அன்னையின் பாலில் ஊறியவை

உடன்பிறந்தவளின் திட்டுகள் உடன்பிறந்தவர்களைப் பாதிப்பதில்லை! அவை அன்னையின் பாலில் ஊறியவை. என்றொரு வரியை எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் எழுதிய பச்சோ அத்தை சிறுகதையில் படித்தேன். அற்புதமான வரியது. அக்கா அல்லது தங்கையின் கோபம் அல்லது திட்டு அண்ணன் தம்பிகளைப் பாதிப்பதில்லை. அந்தக் கோபம் அன்பின் வெளிப்பாடு. உடன்பிறந்தவளின் திட்டுகள் என்பது உரிமையில் வெளிப்படும் சொற்கள். ஒற்றைப் பிள்ளையாக வளரும் இன்றைய குழந்தைகளுக்கு இந்தக் கோபம் அறியாமல் இருக்கக் கூடும்.

ஆனால் கடந்த காலங்களில் வீட்டிற்கு நான்கு ஐந்து பிள்ளைகள் இருந்த நாட்களில் சகோதரிகளின் கோபம் அல்லது திட்டு கேட்காதவர் இருக்க மாட்டார்கள். அதுவும் சகோதரிகளுக்குள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வது சண்டையிட்டுக் கொள்வதெல்லாம் சில மணி நேரத்தில் கரைந்து போய்விடும்.

இந்தக் கதையில் வரும் பச்சோ அத்தை அப்படித் தன்னுடைய அண்ணன் ரஹ்மானைத் தொடர்ந்து திட்டுகிறாள் வசவும் சாபமும் தருகிறாள்.அத்தையின் உருவம், நிறம் எல்லாம் தத்ரூபம் அப்பா அச்சு. அவர் தான் மீசையை எடுத்துவிட்டுத் துப்பட்டா போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்றும் என்றொரு வரியை சுக்தாய் எழுதியிருக்கிறார். எவ்வளவு அழகான வரியது.

இப்படியான சில பெண்களை நானே கண்டிருக்கிறேன். அப்படியே தந்தையை உரித்து வைத்தது போலத் தோற்றம் கொண்டிருப்பார்கள். குரலும் அப்பாவின் குரலைப் போல ஓங்கி ஒலிக்கும்.

கதை முழுவதும் அத்தை கோபத்தில் திட்டிக் கொண்டேயிருக்கிறாள். அவள் வாயிலிருந்து எரிமலைக் குழம்பு போல வார்த்தைகள் சீறிப் பாய்கின்றன. அந்தக் கோபத்தை யாராலும் அடக்கமுடியவில்லை. பல நேரங்களில் வேண்டும் என்றே அவளைச் சீண்டி கோபம் கொள்ளச் செய்கிறார்கள், அவள் வெடிக்கிறாள். அண்ணன் வீட்டுப் படி ஏற மாட்டேன் என்று சபதம் செய்கிறாள்.

ஒரு நாள் அவளது அண்ணனுக்குப் பாரிசவாயு தாக்குகிறது. உயிருக்குப் போராடும் நிலைக்கு உள்ளாகிறார். அப்போது கடைசி முறையாகத் தங்கையைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்

சுக்தாயின் கதை இப்படி நீளுகிறது

”பாதுஷாஹீ கானம்! என் இறுதி நாள் நெருங்கிவிட்டது. உள்ளத்து ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்றால், உடனே புறப்பட்டு வா!” அந்தச் செய்தியில் என்ன அம்பு எங்கு ஒளிந்திருந்ததோ? அண்ணா விட்ட அந்தச் சொல் அம்பு. தங்கையின் உள்ளத்தில் தராசு முள்ளெனத் தைத்துக் கொக்கிப் போட்டு இழுத்து விட்டது. தளர்ந்த தன் மார்பில் ‘பொட்டுப் பொட்டு’ என்று போட்டுக்கொண்டு, வெள்ளை மலை ஒன்று பூகம்பத்தில் பறந்து வருகிறாற்போல், பாதுஷாஹீ கானம் வந்து சேர்ந்தாள். பல்லாண்டுகளாகப் படி ஏறாத கால்கள் இன்று ஏறி வந்தன.

பாதுஷாஹீ! உன் ஆசீர்வாதம் நிறைவேறுகிறது!” அத்தனை கஷ்டத்திலும் அப்பா சிரித்தார். அவருடைய கண்களில் அதே இளமை பளிச்சிட்டது.

