1940- 50களில் Saturday Evening Post, Collier, Cosmopolitan போன்ற அமெரிக்க இதழ்களில் வெளியான துப்பறியும் கதைகளுக்குத் தனித்துவமிக்கப் படங்களை வரைந்திருக்கிறார் ராபர்ட் ஃபாசெட்(Robert Fawcett).

இவரது கதைச்சித்திரங்களின் தொகுப்பினை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் படங்கள் வரையப்பட்ட திகில் கதைகளில் ஒன்றிரண்டினை தான் படித்திருக்கிறேன். ஆனால் பல கதைகளில் என்ன நடக்கிறது என்பதை ஓவியத்தின் வழியாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அது தான் ஃபாசெட்டின் சிறப்பு.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய ஆர்தர் கோனன் டாய்லின் மறைவிற்குப் பிறகு அவரது மருமகன் அட்ரியன் கோனன் டாய்ல் மற்றும் ஜான் டிக்சன் கார் இணைந்து எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளுக்கு இவர் வரைந்துள்ள ஓவியங்கள் சிறப்பானவை.

ராபர்ட் ஃபாசெட் நிறக்குருடினால் பாதிக்கப்பட்டவர். ஆனாலும் அவர் பயன்படுத்திய வண்ணங்களும், துல்லியமான சித்தரிப்புகளும் வியப்பூட்டக்கூடியவை. தனது மனைவியின் உதவியோடு வண்ணங்களைத் தேர்வு செய்ததாக ஃபாசெட் கூறுகிறார்
ஃபாசெட் சிறுவனாக இருந்த போது அவரது தந்தை ஓவியம் வரைவதற்குப் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஃபாசெட் பென்சிலால் வரையும் ஒவ்வொரு கோட்டோவியத்தையும் பாராட்டி நாணயம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அந்த ஊக்குவிப்பே அவரை ஓவியராக உருமாற்றியது.
ஃபாசெட் 1903 இல் இங்கிலாந்தில் பிறந்தார், அவரது குடும்பம் 1913 இல் கனடாவிற்குக் குடிபெயர்ந்தது. அங்கே இருந்த நாட்களில் வார இதழ்களில் வெளியான ஓவியங்களை நகலெடுத்து வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் குடும்பம் நியூயார்க் நகரத்திற்குக் குடிபெயர்ந்தது. பகுதி நேர வேலை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு லண்டனிலுள்ள கலைக்கல்லூரி ஒன்றில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயின்றார். அமெரிக்கா திரும்பிய பிறகு பத்திரிக்கை உலகோடு தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகே தொடர்கதைகளுக்கு ஓவியம் வரையத் துவங்கினார்.
குறிப்பாகத் துப்பறியும் கதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்கள் மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தன. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் புத்தகமாக வந்த போதும் இவரது ஓவியங்களே இடம்பெற்றிருந்தன.

கோட்டோவியம் வரைவதற்கான எளிய பயிற்சிகள். உபகரணங்கள். அடிப்படை பாடங்களை விளக்கும் விதமாக இவர் எழுதிய On the Art of Drawing என்ற நூல் இன்றும் ஓவியக்கல்லூரிகளில் பாடநூலாகப் பயிலப்படுகிறது.
இந்த டிஜிட்டல் யுகத்திலும் அவரது ஓவியங்களை முன்மாதிரியாகக் கொண்டே பத்திரிக்கை ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஃபாசெட்டினை “The Illustrator’s Illustrator” என்று கலையுலகம் கொண்டாடுகிறது
துப்பறியும் கதைகளின் திகில் மற்றும் பரபரப்பான சூழலை இவரது ஓவியங்கள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. குறிப்பாகக் காட்சிக்கோணங்களும் கதாபாத்திரங்களின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளும், சூழலின் விநோதமும் வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன

துப்பறியும் கதை என்பதே காலத்தின் முன்பின்னாகச் செல்லும் பயணம் தானே. ஒரு கொலை யாரால் எதற்காக நடந்தது என்பதைக் கதாபாத்திரங்களுடன் இணைந்து வாசகருடன் கண்டுபிடிக்கிறார்கள்.
நிகழ்காலத்திலிருந்து கடந்தகாலத்திற்குள் செல்லும் காலப்பயணம் தான் துப்பறியும் செயலாக வெளிப்படுகிறது. துப்பறியும் கதைகளை வாசிக்கத் தூண்டுவது அதற்கு வரையப்பட்ட சித்திரங்களே. கதையைப் படித்து முடித்துவிட்டு அந்தச் சித்திரங்களைத் தனித்துப் பார்க்கும் போது அவை கதையின் ஆதாரத்தை உயிரோட்டமாகச் சித்தரித்திருப்பதை உணர முடிகிறது. அது தான் ஓவியனின் வெற்றி.
துப்பறியும் கதைகளில் இயல்பான நிகழ்விடம் கூடக் குற்றத்தின் காரணமாக விநோத தோற்றம் கொண்டுவிடுகிறது. குற்றத்துடன் தொடர்பு கொண்டவர்களின் முகமும் உடலும் உறைந்து விடுகின்றன. இருளும் குறைந்த ஓளியும் கலந்த அந்த உலகினை சித்தரிப்பது ஓவியருக்கு ஒரு சவால். அதில் ராபர்ட் ஃபாசெட் அரிய சாதனையைச் செய்திருக்கிறார்.

கதையில் வரும் துப்பறிவாளரின் தோற்றம் மற்றும் தனிச்சிறப்புகளை ஓவியர்களே உருவாக்கினார்கள். எழுத்தில் நாம் அறியும் ஷெர்லாக் ஹோம்ஸின் தோற்றமும் ஓவியத்தில் காணப்படும் தோற்றமும் ஒன்றல்ல. ஆனால் வாசகர் மனதில் இந்த ஓவியத்தின் வழியே தான் ஷெர்லாக் ஹோம்ஸ் பிம்பமாகப் பதிந்து போகிறார். புகழ்பெறுகிறார்.
“நான் கலைப் பள்ளியில் படிக்கும் போது ராபர்ட் ஃபாசெட்டின் ஓவியங்களைப் பாடமாகப் பயின்றேன். குறிப்பாக அவரது காட்டுக்கோணங்கள் கதையைச் சித்தரிக்கும் விதம் அதன் நுணுக்கமான சித்தரிப்பு. உணர்ச்சி நிலை மற்றும் வண்ணங்கள், அவர் ஒரு நிகரற்ற மாஸ்டர் என்பதை உணர்த்துகின்றன என்கிறார் ஓவியர் முர்ரே டின்கெல்மேன்.

“பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் விளம்பர நிறுவனங்களின் கெடுபிடிகள் மற்றும் வற்புறுத்தல் காரணமாகவே சிறந்த ஓவியர்களால் கூட நல்ல கதைச்சித்திரங்களைத் தர இயலவில்லை. ஆனால் நான் பிடிவாதமாக எனக்கு விருப்பமானதை மட்டுமே வரைந்தேன். பல நேரங்களில் பத்திரிக்கைகள் சொன்ன எந்த ஆலோசனையும் நான் கேட்டதில்லை. வற்புறுத்தல் அதிகமானால் அந்த வேலையை விட்டுவிடுவேன். பத்திரிகையுலகின் அவசரத்திற்கான என்னைப் பலிகொடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரம் என்னால் வேகமாக, சிறப்பாக ஓவியத்தை வரைய முடியும் என்பதையும் அவர்களுக்குக் காட்டியிருக்கிறேன். கதையில் எந்தக் காட்சியை, நிகழ்வினை சித்திரமாக வரைவது என்பது எப்போதும் எனது தேர்வாக மட்டுமே இருக்கும். வண்ணங்களை, உருவங்களை மாற்றச் சொன்னால் நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். எனக்கான தனித்துவத்தை விட்டுக் கொடுத்து வேலை செய்ய மாட்டேன் என்பதை அவர்களும் உணர்ந்திருந்தார்கள்“ என்கிறார் ராபர்ட் ஃபாசெட்
பத்திரிக்கைகளில் வரும் கதைகளுக்கு ஓவியம் வரைந்திருக்கிறார் என்றபோதும் அவருக்குப் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமில்லை. இசை கேட்பதும் இசைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகுவதும் தான் அவரது விருப்பம். அவரது வீடு இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடும் மையமாக விளங்கியது. உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.

