என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

படித்தவை
 
எஸ். ராமகிருஷ்ணன் தன்னுடைய தொடர்ந்த வாசிப்பில் தான் வாசிக்கும் முக்கியப் புத்தகங்களைப் பற்றி இங்கே பதிவு செய்கிறார்
 

The Women in Cages - Vilas Sarang

இந்தியாவின் சமகால இலக்கியத்தில் குறிப்பாக சிறுகதைகளில் தமிழே மிக முக்கிய இடத்தில் உள்ளது. இதை எனது வாசிப்பு அனுபவத்தில் நிறைய முறை உணர்ந்திருக்கிறேன். தமிழின் நவீன சிறுகதைகளைப் போல மாறுபட்ட கதைசொல்லல் மற்றும் கதைகளன்கள் கொண்ட சிறுகதைகள் வேறு மொழிகளில் வெளியாவதில்லை. ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தியச் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள பல கதைகள் தமிழில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டுவிட்டவை.

 

இன்று சிறுகதை மராத்தியிலும், உருதுவிலுமே முக்கிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. அவை ஆங்கிலத்தில் தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கின்றன. அவற்றை வாசிக்கும் போது புதிய கதை எழுத்திற்கான வெளியை அறிந்து கொள்ள முடிகிறது

எனக்கு விருப்பமான மராத்திய சிறுகதையாசிரியர் விலா சரங். ஆங்கிலப் பேராசிரியரான இவர் போர்ஹே காப்கா என்று உலக இலக்கியங்களின் முக்கிய படைப்பாளிகளை அறிந்தவர். கற்றுத் தருபவர். இவரது கதையுலகம் புனைவின் புதிய சாத்தியங்களை முன்வைக்கின்றன.

இவரது கதைகள் இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. விலா சரங்கின் கதைகளின் அடிநாதமாக நகர வாழ்வு சார்ந்த அபத்தங்களும் முரண்களுமே உள்ளது. சில வருடங்களுக்கு முன்பாக இவரது சிறுகதை ஒன்றை என்கவுண்டர் இதழில் வாசிக்க நேர்ந்தது. அக்கதையில் தீவு ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறான் ஒருவன். அந்தத் தீவில் பெண்களே கிடையாது. அதைப்பற்றி கேட்கும் போது அவனது அடையாள அட்டையை காட்டினால் அவனுக்குத் தேவையான பெண்ணைத் தருவார்கள் என்று ஒருவன் சொல்கிறான்.

தனக்கு உரிய பெண்ணைப் பெற்றுக் கொள்ளச் செல்பவனுக்கு அங்கே இரண்டு விதமான பெண் உடல்கள் இருப்பது வியப்பு அளிக்கிறது. ஒன்று இடுப்பிற்குள் கீழ் மட்டும் உள்ள பெண். மற்றது இடுப்பிற்கு மேல் மட்டும் உள்ள பெண் உடல்.

இடுப்பிற்குள் கீழ் உள்ள பெண் உடலைப் பெற்றுக் கொண்டால் தேவையான அளவு பாலுறவு கொள்ளலாம். உங்களை மகிழ்விக்கும் ஆனால் அது ஒரு வார்த்தை கூட பேசாது. என்கிறான் நிர்வாகி. அதைப் பெற்றுக் கொண்டு வந்து இன்பத்தில் முழ்கிக்கிடக்கிறான். ஆனால் வேலை நெருக்கடி. சிக்கல் அதிகமாகவே தன்னோடு ஆறுதலாகப் பேசக்கூடிய பெண் வேண்டும் என்று தோன்றுகிறது. தன்னிடம் உள்ள பெண்ணை மாற்றிக் கொள்ள செல்கிறான்.

இடுப்பிற்கு மேல் உள்ள பெண் கிடைக்கிறாள். இவள் அன்பாகப் பேசுகிறாள். ஆறுதல் தருகிறாள். ஆனால் அவளோடு பாலுறவு கொள்ள முடியாது. இதுவும் ஒரு கட்டத்தில் அலுத்துப் போகிறது. ஏன் இந்த பேதம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டும் சேர்ந்த உடலுக்காக ஏங்கத் துவங்கி திருட முயற்சிக்கிறான். துரத்தப்படவே அங்கிருந்து தப்பி வெளியேறி வருகிறான். நேர்காணல் போலவே கதை அமைந்திருக்கிறது.