பாதுஷாஹீ அத்தை அத்தனை நரையிலும் அவருக்குச் சின்னஞ் சிறு ‘பச்சோ’வாகத்தான் தோன்றினாள். பிள்ளைப் பருவத்தில் முறண்டு பிடித்துத் தன் சொல்லையே நிறைவேற்றிக்கொண்டவளாயிற்றே! சிங்கத்தை நிகர்த்த அவளது பொல்லாக் கண்கள் ஆட்டுக்குட்டியின் பேதை விழிகளைப்போலப் பயந்து கலங்கிப் போயிருந்தன. பெரிய பெரிய கண்ணீர்த் துளிகளாக அவளது சலவைக்கல் போன்ற கன்னங்களில் வழிந்து கொண் டிருந்தன.

என்னைத் திட்டு, பச்சோ கண்ணு!” அப்பா அன்போடு கூறினார். என் அம்மாவும் விகசித்தவாறே பாதுஷாஹீ சித்தியிடம் வசவுப் பிச்சைக்குக் கையேந்தி நின்றாள்.

யா அல்லாஹ்! யா அல்லாஹ்!’ அவள் கர்ஜனை புரியத்தான் நினைத்தாள். ஆனால் நடுநடுங்கிப் போனாள். ‘யா-யா-யா- அல்லாஹ்! என் வயதை என் அண்ணனுக்குக் கொடேன். யா-மெளலா! என் தெய்வமே! ரசூலே! எனக்குப் பிச்சை …” பாடம் நினைவுக்கு வராத குழந்தையைப்போல் எரிந்து விழுந்து

அழத் தொடங்கிவிட்டாள்.

எல்லாருடைய முகங்களும் வெளிறிவிட்டன. அப்பாவின் கால்கள் உணர்வற்று ஓய்ந்து தொங்கின. ஆண்டவனே! இன்று ஏன் அத்தையின் வாயிலிருந்து அண்ணனுக்கு ஒரு வசவு கூடக் கிட்டவில்லை?

அவள் வசவுகளைக் கேட்டு என்றும் சிரிப்பது போல், அப்பா அன்றும் சிரித்துக்கொண்டிருந்தார்!

உண்மை ! உடன்பிறந்தவளின் திட்டுகள் உடன்பிறந்தவர்களைப் பாதிப்பதில்லை! அவை அன்னையின் பாலில் ஊறியவை.

கதையை வாசித்துமுடிக்கும் போது அத்தையின் மீதான நமது கோபம் மறைந்து அவளது அன்பையும் கண்ணீரையும் உணருகிறோம். இயலாமை தான் இப்படிக் கோபமாக வெளிப்படுகிறது. கோபத்தின் வழியாகவே தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள் அத்தை. அவள் கோபத்தினுள் உண்மையிருக்கிறது. கோபத்தில் சில வார்த்தைகளைக் கூடுதலாகப் பேசியபோது அதை உணர்ந்து அவளைத் தன்னைத் திட்டிக் கொள்கிறாள்.

உலகின் கண்களில் பச்சோ அத்தை போன்றவர்கள் மோசமானவர்கள். ஆனால் நிஜத்தில் அப்படியில்லை. வாழ்க்கை நெருக்கடி அவர்களை அப்படி உருமாற்றி வைத்திருக்கிறது. நாக்கில் நெருப்பை வைத்துக் கொண்டிருப்பவர்கள் மனதில் வேறு ஏதோ ஏக்கம் இருக்கிறது. எதையோ இழந்து விட்டு இப்படிக் கோபம் கொள்கிறார்கள். அன்பை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாதவர்கள் அதிகம் கோபம் கொள்ளுகிறார்கள்.

அன்னையில் பாலில் ஊறிய சொற்கள் என்பது எத்தனை அழகான பிரயோகம். சுக்தாய் இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுவது இது போன்ற வெளிச்சமிக்க வரிகளை, அபூர்வமான மனிதர்களை எழுதியதால் தான்.

இந்தியக்குடும்பங்களுக்குள் ஓராயிரம் கதைகள் புதைந்து போயிருக்கின்றன. எவ்வளவு எழுதினாலும் எத்தனை மொழிகளில் எழுதினாலும் இந்தக் கதைகளின் விசித்திரமும் புதிரும். விநோதமும் குறைவதேயில்லை. கதைகளைத் தேடி இந்திய எழுத்தாளர் எங்கும் பயணிக்க வேண்டியதில்லை. குடும்ப விருட்ஷத்தின் வேர்களை. கிளைகளை, நிழலை அறிந்து கொள்ளத் துவங்கினாலே போதும்.

••

0Shares
0