ஃபெலுடா- 50

சத்யஜித்ரேயின் ஃபெலுடா (Feluda) கதைகள் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் ஆனதை ஒட்டி சாக்னிக் சாட்டர்ஜி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.  Feluda: 50 years of Ray’s detective என்ற அப்படத்தை நேற்றிரவு பார்த்தேன்.

இயக்குநர் கோவிந்த் நிஹலானி மற்றும் ரேயின் மகன் சந்தீப்பிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சாக்னிக் சாட்டர்ஜி

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் ஆறு மொழிகளில் ஃபெலுடா கதைவரிசை வெளியாகியுள்ளது. வீ.பா.கணேசன் மொழியாக்கத்தில் பாரதி புத்தகாலயம் ஃபெலுடா கதைவரிசையை வெளியிட்டபோது நான் தான் புத்தகங்களை வெளியிட்டேன். ஃபெலுடா கதைகளை முழுமையாக வாசித்திருக்கிறேன்.

ஃபெலுடா கதைகளை ரே எவ்வாறு எழுதினார். அது வெளியான நாட்களில் எது போன்ற வரவேற்பு இருந்தது. அதன் திரைப்பட வடிவம் மற்றும் அதில் நடித்த நடிகர்களின் அனுபவங்கள், ஃபெலுடாவை நேசிக்கும் வாசகர்களின் எண்ணங்கள் என இந்த ஆவணப்படம்  ரேயின் ஆளுமையைக் கொண்டாடுகிறது.

தீவிரமான கலைப்படைப்புகளை உருவாக்கிய சத்யஜித்ரே சிறார்களுக்காக ஏன் துப்பறியும் கதைகளை எழுதினார்.

ரேயிற்குச் சிறுவயது முதலே துப்பறியும் கதைகள் வாசிப்பதில் விருப்பம் அதிகம். குறிப்பாக ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை விரும்பி வாசித்திருக்கிறார். தானும் அது போல ஒரு துப்பறியும் நிபுணரை உருவாக்க வேண்டும் என்று விரும்பியே ஃபெலுடாவை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தைத் தவிரக் கதைகள் முழுவதும் ரேயின் சொந்தக்கற்பனையில் உருவானதே.

துப்பறியும் கதைகளாக இருந்த போது இதில் பாலியல் தொடர்பான எதையும் எழுதக்கூடாது என்பதில் ரே உறுதியாக இருந்தார். பெரும்பான்மை கதைகள் கொலை, கடத்தல், திருட்டு, மறைக்கபட்ட உண்மை என விரிகின்றன. இந்த மர்மங்களைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் தேடுதல்களும் சாகசமுமே கதையின் சுவாரஸ்யம்.

ஷெர்லாக் ஹோம்ஸ் போலவே ஃபெலுடாவும் அதிபுத்திசாலி. தற்காப்புக்கலை அறிந்தவர். துல்லியமாகச் சுடக்கூடியவர். அதிகம் சிகரெட் பிடிப்பவர். துணிச்சல் மிக்கவர். வாட்சன் கதாபாத்திரம் போலவே டாப்ஷே உருவாக்கப்பட்டிருக்கிறார். ஜடாயு என்ற எழுத்தாளர் இந்தக் கைவரிசையில் இடம்பெறத் துவங்கிய பிறகு சுவாரஸ்யம் அதிகமாகியது

வரலாறு, தொல்லியல், கலை, அறிவியல், தத்துவம், இலக்கியம் எனப் பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் கொண்டிருந்த சத்யஜித்ரே அவற்றை ஊடு இழையாகத் துப்பறியும் கதையில் இணைத்து எழுதியிருக்கிறார். அவரே ஒவியர் என்பதால் பொருத்தமான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார்.

ஃபெலுடா வசித்துவந்த கல்கத்தாவின் 21 ரஜனி சென் சாலை வீடு வங்காளிகளின் மறக்கமுடியாத அடையாளம். உண்மையாகவே அங்கே ஃபெலுடா வசிக்கிறார் எனப் பலரும் அவரைத்தேடிப் போய் ஏமாந்து போயிருக்கிறார்கள். .

1965 ஆம் ஆண்டில் சத்யஜித்ரே சந்தேஷ் என்ற இதழில் எழுதிய கதையில் தான் ஃபெலுடா முதன்முறையாக அறிமுகமானார். ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையை ஒட்டி வெளியிடப்படும் சிறப்பு மலருக்காக ரே புதிய துப்பறியும் கதை ஒன்றை எழுதி கொடுத்திருக்கிறார். தனது இடையுறாத திரைப்படப் பணிகளுக்கு நடுவிலும் சிறார்களுக்காகத் தொடர்ந்து ரே எழுதியிருப்பது முக்கியமானது. 35 ஃபெலுடா கதைகள் வெளியாகியுள்ளன.

