எனக்கு தியோவைப் பிடிக்கும். அவன் ஒவியர் வான்கோவின் தம்பி. நான்கு வயது இளையவன். தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் நிஜவாழ்வில் இருந்தால் எப்படியிருந்திருப்பான் என்பதற்கு தியோவை உதாரணமாகச் சொல்லலாம்.
தஸ்தாயெவ்ஸ்கியின் மிஷ்கின் எளிய மனிதன். ஆனால் அன்பும் கருணையும் உருவானவன். அறிந்த அறியாத மனிதர்களுக்காக தன்னிடமிருப்பதை முழுமையாக பகிர்ந்து கொள்பவன். அடுத்தவரின் துயரங்களுக்காக மனம் வருந்துபவன். அவனிடம் வாழ்க்கை குறித்த புகார்கள் எதுவுமில்லை. அதே நேரம் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்பவர்களுக்காக அவன் கைகொடுத்து உதவுகிறான். காதலும் அன்பும் உலகை காப்பாற்ற கூடியது என்று அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறான். அதன் பொருட்டான சகல அவமானங்களையும் விரும்பி ஏற்றுக் கொள்கிறான்.
வான்கோவின் தம்பி தியோ அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறான்.
வான்கோவினை முழுமையாகப் புரிந்து கொண்ட ஒரே ஆத்மா அவனது தம்பி. தனது அண்ணன் மாபெரும் கலைஞன். அவனை ஒரு நாள் உலகம் கொண்டாடும் என்ற தீர்க்கமான எண்ணம் தியோவிற்குள் இருந்திருக்கிறது. பலவீனங்கள், கோபம். தடுமாற்றம், கற்பனையான பயம், மனப்பிசகு என்று அண்ணனின் நிலையற்ற மனப்போக்கை சகித்து கொண்டு தொடர்ந்து பணம் அனுப்பியும் ஆறுதல் வார்த்தைகளை எழுதியும் வான்கோவின் படைப்பு மனதைக் காப்பாற்றியிருக்கிறான்.
தியோவைப் போல ஒரு தம்பி கிடைத்தது வான்கோவின் அதிர்ஷடம்.
உலகில் வேறு யார் வேண்டுமானாலும் தன்னைப் புரிந்து கொள்ளாமல் சண்டையிட்டு பிரிந்து போகலாம். அதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் தியோ தன்னைப் புரிந்து கொள்ளாமல் போனால் தனது வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும் என்று வெளிப்படையாக வான்கோ எழுதுகிறார்.
வான்கோவிற்கும் அவனது தம்பிக்குமான உறவு தனித்து விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்று.
தம்பியின் படிப்பிற்காகவும் வளர்சிக்காவும் அண்ணன்கள் உதவுவது இயல்பான ஒன்று. ஆனால் அண்ணனுக்காக தம்பி கஷ்டமறிந்து பணம் தருவதும், அண்ணனின் திறமைகளை உலகம் அறிய வேண்டும் என்று பெருமுயற்சி கொள்வதும், எல்லா நெருக்கடிகளையும் மீறி அண்ணன் மீதான பாசத்தையும் புரிதலையும் தக்கவைத்து கொள்வது சற்று அரிதானது. ஒரு வகையில் அது அண்ணனை தம்பி வளர்ப்பதை போன்றது. புனைவிலக்கியங்களில் மட்டுமே இயலாமையில் தவிக்கும் அண்ணனை தம்பிகள் மேல் தூக்கிவிடுகிறார்கள். லட்சிய மனிதர்களாகிறார்கள்.
வான்கோவின் தம்பி நம்பிக்கையை மட்டுமே துணையாக வைத்திருக்கிறான். அவனது கடிதங்களில் வெளிப்படும் விடாப்பிடியான நம்பிக்கை போல வேறு எதிலும் காண முடியாது. அது தான் வான்கோவினை இயங்கச் செய்கிறது.
