அசோகன் சருவிலோடு ஒரு நாள்

மலையாளச் சிறுகதையுலகில் மிக முக்கிய எழுத்தாளர் அசோகன் சருவில். இவரது இரண்டு புத்தகங்கள் என்ற சிறுகதை தொகுப்பு தமிழில் வம்சி வெளியீடாக வந்துள்ளது. சுகானா மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் புத்தகம் சென்றவாரம் புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலிற்கான விருதைப் பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு திருச்சூர் சென்றிருந்த போது அசோகன் சருவில் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சிறந்த பண்பாளர். எளிமையானவர். சருவிலின் கதைகள் எளிய மனிதர்களின் துயரங்களைப் பேசுபவை. வடிவ உத்திகளை விடவும் வாழ்வின் நேர்மையே முக்கியம். சொல்ல வரும் விஷயத்தை எளிமையாகச் சொல்ல விரும்புவதே எனது எழுத்து. அதில் அலங்காரமிருக்காது. மிகையிருக்காது. ஆனால் உண்மைக்கு நெருக்கமாகயிருக்கும் என்று நேர்பேச்சில் சொன்னார்.

இதுவரை இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தற்போது இவரது சிறுகதை The Argentines of Kavappura திரைப்படமாக உருவாக்கபட்டுள்ளது. உலகக் கால்பந்து போட்டி ஒரு சிறிய கிராமத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பற்றியதே இச்சிறுகதை.  ஆடு திரைப்படத்தை இயக்கிய Midhun Manuel Thomas இப்படத்தை இயக்குகிறார். மார்ச் இறுதியில் இப்படம் வெளியாகிறது.

சருவில் அமைதியான மனிதர். ஆனால் நம் பேச்சை ஆழ்ந்து உள்வாங்குபவர். சரியான நேரத்தில் சரியான சொற்களில் தனது எண்ணத்தைத் தெரியப்படுத்துகிறார். நிறைய வாசித்திருக்கிறார். ஆனால் அதைக் காட்டிக் கொள்வதில்லை. கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்

Purogamana Sahitya Sanghom என்ற இடதுசாரி கலை இலக்கிய அமைப்பின் மாநில தலைவராக இருக்கிறார். ஆகவே நேரடியான களப்பணிகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் கொண்டவர். கேரளாவின் தற்போதைய அரசியல் மற்றும் பண்பாட்டு சூழல் குறித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வியப்பளிக்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அது நாம் பத்திரிக்கைகளில் வாசித்து அறியாதவை

அசோகன் சருவிலோடு நெருக்கமான நட்பு கொண்டவர் நண்பர் ஷாஜி. திருவண்ணாமலையில் நடைபெற்ற உண்டாட்டு நிகழ்விற்கு வந்த சருவில் ஷாஜியோடு சென்னை வந்திருந்தார். ஷாஜி வீட்டில் தங்கியிருந்த அவரை எனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தேன். மறுநாள் என் வீட்டிற்கு வந்திருந்தார்.

நிகழ்விற்கு முந்திய நாள் வரை அசோகன் சருவிலுக்கு உடல்நலமில்லை. ஆனாலும் எங்கள் அழைப்பை ஏற்றுப் பேருந்தில் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். தனது உடல்நலக்குறைவு பற்றி ஒரு வார்த்தை அவர் பேசவில்லை. புலம்பவில்லை. அப்படி ஒரு விஷயம் இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

நானும் ஷாஜியும் சருவிலும் ஒன்றாக மதிய உணவிற்குக் கேரள சாப்பாடு சாப்பிட குமரகம் போனோம். மீன் உணவு பற்றிப் பேச்சு நீண்டது. எத்தனை விதமான மீன்கள் , அதை எப்படிச் சமைப்பார்கள். எது ருசிமிக்கது எனப் பேசிக்கொண்டிருந்தார் ஷாஜி. மீன் சோற்றை மிக நிதானமாக ருசித்துச் சருவில் சாப்பிட்டார். நிதானம். மிக நிதானம். இவ்வளவு நிதானமாக ஒரு மனிதன் எப்படி இருக்க முடியும் என வியப்பாக இருந்தது. இடையிடையே அவரது செல்போன் அடித்தது. யாரோ எதையோ விசாரித்தார்கள். அரசியல் விவாதம். அதிலும் நிதானமாகவே பதில் சொன்னார்.

