ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகரவணிகன் நாடகத்தில் நீதி சொல்வதற்காகப் போர்ஷியா ஆண் உருவம் கொள்கிறாள். ஷைலாக்கிற்கு நீதி உரைக்கிறாள். வீடு திரும்பிய பின்பே அவளது கணவனுக்கு உண்மை தெரியவருகிறது. நெருக்கடியின் போது பெண் ஆணாக உருக் கொள்வதை இலக்கியத்தில் நிறையவே காணமுடிகிறது.

Prayers for the Stolen படத்தில் போதைப் பொருள் கும்பலிடமிருந்து தனது மகளைக் காப்பாற்றிக் கொள்ள ரீட்டா அவளது தலைமுடியை வெட்டி ஆணைப் போல வளர்க்கிறாள். அனா என்ற அந்தச் சிறுமியின் பார்வையில் ஒபியம் விளையும் மலைக்கிராம வாழ்க்கையும் அங்கே நடைபெறும் வன்முறையும் சித்தரிக்கப்படுகின்றன.
ஜெனிஃபர் கிளெமென்ட்டின் நாவலை மையமாகக் கொண்டு டாட்டியானா ஹியூஸோ படத்தை உருவாக்கியுள்ளார் Tempestad என்ற ஆவணப்படத்தின் மூலம் சர்வதேச திரையுலகின் கவனத்தைப் பெற்ற ஹியூஸோ இயக்கிய முதல் படமிது.
இப்படத்தின் கதை உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. – மெக்சிகோ மலைக்கிராமங்களில் காணாமல் போகும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குப் போதைப் பொருள் கும்பலே முக்கியக் காரணம் என்கிறார்கள்

அம்மாவும் மகளும் தங்களுக்கான சவக்குழியைத் தோண்டுவதில் படம் ஆரம்பிக்கிறது. குறியீட்டுதன்மையான காட்சியது. இறப்பிற்கான அடையாளமாக இல்லாமல் தப்பித்தலுக்கான வழிமுறையாகச் சவக்குழி மாறுகிறது. போதைக் கடத்தல் கும்பலின் வாகன ஓசை கேட்டதும் அனா ஒளிந்து கொள்ள ஒடத்துவங்குகிறாள். தப்பித்து வாழ்வதன் வலியை அவள் முழுமையாக வெளிப்படுத்துகிறாள்.
மெக்சிகோவிலுள்ள ஓபியம் விளையும் மலைப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது போதைப்பொருள் விற்பனைக் கும்பல். அவர்கள் துப்பாக்கி முனையில் மலையை ஆட்சி செய்கிறார்கள். அங்குள்ள இளம்பெண்களைக் கடத்திக் கொண்டு போய் இன்பம் அனுபவிக்கிறார்கள். பின்பு கொன்று வீசி விடுகிறார்கள்
மலைக்கிராமப் பெண்கள் ஓபியத் தோட்டங்களில் வேலை செய்து உயிர்வாழ வேண்டிய கட்டாயம். அந்தப் பகுதியில் அரசாங்கம் அடிக்கடி சோதனை நடத்துகிறது. கார்கள் சீறிப்பாய்கின்றன. ஆனால் அவர்களால் ஓபியம் விளைவிப்பர்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. பலநேரம் காவல்துறையினர் கடத்தல்காரர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். மலைகிராமப்பள்ளியில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளூர் கார்டெல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். ஓபியம் உற்பத்தியைத் தடுக்க இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கிறது. அதில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆரம்பக் காட்சியில் எட்டு வயதான அனா வெளியூரில் பணியாற்றும் தனது தந்தையோடு செல்போனில் பேச முயல்கிறாள். தந்தை அந்த அழைப்பை ஏற்கவில்லை. செல்போன் சிக்னல் கிடைப்பதற்காக ஊரே மலையின் உச்சியில் நின்று கொண்டு டவர் தேடும் காட்சி மிக அழகானது.

அனா பயிலும் பள்ளிக்கூடம். வகுப்பறைக்காட்சிகள். அவளது ஆசிரியரின் அக்கறை. ஓபியத்தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களின் நிலை. ஓபியக்களிம்பை எடை போட்டு கூலி நிர்ணயம் செய்வது. அருகிலுள்ள குவாரியில் வேலை செய்பவர்களின் வாழ்க்கை எனப் படம் தொலைதூர மலைக்கிராம வாழ்க்கையைக் கண்முன்னே விரிக்கிறது.
ஆண் போலத் தலைமயிர் வெட்டப்பட்டிருந்தாலும் மூன்று சிறுமிகளும் ஆசையாக உதட்டுச்சாயம் பூசிக்கொள்கிறார்கள். ஒருவர் மனதில் இருப்பதை அடுத்தவர் கண்டுபிடிக்கும் டெலிபதி விளையாட்டினை விளையாடுகிறார்கள். கிழிந்த உதடு கொண்ட சிறுமியின் சிரிப்பு அலாதியானது. அவளுக்கு அறுவை சிகிச்சை நடக்கும் நாளில் அனா செல்வதும் அறுவை சிகிச்சை முடிந்தபின்பு அவளுடன் உரையாடுவதும் சிறப்பான காட்சிகள்.
அனாவின் தாய் ரீட்டா தனித்துவமான கதாபாத்திரம். அவளது மனவுறுதி மற்றும் மகளைப் பாதுகாக்கும் போராட்டம் படத்தில் அழுத்தமாக வெளிப்படுகிறது. படத்தில் ஒரேயொரு இடத்தில் தான் அவள் சிரிக்கிறாள். பள்ளி ஆசிரியரை விருந்துக்கு அழைக்கும் போதும் அவருக்காக உணவு தயாரிக்கும் போதும் தான் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிப்பதில்லை.
போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் அவளது வீடு தேடிவந்து மகளைப் பற்றிக் கேட்கும் காட்சியில் ரீட்டா ஆவேசமாக நடந்து கொள்ளும் விதம் மற்றும் அனாவின் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் முயற்சி அபாரமானது.
அனா, மரியா மற்றும் பவுலா ஆகிய மூன்று சிறுமிகளின் விளையாட்டுத்தனம் மற்றும் ரகசிய ஆசைகள் படத்தில் மிகுந்த கவித்துவமாக வெளிப்படுகிறது.

அனாவின் கண்களால் தான் அந்த உலகத்தைப் பார்க்கிறோம். ஐந்து வருடங்களில் அவளிடம் ஏற்படும் மாற்றம் மற்றும் முதிர்ச்சியைப் படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது.
போதைப் பொருள் கும்பலுக்குப் பயந்து அனா மறைவிடத்தில் ஒளிந்தபடியே தன்னைச் சுற்றி நடப்பதைக் காணுகிறாள். ஒளிந்து பார்க்கும் காட்சிகள் படத்தில் குறியீடு போலவே காட்டப்படுகிறது.
அனா தனது காதலன் மார்கரிட்டோவுடன் நடனமாடும் அந்த மாய இரவு. அதில் கிடைக்கும் சந்தோஷம். வீடு திரும்பும் போது புதரோரம் கிடக்கும் பெண்ணின் உடலைக் கண்டு அலறுவது. மூன்று சிறுமிகளும் ஆற்றில் நீந்தச் செல்வது, மார்கரிட்டோ அவளுக்குத் துப்பாக்கிச் சுடப் பயிற்சி அளிப்பது என அவளது உலகம் தனக்கான மகிழ்ச்சியையும் தவிர்க்க முடியாத நெருக்கடியினையும் கொண்டிருக்கிறது.
பள்ளி மூடப்படும் செய்தியை அறியும் போதும், இன்னொரு பெண் காணாமல் போனதைப் பற்றிக் கேள்விப்படும் போதும் அவர்கள் அதிர்ச்சி அடைவதில்லை. மாறாகத் தங்களைச் சுற்றி நடக்கும் உண்மையைப் புரிந்து கொண்டவர்களாக இயல்பான தங்கள் விளையாட்டு உலகிற்குத் திரும்புகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டாரியேலா லுட்லோ மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெடிவைத்துக் குவாரியில் பாறை சரியும் காட்சி. செல்போன் டவர் தேடும் பெண்கள். இடிபாடுகளுக்குள் சிறுமிகள் சுற்றியலைவது. மலைப்பாதைகள். மரத்தில் ஊஞ்சலாடும் காட்சி. காளைச்சண்டை நடக்குமிடம். இரவு நடனக்காட்சி என டெரன்ஸ் மாலிக்கின் பாணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் அழகானவை.
மலைக்கிராமத்தில் வசிப்பவர்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். மூன்றுமுக்கிய கதாபாத்திரங்களையும் மிகப் பொருத்தமாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். குறிப்பாகப் பருவ பெண் அனாவாக நடித்துள்ள மரியா மெம்ப்ரெனோ சரியான தேர்வு.
காணாமல் போனவர்களின் கைவிடப்பட்ட வீடுகளைப் படம் துயரின் அடையாளச் சின்னமாகக் காட்டுகிறது. அந்தக் காட்சி ஏற்படுத்தும் மனப்பாதிப்பு ஆழமானது.