அனோடியின் கால்பந்து

Two Half Times in Hell கால்பந்து விளையாட்டினை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக முக்கியமானது. பலமுறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். 1961ல் சோல்தான் ஃபாப்ரி இயக்கிய இந்தத் திரைப்படம் சினிமா வரலாற்றில் தனியிடம் பெற்றது.

ஏப்ரல் 1944 ல் ஹிட்லரின் பிறந்த நாளை கொண்டாட, ஜெர்மனி ராணுவம் ஒரு கால்பந்தாட்ட போட்டி நடத்த விரும்புகிறது. ஜெர்மனி அணிக்கும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள போர் கைதிகளைக் கொண்ட அணிக்கும் இடையில் போட்டி ஏற்பாடு செய்கிறார்கள். இந்தப் போட்டி எவ்வாறு நடைபெற்றது என்பதை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஹங்கேரிய தொழிலாளர் முகாமில் போர் கைதிகள் உறங்கிக் கொண்டிருப்பதில் படம் துவங்குகிறது. காலை விசில் ஊதப்படுகிறது. அவசரமாகக் கைதிகள் எழுந்து ஓடுகிறார்கள். ஒரு கைதியின் காலணியைக் காணவில்லை. இதனால் அவன் அதிகாரியால் தண்டிக்கப்படுகிறான். திருடிய ஆளைக் கண்டுபிடிக்க எல்லாக் கைதிகளையும் உடனே காலணிகளை அகற்றிக் குவிக்கச் சொல்கிறார்கள். அடுத்த நிமிஷம் கைதிகள் தங்கள் காலணிகளை அகற்றிவிடுகிறார்கள்.

இந்தக் குவியலில் எது அவனது திருட்டுப் போன காலணி எனக் கண்டறிந்து எடுத்துக் கொள்ளும்படி உத்தரவு தருகிறான் ராணுவ அதிகாரி. மோசமான கட்டுப்பாடுகள். ஒடுக்குமுறை. அடிமைத்தனம் நிரம்பிய அந்த முகாம் வாழ்க்கையினை ஒரே காட்சியில் படம் விளக்கிவிடுகிறது

பிரபல ஹங்கேரிய கால்பந்து வீரரான அனோடி போர்கைதியாக அந்த முகாமில் இருக்கிறான். ஒரு நாள் அவனை அழைத்த ராணுவ அதிகாரி அவன் கால்பந்து வீரன் தானா என்பதை விசாரிக்கிறான். பத்திரிக்கை செய்தியைக் காட்டி விளக்கம் கேட்கிறான். அனோடி தான் ஒரு கால்பந்து வீரன் என்பதை ஒத்துக் கொள்கிறான். அவனிடம் ஹிட்லர் பிறந்தநாளுக்காக ஒரு கால்பந்து போட்டி நடத்த விரும்புவதாகவும் முகாமிலுள்ள ஆட்களைக் கொண்டு அவன் ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான் ராணுவ அதிகாரி.

அது இயலாத காரியம். கால்பந்து விளையாட்டு என்பது புனிதமானது. அதை விளையாடச் சிறந்த வீரர்கள் தேவை என்கிறான் அனோடி.

முகாமிலிருந்து தேவையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளும்படி அதிகாரி சொல்கிறார். முகாமில் இருப்பவர்கள் பசி பட்டினியில் மெலிந்து போயிருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு விளையாட முடியாது. விளையாட்டு வீரர்களுக்குக் கூடுதல் உணவு வழங்கப்பட வேண்டும். அவர்கள் வேலையில் ஈடுபடாமல் முழுநேரமும் கால்பந்து பயிற்சி எடுக்க வேண்டும். அதற்குச் சம்மதம் தெரிவித்தால் தான் ஒரு அணியை உருவாக்குகிறேன் என்கிறான் அனோடி.

அதற்குச் சம்மதிக்கிறார்கள். ஒரே நிபந்தனை. அணியில் யூதன் ஒருவனும் இருக்கக் கூடாது என்பது. அதை அனோடி ஏற்றுக் கொள்கிறார்

அவனது முகாமிலிருந்து எட்டு பேரை அனோடி தேர்வு செய்து கொள்கிறான். பக்கத்து முகாமிற்குச் சென்று இன்னும் இருவரைத் தேர்வு செய்கிறான். அதில் ஸ்டெய்னர் என்ற யூதன். கால்பந்து விளையாடத் தெரியாத போதும் பொய் சொல்லி அணியில் இடம்பிடித்து விடுகிறான்.

இந்த அணிக்கு ஒரு கால்பந்து வழங்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அனோடி கால்பந்தை உதைத்து மகிழும் அந்தக் காட்சி அழகானது.

இந்த அணியின் பயிற்சிக்காகத் தனியிடம் ஒதுக்கித் தரப்படுகிறது. இவர்களைக் கண்காணிக்க ஒரு ராணுவ அதிகாரி நியமிக்கப்படுகிறான். கால்பந்து வீரர்களுக்குக் கூடுதல் உணவு வழங்கப்படுவதால் மற்ற கைதிகள் பொறாமைப்படுகிறார்கள். அனோடியோடு சண்டை போடுகிறார்கள்

அனோடி தன் அணிக்குக் கடுமையான பயிற்சிகள் வழங்குகிறான். இந்நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாம் ஏன் அங்கிருந்து தப்பியோடக் கூடாது என்று சிலர் திட்டமிடுகிறார்கள். இதற்கு அனோடி சம்மதிக்கவில்லை. ஆனால் பேசிப்பேசி அவனைச் சம்மதிக்க வைக்கிறார்கள்.