தியோவின் கடிதம் வராத நாட்களில் வான்கோ அதிக குழப்பமும் ஏமாற்றமும் அடைகிறார். அவராக கற்பிதங்களை உருவாக்கிக் கொள்கிறார். பிறகு அவரே தனக்கு மனசமாதானமும் செய்து கொள்கிறார். தியோ ஒவ்வொரு மாதமும் அண்ணன் செலவிற்காக பணம் அனுப்புகிறான். அது போக அண்ணனின் தேவைக்கான புத்தகங்கள், ஒவியம் வரைவதற்கான காகிதங்கள், மருந்துகள், பிற ஒவியர்களின் கேட்லாக் என்று தேடித்தேடி அனுப்பி வைக்கிறான்.
தியோவிடம் உள்ள வான்கோவின் நட்பு அவன் பெண்களுடன் கொண்டிருந்த காதலை விட தீவிரமானது. சின்னஞ்சிறு விசயங்களை கூட தியோவிடம் சொல்வதில் வான்கோ சந்தோஷமடைகிறான்.
வான்கோ காதலித்த பெண் கீ என்ற பெண் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிடுகிறாள். அவளை சம்மதிக்க வைக்க என்ன செய்வது என்று புரியாமல் அவளை தேடி போய் அவமானப்படுகிறார் வான்கோ. அவளை மறப்பதற்காக இன்னொரு பெண்ணை தேடிப்போகிறார். அவள் அழகியில்லை. ஆனால் அவள் உறுதியானவள். தனக்கு ஒரு பெண் வேண்டும்.
முப்பது வயதிற்கு மேல் பெண் துணையில்லாமல் தனியே இருப்பதை போல கொடுமையான இந்த உலகில் வேறு எதுவுமில்லை. அந்த பெண் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவளது அரவணைப்பு தன்னை உயிர்பித்துவிடும் என்று சொல்கிறார்.
இது போல அவரது காதல் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதை தியோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஆனாலும் அண்ணனை அவன் வெறுக்கவில்லை. உன் மனது குழந்தையை போல இருக்கிறது. அதை எப்படியாது உறுதியாக்கி கொள் என்று தியோ பதில் எழுகிறான்.
வான்கோ தான் வரைந்த ஒவியங்கள். அதைவரைந்த மனநிலை. அதை எவ்வாறு தான் கருதுகிறேன் என்பதை பற்றி தியோவிடம் மட்டுமே விளக்கியிருக்கிறார். அவை தான் இன்று அவரது ஒவியங்களை புரிந்து கொள்வதற்கான ஆதார பதிவுகள்
வான்கோவின் அப்பா கிறிஸ்துவ ஊழியர். வீடு வீடாக போய் பாவிகளின் ரட்சிப்பிற்காக பிரார்த்தனை செய்வது அவரது ஊழியம். வருமானமில்லை. ஆனால் பிள்ளைகளின் மீது அக்கறை கொண்டவர். அம்மா ஒரு பைண்டரின் மகள். எளிய குடும்பத்தை சேர்ந்தவள். இரவில் கைவிளக்குடன் தனது அப்பா அம்மா இருவரும் இருண்ட பாதையில் நடந்து சென்று ஏழை விவசாயிகள் வீட்டில் பிரார்த்தனை செய்யும் காட்சி தன் மனதில் அப்படியே இருக்கிறது என்று வான்கோ குறிப்பிடுகிறார்
ஒவியத்தில் ஆர்வம் கொண்ட வான்கோ பிராய வயதில் ஒவிய விற்பனையாளராக வேலைக்கு சேர்க்கிறான். ஊர் ஊராக போய் ஒவியங்களை விற்க முயற்சிக்கிறான். அது போன்ற ஒவிய விற்பனையாளராக அவனது மாமா முன்பே இருப்பதால் அந்த தொழிலில் தானும் முன்னேறிவிட முடியும் என்று நம்புகிறான். ஆனால் வான்கோவின் மனநிலைக்கு ஒவிய விற்பனை ஒத்துவரவில்லை.
அந்த வேலையை தம்பிக்கு கிடைக்குமாறு செய்கிறான். அப்படி தான் தியோ ஒவிய விற்பனையாளராக பணிக்கு செல்லத் துவங்குகிறான். அவனுக்குள்ளும் ஒவியம் வரையும் ஆசையிருக்கிறது.ஆனால் குடும்ப சூழல் காரணமாக அவன் அதை கைவிட்டு ஒவியங்களை விற்பனை செய்வதில் முழுமையாக ஈடுபடுகிறான். அதில் முன்னேற்றம் காணவும் செய்கிறான்.
தியோவும் பணத்திற்காக அதிகம் கஷ்டப்படுகிறான் ஆனால் அதை வான்கோவிடம் தெரியப்படுத்துவதில்லை. ஊர் ஊராக போய் ஒவியங்களை வாங்கும்படியாக பேசி விற்பனை செய்த பணத்தில் பாதியை அண்ணனுக்கு அனுப்பி வைக்கிறான். அண்ணன் தனக்கு அனுப்பும் ஒவியங்களை பற்றி விரிவாக கடிதம் எழுதுகிறான்.
தான் வேலை செய்யும் ஒவிய விற்பனையகத்தில் தனது அண்ணன் வான்கோவின் படங்களை ஒரு மூலையில் வைத்திருத்தான் தியோ,. யாராவது கேட்டால் எடுத்து காட்டுவான். அப்போது கூட அதை வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல நாக்கு தடுமாறும். காரணம் அது தனது அண்ணன் என்பதற்காக சிபாரிசு செய்வதாக யாராவது நினைத்து கொண்டுவிட்டால் தனக்கு அவமானமாகிவிடும் என்று நினைக்கிறான். ஆனால் அன்று விற்பனையாகும் புகழ்பெற்ற பல ஒவியர்களை விட வான்கோ திறமையான, அசலான கலைஞன் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தான்.
வான்கோ இரண்டாயிரம் ஒவியங்களுக்கும் மேலாக வரைந்திருக்கிறான்.அதில் 800 சிறியதும் பெரியதுமான ஒவியங்கள். மிச்சம் கோட்டோவியங்கள். ஆனால் அதில் அவன் காலத்தில் விற்பனையாது ஒன்றிரண்டு மட்டுமே.
உடனடி விற்பனையாகும்படியான கேளிக்கை ஒவியங்களை வரைந்து பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்று வான்கோவிற்கும் தோன்றுகிறது. ஆனால் ஒவியம் வரைய துவங்கியதும் கலையை தான் ஏமாற்ற கூடாது. அதை மிக உண்மையாக நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை வந்துவிட அதை தேர்ந்த கலைப்படைப்பாக்கிவிடுவது வான்கோவின் இயல்பு. அதனால் அவனது ஒவியங்களை புரியவில்லை என்று பலரும் ஒதுக்கினார்கள். கேலி செய்தார்கள்.
வான்கோ தனது தம்பிக்கு அறுநூறுக்கும் மேலான கடிதங்கள் எழுதியிருக்கிறான். பதினெட்டு வருசங்கள் இருவரும் மாறிமாறி கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். வான்கோ தம்பிக்கு மட்டுமில்லை தங்கை அம்மா நண்பர்கள் என பலருக்கும் தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறான். இன்று 850க்கும் அதிகமான கடிதங்கள் சேகரிக்கபட்டு தனித்த நூலக்காகபட்டிருக்கின்றன. அவை மொத்தமாக சேர்ந்தால் 1500 பக்கங்களுக்கும் அதிகமாக இருக்கும். அதுவே தனித்த இலக்கிய படைப்பாக உள்ளது. தனது காலத்தின் முக்கிய எழுத்தாளர்களுக்கு நிகராகவே உள்ளது வான்கோவின் எழுத்து.
