என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

எனியோ மோரிகோன்
 

பள்ளி நாட்களில் மதுரையில் பார்த்த ஆங்கிலப்படமொன்றின் இசை எப்போதும் என் மனதில் ஒலித்தபடியே இருக்கிறது. தி குட் தி பேட் அண்ட் தி அக்லி என்ற அந்த படம் தந்த வியப்பு மிகத் தனித்துவமானது.  துப்பாக்கி சண்டைகளும் கௌபாய் வீரர்கள் சந்திக்கும் மதுவிடுதிகளும், கம்பீரமான குதிரைகளின் பாய்ச்சலும் மனதில் திரும்ப திரும்ப ஒடிக் கொண்டேயிருக்கின்றன.

அந்த வயதில் ஆங்கிலப்படத்தின் பெயரை தவிர யார் நடிகர்கள் , யார் இயக்கியது என்று எந்த விபரமும் தெரியாது. படத்தின் கதையைக் கூட நாமாகவே யூகித்து கற்பனை செய்து கொள்ள வேண்டும். இத்தனையும் மீறி கடைசிக்காட்சி வரை பார்வையாளர்களை கட்டிப்போட்டு வைத்தது அதிரடியான சாகசங்களும் நம்பும் படியான காட்சிபடுத்துதலுமே.

கௌபாய் திரைப்படங்களில் மிகக் குறைவான வசனங்களே இடம் பெறுகின்றன. சம்பவங்களும் குறைவு. படத்தை விறுவிறுப்பாக்குவது பழிவாங்குவதற்காக ஒரு ஆளை தேடி கௌபாய்  காத்திருப்பதும், அந்த காத்திருத்தலின் போது ஏற்படும் தடங்கல்களுமே. அத்தோடு கௌபாய் எவ்வளவு அடிபட்ட போதும் அழுவதில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்கபட வேண்டிய ஒன்று. ஒரு துறவியை போல சிரிப்பும் அழுகையும் கடந்த நிலை கௌபாய் கதாநாயகனிடமிருந்தது.

அந்த நாட்களில் போனியம் இசை மதுரையில் மிக பிரபலமாகயிருந்தது. டவுன்ஹால் ரோட்டிலிருந்த டீக்கடைகளில் கூட போனியம் போடுவார்கள். கேட்டுக்கேட்டு அந்த பாடல்கள் தமிழ்பாடல்களை போலவே தோற்றம் கொள்ள துவங்கியிருந்தன. ரீகல் தியேட்டரில் துவங்கி கிதார் வாசிக்கும் கிறிஸ்துவ போதகர் வரை பலரிடம்  கேட்ட போதும் யாருக்கும் கௌபாய் படத்தின் இசையமைப்பாளரை பற்றி தெரிந்திருக்கவில்லை.

கௌபாய் படம் பார்ப்பதற்கு என்றே மதுரையில் தனியான ரசிகர்களிருந்தார்கள். அவர்கள் ரிவால்வார் ரீட்டாவில் துவங்கி டிஜாங்கோ வரை எந்த மொழியில் துப்பாக்கிவீரர்கள் படம் வெளியானபோதும் தவறாமல் வந்து பார்ப்பார்கள். டிக்கெட் வாங்க காத்திருக்கையில் முந்தைய படம் பற்றி தங்களுக்குள் ஏதாவது பேசிக் கொள்வார்கள்.

நான் ஆர்வமிகுதியால் கௌபாய் ஏன் தொப்பியணிந்திருக்கிறான்?அவனது துப்பாக்கி என்ன விலை? கௌபாய்கள் எந்த ஊரில் வசிக்கிறார்கள் என்று ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பேன். பாத்திரக்கடை ஒன்றில் வேலை செய்யும் வயதானவர் கௌபாய்கள் லண்டனில் வசிப்பதாக சொன்ன தகவலை வெகுநாட்களுக்கு நம்பிக் கொண்டிருந்தேன்.

பள்ளியிறுதி படிக்கும் போது புதுமண்டபம் பகுதியிலிருந்த பழைய இசைத்தட்டுகள் விற்கும் நபரிடம் சென்று தி குட் பேட் அண்ட் தி அக்லி படத்தின்  இசைதட்டு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் தனது மரப்பெட்டியை திறந்து அதிலிருந்த ஏதேதோ பழைய ரிக்கார்டுகளை புரட்டி பார்த்துவிட்டு  படத்தில் வரும் இசையின் ஒரு பகுதி இருக்கிறது என்று உறையிட்ட ஒரு அரக்கு ரிக்கார்டு ஒன்றை கொண்டு வந்து காட்டினார். அதில் சிறிய எழுத்தில் எனியோ மோரிகோன் ( Ennio Morricone) என்ற பெயர் இருந்தது.

