என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

இணையதளங்கள்
 

கொட்டிக் கிடக்கும் கோடானு கோடி இணைய தளங்களில் தரமானதும் பயனுள்ளதும் தான் விரும்பி உலாவுவதுமான இணைய தளங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்

 
காமிக்ஸ் உலகம்

உலகில் அதிகம் காமிக்ஸ் படிக்கின்றவர்கள் ஜப்பானியர்கள். மங்கா எனப்படும் அவர்களது காமிக்ஸ் குழந்தைகள் துவங்கி வயதானவர்கள் வரை வெவ்வேறு கருப்பொருள்களில் வெளியாகி லட்சக்கணக்கில் விற்பனையாகின்றது. பிராங்மில்லரின் சின்சிட்டி, 300 போன்ற திரைப்படங்களின் பின்னால் காமிக்ஸே உள்ளது. தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என்று தேடித்தேடி வாசித்திருப்பார்கள். இன்றும் காமிக்ஸ் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு பரிந்துரை செய்யும் இணையதளமிது.


இலங்கைத் தமிழ் படைப்புகளுக்கான பிரத்யேக நூலகம்

சமகாலத் தமிழ் படைப்பிலக்கியத்திற்கு வளமையான பங்களிப்புச் செய்தவர்கள் இலங்கைத் தமிழ் படைப்பாளிகள். புகலிட வாழ்வின் நெருக்கடிகளுக்கு ஊடாகவும் அவர்களது படைப்புச் செயல்பாடு வியக்கத்தக்கது. கவிதை, சிறுகதை, புதினம். விமர்சனம் .நாடகம் என்று பரந்துப்பட்ட தலைப்புகளில் இலங்கைத் தமிழ்படைப்பாளிகளை ஒரு சேரப் படிப்பதற்கும் அவர்களது புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும் மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சி இது. பல ஆண்டுகாலமாக தேடியும் கிடைக்காத புத்தகங்களை இந்த நூலகத்தில் பார்க்கும் போது இதற்கு முன்முயற்சி எடுத்தவர்களை நன்றியோடு பாராட்ட விரும்புகிறேன்.

குறும்பட இயக்குனர்களின் கவனத்திற்கு

சமீபமாக தமிழில் குறும்படம் எடுப்பவர்கள் அதிகமாகயிருக்கிறார்கள். மக்களுக்கான சினிமா என்பது பேச்சளவில் நின்றுவிடாமல் மாற்று முயற்சிகள் தீவிரமாகச் செயல்படுவது உற்சாகம் அளிப்பதாக உள்ளது. குறும்படங்களை பல்வேறு உலகத் திரைப்படவிழாக்களுக்கு அனுப்புவதற்கு போதுமான வழிமுறைகளை பலரும் அறிந்திருக்கவில்லை. ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள உலகக் குறும்பட விழாவில் தங்களது படங்களை அனுப்ப விரும்புகின்றவர்கள். இந்த இணையதளத்தை பார்வையிடவும்.

நவீன விஞ்ஞானமும் மருத்துவமும்

விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சிகள் பிரமிக்க வைக்ககூடியவை. உயர் விஞ்ஞானத்தின் புதிய தளங்களை அறிய விருப்பம் உள்ளவர்களுக்காவும், மருத்துவத்தில் புதிய முயற்சிகள் மற்றும் மருத்துவ சஞ்சிகைகள் தொடர்பாகவும் உள்ள இணைய தளமிது. இதில் ஒலி -ஒளி பதிவுகள் நிறைய உள்ளன.

