அந்தக் காலத்தில் மஹாபலிபுரத்திற்கு படகில் போய் வந்திருக்கிறார்கள். அந்த நினைவுகளைச் சொல்லும் இந்தக் கட்டுரையை இன்று வாசிக்கையில் வியப்பாகவுள்ளது.
‘விவேக சிந்தாமணி’ இதழில் ச.ம. நடேச சாஸ்திரி எழுதிய குறிப்பு 1894 ஏப்ரலில் வெளியாகியுள்ளது.
சென்னையிலிருந்து தெற்கே செல்லுகிற தென்னிந்தியா இருப்புப்பாதை வழியாகச் செங்கற்பட்டு சென்றால் ஒன்பது மைல் தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் என்ற திவ்விய க்ஷேத்திரத்தை ஜட்கா வண்டிகள் மூலமாய்ச் சேரலாம். இந்தவிடத்திலிருந்து ஒன்பது மைல் மேற்படி ஜெட்காவிலேயே ஏறிச் சென்றால் யாம் தலைப்பில் குறித்த மஹாபலிபுரம் ஸ்தலத்தயடையலாம்.

இதற்குச் சென்னையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகவும் படகுகளில் செல்லக்கூடும். ஆனால் கோடைக் காலத்தில் இக்கால்வாயில் தண்ணீர் குறைந்திருக்குமாதலால் படகுகள் தங்குதடையின்றிச் செல்வது முடியாது. 40 மைலில் படகுகளிலேறிச் செல்ல வேண்டியிருப்பதால் படகுக்காரர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள்.
ரயில் மார்க்கமாகச் செல்வதே உத்தமம். திருக்கழுக்குன்றம்விட்டு எட்டு மைல் ஜெட்காமீதேறிக் கொண்டு சென்றால். சமுத்திரத் தண்ணீரில் முழுகி சுமார் இரண்டு பர்லாங் தூரமுள்ள சேற்று நீரில் நடந்து செல்ல வேண்டும். பிறகு பக்கிங்ஹாம் கால்வாயைத் தாண்ட வேண்டும். இவைகளைக் கடந்து சுமார் அரை மைல் தூரம் நடந்து சென்றால் மஹாபலிபுரமென்கிற சிறிய ஊரின் வீடுகள் தென்படுகிறது.
மக்கள் சிறிய கூரை வீடுகளைக் கட்டிக்கொண்டும், எருமை, பன்றி முதலிய கால்நடைகளை வைத்துக் கொண்டும் ஊரில் ஒரு புறத்திலுள்ள சிறிது புஞ்சை பூமிகளில் விளையும் தானியங்களைக் கொண்டும் ஜீவிக்கிறார்கள்.
இந்த ஊரைச் சுற்றி மூன்று புறத்திலும் கடல் ஆக்கிரமி த்திருக்கிறபடியால் சாகுபடிக்குத் தகுந்த பூமிகளில்லை.
ஊரின் மத்தியில் அழிந்து கொண்டு வருகிற ஒரு பெரிய விஷ்ணுவாலயிமிருக்கிறது. சுவாமிக்கு – தரைசயனப் பெருமாள் என்றும், அம்மனுக்கு நிலை மங்கைத் தாயார் என்றும், கூறப்படுகிறது. பக்த கோடிகள் வருவது அதிகக் குறைவான படியால் அர்ச்சகர்கள் பூஜை முதலியவைகள் செய்வதும், சிரத்தையுடன் இயற்றப்படுவதாகக் காணப்படவில்லை. ஆலயத்திற்குள் சுவாமி பள்ளி கொண்டிருப்பது போன்ற சில விக்கிரகம் அதிகச் சுந்தரமாயிருக்கிறது. ஆலயத்தின் மதில் சுவர்களும், மற்ற கட்டடங்களும் அழிந்து கொண்டு வருகின்றன. உட்பிரகாரத்திலும் நெரிஞ்சிச் செடிகள் மலிந்து பிரதக்ஷணம் செய்பவர்களை வருத்துகின்றன. இது சிற்ப சாஸ்திர வேலைகளுக்குப் பேர்பெற்றவிடமாதலால் இவ்விடத்தில் யாவரும் பார்க்கக்கூடியதும், பார்க்க வேண்டியதுமான முக்கிய ஸ்தலங்களைக் குறிப்பிடுகிறோம்:

1. அர்ச்சுனன் தபசு: – மேற்படி ஆலயத்திற்கு வடக்கில் ஒரு குளம் காணப்படுகிற பள்ளத்தாக்கு. ஒரு புறத்தில் சுமார் 30 – அடி உயரமுள்ள பாறை. இதில் யானை, மான், மனிதர் முதலிய உருவங்கள் அதிக இலக்ஷணமாய் வெட்டப்பட்டிருக்கின்றன.
2. அர்ச்சுனன் தபசுக்கு வடக்கே விநாயகர் ஆலயம். ஒரே கல்லில் வெட்டப்பட்ட 30 – அடி உயரமுள்ள கோபுரத்தோடு கூடியது.
3. விநாயகர் ஆலயத்திற்கத் தென்புறத்திலுள்ள ஒரு பெரும்பாறையில் குடைந்து வெட்டப்பட்ட மண்டபம். சுமார் 18 – அடி பாறைக்குள் வெட்டிக் குடைந்தது. அதில் ஸ்தம்பங்கள் விடப்பட்டு, உட்புறத்தில் சிற்சில ரூபங்களையுடையது.
4. மேற்படி மண்டபத்திற்குக் கிழக்குப் பாகத்தில் ஒரு சரிவான பாறையின் பேரில் வெகு சிறிய ஆதாரத்துடன் நிற்கப்பட்ட ஒரு குண்டாங்கல். இதை கிருஷ்ணன் உருட்டி எடுத்த வெண்ணெயென்று கூறுகிறார்கள்.