இந்திய சமூகம் பெண்களை இப்படி இரண்டு துண்டுகளாகவே வெட்டி வைத்து வைத்துள்ளது என்கிறார் விலாசரங். நவீன இந்திய சிறுகதைகளில் மிக முக்கியமானது இக்கதை. அதிலிருந்து அவரது கதைகளை தேடி வாசிக்க துவங்கினேன். சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது சிறுகதை தொகுப்பு தி வுமன் இன் கேஜஸ்.

இத்தொகுப்பில் உள்ள கதைகளும் பகடி, மிகைபுனைவு மற்றும் அபத்த வகையைச் சேர்ந்தவை. குறிப்பாக இந்த தொகுப்பில் உள்ள இரண்டு ராணுவ உயரதிகாரிகள் என்ற கதையில் கர்னல் குருமா என்பவர் ஜனாதிபதி புலாவ் என்பவரை துக்கி எறிந்து அரசியல் சதி செய்கிறார் என்ற பகடி வகை கதை உள்ளது. நவீன அரசியல் விமர்சனமும் அங்கதமும் நிரம்பிய கதையிது. அவ்வகையில் நவீன சிறுகதை உலகில் மிக முக்கியமான சிறுகதை தொகுப்பு

 

Paroles - Poems of Jacques Prevert

பிரெஞ்சு நவீன இலக்கியத்தில் புகழ்பெற்ற கவிஞர் ழாக் பிராவர். இவரது சொற்கள் என்ற கவிதைத் தொகுப்பு தமிழில் வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்து வெளியாகிஉள்ளது.

பிராவரின் கவிதைகள் சர்ரியலிசத் தன்மை கொண்டவை. இவரது கவிதை ஒன்றில் இரண்டு நத்தைகள் குடிவெறியோடு துக்கம் கேட்கச் செல்கின்றன. வரைந்த கிளைகளுக்குள் பறவை வந்து சேர்கிறது, பிராவர் தினசரி வாழ்விலிருந்து தனது கவிதைக்கான கூறுகளை உருவாக்குகிறார். அதிகம் உருவகங்கள், படிமங்களை முன்வைப்பதில்லை. மாறாக எளிமையான, நேரடி மொழியில் அங்கதத் தொனியோடு அவரது கவிதைகள் வெளிப்படுகின்றன.

 

கவிதையின் வழியே உலகோடு நான் பேசுகிறேன். ஒரு வகையில் எனது கவிதைகள் எனது எதிரொலி போல என்று சொல்லும் பிராவர் பதினைந்து வயதோடு படிப்பை முடித்துவிட்டு சிறுசிறு வேலைகள் செய்யத்துவங்கி பின்பு ராணுவத்தில் சிலகாலம் பணியாற்றியுள்ளார். சர்ரியலிசம் உருவான சூழலில் ஆந்த்ரே பிரடனின் நண்பராக அறிமுகமாகி அவரது கவித்துவ கோட்பாடுகளால் ஈர்க்கபட்டு கவிதைகள் எழுதத் துவங்கியுள்ளார்.

1945ல் இவரது பரோல் என்ற முதல்கவிதை தொகுதி வெளிவந்த உடனே அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட்டது. பத்து வருடத்திற்குள் இந்தக் கவிதை தொகுதி ஒரு லட்சம் விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

நாடகம், சினிமா என்று விரிந்த தளங்களில் இயங்கிய பிராவர் நவீன பிரெஞ்சு கவிதைகளில் தனித்து அறியப்படுகிறார். இது அவரது முக்கிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு.

 
 

Surely You're Joking, Mr. Feynman! - Richard P. Feynman

ரிச்சர்ட் பெயின்மென் எனக்கு விரும்பமான இயற்பியலாளர். நோபல் பரிசு பெற்றவர். இவரது இயற்பியல் சொற்பொழிவுகள் மிகுந்த பிரசித்தமானவை. விஞ்ஞானிகள் என்றாலே அதிபுத்திசாலிகள் என்ற பொதுப்படிமத்தை உடைத்து தனது சொந்த வாழ்வைப் பகடி செய்தும் பல்வேறு தளங்களில் அலைந்து திரிந்து வாழ்ந்தவர். அணுஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல முக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர். கலகக்காரர்.

