அனடோலியாவின் மலைப்பாதைகள்

கடந்த இரண்டு வாரங்களாகத் துருக்கி சினிமாவின் சிறந்த இயக்குனரான நூரி பில்கே ஜெலான் (Nuri Bilge Ceylan ) படங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சமகால உலகசினிமாவில் என்னை மிகவும் பாதித்த இயக்குனர் இவரே. அதிலும் குறிப்பாக இவரது Once Upon a Time in Anatolia ஒரு காவியம். ரஷ்ய இயக்குனரான தார்கோவெஸ்கியின் திரைப்படங்கள் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பிற்கு நிகரானவை நூரியின் படங்கள்.

Clouds of May, Uzak, Climates, Three Monkeys , Once Upon a Time in Anatolia, Winter Sleep ஆகிய ஆறு படங்களையும் ஒரு சேரப் பார்க்கும் போது அவரது மேதமையை முழுவதுமாக  உணர முடிகிறது.

கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றுள்ள இவர் தீவிர இலக்கிய வாசகர். தனது படைப்புகளுக்கு அடிநாதமாக இருப்பது ஆன்டன் செகாவ்வின் சிறுகதைகளே எனக்கூறுகிறார். நூரி ஒரு புகைப்படக்கலைஞர். துருக்கியின் அழகை மிகச்சிறந்த புகைப்படங்களாக எடுத்து Turkey Cinemascope என்ற தனிப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இவரது மனைவி ஒரு திரைப்பட நடிகை, அவருடன் இணைந்தே நூரி திரைக்கதைகளை எழுதுகிறார்

அனடோலியா படத்தின் சிறப்பு நிலக்காட்சிகள். குறிப்பாக மலைப்பாதைகள், அதுவும் இரவில் படமாக்கபட்ட நிலக்காட்சிகள் ஒவியங்களைப் போல ஒளிர்கின்றன. காரின் முகப்பு வெளிச்சத்தில் நடைபெறும் தேடுதல் வேட்டை நம்மை இன்னொரு உலகிற்கே அழைத்துச் செல்கிறது

காலமும் வெளியும் படத்தின் மையக்கருப்பொருளாகக் கொள்ளப்பட்டிருப்பதே நூரியின் தனிச்சிறப்பு. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் முழுமையாகப் புறக்காட்சிகளின் வழியே காட்சிப்படுத்தபடுகின்றன

பனி, பரந்து விரிந்த மலைப்பகுதி, தனிமையும் வெறுமையும் கொண்ட வீடுகள்,  யாருமற்ற வீதிகள் என அனைத்தும் கதாபாத்திரங்களின் மனநிலையைப்  பிரதிபலிக்கின்றன.  பெரிய நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள் போலவே இந்தத் திரைப்படங்களைக் காண்கிறேன். ஒன்றுக்கு ஒன்று உள்முகமாகத் தொடர்பிருக்கிறது. அந்தத் தொடர்பு கதைவழியாக உருவாக்கபடவில்லை, மாறாக உணர்வுநிலைகளின் வழியாகவும், உறவுகளின் சிக்கல் வழியாகவும், கதாபாத்திரங்கள் எதிர் கொள்ளும் விதம் மூலமும்  உருவாக்கபட்டுள்ளது. ஆண் பெண் உறவும், அதில் ஏற்படும் சிக்கல்களையும் இந்த அளவு உணர்வுபூர்வமாக, காட்சிபடிமங்களின் வழியே யாரும் சித்தரித்ததேயில்லை

அனடோலியா படத்தின் துவக்ககாட்சி மிக முக்கியமானது. கேமிரா அசைவற்று மூன்று நண்பர்கள் ஒன்றாக உணவருந்திக் கொண்டிருக்கும் வீடு ஒன்றின் வாசலுக்கு வெளியே இருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறது, நாம் அடுத்தவர் வாழ்வில் நுழைய ஆரம்பிக்கிறோம். அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற உரையாடல் முக்கியமாகயில்லை, ஆனால் அவர்களுக்குள் உள்ள உறவும் நெருக்கமும் மட்டுமே காட்சிப்படுத்தபடுகிறது, அடுத்த ஷாட்டில் ஒருவன் கதவைத் திறந்து வெளியே வருகிறான், அடர்ந்த இரவு, வாசலில் உள்ள நாய் அவனைப் பின்தொடர்கிறது, ஏதோ ஒரு மர்மத்தின் அடையாளம் போல இடி இடிக்கிறது.

அதன்பிறகு ஒரு கொலை நடந்துவிடுகிறது.அது படத்தில் காட்டப்படவில்லை, கொலை செய்தவனைப் போலீஸ் பிடித்து எங்கே இறந்தவனின் உடலை புதைத்து வைத்திருக்கிறான் என இடத்தைக் காட்டச்சொல்லி அழைத்துப் போகிறார்கள். அந்தத் தேடுதல் தான் படம். அது வெறும் இறந்த உடலை தேடும் பயணமில்லை, மாறாக மாறுபட்ட மனநிலை கொண்ட மனிதர்ளை ஒன்றிணைக்கும் ஒரு புள்ளி, பில்லியர் மேஜையில் கிடக்கும் வேறுவேறு வண்ண பந்துகளைப் போன்ற மனிதர்கள் அவர்கள். இறந்த உடலை தேடுகிற பணி அவர்களை ஒன்று சேர்க்கிறது.