ஒரு நாள் பயிற்சியின் போது காவல் அதிகாரியை அடித்துப் போட்டுத் தப்பிப் போகிறார்கள். ஆனால் பாதி வழியில் ராணுவத்தால் பிடிபட்டுவிடுகிறார்கள். அனோடியின் அணி இல்லாமல் கால்பந்து போட்டி நடத்தமுடியாது என உணர்ந்த ராணுவ அதிகாரி அவர்களைத் தண்டிக்காமல் போட்டியில் விளையாடச் சொல்கிறான்.

எப்படியும் தங்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்ற நிலையில் அவர்கள் ஜெர்மன் அணியை எதிர்த்து விளையாடக் களம் இறங்குகிறார்கள். சாவின் முன்னால் காத்திருக்கும் வேதனையில் அவர்களால் சரியாக விளையாட முடியவில்லை.

ஜெர்மன் அணி எளிதாக மூன்று கோல் போட்டுவிடுகிறது. பிற்பகுதி ஆட்டத்தில் அனோடியின் அணி என்ன செய்தது. அவர்கள் உயிர் தப்பினார்களா என்பதே படத்தின் மீதக்கதை.

ஸ்டெய்னர் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையில் அனோடியின் கால்பந்து அணியில் சேர்ந்து கொள்கிறான். கூடுதல் உணவு கிடைக்கும் வேலை செய்யத் தேவையில்லை என்பது அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. ஆனால் விளையாடத் தெரியாத அவனை என்ன செய்வது என அனோடி திட்டுகிறான். சண்டைபோடுகிறான். கொஞ்சம் கொஞ்சமாகக் கால்பந்து விளையாடக் கற்றுக் கொண்டு இறுதியில் ஸ்டெய்னர் களத்தில் பந்தை லாவகமாகக் கொண்டு போவது அவனை மறக்கமுடியாத கதாபாத்திரமாக்குகிறது.

கால்பந்தாட்டம் என்பது நிகழ்காலத்தின் மையம். அங்கே கடந்தகாலத்திற்கு இடமில்லை. அடுத்து என்ன நடக்கும் என்றும் தெரியாது. ஆனால் நிகழ்காலம் உயிர்த்துடிப்பானது. இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி. சிறிய தவறு கூட எதிரிக்குச் சாதமாகிவிடும். அணி என்பது ஒரே உடல் கொண்டது. அதன் இயக்கம் தனி நபர்களால் முன்னெடுக்கப்படுகிறது.

வேறு ஒரு காட்சியில் ஸ்டெய்னர் ராணுவ அதிகாரி ஒருவனுக்கு முடி வெட்டி விடுகிறான். அப்போது முடி வெட்டத் தெரியாமல் அவன் படும் பாடு வேடிக்கையானது.. ஸ்டெய்னர் அதைச் சமாளிக்கும் விதமும் அவன் வெட்டிய விதம் தனக்குப் பிடித்துள்ளதாக அதிகாரி பாராட்டுவதும் அழகான காட்சி.

ராணுவ அதிகாரிகளிடம் கறாராக நடக்கும் விதம். தன்னைத் துரோகி எனச் சொல்லும் சககைதியிடம் காட்டும் கோபம். தனது வழிகாட்டியிடம் கொள்ளும் அன்பு. விளையாட்டில்காட்டும் வேகம், இறுதிக்காட்சியில் காவலரை மிரட்டி உத்தரவிடுவது என அனோடியின் ஆளுமை படத்தின் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து தற்காலிக மகிழ்ச்சியின் அடையாளம் போலவே படத்தில் காட்டப்படுகிறது. உண்மையில் கால்பந்து விளையாடுவது சுதந்திரத்தின் அடையாளம். அது தரும் மகிழ்ச்சி நிகரற்றது.

அதிகாரத்தை எதிர்த்து விளையாட்டுப் போட்டி நடத்துவது என்ற லகான் போன்ற படங்களுக்கு இதுவே முன்னோடி.

பெண் கதாபாத்திரமே இல்லாத படம். கடைசிக்காட்சியில் ஜெர்மானிய ராணுவ தளபதியின் மனைவியாக வரும் பெண் கூட அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்றே விரும்புகிறாள்.

பந்தயம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வானில் ரஷ்யப் போர் விமானங்கள் பறந்து போவதும் ஒட்டுமொத்த ராணுவ வீரர்களும் தரையில் படுத்து ஒளிந்து கொள்வதும் விளையாட்டின் சுவடே இல்லாமல் போவதும் தனித்துவமான காட்சி.

படம் கால்பந்து விளையாட்டினை மட்டும் பேசவில்லை. சுதந்திரம் எதுவெனப் பேசுகிறது. சாவின் முன்னால் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று போரின் பாதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. சிறந்த விளையாட்டு வீரர்கள் கூடப் போர் கைதிகளாகப் பிடிபட்டு அவல வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. யூதவெறுப்பு விளையாட்டினை கூட விட்டுவைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

கறுப்பு வெள்ளை காட்சிகள் பேரழகுடன் ஒளிர்கின்றன. இன்றைய அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இன்றியே கால்பந்து போட்டியினை நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். பார்வையாளர்களுடன் இணைந்து நாமும் அனோடி வெற்றி பெற வேண்டும் என்று குரல் எழுப்புகிறோம்.

Escape to Victory என்ற பெயரில் இப்படம் 1981ல் ஹாலிவுட்டில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. The Longest Yard, படமும் இதன் பாதிப்பில் உருவானதே.

••

0Shares
0