முதன்முதலில் புத்தகங்கள் உங்களுக்கு அறிமுகமான விதத்தை பற்றி சொல்லுங்கள்
எனக்கு அறிமுகமான முதல் புத்தகம் காமிக்ஸ். எங்கள் வீட்டில் ஒரு நுலகமிருந்தது. அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நுற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. வீட்டில் அனைவருமே படித்தவர்கள் என்பதால் புத்தகம் படிக்கும் பழக்கம் இயல்பாகவே இருந்தது. அந்த நுலகத்தில் இருந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தை பனிரெண்டு வயதில் வாசிக்க ஆரம்பித்த போது தான் புத்தகம் என்ற விசித்திர உலகினை அறிய துவங்கினேன். தேடித்தேடி காமிக்ஸ் புத்தங்களை படித்தேன். அதுவும் சிவகாசி அருகில் இருந்த காரணத்தால் காமிக்ஸ் பிரிண்ட் ஆகும் இடத்திலே போய் வாங்கி படிப்பேன். பல நேரங்களில் அச்சிடப்பட்ட பாரங்களிலே காமிக்ஸ் படித்திருக்கிறேன்.
ரிப்கெர்பியும் ஜானி நீரோவும் இரும்புக்கை மாயாவியும், வேதாளமும் என் உலகின் பிரிக்க முடியாத நண்பர்களானார்கள். அம்மா வழி தாத்தா தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் நிறைய வாசிப்பவர். அவர் ஒரு கடமையை போல என்னையும் சகோதரிகளையும் சிறுசிறு புத்தகங்களை சப்தமாக வாசிக்க சொல்வார். அது போல ஏதாவது ஒரு புத்தகத்தை படித்து அதன் கதை சுருக்கத்தை சொல்ல செய்வார்.
விளையாட்டில் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்த எனக்கு புத்தகங்கள் ஒரு கற்பனையான உலகை திறந்துவிட்டன.நான் படித்த காமிக்ஸ் புத்தகங்களில் உள்ள வாசகங்கள் யாவையும் வெள்ளை பேப்பர் வைத்து ஒட்டி அதில் பென்சிலால் நானே ஒரு கதை எழுதுவேன். ஒரே புத்தகத்தை பல தடவைகள் படிப்பேன். ஒரு நாள் இரும்புக்கை மாயாவி போல எப்படி மறைந்து போவது என்று மின்சாரத்தில் கையை வைத்து துக்கி எறிந்த சம்பவம் வரை நடந்திருக்கிறது. புத்தகம் ஒரு ஆக்டோபசை போல தன் அரூபமான கரங்களால் எப்போதுமே என்னை இறுக்கி பிடித்து கொண்டுதானிருக்கின்றது.
புத்தங்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
நினைவுகளை பதிந்து வைப்பதற்கு இதுவரை உலகில் கண்டுபிடிக்கபட்டவற்றில் மிக எளிய வழி புத்தங்கள் மட்டுமே. ஒவ்வொரு புத்தகமும் ஏதோவொரு நினைவின் சாட்சியே. கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்கு புத்தங்களை மட்டுமே துணையாக இருக்கின்றன. திருக்குறள் எழுதப்பட்டு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகிறது. அந்த காலகட்டத்தை சேர்ந்த வேறு ஒரு பொருள் கூட இன்றில்லை. புத்தகம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தமிழ்வாழ்வியலின் சாட்சிகளாக தான் சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் உள்ளன. புதைமேடுகளாக கூட காண முடியாத நம் மூதாதையர்களின் வாழ்க்கையும் அவர்களது சுக துக்கங்களும் யாரோ ஒரு எழுத்தாளரால் புத்தகங்களாக மட்டுமே பதிவு செய்யபடுகின்றன. மனிதனுக்கு கற்பனை செய்யும் சக்தி இருக்கும் வரை புத்தங்கள் இருக்கும்.
இந்நாள் வரை உலகில் கோடானகோடி புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏன் மனிதர்களை புத்தகங்களை தேடிப்தேடிப்படிக்கிறார்கள் என்றால் நம் வாழ்வனுபவங்களுக்கு வெளியில் உள்ள உலகை அறிந்து கொள்வதற்கும்
, என்றைக்குமான மனித ஒழுக்கம், அறம். நன்மை தீமை , போன்றவற்றை அறிந்து கொள்ளவும் சகமனிதர்களின் வாழ்வின் மீது அக்கறை கொள்ளவும் தான் புத்தங்கள் வாசிக்க படுகின்றன.