இந்த கடிதங்களில் சொற்பமானவை மட்டுமே வான்கோவின் அன்றாட தேவைகள் மற்றும் குடும்ப விசயங்களைப் பேசுகின்றது. மற்றவை வான்கோவின் பற்றி எரியும் மனது உலகை எப்படிக் காண்கிறது, எப்படி புரிந்து கொள்கிறது , தன்னை சுற்றிய மனிதர்கள், கலைஞர்கள் மீதான வான்கோவின் எண்ணங்கள், பெண்கள் மீதான ஈர்ப்பு, காதல் குறித்த அவனது மீளாத தடுமாற்றங்கள் யாவும் அந்த கடிதங்களில் பதிவாகி உள்ளன.
கடிதங்களில் வரும் வான்கோ ஒவியன் வான்கோவில் இருந்து முற்றிலும் மாறுபட்டவன். வான்கோவின் கடிதங்கள் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்திற்கு மிக நெருக்கமாக உள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியின் கதாநாயகர்களுக்கு உள்ள அத்தனை பொதுத்தனமைகளும் வான்கோவிடம் இருக்கின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் தன்னை தானே ஆராய்ந்தபடி இருக்கிறார்கள். தன்னை சுற்றிய மனிதர்களை கொண்டாடுகிறார்கள். அவர்கள் தன்னை புரிந்து கொள்ள தவறி அவமானப்படுத்தும் போது கண்ணீர் விடுகிறார்கள். தொடர்ந்து வறுமையும் இயலாமையும் துரத்த அதற்குள்ளாகவும் தனது படைப்பாற்றல் மட்டுமே தன்னை காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் கதையில் வரும் நாயகனை போன்றே வான்கோ கடிதங்களில் பேசுகிறார்.
வான்கோவின் எழுத்து மிகச் சிறப்பானது. அவரது கடிதங்களுக்குள்ளாக நானூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கதைகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. தனக்கு விருப்பமான டிக்கன்ஸ் பால்சாக் எமிலி ஜோலா போன்றவர்களின் படைப்புகளை பற்றி விரிவாக வான்கோ கடிதத்தில் எழுதியிருக்கிறார். அது போலவே அன்றுள்ள முக்கிய ஒவியர்கள் அவர்களின் பிரபலமான ஒவியங்கள், மைக்கேல் ஏஞ்சலோ, ரெம்பிராண்டின் புகழ்பெற்ற ஒவியங்கள், சிற்பங்கள் என்று அவரது கடிதம் பெரும் இலக்கிய ஆவணமாகவே எழுதப்பட்டிருக்கிறது
அறுநூறு கடிதங்களை எழுதியுள்ள போதும் தியோவிடம் சொல்வதற்கு வான்கோவிடம் வார்த்தைகள் மிச்சமிருந்தன. தியோவிற்கு எழுதியுள்ள கடிதங்களில் அவனை தனது தம்பி என்ற உணர்வேயின்றி ஒரு மூத்த சகோதரனை போல, தன்னை முழுமையாக புரிந்து கொண்ட நண்பனை போல, சில நேரங்களில் தன்னை நேசிக்கும் மதகுருவை போல பாவிக்கிறான்.
தனது வாழ்வில் நடைபெற்ற எதையும் அவன் தம்பியிடம் ஒளிக்கவேயில்லை. குறிப்பாக வேசைகளுடன் தனது உறவை பற்றி வான்கோ விரிவாக தம்பிக்கு எழுதுவதோடு அதை வெறும் உடல் ரீதியான இச்சையாக மட்டும் தன்னால் கருத முடியவில்லை. அது ஒரு நிர்கதி. அதை தடுக்க தன்னால் இப்படி தான் நடந்து கொள்ள முடிகிறது என்கிறார்
ஒரு வேசை கர்ப்பமாகி குளிரில் நடுங்கியபடியே உணவில்லாமல் தெருவில் அலைவதை ஒரு இரவு வான்கோ பார்க்கிறார். அவளை தனது இருப்பிடத்திற்கு அழைத்து சென்று உணவு தந்து கணப்பு அடுப்பின் அருகில் அமர செய்து அவள் தலையை கோதிவிட்டு அவள் உறங்குவதை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார். அந்த பெண் உறங்கும் போது ஒரு தேவதை போல இருக்கிறாள்.
