ஜோசப் செடார் இயக்கிய புட்நோட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். 2011ம் ஆண்டு வெளியான படம். கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றிருக்கிறது.
ஒரு பேராசிரியரின் வாழ்க்கையை மையப்படுத்திய படமிது. அந்தக் காலப் பேராசிரியர்கள் எப்படியிருந்தார்கள், இன்று எப்படியிருக்கிறார்கள். அரிய ஆய்வுகள் செய்த பேராசிரியர்கள் ஏன் அங்கீகரிக்கபடாமல் போகிறார்கள். அற்பர்களுக்கு எப்படி விருதும் அங்கீகாரமும் கிடைக்கிறது, இதைப்பற்றித் தான் படம் பேசுகிறது.
இந்தியாவில் வழங்கபடும் பல்வேறு விருதுகளில் இது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் அதை மையப்படுத்தி ஒரு திரைக்கதை எழுத வேண்டும் என்றோ, இப்படி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்றோ ஒருவருக்கும் தோன்றவில்லை.
புதிய திரைக்களன் எப்படியிருக்கும் என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு.
படம் இஸ்ரேல் பரிசு என்ற உயரிய விருது வழங்கும் விழாவில் துவங்குகிறது. இந்த விருதைப் பெறுவதற்காகப் பேராசிரியரும் ஆய்வாளருமான யூரில் காத்துக் கொண்டிருக்கிறான்.
அவனது தந்தையும் யூதர்களின் புனித நூல் குறித்து வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்த பேராசிரியருமான எலிஜெர் ஷ்கோலிக் பதற்றத்துடன் அருகில் அமர்ந்திருக்கிறார். அந்த விருது வழங்கும் நிகழ்வு அவரை எரிச்சல்படுத்துவதை முகபாவங்களில் அறிந்து கொள்ள முடிகிறது. பாதியில் நிகழ்வு நடக்கும் இடத்தை விட்டு வெளியேறிச் செல்கிறார்.
ஜெருசலேம் ஹுப்ரு பல்கலைகழகத்தின் மொழியியல் ஆய்வாளராக, பேராசிரியராக இத்தனை ஆண்டுகள் பணியாற்றியும் தனக்கு இந்தக் கௌரவம் கிடைக்கவில்லையே என எலிஜெர் நினைத்துக் கொள்கிறார். அவரது ஒரே ஆசை. ஏக்கம் இஸ்ரேல் பரிசை பெறுவது. ஆனால் அது வேண்டுமென்றே தனக்கு மறுக்கபடுவதாக உணர்கிறார். தன்னை விடத் திறமையற்ற தனது மகனுக்கு அது கிடைத்திருக்கக் கூடாது என நினைக்கிறார்.
ஏமாற்றம், வெறுமை, செய்வதறியா நிலை உருவாக்குகிறது.
பின்பு விருது நடக்கும் விழா அரங்கிற்குள் திரும்ப வர நினைக்கிறார். ஆனால் வாயில் காவலர்கள் முறையான அடையாள அட்டையில்லை எனத் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். இது அவரது கோபத்தை மேலும் தூண்டுகிறது. அக்காட்சியில் அவர் தன்னைத் தடுத்து நிறுத்தும் காவலரிடம் நடந்து கொள்ளும் விதம் அவரது உள்ளார்ந்த கோபத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.
நிகழ்ச்சி முடிந்து மகனுடன் காரில் போக விரும்பாமல் தனியே நடந்தே வீட்டிற்குப் போகிறார். ஏன் இந்தக் கோபம். எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்று படம் பின்னால் சென்று விவரிக்கிறது
யூதர்களின் வழிகாட்டும் நூலாகக் கருதப்படும் டால்முட் பதிப்பிக்கபட்டதில் பாடபேதம் உள்ளதாக கருதி மூலநூலினை ஒப்பிடும் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார் எலிஜெர். இதற்காக வீட்டிலும், நூலகத்திலும் படிப்புப் படிப்பு என மூழ்கி கிடக்கிறார். புத்தகங்களே அவரது உலகம். ஜெருசலம் டால்முட்டின் பாடபேத ஆய்வின் முடிவினை எலிஜெர் அறிவிப்பதற்குள் கிராஸ்மேன் என்ற பேராசிரியர் பழமையான பிரதி ஒன்றை அப்படியே மீள்பிரசுரம் செய்துவிடுகிறார்.
இதனால் பல ஆண்டுகால எலிஜெரின் உழைப்பு வீணாகிப்போகிறது. தன்னைக் கிராஸ்மேன் ஏமாற்றிவிட்டதாக மிகுந்த கோபம் கொள்கிறார். இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஒரு நாள் கல்வி அமைச்சகத்திலிருந்து இஸ்ரேல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக எலிஜெருக்கு தொலைபேசி வருகிறது. அவர் மிகுந்த சந்தோஷம் கொள்கிறார். பரிசு குறித்து முறையான தகவல் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் சொல்லி மகிழ்கிறார்.
அடுத்த நாள் இது தவறான தகவல். எலிஜெரின் மகனுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்தியை தந்தையிடம் சொல்லிவிட்டார்கள் என்று தெரிய வருகிறது.
எலிஜெரின் மகனான பேராசிரியர் யூரிலை அமைச்சகத்திலிருந்து அழைக்கிறார்கள். நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு எப்படியாவது அவரது தந்தையை ஆற்றுப்படுத்தும்படி சொல்கிறார்கள். யூரில் இது தன் தந்தையை அவமதிக்கும் செயல் என்று சண்டையிடுகிறான். அறிவிக்கபட்டது போலவே தன் தந்தைக்கே பரிசை வழங்கிவிடுங்கள் என்று மிரட்டுகிறான்.
பரிசுக்குழுவின் தலைவரான கிராஸ்மேன் அதைத் தன்னால் ஏற்கமுடியாது. தான் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிவிடுவேன் என மறுக்கிறார். ஆத்திரத்தில் அவரைத் தாக்குகிறான் யூரில்.
சிறிய அறைக்குள் அவர்களுக்குள் நடக்கும் காரசாரமான விவாதம் மிக அழகாகப் படமாக்கபட்டிருக்கிறது. யூரிலின் ஆத்திரம் மிக நிஜமாக வெளிப்படுகிறது.
அடிபட்ட போதும் கிராஸ்மேன் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். எலிஜெருக்கு விருது தருவதாக இருந்தால் யூரில் தன் வாழ்நாளில் அதைப் பெறவே முடியாது, அது பரவாயில்லையா எனக் கேட்கிறார் கிராஸ்மேன். அதை யூரிலால் ஏற்கமுடியவில்லை. தானே தந்தையைச் சமாதானம் செய்வதாகச் சொல்லி வீட்டிற்கு போகிறான்
நடந்த தவறை எப்படித் தந்தையிடம் சொல்வது. அவரை முந்திக் கொண்டு தான் எப்படி விருது பெறுவது என யூரில் குழப்பமடைகிறான். இன்னொரு பக்கம் விருது கிடைத்துவிட்டது என்ற செய்தியை நம்பி தந்தை சந்தோஷமாகப் பார்ட்டி தருவதைக் கண்டு தடுமாறுகிறான்.
வேறுவழியின்றி அவன் உண்மையைத் தாயிடம் தெரியப்படுத்துகிறான். எலிஜெர் விஷயம் அறிந்து உடைந்து போகிறார். தான் வேண்டுமென்றே அவமானப்படுத்தபட்டதாக உணருகிறார். தன் மகன் இந்த விருதுக்குத் தகுந்த நபரில்லை என வெளிப்படையாகப் பத்திரிக்கையாளரிடம் தெரிவிக்கிறார். இதனால் யூரில் ஆத்திரமடைகிறான்.
இருவருக்குமான உறவில் விரிசல் ஏற்படுகிறது. அது எவ்வாறு முடிகிறது என்பதையே படம் விவரிக்கிறது.
அங்கீகரிக்கபடாத ஒரு பேராசிரியரின் மனவேதனையைப் படம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. Shlomo Bar-Aba எலிஜெராகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தேசிய அளவில் வழங்கப்படும் விருதின் பின்னுள்ள குழப்படிகள். விருப்பு வெறுப்புகள் உண்மையாகச் சித்தரிக்கபட்டுள்ளன.
எலிஜெரின் பெயர் ஒரு ஆய்வு நூலில் ஒற்றை அடிக்குறிப்பாக மட்டுமே இடம் பெற்றுள்ளது. அது தான் அவரது இடம் என்கிறார் கிராஸ்மேன்.
ஒற்றை அடிக்குறிப்பாக மிஞ்சுவது தான் எலிஜெரின் வாழ்க்கையா, அவரது இத்தனை ஆண்டுகால உழைப்பு என்னாவது.
உயரிய விருதுகள், பரிசுகள் ஏன் இப்படி சுயலாபங்களுக்காக யார் யாருக்கோ வழங்கப்படுகின்றன என்ற கேள்வியை உரத்துக் கேட்கிறது இப்படம்.
இந்தியச் சூழலில் இப்படம் அதிகம் பொருந்திப் போகிறது என்பதாலே படம் மிகவும் பிடித்திருந்தது.
••