 
பெயின்மெனின் இந்தப் புத்தகம் அவரது சிறுவயதிலிருந்து விஞ்ஞானியானது வரை நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு. பெயின்மென் இசை கற்றுக் கொண்டது. பிக்பாக்கெட் அடிக்கப் பழகியது. கள்ளதமான பூட்டை திறக்கப் பழகியது, பெயிண்டிங் கற்றுக்கொண்டது. பெண்களோடு பழகுவதற்கு ஏற்பாடு செய்தது. ரௌடியை அடித்துப் பழிவாங்கியது என்று படித்து சிரிக்கும்படியான அருமையான கட்டுரைகள். இயற்பியல் அறிஞர்கள் என்றாலே இறுக்கமான மனிதர்கள் என்ற மனநிலையை முற்றிலும் துக்கி எறிந்துவிடும் அற்புதமான எழுத்து பெயின்மெனுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.
 
Draupadi by Pratibha Ray
 

மகாபாரத்தின் மையமாக இருப்பவள் திரௌபதி. அவளுக்கு நேர்ந்த அவமானம் தான் குருசேத்திர யுத்தம் வரை காரணமாக விரிகிறது. திரௌபதியின் பார்வையில் மகாபாரதக் கதையை விவரிக்கும் இந்த ஒரிய நாவல் பிரதிபா ராயால் எழுதப்பட்டுள்ளது. திரௌபதியின் பெயர் கிருஷ்ணை. அவள் யாகத்தில் தோன்றியதாக ஐதீகம் என்பதால் யக்ஞசேனி என்ற பெயரும் உண்டு.

 

இந்த நாவல் திரௌபதி கிருஷ்ணருக்கு எழுதும் கடிதம் போல அமைந்திருக்கிறது. நாவலின் வழியே திரௌபதைக்கும் கிருஷ்ணனுக்குமான அன்பும், ஐந்து பேரை மணப்பது குறித்து திரௌபதி அடைந்த குழப்பங்களும், சபையில் அவமானப்படுத்தபட்ட போது அவள் அடைந்த மனத்துயரும் நன்றாக வெளிப்பட்டுள்ளது. நாவலில் குருசேத்திர யுத்தம் விவரிக்கபடவில்லை. சில பக்கங்களில் அதைப் பிரதிபா கடந்து போய்விடுகிறார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடையாளம் அழிக்கபட்ட ஒரு பெண்ணின் கதையை இன்னொரு பெண் எழுத்தாளரே எழுதியுள்ளது இந்த நாவலின் சிறப்பு. ஆனால் நாவல் என்ற அளவில் இது முழுமையானதாகயில்லை. திரௌபதியைப் பற்றிய அவதானிப்புகள் யாவும் மிக பழமையானதாகவும் முன் அறிந்ததாகவும் இருக்கின்றன.
பிரதிபா ராயின் பார்வைகளும் மரபான தளங்களை விட்டு வெளியே வரவில்லை. நாவல் நேர்கோட்டில் செல்வதால் படிப்பதில் அலுப்பு ஏற்படவே செய்கிறது.

மகாபாரதம் பற்றிய பைரப்பாவின் பர்வம் மற்றும் எம்.டி.வாசுதேவன்நாயரின் இரண்டாம் இடம் நாவலோடு ஒப்பிட்டால் இது மிக எளிமையானது என்றே சொல்ல முடியும்.
நான் உப பாண்டவத்தில் திரௌபதியைப் பற்றி இன்னும் அதிகமாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கிறேன் என்பதால் என்வரையில் இந்த நாவல் ஆர்வம் குறைந்த ஒன்றாகவே இருந்தது. பெண்ணிய நோக்கில் மகாபாரத்தினை அணுகுகிறது என்பதால் ஒரு முறை இதை வாசிக்கலாம்.

 
விடியலை நோக்கி  - பேபி ஹால்தார். தமிழில் எம்.எஸ் 

புகழ்பெற்ற அர்ஜென்டின எழுத்தாளரான போர்ஹேயின் வீட்டில் பணிப்பெண்ணாக முப்பது ஆண்டுகளாக  பணியாற்றிய எபிபீனியா என்ற பெண்
"El señor Borges" என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். எழுத்தாளரின் வீட்டில் வேலை செய்த பெண் தானும் ஒரு எழுத்தாளரானது வாசக உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. அதை நினைவுபடுத்துவது போல இந்தியாவில் பேபி ஹால்தாரின் வருகை நிகழ்ந்துள்ளது 
 

பேபி ஹால்தாரை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கும் வரை அப்படியொரு எழுத்தாளர் இருப்பதையே அறிந்திருக்கவில்லை. புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளரான பிரேம்சந்தின் பேரனும் பேராசிரியருமான பிரபோத் குமார் தன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்த பேபி ஹால்தருக்கு புத்தகம் படிப்பதில் இருந்த விருப்பத்தை கண்டு அவரை படிக்க செய்து அவரது வாழ்க்கையை ஒரு கதையாக எழுதும்படியாக ஊக்கப்படுத்தியிருக்கிறார். 

பேபி ஹால்தரும் தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் முயன்று தன்னுடைய வாழ்வை ஒரு நீள்கதை போல எழுதியிருக்கிறார். வங்காளத்தில் தொடராக வந்து பின்பு ஆலோ ஆந்தாரி என்ற பெயரில் தனி நுலானதின் தமிழாக்கமே விடியலை நோக்கி. இதை எம்.எஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார். 

பேபி ஹால்தர் தனது சொந்த வாழ்க்கையை எவ்விதமான ஒளிவுமறைவுமின்றி விவரிக்கிறார். குறிப்பாக அவரது பால்யநாட்களும் திருமணாகி கணவன் வீட்டு செல்லும் போது தனது சகோதரி ஒருத்தியை அழைத்து செல்வதும் புகுந்த வீட்டில் கணவனோடு ஏற்படும் சச்சரவும் , குழந்தைகளின் பிறப்பும். வேலை தேடி அலைந்த நாட்களும் துயரத்துடன் விவரிக்கபடுகின்றன. 

இவை எல்லாம் ஒரு பெண்ணுக்கு நடந்தவை என்று நினைக்கையில் மனதில் பெரும்பாரம் ஏறிக் கொள்கிறது. அந்த வகையில் பேபிஹால்தரின் எழுத்து தான் சொல்லவந்ததை நேரடியாகவும் எளிமையாகவும் வெற்றிபெற்றுள்ளது என்றே கூறுவேன். 

சென்னை சங்கமம் நிகழ்வின் ஒருபகுதியாக நான் கலந்து கொண்ட நிகழ்வில் தான் பேபி ஹால்தாரின் நுல் வெளியானது. மேடையில் பேசும்போது ஹால்தார் தனது நாவல் தற்போது ஆங்கிலம் சைனீஸ் பிரெஞ்சு உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டு அந்த நாடுகளுக்கு தான் பயணம் செய்ததாக குறிப்பிட்டார். அத்தோடு தன்னை ஒரு எழுத்தாளராக்கிய பிரேம்சந்தின் குடும்பத்தினரை பற்றி நன்றியோடு விவரித்தார். 

எழுத்தின் அறிமுகம் ஹால்தாருக்கு இன்னொரு உலகின் கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. நேற்றுவரை வீடு. குழந்தை பிரச்சனைகள் என்று உழன்று கொண்டிருந்த ஹால்தார் தற்போது எழுத்து, சமூகம் என்று பரந்த பார்வையும், துணிச்சலும், படைப்பின் வசீகரமும் கொண்டவராக காணப்படுகிறார் 

இது ஏதோ ரட்சகரின் அருளால் ஏற்ப்ட்ட அதிசயமல்ல. எழுத்து யாவருக்கும் சாத்தியமானதே. வாசிப்பையும் எழுத்தையும் விரும்பி தொடர இயலுமாயின் அது தரும் சுதந்திரம் எல்லையற்றது என்பதற்கு பேபி ஹால்தார் ஒரு முன்உதாரணம்.

 

உனையே மயல் கொண்டு.   நாவல் - டாக்டர்  என். எஸ். நடேசன் 

டாக்டர் நடேசன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவரது முந்தைய நாவலான வண்ணாத்திகுளம் தீவிரமான வாசிப்பிற்கும் கவனத்திற்கும் உள்ளானது. அவரது சமீபத்திய நாவலை அதன் கைப்பிரதியிலே வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தற்போது மித்ர வெளியீடு சார்பாக வெளிவந்துள்ள இந்த நாவலுக்கு  நான் இந்த முன்னுரையை எழுதியிருக்கிறேன்.  

 

உடலை அறிந்து கொள்வது காமத்திலிருந்தே துவங்குகிறது. உடல் ஒரு வெளி. அதன் அகப்பரப்பு நாம் அறியாதது.  எல்லா உணர்ச்சிகளையும் போலவே காமமும் இயல்பாக வெளிப்படவும் கடந்து செல்லவும் வேண்டியது. ஆனால் ஒழுக்கக் கோட்பாடுகளும், கலாச்சாரத் தடைகளும், காமம் குறித்த சொல்லாடல்களையும், பகிர்தலையும் ரகசியமான செயல்பாடாக மாற்றியிருக்கின்றது. 

அதிலும் பெண்கள் தங்களுடைய பாலுணர்வுகள் குறித்த விருப்பு வெறுப்புகளை காலம் காலமாக தங்களுக்குள்ளாகவே ஒடுக்கி வந்திருக்கிறார்கள். அடக்கபட்ட பாலுணர்ச்சிகளின் கொந்தளிப்பு மற்றும் உடல் ரீதியான பகிர்தலில் ஏற்படும் நெருக்கம் மற்றும் விலக்கத்திலிருந்தே  நவீன நாவல்கள் துவங்குகின்றன. சென்ற நுற்றாணடு வரை பேரின்பம் என்று  மட்டுமே அடையாளப்படுத்த பட்ட பாலுறவு  இந்த நுற்றாண்டில் அகப்பிரச்சனை என்று சுட்டிக் காட்டப்படுகிறது. 

தமிழ் உரைநடையில் பாலின்பம் குறித்த எழுத்து எப்போதுமே கலாச்சார தணிக்கையொன்றிற்கு உள்ளாகியே வந்திருக்கிறது. இந்த தணிக்கையை எழுத்தாளனே மேற்கொண்டு விடுகிறான். அல்லது மதம், அறநெறி, சமூகக் கட்டுபாடு ஏற்படுத்தும் தடைகள் காரணமான  பயம் அவனை நிர்பந்தபடுத்துகிறது. 

தமிழில் நுற்றுக்கணக்கான குடும்ப நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றில் கூட கணவனும் மனைவியும் தங்களுக்குள் உடலின்பம் கொள்வது இயல்பாக எழுதப்படவில்லை. ஆனால் சங்கக் கவிதைகள் காமத்தைப் பாடியிருக்கின்றன. முற்றிய காமத்தின் காரணமாக உடல் கொள்ளும் மாற்றங்களும் மனப்போக்கில் ஏற்படும் கொந்தளிப்புகளும் கவிதைகளாகியிருக்கின்றன.  

ஆண்டாள் மிக இயல்பாக தன் காம உணர்வுகளை பாடலில் பதிவு செய்திருக்கிறாள். வெள்ளிவீதியார் கையில்லாதவன் முன்னால் வெயிலில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகி போவதை போன்றதே காமம் என்று அடையாளம் காட்டுகிறார். 

காமப்பிரதி என்று தனித்து அடையாளமிட்டு வாசிக்கபடுவதற்கான தனிப்பிரதிகள் எதுவும் தமிழில் இல்லை. மாறாக காமம் குறித்து இலக்கிய தளத்தில்  நடைபெற்ற பெரும்பான்மை சொல்லாடல்கள் ஒழுக்க கட்டுபாடுகளையும் அதை மீறும் போதும் அடையும் தண்டனையையுமே வலியுறுத்துகின்றன.. 

ஒரு நுற்றாண்டின் முன்பாக ஐரோப்பிய இலக்கியம் கடந்து சென்று விட்ட பாலுணர்ச்சிகளின் இயல்பான பதிவுகள் இன்றும் தமிழில் மிகுந்த சர்ச்சைக்கும், மிரட்டலுக்குமே உள்ளாகி வருகின்றன. 

நடேசனின் நாவல் பாலின்பத்தின் அகச்சிக்கல்களையே பேசுகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி சென்ற ஒரு ஆணின் பார்வையில் அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களும் அதன் விளைவுகளும் விவரிக்கபடுகின்றன. 

நாவல் இரண்டு தளங்களில் இயங்குகின்றது. ஒன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்படும் பேசாமௌனமும் அதன் விளைவுகளும் பற்றியது. இன்னொன்று புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்படும் மனவெறுமையும், அதைப் போக்கி கொள்வதற்காக பீறிடும் காமமும் பற்றியது. இரண்டு தளங்களின் ஊடாக புலம்பெயர்ந்து சென்ற நினைவுகளும் கடந்த கால இடர்பாடுகள் இன்றும் ரணங்களாக ஆறாமல் இருப்பது பதிவு செய்யப்படுகிறது. 

நாவலிலின் தனித்துவம் அதன் நுட்பமான கதை சொல்லும் முறை. மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு.  சந்திரன் அவன் மனைவி ஷோபா, சந்திரனோடு நட்பு கொள்ளும் ஜீலியா என்று மூன்று முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நாவல் விவரிக்கபடுகிறது. பெரும்பாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள். அதில் ஏற்படும் சிறு சிறு சந்தோஷங்கள் மற்றும் கசப்புணர்வுகள் , பெரும்பாலும் சுயசிந்தனை வழியாகவே வெளிப்படுத்தபடுகிறது. 

நாவலின் அடித்தளமாக வலியும் வேதனையும் வெளியே சொல்லமுடியாத அவமானமும் கொண்டவர்களாக புகலிடம் தேடி இலங்கையிலிருந்து வெளியேறிவர்களின் வாழ்க்கை விவரிக்கபடுகிறது. குறிப்பாக பெண்கள் மீதான வன்முறை அவர்கள் மனதில் தீராத ரணமாக உறைந்து போயிருப்பதை நாவல் மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறது. அது போலவே ஏதோவொரு தேசத்தில் பிழைப்பிற்காக சென்று வாழ நேரும் போது எதிர் கொள்ளும் கலாச்சார தனிமை நாவலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

மனத்தடையற்ற உடலின்பத்தை ஜுலியா சந்திரனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். அது ஒரு சிகிட்சை போன்றே உணர முடிகிறது. உடல் தன்னளவில் அடங்க மறுக்கும் போது காமம் அதை சாந்தம் கொள்ள செய்கிறது. சந்திரன் தன்வாழ்வில் காமத்தின் அடர்ந்த சுகந்தத்தை ஜுலியாவிடமே அறிந்து கொள்கிறான். 

யுத்தம் உடலில் வெளித்தெரியாத மாற்றங்களையும் வடுக்களையும் உருவாக்கியிருக்கிறது. உயிரிழப்பை விடவும் வேதனைமிக்கமது அவமானமும் வலியும் நிறைந்த நினைவுகள். அது நிம்மதியற்று எதிலும் சாந்தி கொள்ள முடியாத மனப்போக்கினை உருவாக்கி விட கூடியது. அதன் விளைவு இந்த நாவல் முழுவதும் எதிரொலிக்கபடுகிறது. 

புகலிடங்களில் வசிக்கும் பெரும்பாலும் ஆண்கள் அந்நிய கலாச்சாரத்தினுள் தங்களை கரைத்து கொண்டுவிடுகிறார்கள். ஆனால் பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் அதை எதிர் கொள்ள முடியாமலும் அதே நேரம் தங்களது பூர்வ நினைவுகளிலிருந்து வெளிவர முடியாமலும் ஊஞ்சலாடுகிறார்கள் . 

நடேசனிடம் மிக நுட்பமான கதைசொல்லும் திறனிருக்கிறது. அதே நேரம் வேதனைகளை மிகைபடுத்தாமல் பதிவு செய்யும் நுட்பமும் கைவந்ந்திருக்கிறது. அவ்வகையில் இந்த நாவல் முக்கியமானது என்றே தோன்றுகிறது. 

இந்த நாவல் மிக விரிவாகவும் இன்னும் பல தளங்களிலும் வளர்ந்து செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. நடேசன் அதை மிகச் சுருக்கமாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதே அதன் சிறிய பலவீனமாக தோன்றுகிறது.  

இயல்பும் எளிமையும் வாழ்வை பதிவுசெய்வதில் தனித்துவமும் கொண்டிருக்கிறது  என்பதாலே இந்த நாவல் என் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.

