்களைப் பற்றி அறிந்து கொண்ட போது கண்ணீர் சிந்தினார்.

தனது தவற்றை உணர்ந்து வருந்திய போதும் அவர் மீதான களங்கம் போகவில்லை. துரோகியாகவே அவர் சித்தரிக்கபட்டார். காலம் அவரது தவறுகளை மன்னித்து மீண்டும் அவரை மகத்தான எழுத்தாளராக மக்கள் மத்தியில் கொண்டாடச் செய்த்து. இன்று நார்வேயின் மகத்தான எழுத்தாளர் நட் ஹாம்சனே. அவரது உருவம் பதிந்த நாணயத்தை நார்வே வெளியிட்டுள்ளது.

ஹாம்சனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்திருக்கிறார்fகள். Jan Troell இயக்கிய இப்படத்தில் மேற்கண்ட விஷயங்கள் யாவும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நட் ஹாம்சனின் ஆளுமை அழகாக வெளிப்பட்டுள்ளது. அதிலும் மகளுடன் அவருக்குள்ள உறவு. மனைவி மீதான கோபம். ஹிட்லரை சந்திக்கப் போகும் போது ஏற்படும் பதற்றம். மக்களால் வெறுக்கப்பட்டுத் தனியறையில் அடைத்துகிடக்கும் போது வெளிப்படும் வேதனை என அற்புதமாகக் காட்சிகள் அமைந்துள்ளன.

ஹாம்சன் என்ற இத்திரைப்படம் நட் ஹாம்சனின் வாழ்க்கையை மட்டுமில்லை. நாஜிகளால் எப்படிக் கலைஞர்கள். எழுத்தாளர்கள் தவறாக வழி நடத்தப்பட்டார்கள் என்பதையும் உண்மையாகச் சித்தரிக்கிறது. அவ்வகையில் இதுவொரு முக்கியமான படமென்பேன்.

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: