காதலில் தோற்றவன்.


ஜெர்ரி லூயிஸ் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். இவரது இயக்கத்தில் வெளியான தி லேடிஸ் மேன் என்ற படத்தினைப் பார்த்தேன். 1961ல் வெளியான படம்.

ஹாலிவுட்டின் மிகச்சிறந்த திரைப்படமிது என்று புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் கோதார் கூறுகிறார். பிரெஞ்சு நவசினிமா இயக்குநர் பலரும் ஜெர்ரி லூயிஸை வியந்து கொண்டாடுகிறார்கள். சாப்ளினுக்குப் பிறகு இவரே ஹாலிவுட்டின் அசலான நகைச்சுவை நடிகர்  இயக்குநர் என்கிறார் லூயிமால்

அது உண்மை என்பதற்குச் சாட்சியமாக உள்ளது இப்படம். 1961ல் இவ்வளவு பெரிய அரங்கு அமைப்பும் வித்தியாசமான கோணங்களில் படப்பிடிப்பும் யாரும் செய்தது கிடையாது. ஒரு நகைச்சுவை படத்தை இத்தனை பிரம்மாண்டமாக்க முடியும் என்பதற்கு ஜெர்ரி லூயிஸ் ஒரு உதாரணம்.

மில்டவுன் ஜூனியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் படம் துவங்குகிறது. அங்கே தன் பள்ளிவயது காதலியைச் சந்திக்கச் செல்லும் ஹெர்பெட் அவள் வேறு ஒருவனை விரும்புவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். காதல் தோல்வியில் மனம் உடைந்து போகிறார்.

காதலில் தோல்வியுற்ற ஹெர்பெர்ட் ஹெச் ஹீபர்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் லூயிஸ்.

Humbert Humbert என்பது நபகோவ்வின் லோலிதா நாவலின் கதாநாயகன் பெயர். அந்த நாட்களில் லோலிதா மிகவும் சர்ச்சைக்குள்ளான நாவல் என்பதால் அதைக் கேலி செய்யும் விதமாக லூயிஸ் இந்தப் பெயரை வைத்திருக்கக் கூடும்.

காதலில் தோல்வியடைந்த ஹெர்பெர்ட் பெண்களுக்கான விடுதி ஒன்றில் பணியாளராக வேலைக்குச் சேருகிறார். அந்த விடுதியை நடத்தி வருபவர் ஒபரா பாடகி ஹெலன் வெல்லன்மெல்லன். எடுபிடி வேலைக்கு யார் வந்தாலும் அந்தப் பெண்களைச் சமாளிக்கமுடியாமல் ஒடிவிடுகிறார்கள் என்பதால் ஹெர்பெட்டை தந்திரமாகப் பேசி அங்கே வேலைக்குத் தங்க வைக்கிறார்கள்.

அந்த விடுதியின் முதல்நாள் காலை மிக அழகாகத் துவங்குகிறது. எத்தனை விதமான பெண்கள். எவ்வளவு அறைகள். ஒரே காட்சியில் அதனை லூயிஸ் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்.

அரங்க அமைப்பு அபாரம். $350,000 டாலர் செலவில் அந்த அரங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. அன்றிருந்த அத்தனை தொழில்நுட்பங்களையும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்

ஜெர்ரி லூயிஸின் தந்தையும் ஒரு நகைச்சுவை நடிகரே. அவரது அம்மா ஒரு இசைக்கலைஞர். சிறுவயதிலிருந்த நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார் லூயிஸ். மார்டின் என்ற நண்பருடன் இணைந்து அவர் செய்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் புகழ்பெறவே இருவரும் இணைந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துப் பெரும் வெற்றியைப் பெற்றார்கள். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிவு ஏற்படவே தனியே லூயிஸ் படங்களை இயக்கி நடிக்கத் துவங்கினார். இதற்கு ஆதர்சம் சார்லி சாப்ளின். அவரை நகைச்சுவையின் பேரரசன் என்றே லூயிஸ் புகழுகிறார்.

பெண்கள் விடுதியில் ஒரு ஆண் பணிபுரிய நேர்ந்தால் என்ன நடக்கும் என்பது காமெடி படத்திற்கு போதுமான கதை. அதில் ஆபாசமில்லாமல். அருவருப்பான விஷயம் எதுவும் இல்லாமல் ஒரு நகைச்சுவை படத்தை எடுத்திருக்கிறார்.

பெண்கள் விடுதியில் ஒரு வளர்ப்பு நாய் உள்ளது. அதற்குப் பாலும் மாமிசமும் தர வேண்டும் என்கிறார்கள். சிறிய பாத்திரத்தில் பால் கொண்டு போகிறார் ஜெர்ரி லூயிஸ். ஆனால் கதவைத் திறந்தவுடன் ஏற்படும் அதிர்ச்சியில் மிகப்பெரிய பாத்திரம் ஒன்றில் பால் கொண்டுவந்து தருகிறார். பெரும் இறைச்சி துண்டினை அது ஒரு நிமிஷத்தில் தின்று தீர்த்துவிடுகிறது. கடைசிக்காட்சியில் தான் அந்த வளர்ப்பு மிருகம் வெளியே வருகிறது. அது நிச்சயம் நாம் எதிர்பாராத ஒன்றாகும்

இது போலவே அரிய வண்ணத்துப்பூச்சிகளின் சேகரிப்பு ஒன்றை வைத்திருக்கிறார் ஹெலன். அந்தக் கண்ணாடி பெட்டகத்தினைத் திறந்தவுடன் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துவிடுகின்றன. அவற்றை விசில் அடித்துத் திரும்ப ஜெர்ரி லூயிஸ் வரவழைப்பது நல்ல நகைச்சுவை.

விடுதியிலுள்ள பெண்கள் அவரை நடத்தும் விதமும் அவர்களுக்கு வரும் கடிதங்களை ஜெர்ரி லூயிஸ் ஒப்படைப்பதும் மறக்க முடியாத நகைச்சுவை காட்சியாகும். இது போலவே ஒரு பெண்ணைத் தேடிவந்துள்ள கனவானை ஜெர்ரி லூயிஸ் நடத்தும் விதமும் அவர் தெறித்து ஓடுவதும் அபாரம்.

நேர்மையும் உண்மையும் தான் ஜெர்ரி லூயிஸை எல்லோருக்கும் பிடிக்கச் செய்கிறது. அந்த விடுதியிலிருந்து விடைபெறுவதாக அவர் கிளம்பும் காட்சியில் அதை ஒரு பெண் அழகாக எடுத்துச் சொல்கிறாள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடப்பதும் அதில் ஏற்படும் குழப்பங்களும் உச்சபட்ச நகைச்சுவை. குறிப்பாகச் சவுண்ட் இன்ஜினியர் நடத்தப்படும் விதம். வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறது

ரப்பர் கை-கால்கள், ரப்பர் முகம் கொண்டது போல லூயிஸ் உடலை வளைத்து ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவை செய்து நடித்துள்ளது அபாரம்.

வீட்டிற்கு வரும் நடிகரை நம்ப முடியாமல் அவரை ஹெர்பெர்ட் நிரூபிக்கச் சொல்வதும் அவர் தான் சினிமாவில் செய்த விஷயங்களை நேரில் செய்ய முடியாது எனத் தடுமாறுவதும். நாடக ஒத்திகை செய்வதாகக் கதவை தட்டி திறக்கச் சொல்லி ஒரு பெண் ஹெர்பெட்டை மாறி மாறி அடிப்பதும் மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகள்.

நாடக ஒப்பனை போல முகமூடி அணிந்து தலைகீழாக ஒரு பெண் வருவது, அரங்க அமைப்பு அப்படியே இசைநிகழ்வாக உருமாறுவது என்பதெல்லாம் அன்று யோசித்துப் பார்க்க முடியாத அழகான உருவாக்கம்.

நகைச்சுவை படம் என்பதன் இலக்கணத்தை மாற்றி அமைத்தவர் ஜெர்ரி லூயிஸ். இவரது THE BELL BOY, THE ERRAND BOY, THE NUTTY PROFESSOR, . WHO’S MINDING THE STORE? போன்றவை சிறந்த நகைச்சுவைப் படங்கள்.

ஜெர்ரி லூயிஸ் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரிடம் காட்டிய போது அரங்கமே சிரிப்பில் அதிர்ந்து போயிருந்ததைக் கண்டார். அதில் ஒரேயொரு ஆள் மட்டும் சிரிக்காமல் இருப்பதை வட்டமிட்டு எல்லாக் கூட்டத்திலும் இப்படி ஒரு ஆள் இருப்பார். நம்மால் அவரைச் சிரிக்க வைக்கவே முடியாது. அவர் நமக்குச் சவால் விடுபவர். எந்த ஒரு கலைஞனாலும் எல்லோரையும் சந்தோஷப்படுத்திவிட முடியாது. சிலர் பிடிக்காதவர்களாகவே இருப்பார்கள். நகைச்சுவை நடிகர் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டினை எதிர்பார்க்கக் கூடியவர். நகைச்சுவை தோல்வி அடைந்து விட்டால் மக்கள் அந்த நடிகரை முற்றிலும் ஒதுக்கிவிடுவார்கள் என்று கூறியிருக்கிறார் லூயிஸ்.

ஆங்கிலப்படம் பார்க்கும் இந்தத் தலைமுறைக்குச் சாப்ளின் அளவிற்கு ஜெர்ரி லூயிஸ் அறிமுகமாகவில்லை. ஆனால் சாப்ளின் தரத்திற்கு நிகராக நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியதில் ஜெர்ரி லூயிஸ் ஒரு சாதனையாளரே.

••

Archives
Calendar
August 2020
M T W T F S S
« Jul    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: