அக்காலம் : மதராஸ் பீபில்ஸ் பார்க்

என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடக்கும் வருஷோற்சவம்

வருகிற 1879 – ளு ஜனவரி மீ 1 உ நமது காருண்ணிய மகாராணியாரவர்கள் இந்தியச் சக்கரவர்த்தினிப்பட்டம் சூடிய மகோற்சவ தினமாகையால் அதைக் கொண்டாடு நிமித்தம் அதற்கு முன் இரண்டு நாளும், விசேஷமாய் அன்றும் பீபில்ஸ்பார்க் என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடத்தப்படுகிற மகா விநோதங்களை ஒவ்வொன்றாக நடக்கும் வண்ணம் விவரித்துச் சொல்ல வேண்டுமானால் மிகவும் பெருகுமாதலால் அவற்றை ஒருவாறு சுருக்கித் தெரிவிக்கிறோம்.

மேற்கண்ட சிங்காரத் தோட்டத்தில் எப்போதும் ஜன செளக்கியத்திற்கும், உல்லாசத்திற்கும், காலப்போக்கிற்குமாகவே நல்ல பரிமளமுள்ள அலங்காரமான பலவித புஷ்பச் செடிகள், கொடிகள், விதம் விதமான விருக்ஷங்கள், நீரோடைகள், தடாகங்கள், நீர்வளைவுகள், செய்குன்றுகள், மேடைகள், ஊ சல்கள், பீடங்கள், தீபஸ்தம்பங்கள் முதலியவெல்லாம் எவ்வெவ் விடத்தில் எவ்வெவ் விதமாக அமைக்கப்பட வேண்டுமோ, அவ்வவ்விடத்தில் அவ்வவ்விதமாகவே புத்தி சாதுரியத்துடன் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

அன்றியும், சிங்கம், புலி முதலிய நாநாவித விந்தை விந்தையான மிருகங்களும், மயில், குயில் முதலிய பற்பல அதிசய பக்ஷிகளும், நாரை நீர்க்காக்கை முதலிய வகை வகையான நீர் வாழ் பறவைகளும், ஊர்வன, நீர்வாழ்வனவாகிய சர்ப்பங்கள், முதலைகள் முதலிய விதம் விதமான வேடிக்கை ஜெந்துக்களும் இவை முதலியவெல்லாம் அதற்குத் தகுந்த இடங்களில் வெயில், மழைகளால் அபாயம் நேரிடா வண்ணம் கூடு முதலியவைகளிலே விடப்பட்டிருக்கின்றன. ஒவ்வோர் தினங்களில் செவிக்கின்பமான இங்கிலீஷ் வாத்தியங்களும் நினோதமாய் வாசிக்கப்படுகின்றன.

ஜனங்கள் இவைகளை வெற்று நாள்களிலேயே கண்டும், கேட்டும் ஆனந்தப்படுவது யாவர்க்கும் தெரிந்த விஷயம்.

இவ்விதமான தோட்டத்தில் மேல் படி மூன்று தினங்களிலும் நடக்கும் அடியிற் குறிக்கின்ற விநோதங்களைக் கண்டவர், கொண்ட களிப்பிற்கு அளவில்லை. மேற்படி தோட்டத்தின் நான்கு வாயிலும் விசித்திரமான வளைவுகள் அமைத்து மேல் வளையில் மெல்லிய கடிதத்தினால், ஒன்றில் இந்தியச் சக்ரவர்த்தினியாகிய மகா ராணியார் அவர்கள் விருதும், மற்றொன்றில் ராஜாத்தி வாழ்க என்றும், மற்ற இரண்டிலும் நமது கவர்னரவர்களைக் குறித்தும் எழுதப்பட்டிருந்தன.

உத்யானத்தின் அகத்தில் கனெடியன் பிளான்டின், இரண்டு ஸ்தம்பங்களை எதிரெதிராக நாட்டி, அவ்விரண்டின் நுனியில் நேராகக் கயிறு கட்டி, அக்கயிற்றின் மேல் முன்னும் பின்னுமாக நடத்தல், முகத்தை மூடிக் கொண்டு நடத்தல், ஒரு காலாலும் இரு காலாலும் நிற்றல், உட்காருதல், ஆடல் முதலிய அருமையான விசித்திர வித்தைகளைக் காட்டியதும் தவிர, இரண்டு சக்கரங்களை நேர் நேராகத் தொடுத்து அவ்விரண்டுக்கும் இடையில் ஓர் ஆள் உட்கார்ந்து கொண்டு காலால் மிதித்து வீதிகளிற் செலுத்திக் கொண்டு போவது போல் அக்கயிற்றின் மேல் செலுத்திய அருமையிலும் அருமையான செய்கையையும், இரண்டு கால்களிலும் இரண்டு கூடைகளைக் கட்டிக் கொண்டு அக்கயிற்றின் மேல் நடத்தல், மேசை, நாற்காலி போட்டுக் கொண்டு உட்காருதல் முதலிய ஆச்சரியமான வித்தைகளையும் காட்டினர். அவ்வித்தைக்காரரை யார் எவ்வளவு புகழினும் அவருக்குத் தக்கவையாகவே இருக்கும்.

