அதிகாரத்தின் அறைகள்

(இடக்கைநாவல் விமர்சனம்; நெய்வேலி பாரதிக்குமார் 

அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார்.

 போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை எதிர்ப்பவர்களின் தலையை கொய்வதை விட குரலை நெரிப்பதுதான் அதிமுக்கியமானது என்று பிரகடனப்படுத்துகிறான். அத்தனை நாவுகளையும் தட்டில் வைத்து எடுத்து வந்த வீரனிடம் அவற்றை மாவிலைத் தோரணம் போல கட்டி அரண்மனையின் முன்பு தொங்கவிடு அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு அச்சம் வரும் என்று உத்திரவிடும்போது அதிகாரம் எப்பொழுதும் தன்னைக் காத்துக்கொள்ள எத்தனை கொடூரங்களையும்  இரக்கமில்லாமல் நிகழ்த்திக் கொண்டே இருக்கும் என்பதை எஸ்.ரா உணர்த்துகிறார்.

இன்றைக்கும் அரசினை, அதிகாரத்தினை வழி நடத்துபவர்கள் எதிர்க்குரல்களை நசுக்குவதன் வழியேதான் அச்ச உணர்வை பரவ விடுகிறார்கள்

 இன்னொரு இட்த்தில் அக்தர் என்பவனின் தலையை கொய்து தன் முன்னே வைத்து அதன் மீது காறி உமிழ்கிறான் ஔரங்கசீப். மரணத்தைத் தாண்டிய தண்டனையை தருவதன் மூலம் மட்டுமே அரசு அதிகாரங்கள் திருப்தி அடைகின்றன என்பதை ஔரங்கசீப்பே சொல்கிறான். அடக்கமுடியாத குதிரை தன்னைக் கீழே தள்ளிவிட்ட்து என்பதற்காக அதனை வெட்டிக்கொல்லும் ஔரங்கச்சீப். அது இறந்தபிறகும் கூட அதன் கண்கள் பணியாமல் முறைத்துக் கொண்டே இருப்பதாக தோன்றியதால் அதன் கண்கள் இரண்டையும் வாளால் செருகி சிதைக்கின்றான்  

அரச மனநிலை என்பது கம்பீரத்தையோ மனவலிமையையோ கொண்டது மட்டுமல்ல இரக்கமற்றத் தன்மையையும் அடிப்படை மன நிலையாகக் கொண்டது..

ஔரங்கசீப்பின் ஏழு வயதில் அவனது வளர்ப்புத்தாய் அனார் அதிகாரத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது என்பதை அவனுக்கு உணரவைக்க ‘கீழே உதிர்ந்து கிடந்த பூவை சக்கரவர்த்தியே திரும்பவும் அதன் கிளையில் ஒட்ட வையுங்கள்’ என்று சொன்னதன் பொருள் உணராது மரத்தில் ஏறி மூர்க்கமாக முயற்சிக்கின்றான். ஆனால் முடியாமல் கீழே விழுந்து அடிபட்டுவிடுகிறான். அந்த மாபெரும் குற்றத்துக்கு ஒரு தாயைப்போல வளர்த்த அனாரை யானையின் காலில் இட்டு நசுக்கி கொல்வதை எவ்வித சலனமும் இன்றி ஏற்கின்ற மனநிலை ஏழுவயதிலேயே அவனுக்கு அமைந்துவிட்டது.

எஸ்.ரா அவர்களின் கவித்துவமான சொல்லாடால் கதையை வாசிக்கும்போது அதன் காட்சிகள் தரும் நடுக்கத்தில் இருந்து நம்மை ஒருவாறு ஆசுவாசப்படுத்தி கதையின் நெடுக அழைத்துச் செல்கிறது. இரவை வெவ்வேறு சொற்கள் வர்ணனைகள் வழியே அவர் காட்சிப்படுத்தும் போது நம்மை அறியாமல் இரவு நம்மீது கவிழ்கிறது.

அரண்மனை அமைப்பு மற்றும் நிர்வாகம் பற்றி அவர் விவரிக்கையில் அரண்மனையில் யாருமே நுழைய முடியாத அந்தப்புரத்தில் அவரது விவரணைகள் வழியாக அனாயசமாக அவரை பின்தொடர வைக்கிறார்.

உங்கள் கற்பனையில் நிழலாடும் கனவுமாளிகை அல்ல அது… குரோதங்களும், பொறாமைகளும் சதிச் செயல்களும் நியாயமற்ற சட்ட திட்டங்களூம் அந்தப்புரங்களின் வேறொரு ரூபத்தைக் காண்பிக்கின்றன.

ஔரங்கசீப்பின் அந்திமக் காலத்தில் அவர் மரணத்தை எதிர் நோக்கி அச்சத்தில் உறக்கம் தொலைத்து வாழும் பரிதாப காட்சியில்தான் நாவல் துவங்குகிறது.