மதியம் நாங்கள் மூவரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் காணுவதற்குச் சென்றோம். இவ்வளவு பெரிய நூல் நிலையம் கேரளாவில் கிடையாது என்றபடியே ஒவ்வொரு பிரிவாகச் சுற்றிப் பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். தமிழில் வெளியாகியுள்ள மலையாளப் படைப்புகளை அவருக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினேன். இவ்வளவு புத்தகங்கள் தமிழில் வெளிவந்திருக்கிறதா என வியந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

தமிழில் இருந்து இவ்வளவு புத்தகங்கள் மலையாளத்திற்கு வரவில்லை. நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைக்கவில்லை. அது ஒரு குறை என்றார்.

பழஞ்சுவடிகள் பாதுகாத்து ஆவணப்படுத்தும் தளத்திற்குச் சென்று பழைய ஏடுகளைப் பார்வையிட்டோம். அதில் ஒரு ஏடு ஆங்கிலத் தமிழ் அகராதி. அதை மிக கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். மனிதர்கள் எழுதுவதற்காக எவ்வளவு போராடியிருக்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

இத்தனை பெரிய நூலகத்தை ஏன் மூடமுயன்றார்கள். அரசியலில் இப்படிக் கூடவா நடக்கும் எனக்கேட்டுக் கொண்டு வந்தார். நீதிமன்றம் தலையிட்டு நூலகத்தைக் காப்பாற்றியதைச் சொன்னேன். குழந்தைகளுக்கான பிரிவிற்கு வந்த போது அவரது முகம் தானே மலர்ந்தது. நிறையப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்

சென்னையில் வசிக்கும் குழந்தைகள் அதிர்ஷடசாலிகள். எவ்வளவு அழகான நூல் பிரிவு. படிப்பதற்கும் கதை கேட்பதற்கும் எவ்வளவு சிறப்பான வசதிகள் என்று வியந்து கொண்டேயிருந்தார்.

நூலகத்தில் ஒரு காபி குடித்துவிட்டு மூவரும் சென்னையைச் சுற்றிவந்தோம்.

சருவிலின் மகன் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்திருக்கிறான். ஆகவே நிறைய முறை சென்னைக்கு வந்திருக்கிறார். அந்த நாட்களை நினைவு கூர்ந்தார். அத்தோடு ஒரு காலத்தில் எல்ஐசி சென்னையின் உயரமான கட்டிடம் என்பதையும் அதைக் காண தான் வந்ததையும் நினைவுபடுத்திச் சிரித்தார்.

பின்பு சத்யம் தியேட்டர் அருகிலுள்ள Amethyst சென்று பேசிக் கொண்டிருந்தோம். அந்த வளாகம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. சென்னை நகரின் மத்தியில் இவ்வளவு இயற்கையான இடமா எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சமகால மலையாள இலக்கியம். தமிழ் சூழல், மொழிபெயர்ப்பு, இசை, பின்நவீனத்துவம், ஊடகங்களின் பிம்ப உருவாக்கம் என ஏதேதோ பேசினோம்.

மலையாளத்திற்கு நவீன இலக்கியம் அறிமுகமான போது பலரும் ஐரோப்பிய வடிவத்தை அப்படியே தனதாக மாற்றிக் கொண்டார்கள். நவீனத்துவம் மண்ணில் வேர்விடவில்லை. ஆனால் தமிழில் நவீன இலக்கியம் தன் சொந்த மண்ணில் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது. இங்கே பேசுகிற விஷயங்கள் யாவும் தமிழ் வாழ்க்கை சார்ந்து உருவான நவீனப் பார்வைகள். மலையாளத்தில் அப்படியில்லை. அது அதிகமும் வெளிவிஷயங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியது. குறைவான படைப்பாளிகளே சொந்த மண்ணில் இருந்து தங்கள் எழுத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

தமிழ் எழுத்தாளர்களின் எளிமையும் எழுத்தை அணுகும் விதமும் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மலையாள எழுத்தாளர்களில் பலரும் கௌரவம் பார்க்க கூடியவர்கள். இப்படிக் கூடி விவாதிக்க மாட்டார்கள் என்று அசோகன் சருவில் சொன்னார்

கேரளாவில் தான் இலக்கியம் மேலோங்கியிருக்கிறது என நாம் ஒரு மயக்கம் கொண்டிருக்கிறோம். அவர்களோ தமிழ் அதை விடவும் சிறந்தது என்கிறார்கள்.

தமிழ் நாட்டில் மலையாள இலக்கியம் பற்றித் தொடர்ந்து பொய்யான பிம்பம் வேண்டுமென்றே கட்டி எழுப்பபடுகிறது. குறிப்பாகச் சிலர் தங்களின் சுயவிருப்பத்திற்குரியவர்களை மலையாளத்தின் மகத்தான படைப்பாளிகளாக இங்கே அறிமுகம் செய்கிறார்கள்.

தமிழில் இருந்து மலையாளத்திற்கு அறிமுகம் ஆவதும் பரஸ்பர துதிபாடுதல் மூலமே நடக்கிறது. விதிவிலக்காக ஆற்றூர் ரவிவர்மா போல ஒரு சிலரே நல்ல தமிழ் படைப்புகளை அடையாளம் கண்டு மலையாள இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறார்கள்.

இந்த இலக்கிய அரசியல் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டோம்.

இரவு எட்டு மணிக்கு அவருக்கு ரயில் என்பதால் நானும் ஷாஜியும் அவருடன் சென்ட்ரலுக்குச் சென்றோம். ரயில் நிலைய வாசலில் அவரிடம் விடைபெற்ற போது அசோகன் சருவில் என் கைகளைப் பற்றிக் கொண்டார். அதில் தோழமையின் அன்பு அழுத்தமாக வெளிப்பட்டது.

ஷாஜி ஒரு சகோதரனைப் போலவே சருவிலை நடத்தினார். அவர்களுக்குள் உள்ள அன்பும் பிரியமும் எழுத்தாளருக்கும் வாசகருக்குமான உறவைத் தாண்டியது.

திரும்பி வரும்போது ஷாஜி சமகால மலையாள எழுத்தாளர்கள் பற்றியும் கேரளாவில் தொடர்ந்து வரும் சாதி மதப்பிரச்சனைகள் பற்றியும் பேசிக் கொண்டு வந்தார்.

வீடு திரும்பி இணையத்தில் அசோகன் சருவில், சிறுகதை எழுத்தாளர் அஷ்டமூர்த்தியும் உரையாடிய காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். அஷ்டமூர்த்தி மிகச்சிறந்த மலையாள சிறுகதை ஆசிரியர். அற்புதமான காணொளியது. இலக்கியம் பற்றி இரண்டு எழுத்தாளர்கள் பேசிக் கொள்வதை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

விருது பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளனைப் பத்து நிமிஷம் பாராட்டுவதற்காக ஒருவர் திருச்சூரில் இருந்து புறப்பட்டுப் பத்து மணி நேரம் பயணம் செய்து வருவது என்றால் அந்த அன்பினை என்னவென்று சொல்வது.

அதுவும் ஆயிரம் களப்பணிகள் உள்ள ஒருவர் உடல்நலத்தையும் கவலைப்படாமல் தமிழ் எழுத்தாளன் ஒருவனைப் பாராட்ட வந்து போனது என்றும் நன்றிக்குரியது.

நன்றி அசோகன் சருவில். உங்கள் வருகையே உண்டாட்டு நிகழ்வின் பெரும் கௌரவம்.

•••

0Shares
0