அண்டை வீட்டில் உள்ள மனிதனுக்கு அடி விழுந்தாலும் கலங்காத நாம் புத்தகத்தில் நமக்கு பிடித்த ஒரு கதாபாத்திரத்தின் துயரத்திற்காக கண்ணீர் விடுகிறோம். அது தான் புத்தகத்தின் வலிமை.
உடற்பயிற்சிகள் எப்படி உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறதோ அது போல மனதிற்கான பயிற்சி தான் புத்தகம் படிப்பது.
ஜன்னலை திறந்துவிட்டவுடன் அறைக்குள் காற்று நிரம்புவது போல புத்தகத்தை பிரித்தவுடன் மனது விகாசம் கொள்ள துவங்கிவிடுகிறது. கண்ணாடி நம் முகத்தை மட்டுமே காட்டுகிறது. புத்தங்கள் தான் நம் அகத்தை காட்டுகின்றன. நீங்கள் என்ன புத்தகம் படிக்கின்றீர்கள் என்பதை வைத்து நீங்கள் யார் என்ன வகையான இயல்பு கொண்டவர் என்று சொல்லிவிட முடியும்.
குழந்தைகளுக்கு புத்தகத்தை எப்படி அறிமுகம் செய்வது ?
இன்றைய சூழலில் குழந்தைகள் படிக்க வேண்டுமானால் முதலில் பெரியவர்கள் படிக்கும் பழக்கத்திற்கு உள்ளாக வேண்டும். அவர்களால் மட்டுமே குழந்தையை வாசிக்க செய்ய இயலும். சாக்லெட் வாங்கி கொடுப்பதற்கு தினமும் ஐந்து ரூபாய் செலவு செய்யும் பெற்றோர்கள் மாதத்திற்கு ஐம்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கி தர ஆயிரம் முறை யோசிக்கிறார்கள். எந்த குழந்தையும் நான் படிக்க மாட்டேன் என்று சொல்வதில்லை. நாம் அதற்கு அறிமுகம் செய்ய தவறுகிறோம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு விதமான ருசியிருக்கும். எனவே அதற்கு எது பிடிக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக வேறுபட்ட சில புத்தகங்களை வாங்கி தருவதன் வழியே குழந்தையின் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம். எங்கள் வீட்டில் நான் சிறுவனாக இருந்த நாட்களில் மாதம் தோறும் பாக்கெட் மணியோடு புத்தகம் வாங்க என்று ஐந்து ருபாய் தருவார்கள். அதை சேமித்து வைத்து வருட இறுதியில் ஐம்பது ருபாய்க்கு புத்தகம் வாங்குவேன். இது போன்ற பழக்கம் குழந்தையை தனக்கு விருப்பமான புத்தகத்தை தேடி வாங்க செய்யும்.
ஐஸ்கிரீம் பார்லர். பிட்சா கார்னர், சினிமா தியேட்டருக்கு குழந்தைகளை அழைத்து செல்வதில் நாம் காட்டும் அக்கறை புத்தக கடைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதில் ஏற்படுவதில்லை. முதலில் நாம் செய்ய வேண்டியது. மாதம் ஒரு முறையாவது குழந்தைகளை புத்தககடைக்கு அழைத்து போக வேண்டும். அது போலவே கதைகளை வாசித்து காட்டும் பழக்கம் நமக்கு வர வேண்டும். பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி தருவதோடு கட்டயாம் ஒரு புத்தகமும் வாங்கி தர வேண்டும். இவை யாவும் விட பாட புத்தங்களை மட்டும் படித்தால் போதாது என்ற மனப்பாங்கு பெற்றோர்க்கு இருக்க வேண்டும்.
வாசிப்பு பழக்கம் இப்போது தகவல் தெரிந்து கொள்வதற்காகவும் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்காகவும் மட்டுமே பயன்படுகிறதே அது ஏன் ?