யாரோ ஒரு வாடிக்கையாளனின் குழந்தை தனது கர்ப்பத்தில் உள்ளனெ அவள் ஒருபோதும் நினைக்கவேயில்லை மாறாக ஒரு குழந்தை தன்வழியாக பூமிக்கு வருகை தருகிறது. அதை கொண்டு வந்து சேர்க்க வேண்டியது தனது வேலை என்பது போல நடந்து கொள்கிறாள். அந்த பெண்ணின் நிர்கதியின் முன்னால் தனது வாழ்வின் நெருக்கடிகள் அர்த்தமில்லாமல் போய்விட்டன அவளுக்காக நான் அழுதேன், தீராத குற்றஉணர்ச்சி அடைந்தேன் என்று வான்கோ தனது தம்பிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் குற்றவுணர்ச்சியின் உந்துதலால் ஒரு வேசையை அவர் திருமணம் செய்துகொண்டு அவளது குழந்தைக்கு அப்பாவாகி அதை வளர்த்து மனிதனாக்குவதே தனது வேலை என்ற முடிவுக்கு கூட போகிறார்.
தியோ எல்லா நேரங்களிலும் வான்கோவின் மனதை சரியாகவே புரிந்து கொள்கிறான். அவனது கடிதம் நிலக்கரி சுரங்கத்தில் குகையினுள் ஊர்ந்து செல்கின்றவன். இருளுக்குள் கொஞ்சம் ஒளி கசிவதை உணர்வதை போன்றது என்று வான்கோ குறிப்பிடுகிறார்
தியோ அன்றைய புகழ்பெற்ற ஒவியர்களான பால்காகின். பால்செசான்,. ஹென்றி டுலேக், ரூசோ, கமிலோ பிசாரோ போன்றவர்களுடன் வான்கோவிற்கு நட்பு உருவாக காரணமாக இருக்கிறான். இதில் பால்காகினும் வான்கோவும் நண்பர்களானது தியோவின் நேரடியாக முயற்சியால் மட்டுமே.
ஆனால் காகின் மூர்க்கமான மனம் கொண்டவர். வான்கோ குற்றவுணர்ச்சியில் தடுமாகின்றவர். ஆகவே இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற முடியவில்லை. வான்கோவிற்கு காகின் மீது பெரிய மரியாதையிருக்கிறது. அவர் மிக முக்கிய ஒவியர் என்று பாராட்டுகிறார்.
தியோ ஜோகனா போங்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதைப்பற்றி கடிதம் எழுதுகிறான். அந்த கடிதம் வான்கோவின் மனதைத் துவள செய்துவிடுகிறது. திருமணம் தனது தம்பியை தன்னை விட்டு பிரித்துவிடும் என்று பயப்படுகிறார். தம்பிக்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் மதுவிடுதிக்கு போய் அதிகம் குடிக்கிறார். இனிமேல் தம்பியிடமிருந்து தனக்கு பணம் கிடைக்காது. தன்னால் ஒவியம் வரைய முடியாது என்று போதையில் கதறி அழுகிறார். அந்த மனநிலை தீவிரமடைகிறது. அத்துடன் அவர் நேசித்த வேசைகளில் ஒருத்தி நோய்மையுறுகிறாள். இரண்டும் ஒன்று சேர அதீதமான மனச்சோர்வு கொண்ட வான்கோ தனது ஒரு காதை அறுத்து தன்னை நேசித்த பெண்ணிற்கு பரிசாக அனுப்பி வைக்கிறார்
தனது திருமணத்தால் அண்ணனை ஒரு போதும் பிரிந்துவிட மாட்டேன் என்று தியோ உறுதி சொன்னதோடு ஜோகனாவையும் ஒரு கடிதம் எழுத வைக்கிறான். கூடுதலாக பணமும் அனுப்பி வைக்கிறான். அப்போது தான் வான்கோ சாந்தம் கொள்கிறார். ஒவ்வொரு முறை பணம் கிடைத்தவுடன் அதை தான் எப்படி செலவு செய்தேன் என்று விரிவாக தம்பிக்கு வான்கோ எழுதுகிறார். அது போல தன்னை சுற்றிய நிலக்காட்சியை தினசரி தான் பார்க்கும் இயற்கையின் தோற்றம், புலரி மற்றும் அந்தி வெளிச்சம் பற்றி விரிவாக எழுதுகிறார். கடற்கரை, மலை, வனம் என்று நடந்தே அலையும் வான்கோ அந்த அனுபவங்களை தம்பிக்கு தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்.
