ரெட் ரிவர்

ரெட் ரிவர் என்ற ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்த்தேன்.ஹாவர்ட் ஹாக்ஸ் இயக்கிய வெஸ்டர்ன் திரைப்படம். (Howard Hawks’s Red River ) 1948ல் வெளியாகியிருக்கிறது. இன்று வெளியாகும் பிரம்மாண்டமான படங்கள் யாவும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலமே உருவாக்கபடுகிறது. ஆனால் பழைய ஹாலிவுட் படங்களில் பிரம்மாண்டம் உண்மையான பல்லாயிரம் பேர்களைக் கொண்டு நேரடியாக படமாக்கபட்டு திரையில் மகத்தான அனுபவம் தருவதாக இருந்தது. அப்படி ஹாலிவுட் எபிக் எனப்படும் திரைப்படமே ரெட் ரிவர்.

டாம் டன்சன்  டெக்ஸாசின் பரந்த வெளியில் ஒரு பெரிய மாட்டுப்பண்ணையை உருவாக்குகிறார். வெற்றிடமாக இருந்த நிலத்தினைச் சீர்படுத்தி பெரும் பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். காளைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கான ஆட்கள் அவருடன் இருந்தார்கள். பத்தாயிரம் காளைகள் அவரது பண்ணையில் இருந்தன. இந்த காளைகளை பராமரிக்க வேலையாட்கள் இருந்தார்கள்.

டன்சன் பூர்வகுடி இந்தியர்களுடன் நடந்த சண்டையில் தனது காதலியை இழந்தவர். ஆகவே தனியே வசிக்கிறார். அவரது வளர்ப்பு பையன் மேட் கேர்த்.  அவன் துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவன். தந்தையிடமிருந்தே துப்பாக்கி சுடுவதற்கு கற்றுக் கொள்கிறான். இந்தப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை, சவாலை இரண்டு தலைமுறை மனிதர்கள் எப்படி சந்திக்கிறார்கள் என்ற புரிதலை உருவாக்குகிறார். டன்சன் பிடிவாதமான மனிதர். நான் நினைத்தவற்றை சாதிக்க கூடியவர்.

இவர் தனது பண்ணையிலிருந்த பத்தாயிரம் காளைகளை டெக்ஸாசில் இருந்து கான்சாஸ் நோக்கி ஒட்டிக் கொண்டு  பயணிக்க முயற்சிக்கிறார். சாத்தியமே இல்லாத பயணம். வழியில் பூர்வகுடி இந்தியர்களுடன் எதிர்பாராத தாக்குதல் இருக்க கூடும் என எச்சரிக்கைகளை மீறி அசாத்தியமான இந்த பயணத்தை துவங்குகிறார். பத்தாயிரம் காளைகளுடன் அவர்கள் மேற்கொள்ளும் பயணமே படத்தின் மையக்கதை.

பிரம்மாண்டம் என்பது உண்மையில் இதுவே. பத்தாயிரம் காளைகள் திரையில் மூர்க்கமாக ஒடுகின்றன. இரண்டு யூனிட் கேமிராக்கள் மூலம் அதைப் படமாக்கியிருக்கின்றன. என்ன ஒரு அற்புதம். திரையில் நாம் காணுவது ப்யூர்மேஜிக்.

ஜான் போர்ட் படங்களில் காணப்படும் வெஸ்டர்ன் சாகசங்களை அப்படியே மறுஉருவாக்கம் செய்திருப்பது போல ஹாவர்ட் ஹாக்ஸ் உருவாக்கியிருக்கிறார்.  அமெரிக்க சினிமாவில் தனிபெரும் ஆளுமையாக உயர்ந்து நின்றவர் ஜான் போர்ட். இவரது searchers திரைப்படம் ஒரு நிகரற்ற காவியம்.

ரெட் ரிவர் படத்தை கலரில் உருவாக்கவே முனைந்திருக்கிறார்கள். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியில்லை என்பதால் படத்தை கறுப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். கறுப்பு வெள்ளை காட்சிகள் தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. அது நினைவுகளின் வடிவம்.

ரெட் ரிவர் படத்தின் கிளைமாக்ஸ் மறக்கமுடியாதது.

அது போலவே இரவில் பூர்வகுடி இந்தியர்கள் தாக்குதல் நடத்தும் காட்சியும் அதை சமாளிக்கும் விதமும் தனித்துவமானது.

இன்னொரு காட்சியில் இராத்தங்கலுக்கு ஒரு இடத்தில் முகாமிட்டிருக்கிறார்கள். எதிர்பாராமல் காளைகள் கலைந்து ஒட ஆரம்பிக்கின்றன. ஆயிரக்கணக்கில் ஒடும் காளைகளை துரத்திக் கொண்டு குதிரையில் போகிறார்கள். திரையெங்கும் காளைகளின் ஆவேசமான ஒட்டம். காளைகளைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலைக் கொள்ளச் செய்ய அவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் அரியதொரு காட்சி.

John wayne டன்சனாக சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளர் Russell Harlan.  எப்படி இந்தக் காட்சிகளை படமாக்கினார் என்று வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் ஒளிப்பதிவு.  1948ல் படம் வெளியாகி பெரும்  வெற்றியைப் பெற்றது. அந்த நாட்களில் நான்கு மில்லியன் டாலர் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து John wayne இதே இயக்குனருடன் நான்கு படங்கள் நடித்திருக்கிறார். படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஒன்றரை லட்சம் டாலர்கள். அத்துடன் லாபத்தில் பத்துசதவீதம். படத்தில் நடிப்பதற்காக உண்மையான கௌபாய்களை தேடிக் கண்டுபிடித்து நடிக்க வைத்திருந்தார்கள். ஆயிரக்கணக்கில் காளைகளை கொண்டு வந்து பயன்படுத்தினார்கள். பெரும் பொருட்செலவில் உருவாக்கபட்ட படம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு காணும் போதும் அதன் வசீகரமும் தனித்துவமும் மாறவேயில்லை.

•••

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: