உலகம் ஜன்னல் வழியாகத்தான் எனக்கு அறிமுகமானது. அப்போது நான் எக்கி நின்றால் மட்டுமே ஜன்னல் தெரியும் வயதிலிருந்தேன். அந்த ஜன்னலின் வெளியே என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக முக்காலியை இழுத்துப்போட்டு அதன் மீதேறி ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொள்வேன். வெளியே சதா அலைந்து கொண்டேயிருக்கும் வெயிலை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
ஊர் சுற்றும் ஆசை எந்த வயதில் முளைவிட துவங்கியது. ராமநாதபுர மாவட்டத்தின் ஒரு சிறு கிராமம் ஒன்றில் வளர்ந்த என்னை உலகின் விஸ்தாரணத்தை நோக்கி அலையச் செய்தது எது? எவரது நிழலை தொடர்ந்து நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று எத்தனையோ முறை யோசித்து பார்த்திருக்கிறேன். என் நினைவில் எப்போதும் பசுமை மாறாமலிருப்பது ஒரு ஜன்னல் மட்டுமே. உலகம் என்னோடு அப்படி தான் உறவு கொள்ள துவங்கியது.
ஏழெட்டு வயதுகளில் ஜன்னலை பிடித்தபடியே வெளியே பார்த்து கொண்டிருப்பேன். தெருவில் இறங்கி விளையாட பயமாக இருக்கும். ஜன்னலுக்கு அப்பால் ஒரு வேப்பமரமிருந்தது. அதன் பின்னால் சில வீடுகள் இருந்தன. அதற்கும் பின்னால் சில தெருக்களிருந்தன. அதற்கெல்லாம் அப்பால் ஆகாசம் இருந்தது. எனக்கும் ஆகாசத்திற்கும் இடையில் ஒரேயொரு ஜன்னல் மட்டுமே இருப்பது போல தோன்றும். தண்ணீருக்குள் ஒரு மீன்குஞ்சை விட்டால் அது எத்தனை லாவகமாவும், சந்தோஷமாகவும் தண்ணீரின் பிரம்மாண்டம் பற்றிய பயமின்றி நீந்திப் போகிறதோ அப்படி இந்த ஜன்னலை கழட்டி எடுத்துவிட்டால் நானும் காற்றில் மிதந்தபடியே ஆகாசம் வரை செல்லக்கூடும் அல்லவா என்று கற்பனை செய்து கொள்வேன்.
ஆனால் ஜன்னல்கள் மரத்தால் செய்யப்பட்டவை. வளைக்க முடியாத இரும்பு கம்பிகள் குறுக்கே பொருத்தபட்டவை. ஒரு மக்காசோளத்தை கடித்து தின்பது போல இந்த ஜன்னலை கடித்து தின்ன முடியாது. மரத்திலிருந்து இலை தானே உதிர்ந்து விடுவது போல ஜன்னல் வீட்டிலிருந்து உதிர்ந்து போய்விடாதா என்று கூட யோசித்து கொண்டிருப்பேன். ஆனால் ஜன்னல்கள் இரக்கமற்றவை. கண்ணீரால் கரைந்து போகாதவை இரும்பு கம்பிகள். அந்த வயதில் ஜன்னல் உலகை காட்டி காட்டி மறைந்து கொள்ளும் மாயக்கண்ணாடி போன்றிருந்தது.
வீட்டிற்குள்ளேயே நாலைந்து பசுமாடுகள் கட்டப்பட்டிருக்குமளவு பெரியது எனது வீடு. அதில் நான் நின்று பார்க்கும் ஜன்னலை போல ஏழு இருந்தன. ஒவ்வொரு ஜன்னலுக்கு வெளியேயும் தனித்தனியான ஆகாசம் இருப்பதாகவே நம்பினேன். ஜன்னல்கள் பகலோடு மிக நெருக்கமாகவும், இரவோடு பகைமை கொண்டிருப்பது ஏன் என்று அப்போது புரியவேயில்லை. சில நாட்களில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாலை வெயில் அடங்கி குபுக் குபுக் என்று குமிழ் விடுவது போல இருட்டு கசிந்து பெருகத் துவங்கும். என் கண் முன்னிருந்த வேம்பை, வீடுகளை, தெருக்களை இருட்டு தன் கடைவாய் பற்களால் மென்று தின்றுவிட்டது போல யாவும் மறைந்து போய்விடும். இருட்டிற்குள் கண்களால் துழாவியபடியே உலகம் எங்கேயிருக்கிறது என்று தேடிக் கொண்டிருப்பேன்.
இருட்டை உற்றுப்பார்த்தால் அது உன்னை பிடித்து கொள்ளும் என்று வீட்டில் இருந்தவர்கள் பயமுறுத்தி ஜன்னலை மூடுவார்கள். வீடு அப்போது ஒரு தீப்பெட்டி போலவும் நாங்கள் அதற்குள் பதுங்கியிருக்கும் தீக்குச்சிகளை போலவும் இருப்போம். இரவில் உலகம் என்னவாகிறது. இருட்டிற்கு எத்தனை கண்கள் இருக்கின்றன? எப்படி கரைந்து போய்விட்டது பகல் ? இப்படி பதிலற்ற கேள்விகளுடன் இருந்த பால்யத்தில் இருட்டை போலவே மொத்த உலகையும் தின்று தீர்த்துவிட வேண்டும் என்ற பேராசை எழத் துவங்கியது.