அந்த பெயரை எப்படி உச்சரிப்பது என்று கூட தெரியாமல் மோரி என்று சுருக்கி வைத்துக் கொண்டேன். ஒரேயொரு முறை அந்த இசைத்தட்டை கேட்க முடியுமா என்று கெஞ்சி அவர் கடையில் இசையை திரும்ப கேட்டேன். இசைதட்டு சுழலச்சுழல அதிலிருந்து கௌபாய்கள் துப்பாக்கியுடன் புறப்பட்டு செல்லும் காட்சிகள் மனதில் கொப்பளிக்க துவங்கின.

குறிப்பாக இசையின் ஊடாக வரும் விசில் சப்தத்தை கண்ணை மூடிக் கொண்டால் மனதில் தொப்பியோடு கௌபாய்கள் முகம் தோன்றி மறையும். இசைதட்டை வாங்குவதற்கு கையில் காசில்லாமல் வீடு திரும்பினேன். ஆனால் அந்த பெயர் என்னோடு கூடவே ஒட்டிக் கொண்டு வந்தது.

கல்லுரி நாட்களில் திரும்பவும் கௌபாய் படங்கள் ஒவ்வொன்றாக தேடிப் பார்க்க துவங்கினேன். முன்பு போல சாகசத்தின் மீது மட்டும் மனம் குவியாமல் சாவை ஒரு விளையாட்ட கருதும் மனோபாவமும் செம்புழுதி பறக்கும் வெட்டவெளியும், தண்ணீருக்காக அவர்கள் அலைந்து திரிவதும் மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தியது.

அப்போது தான் புகழ்பெற்ற கௌபாய்படங்கள் எல்லாவற்றிற்கும் இசையமைத்தவர் எனியோ மோரிகோன் என்பதை தெரிந்து கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு ஆங்கிலப்படம் பார்க்கும் போது அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பெயர்களை கவனிப்பதோடு படத்திற்கு யார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். யார் இசையமைத்தவர் என்பதையும் உன்னிப்பாக கவனிக்க துவங்கினேன். எனியோ மோரிகோன் பற்றி அறிந்து கொள்ளும் தேடுதல் அப்போது தான் துவங்கியது.

1928ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த எனியோ மோரிகோன் சிறுவயதிலே இசைபயிலத் துவங்கினார். குடும்பத்தின் வறுமையும் பசியும் நெருக்கிய போதும் அவரது மனம் இசையின் நுட்பங்களின் மீதே குவிந்திருந்தது. பதிநான்கு வருடங்கள் முறையாக மேற்கத்திய இசையை கற்றுக் கொண்ட அவர் இசைக்கோர்வைகளை வாசிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற துவங்கினார்.

அதன் பிறகு 1961ல் அவர் சினிமா உலகிற்குள் பிரவேசித்தார்.  அதிலும் செர்ஜியோ லியோனி என்ற  இயக்குனருடன் இணைந்து வெஸ்டர்ன் பிலிம்ஸ் எனப்படும் கௌபாய்வகை படங்களுக்கு பிண்ணனி இசையமைக்க துவங்கிய பிறகு உலகமெங்கும் அறியப்பட்ட சிறந்த இசையமைப்பாளராக உருவாகினார்.

ஒரு இயக்குனருக்கும் இசையமைப்பாளருக்கும் உள்ள உறவு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக எனியோ மோரிகோனும் செர்ஜியோ லியோனியுமிருந்தார்கள். 
செர்ஜியோ லியோனி மிகநெருக்கமான குளோசப் காட்சிகளை அதிகம் படமாக்ககூடியவர். அது போன்ற காட்சிகளில் நடிகரின் கண் அசைவிற்கு ஏற்ப எனியோ மோரிகோன் இசையமைத்திருக்கிறார்.

சில வேளைகளில் செர்ஜியோ படத்தின் கதையை சொல்லியதுமே எனியோ மோரிகோன் இசையமைக்க துவங்கி விடுவார். அவர் இசை அமைத்த பகுதிகளுக்கு ஏற்ப காட்சிகளை அதன் பின்பாக செர்ஜீயோ லியோனி படமாக்கியிருக்கிறார். 