ஃபெலுடா வின் கதைக்களன் அதுவரை துப்பறியும் கதைகளுக்காக யாரும் தேர்வு செய்யாதவை. எளிய நிகழ்விலிருந்து துவங்கி வலைபோலப் பின்னிப்பின்னி கதையைக் கொண்டு செல்கிறார் ரே. இந்தக் கதைகளின் ஊடே வரலாற்று உண்மைகள். விநோதமான அறிவியல் செய்திகள். பண்பாட்டுத் தகவல்களை இணைத்து ரே எழுதியிருப்பது விசேசமானது.

ஃஃபெலுடாவின் உதவியாளராக டாப்ஷே என அழைக்கப்படும் தபேஷ் ரஞ்சன் மிட்டர் கதைகளில் கூடவே வருகிறார். இந்த ஜோடிகளின் பயணமும் துப்பறியும் முறையும் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

வங்காளிகளின் வாழ்க்கையில் கால்பந்தாட்டம். தாகூர். ரசகுல்லா, காபி ஹவுஸ் போலப் பிரிக்கமுடியாத விஷயமாக ஃபெலுடா வும் ஐம்பது ஆண்டுகளாக இணைந்திருக்கிறார்

பெரும்பான்மையினர் தனது பால்ய வயதில் இந்தக் கதைகளை வாசித்திருக்கிறார்கள். அந்த இனிமையான நினைவு தலைமுறைகள் கடந்தும் நீள்கிறது என்கிறார் படத்தில் ஒரு வாசகர். நடிகர் சபியாசாச்சி சக்ரவர்த்தி தான் ஃபெலுடா வாக நடித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் பெலுடாவாக நடித்தது தனக்கு கிடைத்த பெருமை. அந்த கதாபாத்திரத்தினை ரே எவ்வளவு நுட்பமாக எழுதியிருக்கிறார் என்பதை நடிக்கும் போது தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன் என்கிறார்.

இன்னொரு இளம்பெண் புத்தகமாக ஃபெலுடா கதைகளை வாசித்துவிட்டு அந்தக் கதையில் இடம்பெற்றுள்ள இடங்களைத் தேடிக் கண்டறிந்து வியந்ததாகக் கூறுகிறாள். அவளது தேடுதலும் இந்த ஆவணப்படத்தின் பகுதியாக உள்ளது.

தனது பள்ளிவயதில் விசேச நாட்களின் போது பெரியவர்கள் ஏதாவது பரிசு வேண்டுமா என்று கேட்பார்கள். அப்போது ஃபெலுடா கதைகளைத் தான் பரிசாக வாங்குவேன். ஃபெலுடா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத கதாபாத்திரம் என்கிறார் ஒரு இளைஞர்.

இந்தத் தொடருக்கு வரையப்பட்ட ஓவியங்கள் குறித்தும் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது ஃபெலுடா கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகரைத் தேடியதைப் பற்றியும் ரேயின் மகன் சந்தீப் சுவாரஸ்யமாகக் கூறுகிறார்.

ஃபெலுடா கதைகளில் இரண்டை ரே திரைப்படமாக்கியிருக்கிறார். இதில் சோனார் கெல்லா எடுத்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும் படப்பிடிப்பு நடந்த ஜெய்சால்மாரின் வீடுகள், வீதிகள் பற்றிய நினைவுகளையும் தொழில்நுட்ப கலைஞர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் வெளியான பிறகு அங்குச் சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகமாகியது என்கிறார் விடுதி உரிமையாளர்.

இந்த ஆவணப்படத்தில் சத்யஜித்ரே காசியில் படப்பிடிப்பு நடத்திய வீடு ஒன்றை ஒரு கிழவர் தேடுகிறார். அவர் கையில் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு குறுகலான வீதிகளுக்குள் அலைந்து திரிந்து அவர் வீட்டைக் கண்டுபிடிப்பது பெலுடாவின் பயணம் போலவே உள்ளது. உண்மையில் அவர் நினைவிற்கும் நிஜத்திற்கும் இடையில் பயணிக்கிறார். அந்தத் தேடுதல் தான் படத்தின் மையப்புள்ளி.

ஃபெலுடா என்ற கதாபாத்திரம் வங்காளிகள் மனதில் எவ்வாறு பதிந்துள்ளது என்பதைத் தேடும் சானிக் அதன் பல்வேறு கலைவடிவங்களை, சிறப்புகளை, அதோடு தொடர்புடைய மனிதர்களைக் கண்டறிகிறார். தலைமுறை கடந்தபிறகும் ஃபெலுடா எப்படி இளைஞர்களை வசீகரிக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.

கதாபாத்திரங்களுக்கு ஒரு போதும் வயதாவதில்லை. ஆனால் ஃபெலுடா என்ற கதாபாத்திரம் அறிமுகமாகி ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டாடி ஆவணப்படுத்துவது வங்காளிகள் ரேயின் மீது கொண்டுள்ள மாறாத அன்பையே வெளிப்படுத்துகிறது

0Shares
0