மின்தாது யந்திர வினோதம் என்று ஒரு வித்தை செய்தார்கள். அதாவது மின்தாது அமைந்த ஓர் பாத்திரத்தில் ரூபாய்களைப் போட்டு இஷ்டமான மட்டும் எடுத்துக் கொள்ளும்படி ஜனங்களுக்குச் சொன்னார்கள். அப்படியே பலர் எடுத்துக் கொள்ள முயன்றும், மின் தாதுவின் தன்மையைக் கற்றறிந்தவர் மாத்திரம் அதன் விகற்பத்தைத் தடுக்கும் கருவியின் சகாயத்தால் ரூபாய்களை எடுத்துக் கொள்ளும்படி நேரிட்டதே தவிர ஏனையோர் கைகளை உட்செலுத்தி எடுக்க முடியாமல் வெறுங் கைகளைத் தூக்கிக் கொண்டனர்.

தூரத்து ஒலியைக் கம்பியின் வழியாய் அறிந்து கொள்ளும் விதத்தைக் காட்டுகிற அதிசயம் ஒன்று காட்டப்பட்டது.

ஒரு மனிதர்தலையைப் போலவே ஒரு தலை ஒரு மேசையின் மீது இருந்தது. அதனுடன் பேச மனமுள்ளவர் கேட்ட கேள்விகளுக்கு அத்தலை மறுமொழி சொல்லிக் கொண்டு வந்ததும் ஓர் விந்தையாக இருந்தது. ஆங்கிலேய தேசத்து விந்தையான பொம்மைகளின் ஆட்டங்களும் விதம் விதமாய் ஆட்டப்பட்டன.

ஐரோப்பாவில் துருக்கர்களுக்கும், ருஷியர்களுக்கும் நடந்த பயங்கரமான யுத்தத்தைப்படங்களினால் காட்டிய காட்சி நேரில் அவ்விரு திறத்தாரும் சினந்து போர் செய்கிற பாவனையாகவே இருந்தது.

ஓரிடத்தில் சித்திரப் பந்தல் ஒன்று அமைத்து, அதில் இரண்டு துரைகளாலும், ஓர் துரைசானியாலும் விசித்திரப்படங்கள், பொம்மை முதலிய நாநா வஸ்துக்கள் பீடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அங்கே, திருவுளச்சீட்டு போட்டு எடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு பொருளின் பெயரை ஒவ்வொரு சீட்டில் எழுதி ஒரு சுழல் பெட்டிக்குள் போட்டு அந்தச் சீட்டுகளுள் யாதொன்றும் வேற்றுமை தெரியாதபடி அந்தப் பெட்டியைச் சுழற்றிச் சீட்டுகளை நன்றாய் கலக்கச் செய்து, ஒரு ரூபாய்க் கட்டணம் கொடுத்தவர்கள் அவரவர் அதிர்ஷ்டத்துக்கு ஏற்றபடி வந்த சீட்டை எடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறே பலர் செய்து தாம் தாம் கொடுத்த பொருளுக்கு அதிக மதிப்பும், சம மதிப்பும், குறைந்த மதிப்பும் உள்ள ஒவ்வொரு பொருளை அவரவர் அதிர்ஷ்டத்துக்குத் தக்கபடி எடுத்துக் கொண்டு போனார்கள்.

ஓரிடத்தில் இஞ்சினீர் வேடம் பூண்டவரும், அவருக்குச் சகாயரான பல உத்தியோக வேடம் தரித்தவர்களும் அவ்வவ் வேடத்திற்குரிய கருவிகளைக் கொண்டு இஞ்சினீர் உத்தியோகத்தை தற்கொரூப் மாகவே நடத்திக் காட்டினர்.

ஜாலவித்தை, குஸ்தி இவ்விரண்டு செய்கைகளும் கண்டோர் கண்ணைக் கவருகின்றனவாக இருந்தன.

