அக்ஞேயாவின் முகங்கள்

புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர், கவிஞர் அக்ஞேயாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன்

அக்ஷயா முகுல் எழுதிய Writer, Rebel, Soldier, Lover: The Many Lives of Agyeya 800 பக்கங்கள் கொண்டது. விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல். இந்த நூலின் கடைசி 175 பக்கங்கள் பின்குறிப்புகள் மற்றும் உதவிய நூல்களின் பட்டியல் உள்ளது

இவ்வளவு பெரிய பட்டியலை இதற்கு முன்பு எந்த வாழ்க்கை வரலாற்று நூலிலும் கண்டதில்லை. அக்ஷயா முகுல் இந்நூலை எழுதுவதற்குச் சிறப்பு நிதிநல்கை பெற்றிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் பல்வேறு ஆவணக்காப்பகங்கள். தனிநபர் சேமிப்புகள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெற்ற தகவல்கள். கடிதங்கள். குறிப்பேடுகள் வழியாக இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

அக்ஞேயாவின் நமக்கு நாமே அந்நியர்கள் நாவல் தமிழில் சரஸ்வதி ராம்னாத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கல்குதிரை அக்ஞேயாவிற்குச் சிறப்பிதழ் ஒன்றை 1994ல் வெளியிட்டிருக்கிறது. கவிஞர் சுகுமாரன் அவரது சில கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அக்ஞேயாவின் முக்கிய நாவலான சேகர் இன்று வரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

முகுல் அக்ஞேயாவை முன்வைத்து இந்தி இலக்கிய உலகம் மற்றும் அதன் முதன்மையான படைப்பாளிகள் குறித்த விரிவான சித்திரத்தை உருவாக்கியுள்ளார். அது போலவே அக்ஞேயாவின் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ( உலகோடு பகிர்ந்து கொள்ளாத காதல் உறவுகள் குறித்தும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும்) பற்றியும் விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.

அக்ஞேயாவின் இரண்டாவது மனைவியான கபிலா வாத்ஸ்யாயன் முகுலிடம் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதவை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவின் முழுப்பரிமாணத்தையும் எவரும் தெரிந்து கொள்ள முடியாது. அது பகிர்ந்து கொள்ளத் தேவையில்லாத விஷயம். அவர் என்னைவிட்டுப் பிரிந்திருக்கலாம். ஆனால் அவரது நினைவுகள் பிரியவில்லை. அது என்னோடு மடியட்டும் என்கிறார் கபிலா.

கபிலா வாத்ஸ்யாயன் பாராளுமன்ற உறுப்பினராகவும் இந்தியப் பாரம்பரிய நடனம், கலை, கட்டிடக்கலை மற்றும் கலை வரலாறு ஆகியவற்றின் முன்னணி அறிஞராகவும் இருந்தவர்.

அக்ஞேயா என்ற புனைபெயரில் எழுதிய சச்சிதானந்த ஹிரானந்த வாத்ஸ்யாயன் உத்தரபிரதேசத்தில் குஷிநகருக்கு அருகிலுள்ள காசியாவில் பிறந்தவர். அவரது தந்தை ஹிரானந்த் சாஸ்திரி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர். புத்தர் இறந்த இடத்தைக் கண்டறிவதற்கான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காகக் காசியாவில் அவர்களின் குடும்பம் முகாமிட்டிருந்தது.அந்த முகாமில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அக்ஞேயா பிறந்தார்.

தந்தையின் வேலை காரணமாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு , பாட்னா (1920), நாலந்தா (1921) மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் மாறினார்கள். ஆகவே அக்ஞேயா பல்வேறு இந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்

ஜம்முவில் சிறப்பு ஆசிரியர்களால் அவருக்குச் சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகள் கற்பிக்கப்பட்டன. ஆங்கில வழி கல்வி பயின்றிருக்கிறார். லாகூரிலும் சில ஆண்டுகள் மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றிருக்கிறார்.

பகத் சிங்கால் ஏற்படுத்தப்பட்ட ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி (HSRA) என்ற புரட்சிகர அமைப்பில் இணைந்து, இந்திய சுதந்திர போராட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கிறார்

இதன் காரணமாகத் தேசத்துரோக குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற அக்ஞேயா நான்காண்டுகளை லாகூர், டெல்லி மற்றும் அமிர்தசரஸ் சிறையில் கழித்திருக்கிறார்.

இந்த நாட்களில், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல் எழுதியிருக்கிறார். அக்ஞேயா 1940 இல் சந்தோஷ் மாலிக்கை மணந்தார். அவர்களின் திருமணம் 1945 இல் விவாகரத்தில் முடிந்தது. அதன்பிறகு கபிலாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த உறவும் நீடிக்கவில்லை

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் இந்திய இராணுவத்தில் சேர்ந்து ராணுவ அதிகாரியாகக் கோஹிமா அனுப்பப்பட்டார். ஆனால் சில மாதங்களில் ராணுவத்திலிருந்து விலகிய அக்ஞேயா பத்திரிகையாளராகவும் இலக்கியப் பணிகளிலும் ஈடுபடத்துவங்கினார். மொழிபெயர்ப்பு மற்றும் கவிதைகளில் ஈடுபாடு காட்டி வந்தார்.1957-58 இல் ஜப்பானுக்குச் சென்ற அக்ஞேயா அங்கு அவர் ஜென் பௌத்தத்தைப் பற்றி அறிந்து கொண்டார், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் இந்தி நாளிதழான நவ்பாரத் டைம்ஸின் தலைமை ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றிய அக்ஞேயா இந்தி கவிதை மற்றும் நவீன சிறுகதையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியவராகக் கொண்டாடப்படுகிறார்

அக்ஞேயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுத முயன்ற முகுல் அதைப் புனைகதை போலவே விவரிக்கிறார். குறிப்பாக ஆரம்ப அத்தியாயங்கள் சிறுகதை போலவே எழுதப்பட்டிருக்கின்றன.