வான்கோ தன் தம்பிக்கு எழுதிய கடிதங்கள் உயர்ந்த கவித்துவமானவை. ஒரு கடிதத்தில் அவர் உலகில் வயதான பெண்களே இல்லை என்று எழுதுகிறார். அப்படி தான் சொல்வதற்கு காரணம் யாராவது ஒருவரால் காதலிக்கபடும் போது பெண் சாதாரணமாக இருப்பதை விட மிக இளமையாக தோற்றம் தருகிறாள்.அந்த வகையில் பெண்களில் வயதானவர்களே கிடையாது .கண்களை திறந்து வைத்து கொண்டிருந்தால் உலகம் அழகானது என்று புரியும். என்று விளக்கம் தருகிறார்.
ஒவியனுக்கு உலகை உன்னிப்பாகக் கவனிக்கவும் நிறங்களை ஆழ்ந்து புரிந்து கொள்ளவும் தனித்திறன் வேண்டும். தனித்துவமான கண் கொண்டவர்களால் மட்டுமே ஒவியர்களாக முடியும். உலகின் காட்சிகள் மாறாதவை. ஆனால் ஒவியன் அதை விசேசமான கண்களால் சிறப்பாக்கி காட்டுகிறான் என்று இன்னொரு கடிதம் விவரிக்கிறது.
இன்னொரு கடிதம் இப்படி விவரிக்கிறது.
ஒரே போல சிந்திக்ககூடிய மூன்று பேர் ஒன்றாக அமர்ந்துபேசி சந்தோஷமாக பொழுதை கழித்தால் அதில் நாலாவது ஆளாக கட்டயாம் கடவுளும் உடனிருப்பார். அது போன்ற நேரம் தான் ஆசிர்வதிக்கபட்டது.
உயர்வான கலையம்சம் ஒன்றை ஒரு மனிதன் தரிசனம் செய்துவிட்டால் அதன் பிறகு அவன் தன்னை ஒரு போதும் தனிமனிதனாக நினைக்கவே முடியாது. காரணம் அவன் உள்ளவரை அவன் நினைவில் அந்த கலையம்சம் நிரம்பிய பொருள் அப்படியே இருக்கும். உலகின் ஒப்பில்லாத கலைப்பொருளை மனது கொண்டிருக்கும் போது நாம் எப்படி தனியான மனிதனாக உணர முடியும்.
அன்றாடம் சாப்பிட்டு உறங்கி எழுந்து வாழும் வாழ்க்கையை விட சில மேலான விசயங்கள் உலகில் இருக்கின்றன. அதை நோக்கி நகர்வதே கலைஞனின் வேலை. கலை மனதை ஆறுதல்படுத்தவும் சந்தோஷம் தரவும் கூடியது. அதை நான் எனதாக்கி கொள்வது எளிதானதில்லை என்பதை அறிவேன். அதே நேரம் எனது ஒவியங்கள் முன்பு வரையப்பட்ட எதையும் விட சிறப்பானது என்ற உள்ளார்ந்த எண்ணமும் எனக்கிருக்கிறது என்று வான்கோவின் கடிதங்கள் கூறுகின்றன.
வான்கோ ஒரு பவுண்ட் கடன் வாங்குவதற்காக ஐந்து மணிநேரம் கால்நடையாக நடந்து லண்டனுக்கு சென்று இரவெல்லாம் காத்திருந்து அறிந்த மனிதர் ஒருவரிடம் பணம் கடன்வாங்கி திரும்பியிருக்கிறார்.