சாகச திரைப்படங்களில் என்றும் அழியாத காவியங்களாக அடையாளம் காணப்படும் 
A Fistful of Dollars, For a Few Dollars More, The Good, the Bad and the Ugly, Once Upon a Time in the West, Once Upon a Time in America
.  போன்ற படங்களில் அவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய மாயம் சினிமா ரசிகர்களை இன்றும் மயக்குவதாகவேயிருக்கிறது,

நாற்பது ஆண்டுகாலம் உலகின் முக்கிய இயக்குனர் பலருடனும் இணைந்து 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள எனியோ மோரிகோன் சமகால இசையமைப்பாளர்களில் மிகவும் பெருமைக்குரியவர். திரையிசை மட்டுமின்றி தனித்த இசைக்கோர்வைகளை உருவாக்கி வாசிப்பதிலும் அவர் சிறந்து விளங்குகிறார்.

எனியோ மோரிகோனுக்கு இப்போது 78 வயதாகிறது. Mission, The Untouchables, Cinema Paradiso, Bugsy, Lolita, Malèna  என்று இவரது பிண்ணனி இசையில் உருவாகி உலகப்புகழ்பெற்ற திரைப்படங்களின் பட்டியல் மிக நீண்டது. ஐந்து முறை ஆஸ்கார் விருதுக்கு இவரது பெயர் பரிசீலனைக்கு உட்படுத்தபட்ட போதும் ஒரு முறை கூட அவருக்கு விருது வழங்கபடவில்லை.

ஆனால் இந்த ஆண்டு எனியோ மோரிகோன் வாழ்நாள் சாதனையாளருக்கான  ஆஸ்கார் விருதை பெற்றிருக்கிறார். ஆஸ்கார் விருதுவழங்கும் விழாவின் நேரடி நிகழ்ச்சியில் முதன்முறையாக எனியோ மோரிகோனை திரையில் பார்த்த போது ஏற்பட்ட நெகிழ்வு சொல்லில் அடங்காதது.

வயதான அவர் நிகழ்ச்சி நடக்கும் மேடையை கவனிக்காமல் கைவிரல்களால் காற்றில் ஏதோ சித்திரம் தீட்டுகின்றவர் போல செய்து கொண்டிருந்தார். அருகில் அவரது மனைவி சலனமில்லாமல் அமர்ந்திருக்கிறார். இத்தனை வருடங்களாக தன்னை எந்த விதத்திலும் அங்கீகாரம் செய்தா ஆஸ்கார் கமிட்டி இப்போது வாழ்நாள் சாதனை விருது வழங்குகிறது என்ற முரணை யோசனை செய்வது போல அவர் முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. சந்தோஷத்தின் ரேகைகள் அவர் முகத்தில் இல்லை. நினைவுகள் மட்டுமே அவருக்கு துணையாக இருந்தன. 

அவருக்கு விருது வழங்குவதற்காக மோரிகோனின் நீண்ட கால நண்பரும் செர்ஜியோ லியோனியால் அறிமுகபடுத்தட்ட சாகசநடிகருமான கிளிண்ட் ஈஸ்வுட் மேடைக்கு  வந்து எனியோ மோரிகோனை பற்றி அறிவித்த போது ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து கைதட்டி மகிழ்ந்தது.

கிளிண்ட் ஈஸ்வுட் மோரிகோன் இசையமைத்த முக்கிய படங்களிலிருந்து சிறுசிறுகாட்சிகள் கொண்ட குறும்படத்தை அறிமுகம் செய்து வைத்தார். அந்த காட்சிகளின் போது பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் ஏதேதோ நினைவுகளுக்குள் சென்று வருவதையும் தங்களை மீறி கண்ணை துடைத்துக் கொள்வதையும் கண்கூடாக காண முடிந்தது.

ஆங்கிலப்படங்களின் பிண்ணனி இசைகோர்வைகள் தனியான இசைதட்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் இன்று வரை முதலிடத்தில் இருப்பவர் எனியோ மோரிகோன் தான்.

எனியோ மோரிகோனுக்கு நிகராக தமிழ் சினிமாவில் சாதனைகள் செய்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவர் இசையமைப்பு செய்த பல முக்கிய படங்களின் பிண்ணனி இசைக்கோர்வைகள் தனித்த இசைத்தட்டுகளாக வெளிவர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

இன்று எனியோ மோரிகோனின் தேர்ந்தெடுக்கபட்ட பிண்ணணி இசை தரமான இசைதட்டுகளாக கிடைக்கின்றன. விருப்பமிருந்தால் நீங்களும் கேட்டுப்பாருங்கள் ஞாபகத்தின் சுழல்தட்டு உங்களுக்குள்ளும் சுழலத்துவங்குவதை அப்போது உணர்வீர்கள்.