நடை பழகும் வயதிலிருந்து என் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது வெயில். அது வெயில் என்று தெரியாமலே தரையிலில் ஊரும் வெளிச்சத்தை நாக்கால் நக்கி குடித்துவிட முயன்றிருக்கிறேன். சில நாட்கள் படிகளில் நின்று காணூம் போது வெயில் தன் அகன்ற சிறகுகளை விரித்து தெருவில் நடனமாடுவது போலிருக்கும். சப்தமில்லாமல் அது சுவரில் ஏறுவதும் வீட்டின் சமையல் அறை வரை நடந்து திரிவதும் அதிசயமானதாக தோன்றும்.
வெயில் என் முதல் தோழன். பள்ளி நாட்களில் வெயிலின் தோளில் கைபோட்டபடியே தெருவிலும், தட்டான்கள் கிறங்கி கிடக்கும் தும்பை பூத்த வெளிகளிலும் சுற்றியலைந்திருக்கிறேன். அப்போது உலகம் ஒரு எலுமிச்சை பழத்தை போல எந்த பக்கமிருந்தும் ஒரே வாசனையை நுகரக்கூடியதாகயிருந்தது. வெயில் கற்றுக் கொடுத்ததெல்லாம் தன்னியல்பில் அலைந்து திரிவதற்கு தான்.
வெயில் கரைகள் அற்ற ஒரு நதியை போல எல்லா திசைகளிலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் பூனையை போல மெல்ல ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும். வீட்டின் ஒடுகள் வெயிலைக் குடித்து முறுக்கேறி சப்தமிடும் போது வெயிலின் சிரிப்பை நாம் கேட்க முடியும். தெருவில் ஒடும் நாயின் முதுகில் கூட வெயில் தத்தியோடுவதை பார்த்திருக்கிறேன்.
வெயிலை குடித்து குடித்து கிறங்கி ஊரே தன் இயல்பில் மூர்க்கம் கொள்வதும் தண்ணீரில் ,சமையல் பாத்திரங்களில் என யாவிலும் வெயிலின் ரேகைகள் படிந்திருப்பதை கண்டிருக்கிறேன். வெயில் என் உச்சந்தலையில் இறங்கி கால்பெருவிரல் நகம் வரை என்னை பீடித்திருக்கிறது. உடலில் வெயில் வரைந்த சித்திரங்கள் ஒரு போதும் அழியாதவை.
ஆரம்ப பள்ளியில் முதன்முதலாக சுற்றுலா அழைத்து போயிருந்தார்கள். கன்யாகுமரி கடற்கரையில் விடியாத இரவில் பாதி துக்கமும் விழிப்புமாக நடந்து போனேன். அலைகளின் சப்தம் கேட்டதேயன்றி கடல் தெரியவில்லை. இருட்டு கடலைக் கவ்வியிருந்தது. கிழக்கே வெகுதொலைவில் இருந்து வெளிச்சம் பீறிடத்துவங்கி நெல்லிக்காய் அளவு தெரிந்த சூரியன் பார்த்து கொண்டிருந்த போதே பருத்து விரிந்து ஆவேசத்துடன் கடலை கிழித்து கொண்டு வானத்திற்கு ஏறி வீரியம் மிக்க கால்களால் ஒங்கி மிதித்தபடியே வானில் நடக்க துவங்கிய போது பகல் வந்து விட்டது, பகல் வந்துவிட்டது என்று கத்தினேன்.
கடலளவு வெளிச்சம் விரிந்து கொண்டிருந்தது. அப்போது தான் வெயில் கடலை விடவும் விசாலமானது என்ற நிஜம் புரிய துவங்கியது. வெளிச்சம் உலகின் கடைகோடி குத்துச்செடி வரை பரவி நீண்டது. இருளின் சுவடேயில்லை. துடைத்து வைத்த கண்ணாடி போல உலகம் பளீரென தெரிந்தது.
சூரியனோடு உறவு கொள்வது எளிதானதில்லை. சூரியன் நம் தலைக்கு மேலாக செல்லும் ஒரு விண்கோள் மட்டுமல்ல. அது உலகின் மீது படரும் ஒரு பேரதிசயம். வெளிச்சத்தை போல பரவசமூட்டும் பொருள் வேறு என்ன இருக்கிறது உலகில். சூரியனை நேர் கொள்வது எளிதானதில்லை. நாம் ஒரு தாவரமாக இருந்து பார்த்தால் மட்டுமே வெளிச்சத்தின் ருசியை அறிந்து கொள்ள முடியும்.
வெயில் எங்கே செல்கிறது எனத்துவங்கிய கேள்வி தான் என் பயணங்களுக்கெல்லாம் முதல் புள்ளியாக இருந்தது. மிக அதிசயமானதொரு நாளைப் போல நினைவில் தேங்கியுள்ளது கரடியை கூட்டிக் கொண்டு ஒருவன் வந்து நின்ற பகல். அப்போது எனக்கு பத்துவயதிருக்கும். கரடியைக்கூட்டிக்கொண்டு வந்தவன் மெலிந்து போயிருந்தான். அவனோடு இருந்த கரடி உடல் முழுவதும் மயிர் அடர்ந்து போயிருந்தது. கரடியின் கண்கள் பழுப்பாக இருந்தன. அக் கண்களுக்குள் கரடி வாழ்ந்த காடு ஒளிந்து கொண்டிருப்பது போலிருந்தது. கரடிக்காரன் தெருத்தெருவாக கரடியை கூட்டிக்கொண்டு வித்தை காட்டினான். கரடியின் வலது கையில் ஒரு கடிகாரம் கட்டப்பட்டிருந்ததை சிறுவர்கள் வியப்போடு பார்த்து கொண்டிருந்தனர்.
|