கடன் வாங்க நடந்து சென்ற போதும் அவர் மனதில் உலகின் மீதான வசீகரம் குறையவேயில்லை. மாலைநேர வெளிச்சத்தின் அலாதி தன்மை பற்றியும் துறைமுகவீதிகளில் ஒளிரும் சூரியனை பற்றியும் வியந்து எழுதுகிறார். லண்டன் நகரின் மீது இருள் படிவதையும், அதை தாண்டி விளக்கு வெளிச்சம் நகரின் இருளை விரட்டி அடிப்பதையும் மக்கள் முகத்திலே அன்று சனிக்கிழமை இரவு என்பதன் பரபரப்பு தொற்றியிருப்பதையும் கவனமாக விவரிக்கிறார் .
கொண்டாட்டம் மற்றும் பரபரப்பில் களைத்து போன வீதிகளுக்கு ஞாயிற்றுகிழமை என்ற ஒய்வு கட்டாயம் வேண்டும். அது தெருக்களை உறங்க வைக்கிறது. தன்னை தானே தூய்மை படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் தருகிறது என்றும் எழுதுகிறார். வறுமை ஒரு கலைஞனை எந்த அளவு மனசோர்விற்கும், துயரத்திற்கும் உட்படுத்தும் என்பதற்கு வான்கோவே சாட்சி.
வான்கோ தனது மனதை முழுமையாக தம்பியிடம் திறந்து காட்டியிருக்கிறார். ஆனால் தியோ அண்ணனிடம் சொல்ல முடியாத ரகசிய காதல்களையும் பெண்உறவையும் கொண்டிருந்திருக்கிறான். தனது நெருக்கடிகளில் இருந்து தன்னை சாந்தப்படுத்திக் கொள்ள பெண்துணையை தவிர வேறு எதிலும் மனம் கூடவில்லை என்று தியோ தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறான். முறைகேடான பாலுறவு வேட்கையால் அவனுக்கு சிபிலிஸ் என்ற நோய் ஏற்படுகிறது. அதை வான்கோவிடம் மறைத்துவிடுகிறான். பால்வினை நோய் தியோவை உருக்குலைக்க ஆரம்பிக்கிறது. தனது 33வது வயதில் தியோ இறந்துவிடுகிறான். அவனது மனைவி பின்னாளில் வான்கோ எழுதிய கடிதங்களை பிரசுரத்திற்காக தந்து அண்ணன் தம்பி இருவருக்குமான உறவை பற்றி உலகம்அறிய செய்தாள்
தியோ தனது அண்ணனை ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறான். அண்ணன் கடிதத்தில் என்ன சொற்களை அடிக்கடி பயன்படுத்துகிறான் என்பதை தனித்து அடிக்கோடிட்டு அந்த சொற்கள் யாவும் தீராத சோகத்தையே வெளிப்படுத்துகின்றன. முதலில் நீ இந்த சொற்களை கைவிடு. சொற்களை மாற்றி பிரயோகம் செய்வதன் வழியே உன் வாழ்க்கை மாற்றிக் கொள்ள முடியும் என்கிறான் தியோ.
வான்கோவின் ஒவியத்தில் உள்ள கோடுகள் மிக தீவிரமானவை. அது போலவே அவன் பயன்படுத்தும் வண்ணங்களும் தனித்துவமானவை. அது போலதானிருக்கின்றன அவனது கடிதங்கள்.
தியோ நீ தூய இதயத்துடன் பிறந்திருக்கிறாய். அது உன்னை விட்டு ஒருபோதும் போகாது என்று வான்கோ ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறான். தியோவிற்கு எழுதப்பட்ட கடிதங்களும் தியோவின் வாழ்க்கையும் புனைவை விட விசித்திரமாகவே உள்ளது. வான்கோவின் கடிதங்கள் நான்கு தொகுதிகளாக வெளியாகி உள்ளன. அதை வாசிப்பது ஆகச்சிறந்த நாவல் ஒன்றை வாசிப்பதை போன்ற உன்னதமான அனுபவம் தரக்கூடியது.
தியோ நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறான். அரிதாகவே அவனை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம்.
**