அது உண்மையல்ல. அப்படி தோற்றம் தரும்படியாக உருவாக்கபட்டிருக்கிறது. எல்லா வணிகங்களை போலவே புத்தகமும் இன்று ஒரு வணிகப்பொருள். சந்தையின் பகட்டும் கவர்ச்சியும் புத்தகங்களையும் தொற்றிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு கம்ப்யூட்டர் வந்தபிறகு உலகில் உள்ள யாவுமே இணையத்தில் கிடைக்கும் என்ற பொய்யான கற்பிதமும் உருவாக்கபட்டிருக்கிறது. உண்மையில் இது எதுவும் நிஜமானதில்லை.
எல்லா புத்தகங்களுக்கும் இது பொருந்தாது. திருக்குறளை ஒருவன் ஆழ்ந்து வாசித்து உள்வாங்கி கொண்டால் அதை விட சிறந்த மேனேஜ்மெண்ட் புத்தகம் கிடையாது. அதே புத்தகத்தை தத்துவம் அறிந்து கொள்ளவும் , காதலை அறிந்து கொள்ளவும், ஏன் அரசாங்கத்தை எப்படி நிர்வகிப்பது என்று அறிந்து கொள்ளவும் பயன்படுத்த முடியும். புத்தகம் படிக்கும் நீங்கள் யார். எந்த நோக்கில் எந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள் என்பதை பொறுத்தே அதன் விளைவுகள் உருவாகும்.
இன்றைய பரபரப்பான உலகில் பணம் மட்டுமே குறிக்கோளாக முன்நிறுத்தபடுகிறது. பணம் முக்கியம் தான். ஆனால் அதை அடைவதற்கான வழியும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கான வழியும் எளிதானதில்லை.
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி புத்தகங்ளின் பிரதான நோக்கம் மனித வாழ்வை மேம்படுத்துவதே. அது இலக்கியமானாலும் அறிவியல் ஆனாலும் மனிதவாழ்வை எப்படி அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது என்பதே முக்கியமானதாக இருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் மிகவும் பாதிப்பு ஏற்படுத்திய புத்தங்களை சொல்லுங்கள். ?
ஒவ்வொரு வயதிலும் ஒரு புத்தகம் என்னை முழுமையாக ஆக்ரமித்து கொண்டிருக்கிறது. மஞ்சள் காமாலை கண்டவன் உடல் முழுவதும் மஞ்சளாகி விடுவது போல புத்தகத்தின் ஆழ்ந்த பாதிப்பு அதன் மொழியை , சிந்தனையை எனக்குள் அப்படியே பதிய வைத்திருக்கின்றது. குறிப்பாக பாரதியாரின் கவிதைகள். பள்ளி வயதில் துவங்கி இன்று வரை பாரதியாரின் கவிதைகள் எனக்குள்ளாக எப்போதும் ஒரு ஆவேசமான மனநிலையும்
, கவித்துவ எழுச்சியையும் ஏற்படுத்தி வருகின்றது. அது போலவே ஆண்டாளின் திருப்பாவை. ஒவ்வொரு முறை கேட்கும் போது காதலின் உன்னதமான தவிப்பையும் நெருக்கத்தையும் உணர செய்கிறது. அதன் பிறகு பைபிள் , தமிழில் ஆறுமுக நாவலரால் மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழ் பைபிளின் வாசகங்கள் எனக்குள் அன்பையும் ப்ரியத்தையும் தீவிரமாக்கியிருக்கின்றன.
ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர். குறிப்பாக மேக்பெத்தும், ஒத்தலோவும் வாசித்த நாட்களில் இருந்து இன்று வரை என் மனதில் அழியாத வாசகங்களாக உள்ளன. இது போலவே டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு மற்றும் அன்னாகரீனனா , டஸ்டாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் மற்றும் கரமசோவ் சகோதரர்கள், செல்மா லாகர்லேவின் தேவமலர் , கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நுற்றுண்டுகால தனிமை, போர்ஹேயின் சிறுகதைகள், , வைக்கம் முகமது பஷீரின் பால்யகால சகி, தேவதச்சன் கவிதைகள் போன்றவை என்னை உருவாக்கியதில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
ஒரு நல்ல வாசகர் இந்த புத்தகங்களை படித்திருக்க வேண்டும் என்று நீங்கள் நம்புகின்ற 25 தமிழ் புத்தகங்களை சொல்லுங்கள்
நுற்றுக்கணக்கில் சிறந்த புத்தங்கள் உள்ளன. அதில் என் விருப்பத்திற்கு உரியதாக இதை சொல்லலாம்.