இரவுக்காட்சிகளை இவ்வளவு கவித்துவமாக, அழுத்தமாக வேறு எவரது திரைப்படத்திலும் நான் கண்டதேயில்லை. குறிப்பாக மேயர் வீட்டிற்கு அவர்கள் சாப்பிடச்செல்லும் காட்சியும், வீட்டில் கைவிளக்கு ஏந்தியபடி வரும் அவரது மகளின் காட்சியும் நிகரற்றவை.

அந்தப் பெண்ணைக் காணும் வரை உண்மையை ஒளிந்து கொண்டுவரும் கொலைகாரன் முகம் தெரியாத மனிதர்களிடம் அவள் காட்டும் அன்பை உணர்ந்தவன் போலக் கண்ணீர் விடுகிறான், அதன் பிறகே மனமாற்றம் அடைந்து  இறந்த உடலைக் காட்டிக் கொடுக்கிறான்,. நூரி இக்காட்சிக்கான உந்துதலை கரமசோவ் சகோதரர்கள் நாவலில் டிமிட்ரி தான் செய்யாத கொலையை ஒப்புக் கொள்வதற்கு உறங்கும் போது யாரோ தன் தலையடியில் ஒரு தலையணை வைத்துப் போன நிகழ்வே காரணம் எனக்குறிப்பிடுகிறார்

எளிய அன்பு தான் மனத்திறப்பிற்கான சாவி என்பதே இதன் பொருள். இந்தக் காட்சியில் வரும் அழகி செகாவின் The Beauties சிறுகதையில் வரும் ஆர்மீனிய இளம்பெண் தானோ எனத்தோன்றுகிறது

தியானத்தின் போது மனம் ஒருமித்துப்போவது போலப் படத்தின் முதல் ஒருமணி நேரமும் தேடுதலில் நம் மனம் கதாபாத்திரங்களின் உலகோடு ஒன்றிணைந்து விடுகிறது, புதைக்கபட்ட உடலை கண்டுபிடித்த  நிமிஷத்திலிருந்து படத்தின் கோணம், ரிதம் மாறுகிறது.

இப்போது படம் இரவிலிருந்து பகலை நோக்கி நகர்கிறது, நாமும் மர்மத்திலிருந்து விடுபட்டு விசாரணையை நோக்கி நகர்கிறோம், ஆழமான மனநகர்வு அது. நூரி துப்பறியும் படமாக இதைக் கொண்டு செல்லவில்லை, குற்றம் ஏன் நடைபெற்றது என்ற விபரங்களில்லை. ஆனால் குற்றம் எப்படிக் கண்டறியப்படுகிறது, அதன் பின்னுள்ள மனிதர்களின் இயல்பு எப்படியிருக்கிறது, ஏன் ஒருவன் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்கிறான் என்ற தேடுதலை முதன்மைபடுத்துகிறது.

தார்க்கோவெஸ்கியின் இவான் படத்தில் ஆப்பிள்கள் உருண்டோடும் கனவுக்காட்சி இடம் பெற்றிருக்கிறது, அது ஒரு காட்சிக்குறியீடு, அது போலவே இப்படத்திலும் ஒரு ஆப்பிள் நீரோடையில் விழுந்து ஒடுகிறது, உண்மையில் அந்த ஆப்பிள் ஒரு குறியீடு, பிடுங்கப்பட்ட ஆப்பிள் போன்றதே குற்றம், அது நிகழ்ந்துவிட்டது, அதன்மீதான விசாரணை ஆப்பிள் நீரோடையில் மிதந்து போவதை போன்றே நடைபெறுகிறது, ஆப்பிள் ஒரு கல்லில் முட்டி நிற்பதை போலத் தேடும் பணியும் நின்று போகிறது, நீரோட்டம் இழுத்துப் போவது போலவே பிற்பகுதி கதை நிகழ்கிறது.

Gökhan Tiryaki படத்தின் ஒளிப்பதிவாளர், படத்திலுள்ள க்ளோஸ்-அப் மற்றும் லாங் ஷாட்டுகள் வியக்க வைக்கின்றன. நூரி ஒவியம் கற்றவர் என்பதால் இக்காட்சிகளை அவர் அசைவுறும் ஒவியம் போலவே உருவாக்கியிருக்கிறார். பனிப் பொழிவையும் அதன் ஊடாகச் செல்லும் ஒருவனையும் Climates.படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது கலையின் உச்சம்.

அனடோலியா படத்தில் வரும் டாக்டர் ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரம், ஏனோ அவரைக் காணும் போது செகாவ் நினைவில் வந்து கொண்டேயிருந்தார். ஹாலிவுட் திரைப்படங்கள் குற்றத்தை ஆராய்வதில்லை, அதை சாகசமாக மாற்றிவிடுகின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் குற்றத்தை அணுகுவதை போன்றதே எனது திரைமுயற்சிகள் என்கிறார் நூரி. அனடோலியா படத்தின் கதைக்கரு உண்மையான சம்பவம், தொழில்முறை நடிகர்களை விடவும் இயல்பான மனிதர்களையே படத்தில் அதிகம் பயன்படுத்துகிறேன். இசையும் பருவகாலமாற்றங்களும் காட்சிக்கோணங்களும் எனக்கு முக்கியமானவை என்கிறார் நூரி.

இவரது ஒவ்வொரு படத்தை பற்றியும் தனியே ஒரு புத்தகம் எழுத வேண்டும், அவ்வளவு முக்கியமானவை நூரியின் திரைப்படங்கள்.

••

0Shares
0