அறியப்படாத தமிழகம்

தமிழகத்தின் ஆயிரம் வருட வரலாற்றை ஒரு ஆவணப்படமாக உருவாக்கினால் எப்படியிருக்கும் என்ற கனவினை நனவாக்கியுள்ளது ஊர் என்ற அரிய வீடியோப் பதிவு. அகழ்வாய்வு சேனலின் உதவியோடு எம்.வி. பாஸ்கர் மற்றும் கே.டி. காந்திராஜனால் உருவாக்கபட்டுள்ள இப்படம் தமிழக வரலாற்றை மிக ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்திருக்கிறது. சங்ககாலம் துவங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, சமணம் என தமிழ்வாழ்வின் கலாச்சாரத் தொன்மையை நேர்பட விவரிக்கிற ஆவணப்படம். தரமிக்க ஒளிப்பதிவு, ஒலிச்சேர்கை என்று தேர்ந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கபட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய முக்கிய ஆவணப்பதிவு


இளையராஜா பற்றிய உரைகள்

தமிழ் திரையிசையில் இளையராஜாவின் சாதனைகள், குறிப்பாக மேற்கத்திய இசைப்பாணியை அவர் திரையிசையில் எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றிய தாசரதியின் அருமையான ரேடியோ உரை எம்பி3 வடிவில் கிடைக்கிறது. அத்துடன் தமிழ்திரையிசையின் முன்னோடிக் கலைஞர்கள் பற்றிய விரிவான உரைகளும் உள்ளன. ஸ்டேன்போர்டு பல்கலைக் கழக எப்எம்மில் ஒலிபரப்பான இந்த இசையுரைகள் அதன் காப்பகத்தில் நேயர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளப் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளது. இது போலவே ஹந்தி மற்றும் மலையாளப் பாடல்கள் குறித்த ரசனையான நேர்காணல்கள், உரைகளும் இங்கே இடம் பெற்றுள்ளன.


ஜே. கிருஷ்ணமூர்த்தியை அறிந்து கொள்ள

நம் காலத்தின் தனித்துவமிக்க தத்துவவாதியும் தமிழகத்தைச் சேர்ந்த உயர்சிந்தனாவாதியுமான ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவரது நேர்காணல்கள், ஆடியோ வீடியோ பதிவுகளளப் பார்வையிடவும் உதவும் அரிய தளம்.


வல்லினம் சிற்றிதழ்

மலேசியத் தமிழ் படைப்புலகின் நவீன சாளரமாக உருவாகியுள்ளது வல்லினம் சிற்றிதழ். முதல் இரண்டு இதழ்கள் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன. தேர்ந்த வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம் கொண்டுள்ள இந்த இதழை எழுத்தாளர் நவீன் மற்றும் நண்பர்கள் உருவாக்கியுள்ளனர்.


அங்கும் இங்கும்

வலைப்பதிவுகளில் நான் விரும்பி வாசிக்கும் பதிவகம். குவைத்தில் வசிக்கும் சித்தார்த் தேர்ந்த ரசனை கொண்டவர். சமீபமாக தனது வலைப்பதிவில் டுஸ்டே வித் மோரி என்ற பிரபலமான புத்தகத்தின் தமிழாக்கத்தை மேற்கொண்டு வருகிறார். அரிய முயற்சியது. இவரது வலைப்பதிவில் உள்ள திருப்பாவைப் பகுதியை மிகவும் ரசித்து வாசித்து வருகிறேன்.


கலைப்படங்களுக்கான நிதியுதவி பெற

கலைப்படங்களுக்கான நிதியுதவி மற்றும் குறும்படங்களுக்கான முதலீடு செய்வதற்கு தேசியத் திரைப்பட வளர்ச்சிக்கழகம் அதிக ஆர்வம் காட்டிவருகிறது. அது குறித்த விபரங்கள் மற்றும் உரிய படிவங்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. அத்தோடு சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் உலகத் திரைப்படங்களைத் திரையிடுவதற்காக சினிமா கிளப் ஒன்றை நடத்தி வருகிறது. அதில் உறுப்பினராவதற்கான விபரங்களும் இந்த இணையத்தில் கிடைக்கின்றன. புதிய திரைக்கதைக்களை சமர்பிக்க விரும்பிகின்றவர்களும் இவர்களைத் தொடர்பு கொள்ளலாம்

 

சமகால  உலகச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எனத் தேடி வாசிக்க விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கு உரிய இணையதளம் இது. ஆசியா , ஆப்ரிக்கா. ஐரோப்பா என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் மிக முக்கிய படைப்பாளிகளின் படைப்புகள் உள்ளன. குறிப்பாக  