5. பீமன் அடுப்பு: – இது மேற்படி வெண்ணெய்க் கல்லுக்கு வடபுறத்திலிருக்கிறது. மூன்று பெரிய கற்களால் செய்யப்பட்ட ஓர் இடுக்கு. பாறைகளே சுபாவமாயிப் படியமைந்திருக்கிறதென்று கூறலாம். யாதொரு வேலைப் பாட்டையும் காட்டக்கூடியதன்று.
6. யசோதை தயிர்த்தொட்டி: – இது ஒரு பாறையில் ஆறு கஜ சுற்றளவுள்ளதாயும், மூன்று கஜ ஆழமுள்ளதாயும் வெட்டிக் குடையப்பட்ட கற்தொட்டி. ஏறி மேலே செல்லும் படி ஒரு புறத்தில் மூன்று படிகளும் வெட்டப்பட்டிருக்கின்றன.
7. மண்டபங்கள்: – ஒரு பெரிய பாறையில் குடைந்து வெட்டப்பட்ட மூன்று மண்டபங்கள். இவைகளுக்கு புறத்தில் சிற்சில ரூபங்கள் விளங்குகின்றன.
8. ஜோடி மண்டபங்கள்: – மேற்படி மண்டபங்களை கடந்து சுமார் கால் மைல் தூரம் தெற்கே சென்று காணக்கூடியது. ஒரு பெரும்பாறையில் குடைந்து வெட்டிப்பட்ட மண்டபங்கள். 25 – அடி அகலமும், 45 – அடி நீளமுமுள்ளது. இரண்டு வரிசையான தூண்களையுடையதாயும், ஒவ்வொரு மண்டபத்திலும் ஐந்தைந்து சிறிய அறைகளைக் கொண்டதாயுமிருக்கிறது. ஒவ்வொரு அறையில் எதிர்சுவரான பாறையில் சிற்சில ரூபங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
9. இரண்டு கல் ரதம்: – மேற்படி மண்படங்களுக்குத் தென் கிழக்கிலுள்ள கல் ரதம், ஒரே பாறையில் வெட்டப்பட்டது. ஒவ்வொன்றும் 25 – அடி உயரமும், 12 – அடி நீளமும் 12 – அடி அகலமுமுள்ளது.
10. ஒரு கல் ரதம்: – மேற்படி ரதங்களுக்கச் சற்று தெற்கில் ஒரு பாறையில் வெட்டப்பட்ட கல் ரதம். இதுவும் மேற்படி ரதங்களை அளவில் ஒத்திருக்கிறதென்றே கூறலாம்.
11. ஐந்து கல் ரதம்: – மேற்படி ரதங்களிலிருந்து சுமார் அரை மைல் தூரம் சென்றால் இந்த வினோதமான 5 கல் ரதங்களையும் காணலாம். ஒரு பெரும் பாறையில் வெட்டப்பட்டது. ஒன்று சுமார் 50 அடி நீளமும், 18 – அடி அகலமும், 36 – அடி உயரமுமுள்ளதாய் நான்கு புறத்திலும் மண்டபம் போன்ற குத்துக் கால்களை யுடையதாய் வெகு கம்பீரமாய் விளங்குகிறது. மற்றொன்று 25 அடி சம சதுரமாயும், 50 – அடி உயரமுள்ளதாயும் மனிதர்கள் ரதத்தின் உச்சிவரையில் ஏறிச் சென்று பார்த்து வரத் தகுந்த தாயும் வெட்டப்பட்டு வெகு அழகாய் காணப்படுகிறது. மற்ற மூன்று ரதங்களும் சிறியவை. இந்த பஞ்ச ரதங்களையல்லாது கோபுரங்களையடுத்து ஒரு யானை, சிங்கம், எருது இவைகளும் வெகு அழகாய் பாறைகளில் வெட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
இவைகளைப் பலர் பலவிடங்களில் உடைத்துத் தகர்த்திருக்கிறார்கள். பூர்வீகச் சின்னங்களைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்ட உத்தியோகஸ்தர்கள் இவைகளைக் கவனித்து சில ரிப்பேர்களைச் செய்திருக்கிறார்களென்றாலும் போதாதென்றே கூறவேண்டியிருக்கிறது.

12. தரைசயனப் பெருமாள்: – இது சமுத்திரக் கரையோரத்தில் சயனித்துக் கொண்டிருக்கிற பாவனையாய் செய்திருக்கிற பெரிய கற்சிலை. இதை மகாபலிச் சக்கரவர்த்தியின் உருவமென்றும் பலர் கூறுவதுண்டு.
நன்றி: அட்சரம் இலக்கிய இதழ்
••