1) புதுமைபித்தன் சிறுகதைகள் 2) ஜெயகாந்தன் சிறுகதைகள் 3) வண்ணதாசன் சிறுகதைகள் 4) வண்ணநிலவன் சிறுகதைகள் 5) ஆண்டாளின் திருப்பாவை. 6) பாரதியார் கவிதைகள் 7) சித்தர் பாடல்கள். 8) கம்பராமாயணம். 9) மகாபாரதம் கும்கோணம் ராமானுஜாச்சாரியார் பதிப்பு. 10) ஒரு புளிய மரத்தின் கதை சுந்தர ராமசாமி. 11) பெரியார் சிந்தனைகள் ஆனை முத்து தொகுப்பு. 12) அசோகமித்ரன் சிறுகதைகள் 13 ) பொன்னியின் செல்வன் கல்கி. 14) அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன் 15) புயலிலே ஒரு தோணி - பா. சிங்காரம்
16) கோபல்லகிராமம் - கி.ராஜநாராயணன். 17)அக்னிநதி - குர்அதுல்துன் ஹைதர் ( தமிழாக்கம் ) 18) ஆரோக்கிய நிகேதனம் ( தாராசங்கர் பானர்ஜி - தமிழாக்கம் ) 19 ) நீலகண்ட பறவையை தேடி - அதின்பந்தோபாத்யாய ( தமிழாக்கம் ) 20 )அந்நியன் ஆல்பெர் காம்யூ. 21)தமிழக வரலாறு அரசு வெளியீடு. இரண்டு தொகுதிகள். 22) குறுந்தொகை. 23) குட்டி இளவரசன் தமிழாக்கம் 24)கு.அழகிரிசாமி கதைகள். 25) இடைவெளி -சம்பத்
7) கதை படிக்கும் பழக்கமம் பரவலாக குறைந்துவிட்டதாக சொல்கிறார்களே அதை பற்றி சொல்லுங்கள் ?
அது பொய் என்பதை லண்டனில் துவங்கி சென்னை வரை ஹாரிபோட்டர் புத்தகம் வாங்க வரிசையில் நிற்கும் காட்சிகள் திரும்ப திரும்ப நிருபிக்கின்றன. இது ஏதோ ஹாரிபோட்டருக்கு மட்டுமேயானது அல்ல. வருடம் தோறும் நடைபெறும் புத்தக கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாவது கதைகள் தான். பொன்னியின் செல்வன் விற்கும் அளவிற்கு அகராதிகளோ , பொது அறிவு புத்தகங்களோ விற்பதில்லை.
கதை படிக்கும் பழக்கம் முன்பு போல எளியமையானதாகயில்லை. இப்போது வாசகர் தாங்கள் தொலைக்காட்சியிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிந்திராத கதைகளை வாசிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கதை சொல்வதில் தனித்திறன் தேவைப்படுகிறது. டாவின்சிகோடு நாவல் ஏற்படுத்திய பரபரப்பு அளவிற்கு கடந்த சில வருடங்களில் வெளியான எந்த துறை புத்தகமும் ஏன் கவனம் பெறவில்லை. காரணம் அது ஒரு புதிய கதை சொல்லலை முன்வைக்கிறது. உண்மையில் தொடர்கதை படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டிருக்கிறது. மொழியாக்கம் செய்து வெளியிடப்படும் நாவல்கள் படிக்கும் பழக்கம் அதிகமாகியிருக்கிறது.
நுலகங்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்லுங்கள் ?
இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நுலகங்களுக்கு சென்றுவந்திருக்கிறேன். அவ்வகையில் எனக்கு இன்றும் மிக விருப்பமானது எனது மல்லாங்கிணறு கிராமத்தில் உள்ள கிளை நுலகமே. அது தான் என்னை உருவாக்கியது. நுலக நேரம் தவிர்த்தும் வாசிக்க வேண்டும் என்பதற்காக நுலகரோடு நட்பு கொண்டு நுலகத்தின் சாவியை நானே பலநாட்கள் வாங்கி வைத்து படித்திருக்கிறேன். கிராம நுலகங்கள் வளர வேண்டும். அதுபோல வீதி தோறும் குடிநீர் தொட்டிகள் வைக்கபட்டிருப்பது போல சிறிய படிப்பகங்கள் உருவாக்கபட வேண்டும்.