 

Geisha -   The Secret history of a vanishing world -Lesley downer 

தமிழகத்தில் இருந்த தேவதாசி மரபை போன்று பெண்களை சுகப்பெண்டீராக உடலின்பத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் ஜப்பானில் காலம் காலமாக நடந்து வருகிறது. கேளிக்கை விடுதிகளோடு சேர்ந்து இயங்கும் கெய்ஷா எனப்படும் சுகப்பெண்டீர் இசை நடனம் கற்று தேர்ந்தவர்கள். 

 

ஆனால் அவர்களுக்கு சமூகத்தில் எவ்விதமான உரிய அந்தஸ்தும் கிடையாது. ஒரு காலத்தில் மன்னர்களாலும் பிரபுக்களாலும் பராமரிக்கபட்டு வந்த இந்த பெண்கள் இன்று வறுமையிலும் இடர்பாட்டிலும் உள்ளனர். இன்று கெய்ஷா வகை பெண்கள் எப்படியிருக்கிறார்கள். அவர்களது சமூக மற்றும் கலாச்சார செயல்பாடுகளின் பின்புலம் பற்றி ஆராய்கிறது இந்த நுல். 

அந்தப்புரங்களில் வாழ்ந்த பெண்கள் மற்றும் பொது மகளிரை விலக்கி இசை திறமை உள்ள கெய்ஷாக்களை பதினேழாம் நுற்றாண்டில் தனிக்குழுவாக உருவாக்கினார்கள் என்கிறது இந்த நுல். 

1920களில் எண்பதாயிரம் பெண்கள் கெய்ஷாக்களாக இருந்துள்ளனர். இன்று இருநுறுக்கும் குறைவான பெண்களே இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். அதிலும் குறிப்பாக டோக்யோ மற்றும் கியோட்டோ பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றனர். சேமிஸன் எனப்படும் இசைக்கருவியை வாசிப்பதில் இந்த பெண்கள் மிகுந்த திறமைசாலிகள். 

கெய்ஷா பெண்களின் உடை மற்றும் பழக்கவழக்கங்களை ஆராய்வதோடு சரித்திர பூர்வமாக இந்த சுமை எப்படி பெண்களின் மீது ஏறிக் கொண்டது என்பதையும் இந்த நுல் விவரிக்கிறது. ஜப்பானில் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து கெய்ஷா வகை பெண்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து உருவாக்கபட்டுள்ள இந்த நுல் கெய்ஷா குறித்த அறிமுகத்திற்கு சிறந்த நுலாகும்.  

ஆனால் கெய்ஷா பெண்களின் வாழ்க்கை பற்றி ஜப்பானின் இலக்கிய மேதையான யாசுனாரி கவாபடா எழுதிய நாவல்களில் இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக துங்கும் அழகிகளின் இல்லம் என்ற அவரது நாவல் இதற்கு ஒரு முன் உதாரணம். தமிழில் இந்த நாவல் மொழியாக்கப்பட்டுள்ளது. 

மரபின் பேரால் ஒடுக்கப்பட்ட பெண்களின் வலி நிறைந்த வாழ்வை விவரிக்கிறது இந்த நுல்  

 

Annam Bahu kurvita   -  Jitendra Bajaj & M.D. Srinivas 

உணவின் முக்கியத்துவம் இந்திய சமூகத்தில் காலம் காலமாக எப்படி ஒரு அறமாக வலியுறுத்தபடுகிறது. அதன் பின்புலமாக உள்ள தத்துவம் மற்றும் அறக்கோட்பாடு என்ன என்பதை பற்றிய விரிவான நுல் இது. குறிப்பாக உணவை பகிர்ந்து உண்பது மற்றும் அன்னதானம் தருவதன் பின்புள்ள மரபையும் அதற்கான தத்துவார்த்த காரணிகளையும் விவரிக்கிறது. 