உருது இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோவின் முக்கிய படைப்பான Toba Tek Singh, Third Letter to Uncle Sam இரண்டு கதைகள் ஆசியப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தியா மொழியில் வெளியான சிறந்த  உலகச்சிறுகதைகள் இவை என்று சொல்லலாம். சதத் ஹசன் மண்டோ  இந்தியப்பிரிவனை குறித்து தீவிரமாக எழுதியவர். மும்பையின் திரைப்பட உலகில் பணியாற்றிவர். அவரது கதைகள் தமிழில் தொகுப்பாக வெளியாகி உள்ளன. 

அது போலவே மே 2007 ல் பதிப்பிக்கபட்டுள்ள இதன் பதிப்பு சிறையில் இருந்தபடியே தனது எழுத்துரிமையை வெளிப்படுத்தும் படைப்புகளை கவனப்படுத்துகிறது. இது போல இதன் முந்தைய பதிப்புகளில் மிகச்சிறந்த கட்டுரைகள் , கதைகள் வாசிக்க காத்திருக்கின்றன. 

இலக்கியவாசகர்களுக்கான இணையதளமிது. 

பாப், ராப், ஜாஸ் ப்ளு என்று இசையை தேடித்தேடி கேட்பவராக நீங்கள் இருந்தால் ஜமெண்டோ உங்களுக்கானது.  நுற்றுக்கணக்கான முழுமையான இசைத்தகடுகள் இங்கே உள்ளன. அவற்றை  இலவசமாக எவரும் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம். தனிப்பட்ட இசை கேட்பதற்கு மட்டுமே இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறது இந்த இணையதளம். இந்த  இசைத்தொகுப்பில் நான் கேட்டு ரசித்த இரண்டு குறுந்தகடுகள் உள்ளன. அவை. 

musique de l'Inde du Nord : hindusthani music

Samadhi  by SaReGama.

இரண்டிலும் மிகச்சிறந்த புல்லாங்குழல் தனியிசை உள்ளது. பின்னிரவில் அதை கேட்கும் போது மனது இலவம்பஞ்சை போல எடையற்று மிதப்பதை உணர முடிகிறது 

உலகசினிமாவின் முக்கிய இயக்குனர்களை பற்றியும் அவர்களது படங்களை பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கான ஆன் லைன் சினிமா இதழின் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் உலகசினிமா குறித்து தீவிரமான கட்டுரைகள் விவாதங்கள் அறிமுக குறிப்புகளை வெளியிடுகின்றது. இதன் கடந்த இதழ்கள் முறையாக வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தின் ஒரு பகுதியான சிறந்த இயக்குனர்கள் பட்டியல் ஒன்றும் அவர்களை பற்றிய  சுயவிபரகுறிப்புகள் அவர்கள் படங்களை பற்றிய அறிமுகம் இடம் பெற்றுள்ளது. 

தீவிர சினிமா ரசிகர்களுக்கான இணையதளமிது. 

We Are the World Cinema, The Treasures and the Fakes: The Last Films of Orson Welles, Tendentious Innocence: Chaplin's Use of Doubling in City Lights and The Idle Class, Cinema/Affect/Writing. போன்ற முக்கியமான சினிமா கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.  

           கவிதை ஒவியம் புகைப்படம் போன்றவற்றில் நடைபெறும் பரிசோதனை முயற்சிகளுக்கான களமிது. மரபை மீறிய படைப்புகளை முதன்மைபடுத்தும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களும், ஒவியங்களும் சிறப்பாக உள்ளன. அத்தோடு புதிய எழுத்தாளர்களின் கவிதைகளில் வெளிப்படும் மொழியும் படிமங்களும் புதிய வாசிப்பு அனுபவத்தை தருகின்றன. ஆன் லைன் இதழான இதில் நார்மென் மெயிலரின் நீண்ட பேட்டியொன்று ஆடியோ பதிவாக இடம் பெற்றுள்ளது.  

