அட்டன்பரோவின் காந்தி

காந்தி படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியபோது படப்பிடிப்பில் என்ன நடந்தது. எவ்வாறு அந்தப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன்.

ஒளி மற்றும் ஒலியின் தரம் மோசமாக இருந்த போதும் காந்தி திரைப்படம் குறித்த அரிய ஆவணப்பதிவு என்பதால் இதனை விரும்பிப் பார்த்தேன்.

காந்தியிடம் என்னைக் கவர்ந்த விஷயம் அவரது அறிவுத்திறன் மற்றும் நம்பிக்கை . அவர் கொண்டிருந்த லட்சியவாதம் முதன்மையானது. தனது அறிவுத்திறனை அவர் வெளிப்படுத்திய விதமும் அதை எளிய மனிதர்களின் விடுதலைக்காகப் பயன்படுத்திய விதமும் தனித்துவமானது என்கிறார் பென் கிங்ஸ்லி.

படத்தில் காந்தி அறிமுகமாகும் காட்சியில் அவர் கையில் ஒரு புத்தகத்தோடு தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். படிப்பு தான் காந்தியை உருவாக்கியது. வழிகாட்டியது. அதன் அடையாளம் போலவே முதற்காட்சி உருவாக்கபட்டிருக்கிறது.

இருபது வயது காந்தியில் துவங்கி 79 வயது வரையான அவரது வாழ்க்கையை எவ்வாறு திரைக்கதையாக்கினார்கள் என்பதைப் பற்றி அட்டன்பரோ சொல்கிறார். ஜாலியன் வாலா பாக் படுகொலை மற்றும் தண்டி யாத்திரை காட்சிகள். முக்கியமானவை நூற்றுக்கணக்கான ஆட்களை ஒன்று திரட்டி படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது வியப்பளிக்கிறது.

காந்தியைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கும் யோசனையை ரிச்சர்ட் அட்டன்பரோவிடம் முன்வைத்தவர் மோதிலால் கோத்தாரி. அவர் ஏன் அட்டன்பரோவைத் தேர்வு செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் காந்தியின் வரலாற்றை படமாக்க வேண்டும் என்று கேப்ரியல் பாஸ்கல் மற்றும்  டேவிட் லீன் முயற்சி முன்னதாக செய்தார்கள். ஆனால் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.

காந்தி ஒரு கடவுளில்லை. புனிதரில்லை. நம்மைப் போல ஒரு மனிதர். ஆனால் அசாதாரணமான செயல்களைச் செய்தவர் என்பதைக் காட்டவே அவரைப்பற்றிய திரைப்படம் உருவாக்கப்பட்டது என்கிறார் அட்டன்பரோ.

இதற்காகச் செய்யப்பட்ட ஆய்வு மற்றும் நிதிநெருக்கடிகள். மற்றும் திரைக்கதையாக்கம். நடிகர் தேர்வு படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி அட்டன்பரோ In Search of Gandhi  என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

அந்தப் புத்தகத்திலுள்ள சில தகவல்களின் காணொளித் தொகுப்பாக இந்த ஆவணப்படம் உள்ளது.

0Shares
0