கதாபாத்திரங்கள் அணிந்துள்ள ஆடைகளின் சிறப்பம்சங்களை நுணுக்கமாக வரைந்திருக்கிறார் ஃபாசெட். அறையின் துல்லியமான சித்தரிப்பு. திரைச்சீலைகள். தரைக்கம்பளங்கள். உணவு மேஜைகள். தூரத்து ஜன்னல் கண்ணாடிகளில் வரும் ஒளி. நிகழ்வின் உக்கிரத்தை வெளிப்படுத்தும் முகபாவனைகள். கலைந்த தலைமுடிகள். ஆவேசத்தை, பயத்தை வெளிப்படுத்தும் கைகள். பயந்து போன கண்கள். இறந்த உடல்களின் விநோத நிலை என அந்தச் சித்திரங்களைப் பற்றிச் சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. ரெம்ப்ராண்ட்டைப் போலவே ஒளி மற்றும் அடர் வண்ணங்களை. பயன்படுத்தியிருக்கிறார்.
ஜப்பானிய நோட்டன் கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி இருள் ஒளி அமைப்பினை உருவாக்குகிறார். ஓவியத்தின் மையத்தில் கவனம் செலுத்தும்படி மட்டும் அவர் வாசகரை வழிநடத்துவதில்லை. அந்தக் காட்சிக்குள் நாம் எட்டிப்பார்ப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறார்.
துப்பறியும் கதைகளில் சிறிய பொருட்கள் கூட முக்கியமான தடயமாக மாறிவிடுகின்றன. அதைக் கவனத்தில் கொண்டு நிகழ்விடத்திலுள்ள பொருட்களை. கீழே விழுந்து கிடக்கும் சுருட்டு, கிழித்தெறியப்பட்ட காகிதம். சிற்பத்தின் உடைந்த பகுதி, சிகரெட் லைட்டர், கண்ணாடி டம்ளர் எனத் துல்லியமாக வரைந்திருக்கிறார்.

துப்பறியும் கதைகள் திரைப்படமாக உருவாக்கப்பட்ட போது இந்த ஓவியத்திலிருந்த உடைகள். முகபாவங்கள். தோற்றம் மற்றும் அகபுற சித்தரிப்புகள் அப்படியே நகலெடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக Film Noir படங்களில் இவரது காட்சிக்கோணங்களை, சித்தரிப்பை அப்படியே காணமுடியும். சினிமாவை போலவே ஓவியங்களில் closeup shots அதிகம் வரைந்தவர் ஃபாசெட்
அமெரிக்கப் பத்திரிக்கை ஓவியர்கள் மற்றும் அவர்களின் முக்கியப் பங்களிப்பு குறித்து நிறைய நூல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ் பத்திரிகையுலகில் பங்களித்த ஓவியர்கள் குறித்து இது போல விரிவான ஆய்வும் மதிப்பீடுகளும் நடைபெறவில்லை.
வார இதழ்களில் வெளியாகும் சித்திரங்கள் தேவை கருதி வரையப்பட்டவை. ஆகவே அவற்றின் கலைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை குறைவு. ஆனால் பொழுதுபோக்கு இதழ்களில் கூடச் சிறந்த கலைப்படைப்புகளை உருவாக்க முடியும் என்பதையே ராபர்ட் ஃபாசெட் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.