தமிழ் பிளாக்குகளில் நான் தொடர்ந்து வாசித்து வரும் முக்கியமான வலைப்பதிவகம் இது. பிகேபி பல்வேறு மென்பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மிக எளிமையாகவும் நுட்பமாகவும் எழுதிவருகிறார். அத்தோடு  தமிழ் எழுத்துரு, குழந்தைகள் இலக்கியம்மின் புத்தகம், சினிமா, ஊடகம் ,என்று பல்வேறு துறைசார்ந்த பதிவுகளையும் சிறப்பாக தருகிறார். தமிழ் இணையதள வாசகர்களுக்கு நான் சிபாரிசு செய்யும் முக்கிய வலைப்பதிவகம் இது. 

திரைக்கதை எழுத விரும்புகின்றவர்களுக்கான சிறந்த மென்பொருள் இது. ஹாலிவுட்டில் உள்ள திரைக்கதை ஆசிரியர்கள் பலரும் பைனல் டிராப்ட் மூவி மேஜிக் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதன் விலை அதிகமானது. ஆகவே திரைக்கதை ஆசிரியர்களின் பிரத்யேக தேவையை மனதில் கொண்டு உருவாக்கபட்ட இந்த இலவச மென்பொருள் திரைப்படத்துறைக்கு கிடைத்த பரிசாகும். 

இந்த மென்பொருளை பயன்படுத்தி திரைக்கதை எழுதப்படும் போது உடனடியாக அதை படப்பிடிப்பிற்கு தேவையான ஷெட்யூல் மற்றும் உடை, சிறப்பு பொருட்கள், தயாரிப்பு நாட்கள் என யாவையும் இதன் வழியாகவே திட்டமிட முடியும். விண்டோஸ் மேக் இரண்டிற்கும் பயன்படக்கூடிய இரண்டு மென்பொருட்கள் இந்த இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றன. 

சினிமா திரைக்கதை எழுத விரும்புகின்றவர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். மிக எளிமையான மென்பொருள் இது. தமிழில் டைப் செய்யும் போது கதாபாத்திரத்தின் பெயர்கள் மட்டும் இதில் உள்ளிட முடிவதில்லை. மற்றவகையில் மிகுந்த உதவிகரமான மென்பொருள் இது. 

புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனரான மொசான் மெக்மல்பப்பின் இணையதளமிது. இதில் அவரது திரைப்படங்கள் மற்றும் அவரது கட்டுரைகள் அவரை தொடர்ந்து சினிமா  இயக்குனராகிய அவரது பெண் சமீரா மற்றும்  ஹானா ஆகியோரின் திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ஈரானில் மெக்மல்பப் நடத்தும் திரைப்பட பள்ளி குறித்தும் அதன் இன்றைய செயல்பாடுகளையும். ஈரானில் உள்ள தணிக்கை முறை பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. ஈரானிய திரைப்படங்களின் முன்னோடி இயக்குனரான மெக்மல்பப்பின் திரைக்கதைகளும், சிறுகதைகளும் இலவசமாக பதிவிரக்கம் செய்து கொள்ள கிடைக்கின்றன 

தமிழ் இலக்கியத்தின் ஆதாரமான பிரதிகளான தேவாரம் திருவாசகம், பிரபந்தம் துவங்கி ஜெயகாந்தன், கல்கி , கண்ணதாசன் வரையான விரிந்த பலநுறு முக்கிய படைப்புகளை மின்புத்தங்களாக உருமாற்றி இலவசமாக பதிவிரக்கம் செய்து கொள்ள வகை செய்திருக்கிறது மதுரைத்திட்டம். டாக்டர் கல்யாண சுந்தரத்தின் பல ஆண்டு கால கடும் உழைப்பால் உருவான இந்த திட்டம் இன்று உலகமெங்கும் உள்ள தமிழ் வாசகர்களுக்கு அரிய சாளரமாக உள்ளது.

இலவசமாக தமிழ் மின்புத்தகங்களை வாசிக்கவும் பதிவிரக்கம் செய்து கொள்ளவும் விரும்புகின்றவர்களுக்கான இணையதளமிது.