தார் பாலைவனத்தில் நிழல் கூட விழாத ஒரு ஈச்சமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் சூஃபி ஞானி இபின் முகைதீனிடம் சென்று தனது மரணம் எப்படி நிகழும் என்று கேட்கிறான் ஔரங்கசீப். உண்மையில் அந்த கேள்விக்கு உள்ளே ஒளிந்திருப்பது இன்னொரு கேள்வி தான் தன்னுடைய பிள்ளைகளில் எந்த பிள்ளையால் கொல்லப்படுவேன் என்பதுதான் ஔரங்கசீப்பின் அச்சம் நிறைந்த கேள்வி.

அதிகாரம் எத்தனை குரூரங்கள் நிரம்பியதோ அத்தனை பரிதாபங்களும் நிரம்பியது.

தன் வாழ்நாள் முழுக்க எவரையுமே முழுமையாக நம்ப முடியாத, ஒரு உண்மையான் நட்பை, உறவை பெற முடியாத துரதிர்ஷ்டம் மிக்கது. முதுகின் பின்னே எவனுடைய குறுவாள் தன் முனையை பதித்திருக்கும், தன்னுடைய எந்த வேளை உணவில் விஷம் கலந்திருக்கும், எந்தப்புன்னகையில் சதி கலந்திருக்கும் என்பதை சந்தேகிப்பதிலேயே வாழ்நாள் முழுக்க கழிந்திருக்கும். அதுவும் முகலாய மன்னர்கள் வீரமும், அச்சமும், சந்தேகமும்  கலந்து பிசைந்த கிரீடத்தையே சுமக்க விதிக்கப்பட்டவர்கள்.

இபின்முகைதீன் மற்றும் ஔரங்கசீப்பின் ஆசிரியர் மீர்காசிம் ஆகியோருடன் ஔரங்கசீப் தர்க்கிக்கும் இடங்கள் ஒரு தத்துவ விசாரணை போல எஸ்.ரா எழுதி இருப்பார்.  அஜ்யை என்னும் திருநங்கை அவரது அந்திம காலத்தில் அவரது உற்ற துணையாக இருப்பாள். அந்தக்காரணத்துக்காகவே ஔரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு அவள் ஔரங்கசீப்பின் மகன் அளிக்கும் சித்திரவதைகளை வாசிக்க வாசிக்க இதயம் சில்லு சில்லாக பெயர்ந்து விடும். எத்தனை அற்பமானவர்கள் இந்த அதிகாரப் பேய்கள்.?

தூமகேது என்கிற சாமானியனின் துயர்மிக்க கதாபாத்திரம் நாவலின் இணை பாத்திரமாக வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அதிகாரத்தின் கோரமுகங்களை தோலுரித்துக் கொண்டே செல்லும் எஸ்.ரா இன்னொரு பக்கம் அதிகாரத்தின் கூர்நகங்களில் கிழிபடும் அப்பாவிகளை தூமகேதுவின் வழியே காட்சிப்படுத்துகிறார். காரணமில்லாமல் குற்றவாளியாக்கப்பட்டு அதற்காக சிறைவாசம் இருக்கும் தூமகேது தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பதால் காலா என்னும் சிறை தளத்தில் படும் அவமானங்கள் காலகாலமாக தொடரும் சாதிக்கொடுமைகளை சித்தரித்து காட்டுகிறது.

சதுர்வேதி என்னும் பண்டிதன் (சதுர்வேதி என்றாலே நான்கு வேதம் கற்றவன் என்பதால் கிடைக்கும் காரணப்பெயர்) உயர்குலத்தார் சிறையில் குளிக்கும் வாளியை தூமகேது தொட்டுவிட்டான் என்கிற காரணத்தால் நாயின் மலத்தை தூமகேதுவின் வாயில் திணிக்கும் துவேஷம் திண்ணியத்தைச் சாடும் இடமல்லாமல் வேறென்ன?

மண்ணுடல் கொண்ட பெண்ணாக உருவகிக்கும் லகியா என்கிற கதாபாத்திரம் வழியே ஆண்களால் கரைந்து அழியும் பெண்களின் வாழ்வுத் துயரை நாம் உணர்ந்து அதிராமல் இருக்க முடியாது. அதைப்போல புழு தன் இணையை தேர்க்காலில் இட்டு கொன்ற மகாராணிக்கெதிராக குரலெழுப்பி மன்னிப்பை தண்டனையாகப் பெறும் கதையும் அர்த்தமுள்ளது. புழு என்றாலும் நீதி என்பது பாரபட்சமற்றது, எதிர்க் குரலெழுப்ப வேண்டியது அத்தியாவசியமானது என்பதை எஸ்.ரா வலியுறுத்தும் இடமாகவே இருக்கிறது.

பிஷாடன் என்னும் அதிகார மமதையும், அளவற்ற கிறுக்குத்தனங்களை மக்கள் மீது திணிக்கும் ஆணவமும், மனநோய் கொண்டவன் போல நாளொரு சட்டமும் பொழுதொரு தண்டனையுமாக இருக்கின்ற கதாபாத்திரத்தை இன்றைக்கும் பல அதிகார மனிதர்கள் வழியே பார்க்கின்றோம். யானையை தூக்கிலிடச் சொல்லும் பேடித்தனம், குரங்குடன் விசித்திர சல்லாபம் செய்யும் கீழ்மைத்தனம், குரங்குக்கு பணிப்பெண்ணை மணம் செய்து பார்க்கும் குரூரத்தனம், ஒரு படியை இனி பத்து படி என்று அறிவிக்கும் மூடத்தனம் என சகல விதத்திலும் துகளக் தர்பார் செய்யும் பிஷாடன் இன்றிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளை நினைவுப் படுத்துகிறான்?

பிஷாடன் ஆட்சியில் தலைவிரித்தாடும் வணிகர்களின் வியாபார அதர்மங்கள், அதற்காக ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுக்கொள்ள முயலும் தந்திரங்கள், கீழ்மைகள், பிஷாடன் எத்தனை மூடத்தனங்களை செய்தாலும் ஆஹா ஆஹா என போற்றித் துதிபாடும் அவனது தாய்மாமன், கடலுக்கு பிஷாடனின் பெயரிடும் டச்சு தேசத்து  ரெமியஸ் என்னும் தந்திர வணிகன் என்று அவர் வடித்திருக்கும் பாத்திரங்கள்,  இன்றைக்கும் ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கும் வியாபரிகளை அப்படியே கண்முன் விரிக்கின்றன. ஒரு அசலான அரசியல் சாடல் நாவலாகவே இடக்கை வாசிப்பவர்களிடத்தில் முன் வைக்கப்படுகிறது.

பொதுமக்கள் முன்னிலையில் அழுபவர்களால் ஒரு போதும் அரசனாக முடியாது என்கிற வரி அத்தனை நித்தியமானது. எல்லா காலத்திலும் பொருந்தும் வாசகம் அது.

நாவலில் மனிதர்கள் மட்டுமல்ல அரச பயங்கரத்தால் பறக்கவில்லை என்ற காரணம் காட்டி கொல்லப்பட்டு தூக்கிலிடப்படும் யானை, தன்னியல்பில் ஓடும் குதிரை தனக்கு அடங்கவில்லை என்பதற்காக கொல்லப்படும் கொடூரம், பிஷாடனின் பைத்தியக்காரத்தனமான ஆணையால் கொல்லப்படும் நாய்கள், பெண்ணின் வாள் செருகிய உடல் கண்டு புத்தி பேதலித்ததால் கொல்லப்படும் குரங்கு என நாவலில் ஏதுமறியா வாயில்லா ஜீவன்களும் கூட வதைபடுகின்றன.

பூக்களின் வாசனை என்பது அவற்றின் ரகசியம் அதனால்தான் பெண்களுக்கு பூக்களை பிடிக்கின்றன. எவ்வளவுக்கு விரும்பப்படுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வெறுக்கப்படுபவர்கள் கவிஞர்கள்.

கலவரம் மனிதர்களை ரகசிய ஆசையை பூர்த்தி செய்கிறது போன்ற வரிகள் எஸ்.ராவின் தனித்துவமான வார்த்தைகளின் வார்ப்புகள். .

நாவலின் இறுதியில் ஔரங்கசீப் தன கையால் செய்த தொப்பி எப்படியோ தூமகேதுவின் தலைக்கு வந்து சேர்க்கிறது. ஒரு காலத்தில் கழுத்தில் விழுந்த சாமந்தி மாலைக்காக தண்டிக்கப்பட்ட தூமகேதுவின் கழுத்தில் தானே வந்து விழுகிறது வேறொரு சாமந்தி மாலை.   

நாவல் நெடுகிலும் எண்ணற்ற கதாபாத்திரங்கள் சமூகத்தில் நம் கண்ணெதிரே உலாவும் மனிதர்களை ஏதோ ஒரு விதத்தில் நமக்கு அடையாளம் காண்பித்தபடியே செல்கின்றன.

அதிகாரத்தின் அறைகள் எப்பொழுதும் இருள் கவிந்தவை. சரித்திரத்தின் பக்கங்களில் அரசதிகாரங்கள் சாலைகள் போட்டன, சாலை ஓரங்களில் மரங்கள் நட்டன, குளங்கள் வெட்டின என்பது போன்ற தகவல்களே பளபளப்பான வரிகளால்  பொறிக்கப்பட்டிருக்கும்  ஆனால் இருளின் முகங்களில் ஒளிந்திருக்கும் கறைபடிந்த கருநிற நிழல்களை வெளிச்சமிடுகிறது இடக்கை..

(ஐக்கிய அமீரக எழுத்தாளர்கள் விமர்சகர்கள் நடத்திய விமர்சனப் போட்டியில் பரிசு பெற்ற விமர்சனம் )

0Shares
0