 

அன்னதானம் தருவது எல்லா மதங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அது போலவே நோன்பு இருத்தலும். இரண்டின் பின்னாலும் உணவிற்கும் ஆன்ம தேடுதலுக்குமான உறவு வெளிப்படுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல நமது கடவுள்களும் உணவின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களே. கோவில்களில் இறைவனுக்கு படைக்கப்படும் உணவை பற்றி ஆராய்ந்தால் அது மனிதர்களின் ருசியை ஒத்து இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும் 

தேவைக்கு அதிகமான அளவு சாப்பிடுகின்ற மனிதன் ராட்சசன் என்று நமது கதைகளில் சித்தரிக்கபடுகிறான். பஞ்ச காலங்களில் உணவு தேடி மக்கள் அலைந்த வாழ்க்கை சரித்திரம் எங்கும் காணப்படுகிறது. 

பசித்தவனுக்கும் உணவும் தாகமெடுத்தவனுக்கு தண்ணீரும் தானமாக தருவதை போன்று உயர்ந்த தானம் எதுவுமில்லை என்கிறது மரபு.  இந்நுலின் உள்ளே மகாபாரத்தில் கிருஷ்ணன் யுதிஷ்டருக்கு போதனை செய்த அன்னதானம் பற்றிய குறிப்புகளும் அதற்கு உதாரணமான சொன்ன கதைகளும் விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளன.  

தமிழ் காப்பியமான மணிமேகலையில் அமுதசுரபியின் வழியா பசிப்பிணி நீக்குவதற்கு போராடுகிறாள் மணிமேகலை. பசியைப் பிணி என்கிறது சமணம். வள்ளலாரும் பசித்தவனுக்கு உணவு இட வேண்டும் என்பதையே முக்கிய அறமாக வலியுறுத்துகிறார். அந்த வகையில் இந்த நுல் அறநெறிகளின் ஊடாக உணவு எப்படி வலியுறுத்தபடுகிறது என்பதை விவரிக்கிறது. 

வேத உபநிஷத்துகள் , கீதை, மற்றும் அறநெறி கவிதைகள் உணவு குறித்து எப்படி முக்கியத்துவம் தருகின்றன என்பதை விளக்கமாக விரிக்கிறது இந்த நுல்.  

 

தவளையின் பிரார்த்தனை.  பாகம் 1 & 2 அந்தோணி டி மெல்லோ 

மும்பையில் பிறந்து வளர்ந்த ஜெசுவிட் பாதிரியாரான அந்தோணி டி மெல்லோ தனது பிரசங்கத்திற்காக உருவாக்கிய சின்னஞ்சிறுகதைகளும் நற்செய்திகளும் அடங்கிய தொகுப்பு இது. ஒருவகையில் எளிய உத்வேகம் ஊட்டும் கதைகள் இவை என்று சொல்லலாம். எல்லா பிரசங்கிகளையும் போல தனது பேச்சின் ஒரு பகுதியான தான் வாசித்த, கேட்டு அறிந்த கதைகளை பயன்படுத்தி வந்தார் அந்தோணி டி மெல்லோ. 

 

தான் ஒரு பிரசங்கி அல்ல கதைசொல்லி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் ஒன்பது புத்தகங்களை எழுதியிருக்கிறார். பழமொழிகள், நாட்டார்கதைகள், மெய்தேடல் அனுபவங்கள் கவிதைகள், பௌத்த கதைகள் என்று பல்வேறுவகைப்பட்ட கதைகளின் தொகுப்பான இந்த நுல் மரபான ஆன்மீக தேடலின் எளிமையை வலியுறுத்துகிறது. 

உலகம் முழுவதும் மதப்பிரசங்கம் செய்து வந்த மெல்லோ எல்லாவகையான மதபிரிவினரின் நம்பிக்கைகளையும் ஒன்று கலந்து தனது பிரசங்கத்தை முன்வைப்பராகயிருந்தார். இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில குறுங்கதைகள் கவனிக்கபடவேண்டியவை. மற்றவை சம்பிரதாயமான ஆன்மீக கதைகள்.  

அதிலிருந்து ஒரு கதை. 

முல்லா ஒருவரிடம் சென்று தனக்கு யானைக்கு கரும்பு வாங்குவதற்காக பணம் வேண்டும் என்று கேட்டார். உடனே அந்த நபர் உங்களிடம் தான் யானையே இல்லையே எதற்கு தேவையில்லாமல் இந்த செலவு என்றார். உடனே முல்லா சொன்னார் 

நான் கேட்டது பணத்தை தானே தவிர அறிவுரையை அல்ல.