இந்துஸ்தானிப் பாடல் நல்ல கண்டத் தொனியுள்ளவர்களால் அப்பாடல்களுக்குரிய இசையோடு பாடப்பட்ட படியால் அது யாவரும் மெச்சத்தக்கதாகவிருந்தது.

தனிகர் முதல் அரசர் ஈறான கண்ணியவான்கள் யானைமீது அம்பாரி வைத்து ஏறிச் செல்வதை எப்போதாயினும் அதிசயமாகப் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்ப்பதற்கே அருமையான அம்பாரியில் அவ்விடத்தில் சாதாரணமானவர்களும் அதி சொற்ப கட்டணம் கொடுத்து ஏறி உல்லாசமாய்ச் சுற்றி வந்தனர்.

விலாசங்களில் முதல் தொடங்கி கடைசி வரையில் சரித்திரம் தோரணையாக அமைக்கப்பட்டு, இசையும் இடங்களில் ஜனங்கள் கைகொட்டி நகைக்கத் தக்கனவாயும் சிரக்கம்பம், கரக்கம்பம் செய்யத்தக்கன வாயும் பல அதிசியம் முதலானவைகள் வெவ்வேறிடங்களில் பொருத்தப்பட்டிருந்தன. டம்பாச்சாரி விலாசம், கிருஷ்ண விலாசம், அரிச்சந்திர விலாசம் ஆகிய இவைகளில் ஜனங்கள் ரம்மியப்படத் தக்க தகுதியான ஓர் சந்தர்ப்பத்தைச் சங்கிரகமாகப் பொருந்தும் வண்ணம் ஆங்காங்குள்ள பற்பல விநோதங்களையும் ஒருங்கு திரட்டிக் கண்டோர் உள்ளங்களிகூர நடத்துவித்தனர்.

மேலும் டம்பாச்சாரி விலாசத்தில் டம்பனுடைய பெயரை மாற்றி வெகு விரயக்காரன் என்றும் இன்னும் ஏனையவர்களில் ஆவகசியமானவர்கள் பெயரையும் அவ்வாறே இசையும் வண்ணம் வெவ்வேறு பெயர்களாக அமைத்துக் தகாத மொழிகள் ஒன்றும் எடுத்துரையாமலும் சிற்றின்ப விஷயமி ல்லாமலும் வெகு யுக்தி புத்தியோடு நடத்துவித்த அருமையையும், சில குரங்குகளைக் கொண்டு ஓர் விலாசம் ஆட்டுவித்த விந்தையையும் என்னவென்று இங்கு விவரிக்கக்கூடும்.

இவை மாத்திரமேயன்றித் தனியே நானாவிதப் பரிகாசக் கூத்துகளும் ஓரிடத்தில் நடத்தப்பட்டன. பழனிக் காவடியாட்டம், ஆண் பூதம் போலும் பெண் பூதம் போலும் இரண்டு நடமாடல் இவைகளும் பார்ப்போர் கண்களைக் கவர்ந்து கொண்டிருந்தன. இவ்விநோதங்களுக்குத் தக்கபடி கண்டோர் இப்படியும் ஒரு சிருட்டியிருக்கிறதாவென்று அதிசயிக்கும்படிக்குக் கடவுள் உண்டாக்கிய ஓர் கோழியானது நான்கு காலும் இரண்டு வாலுமுள்ளதாகக் காட்டப்பட்டது.

மேற்படி மூன்று நாளும் இரவில் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை ஆகிய நிறமுள்ள ஒளிவட்டச் சித்திரக் கூடுகளில் (ராந்தல்) நிரை நிரையாக ஏற்றிய தீபாலங்காரங்கள் பார்ப்போர் விழிகளை இமைக்கவொட்டாமற் செய்தன.

மூன்றாம் நாள் இரவில் நடத்திய பாண விநோதங்கள் நம் இளவரசர் இவ்விராஜதானியில் பிரவேசித்திருந்த போது ஒரு இரவில் கடற்கரையிலும், கப்பல்களிலும் நடத்திய பாண விநோதங்களுக்கு ஏறக்குறைய இணை சொல்லத்தக்கனவே; அவற்றைக் கண்டோர் ஒவ்வொருவர் நாவும் பற்பலவாகச் சிறப்பித்ததென்றால் அவற்றின் பெருமையை எவ்வாறு எழுதுவது?,

-‘ஜநவிநோதினி’ 1878

நவம்பர் டிசம்பர் இல.11, 12. புஸ்த IX பக்க ம் 278, 281

0Shares
0