புத்தர் இறந்த இடத்தில் தனது மகன் பிறந்திருக்கிறார் என்று அக்ஞேயாவின் தந்தை பெருமைப்பட்டிருக்கிறார். பின்னாளில் பௌத்தம் தொடர்பான ஆர்வம் அக்ஞேயாவிற்கு உண்டான போது அது தந்தையின் வழியில் உருவான தேடலாகவே உணர்ந்திருக்கிறார்

ஒரு எழுத்தாளன் உலகிற்குத் தெரியப்படுத்தாமல் மறைத்தவற்றை அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறவர் வெளிப்படுத்த வேண்டுமா. அது நியாயமானதா என்ற கேள்வியை எழுப்பும் முகுல் அப்படி நடந்து கொள்ள வேண்டியதே சரி என்று குறிப்பிடுகிறார். இதில் அக்ஞேயாவிற்கும் கிருபா சென்னிற்குமான ரகசிய;க் காதலை ஆராயும் முகுல் அவர் எழுதிய கடிதங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பீகாரைச் சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற இந்தி நாவலாசிரியர், பணீஷ்வர்நாத் ரேணு அக்ஞேயாவுக்கு எழுதிய கடிதங்கள் வழியாக அவர்களுக்குள் இருந்த நட்பும் தேடலும் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக ரேணுவின் கடைசி நாட்கள் துயரமானவை. அக்ஞேயாவிற்கும் சிஐஏவிற்குமான தொடர்பு. அவரது பத்திரிக்கையுலக அனுபவம். பல்கலைக்கழக அனுபவம். சுதந்திரப் போராட்ட நாட்கள் என்று அக்ஞேயாவின் பல்வேறு முகங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் முகுல்.

லட்சியவாதமும் தேச நலனிற்காக பாடுபடுவதும் எழுத்துலகின் அடிப்படையாக இருந்த காலகட்டமது. சமூக மேம்பாட்டிற்காக எழுத்தாளர்கள் எவ்வளவு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை இதன் வழியே அறிந்து கொள்கிறோம்.

அக்ஞேயாவின் வாழ்க்கை மாற்றங்களால் நிரம்பியது. பேரலையின் ஊடாக நீந்துவது போல வாழ்க்கையை கடந்து சென்றிருக்கிறார். தாயின் மடியில் குழந்தையாக உள்ள அவரது புகைப்படம் ஒன்று முதல் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. அதனைத் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டேயிருந்தேன். அக்ஞேயா பிறந்தவுடன் அவரது எதிர்காலத்தை தந்தை கணித்துச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது போலவே வாழ்க்கையில் நடந்தது என்கிறார்கள்.

ஜென் பௌத்தம் அவர் மீது செலுத்திய தாக்கத்தை நமக்கு நாமே அந்நியர்கள் நாவலில் காணுகிறோம். அந்த நாவல் மௌனத்தின் எடையை விவரிக்ககூடியது.

இதனை வாசித்து முடிக்கும் போது தமிழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இவ்வளவு விரிவான வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டதில்லையே என்ற ஆதங்கம் மனதில் எழவே செய்கிறது.

அக்ஞேயாவின் கவிதைகள்

தமிழில் சுகுமாரன்

வீடுகள்

1

இரண்டு கதவுகளை ஒன்றிணைக்கும்
அறை என் வீடு
இரண்டு கதவுகளுக்கு இடையேயிருக்கும்
காலியிடம் என் வீடு

எப்படிப் பார்த்தாலும்
நீங்கள் வீட்டைக் கடந்து பார்க்கலாம்
மறு பக்கத்துக் காட்சியைப் பார்க்கலாம்
ஆனால் வீட்டைப் பார்க்க முடியாது

நான் தான் என் வீடு
என் வீட்டில் எவரும் வசிக்கவில்லை
என் வீட்டில் நான் வசிக்கிறேனா?
எப்படிப் பார்த்தாலும்…

2

உங்கள் வீடு
அங்கே சாலைமுடியுமிடத்தில்

ஆனால் நான் எப்போதும் போய்க்கொண்டேயிருக்க வேண்டும்
அப்படியானால் சாலை எங்கே முடிகிறது?
உங்கள் வீடு…

3

மற்றவர்களின் வீடுகள்
உள்நோக்கித் திறக்கின்றன
அவை வெளியிட முடியாத ரகசியங்களுக்குள் திறக்கின்றன
மற்றவர்களின் வீடுகள் நகரங்களில்
நகரங்கள் மற்றவர்களின் வீடுகளில்…

4

வீடுகள், நாம் செல்லும் வீடுகள் எங்கே?
வீடுகளைப் பற்றிய எல்லாப் பேச்சுக்களும்
வீடுகளைப் பொறுத்தவரை புதிர்கள்தாம்
பிறரிடம் நாம்
வீடுகளைப் பற்றிப் பேசுவதில்லை
பிறரிடம் நாம் பேசுவது
வீடுகளைப் பற்றியுமல்ல.

@

திசைகள்

என்றும் காலையில் கொஞ்ச நேரம்
நான் இறந்த காலத்தில் வாழ்கிறேன்
ஏனெனில்
என்றும் மாலையில் கொஞ்ச நேரம்
நான் எதிர் காலத்தில் சாகிறேன்.

(நன்றி : வாழ்நிலம் வலைப்பக்கம்)

0Shares
0