நான் பார்த்து வியந்த நுலகங்களில் முக்கியமானவை கல்கத்தாவில் உள்ள தேசிய நுலகம். ஸ்ரீவில்லிபுத்துரில் உள்ள பெனிங்டன் நுலகம் , மதுரை பல்கலைகழகத்தின் நுலகம் , திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை நுலகம்
, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கன் சென்டர் நுலகம், சென்னையில் உள்ள பிரிட்டீஷ் கவுன்சில் நுலகம் , பூனாவில் உள்ள பண்டராகர் மகாபாரத ஆய்வு நுலகம், டெல்லி சாகித்ய அகாதமியின் தேசிய நுலகம்,ரோஜா முத்தையா நுலகம்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்த போது மெல்போர்னில் உள்ள தலைமை நுலகத்திற்கு சென்றேன். அதன் நுலகர் என்னிடம் தங்கள் நாட்டின் நுலகம் பாராளுமன்ற கட்டிடத்தை விடவும் பெரியது என்று அறிமுகம் செய்து வைத்தார். அப்படி சொல்லிக் கொள்ளும் போது அவர் முகத்தில் ஏற்பட்ட பெருமிதம் கண்டேன். அது தான் ஒரு தேசத்தின் உண்மையான அடையாளம் என்று தோன்றியது.
புத்தக உலகின் முக்கிய பிரச்சனை என எதை கருதுகிறீர்கள் ?
புத்தங்களை வாங்க விரும்புகின்றவர் சந்திக்கும் முக்கிய பிரச்சனை எது நல்ல புத்தகம் எது புதிதாக வந்திருக்கிறது. யார் எழுதியது. எப்படி அதை வீட்டிலிருந்தபடியே வாங்குவது போன்றவற்றிற்கான முறையான வசதிகள் செய்து தரப்படாதது. அமேசான் என்ற ஒரு இணையதளம் உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்களுக்கு தேவையான புத்தகத்தை ஐந்து நாட்களில் அனுப்பி தருகிறது. ஆனால் சென்னையில் வெளியான ஒரு புத்தகம் திண்டுக்கல்லை அடைவதற்கு ஒரு வருசமாகிவிடுகிறது. இன்னொரு பக்கம் துறை வாரியாக என்ன புதிய புத்தங்கள் வெளியாகி உள்ளன என்ற தகவல்கள் கூட தெரிந்து கொள்ள வழிகள் இல்லை.
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் வின்னிஒப்ரா என்ற நடிகை ஒபரா புக்கிளப் என்ற நிகழ்ச்சி நடத்துகிறார். அது சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி. அதில் ஒரு புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டால் உடனே லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்கின்றன. அது போல தமிழில் இத்தனை தொலைக்காட்சிகள் இருந்தும் ஒரு முக்கியத்துவம் வரவேயில்லை.
புத்தக கண்காட்சி வருடம் தோறும் நடக்கிறது. அதற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் அவர்கள் முயற்சித்தால் சிறிய வெளியீடு ஒன்றை இலவசமாக உள்ளே நுழையும் அனைவருக்கும் தர இயலும் குறிப்பாக தமிழின் சிறந்த நுறு கவிதைகள் , பத்து சிறுகதைகள், குழந்தைகள் பாடல்கள் , நாட்டுபுற பாடல்கள் தொகுப்பு. நுறு சிறந்த நுற்களின் பட்டியல் என்று எவ்வளவோ செய்ய இயலும். அது போலவே இரண்டு டாலர் , ஐந்து டாலர் புத்தக கடை என்று எல்லா புத்தகங்களையும் மலிவுவிலையில் விற்கும் பிரத்யேக கடைகள் உருவாக்கபட வேண்டும்.
தற்போது என்ன படித்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் புதிய புத்தகம் என்ன வெளியாகியிருக்கிறது ?
தமிழில் மகாத்மா காந்தியின் கடைசி நாட்கள். ஆங்கிலத்தில் பிகாசோவின் மனைவியான பிரான்கோஸி கிளாத் எழுதிய லைப் வித் பிகாசோ. சென்னை மாநகரின் நுற்றிஐம்பது வருடத்திற்கு முந்தியை வாழ்வை பற்றிய எனது விரிவான நாவல் யாமம் தற்போது வெளியாகி உள்ளது. |