அப்பாவின் பெயர்

புதிய சிறுகதை

பிப்ரவரி 9 2023

பேராசிரியர் அருண்சர்மா தொலைபேசியில் அவளை அழைத்தபோது இரவு ஒன்பது மணியிருக்கும். அவரது குரலில் அவசரம் தெரிந்தது

“சகுந்தலா உங்கப்பா வீட்டுக்கு வந்துட்டாரா“

“இல்லை. ஏதோ மீட்டிங் இருக்குனு வெளியே போயிருக்கார் இன்னும் வரலை“

“அவர் ஐசிஎல் அவார்ட் செலக்சனுக்குப் போயிருக்கார். அதுல உன் பேரு இருக்கு. அவர் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லலையா“

“இல்லையே. “

“மூணு நடுவர்ல உங்கப்பாவும் ஒருத்தர். நிச்சயம் உனக்கு அவார்ட் கிடைக்கும்னு நினைக்குறேன்“

“லிஸ்ட்ல என் பேரு இருக்குறது கூட எனக்குத் தெரியாது“

“பைனல் லிஸ்ட் உங்கப்பாவுக்கு ஒரு வாரம் முன்னாடியே வந்துருக்குமே. அவர் ஏன் உன்கிட்ட சொல்லலை“

“அதான் புரியலை“

“நீ அவருக்குப் போன் பண்ணி கேட்டுப்பாரு. நல்ல சான்ஸ் இது“..

அவளுக்கு ஐசிஎல் விருது பற்றி நன்றாகவே தெரியும். அவளது துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருது. மொழியியல் அறிஞரான அவளது அப்பா அந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வாங்கியிருக்கிறார்

அப்பா தன்னை விருதுக்குத் தேர்வு செய்திருப்பாரா என்று சகுந்தலாவிற்குத் தெரியவில்லை. இதை எப்படி அவரிடம் கேட்பது என்றும் புரியவில்லை.

மொழியியலில் அவளுக்கு ஆர்வம் உண்டானதற்கு அப்பா தான் காரணம். ஆனால் அவரது புகழே அவளது வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருந்தது. இதற்காகவே அவள் மைசூர் சென்று ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கினாள். சென்னையில் வேலைக்குச் சேரக்கூடாது என்பதாலே பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்தாள்.

அவளது கட்டுரைகள் நிறைய ஆய்விதழ்களில் வந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி அப்பா ஒரு போதும் பாராட்டி பேசியதில்லை. அவள் விக்டர் பானர்ஜியோடு இணைந்து நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறாள். அதில் ஒன்று கல்லூரி அளவில் பாடமாக வைக்கபட்டிருக்கிறது. அதைப் பற்றி நல்லவிதமாக ஒரு வார்த்தை கூட அப்பா சொன்னதில்லை.

ஒரு முறை பத்திரிக்கையாளர் இதைப்பற்றி அப்பாவிடம் கேட்டதற்கு “மீடியாக்கர் ரைட்டிங்“ என்று பதில் அளித்திருக்கிறார்.

அம்மா இருக்கும் வரை அப்பா சென்னையில் தானிருந்தார். அம்மாவின் மறைவிற்குப் பிறகு அவரது உடல்நலம் நலிவடையவே சகுந்தலா அவரைத் தங்களுடன் பெங்களூரில் வந்து வசிக்கும்படி கேட்டுக் கொண்டாள்

அப்பா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. சென்னையிலுள்ள வீட்டை வாடகைக்கு விடுவதில் இஷ்டமில்லை என்றார்

அவர்களுடையது போன்ற பெரிய வீடுகள் இப்போது குறைந்துவிட்டன. பங்களா போன்ற அதை விற்றால் அந்த இடத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிவிடுவார்கள். அவர்களுக்குச் சொந்தமாக இரண்டு வீடுகள் கிடைப்பதுடன் மிகப்பெரிய தொகையும் கிடைக்கும். ஒருமுறை சகுந்தலா இதைப்பற்றி அப்பாவிடம் பேசியபோது அவர் மறுத்துவிட்டதோடு தன் காலத்திற்குப் பிறகு அந்த வீட்டினை ஆய்வு மையமாக மாற்றப்போவதாகச் சொன்னார்

“அது சரியா வராதுப்பா“ என்றாள்

“என் வீட்டை என்ன செய்யணும்னு நான் முடிவு பண்ணிகிடுவேன்“ என்று உறுதியான குரலில் சொன்னார் அப்பா

அப்பாவோடு சண்டைபோட விருப்பம் இல்லாத காரணத்தால் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டாள்.

ஆனால் அம்மா இறந்தபிறகு தனி ஆளாக அவ்வளவு பெரிய வீட்டில் அவரால் குடியிருக்க முடியவில்லை. முடிவில் ஒரு தொண்டு நிறுவனம் ஒன்றின் அலுவலகம் செயல்படுவதற்காக வீட்டைக் கொடுத்துவிட்டு பெங்களூர் வந்து சேர்ந்தார்

அவர்கள் வீட்டின் மாடி அறையை அப்பா எடுத்துக் கொண்டார். அது விஸ்வாவின் அறை. அவன் அமெரிக்கப் பல்கலைகழகத்திற்குப் படிக்கப் போனபிறகு காலியாகவே இருந்தது.

பகல் முழுவதும் அப்பா ஏதாவது படித்துக் கொண்டேயிருப்பார். சில நேரம் புத்தகக் கடைக்குப் போவதற்காக வெளியே கிளம்பி போவார். அப்போதும் அவர்கள் காரை பயன்படுத்துவதில்லை. வாடகை டாக்சியில் தான் போய்வருவார்

சகுந்தலாவின் கணவர் மின்னணு நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக இருந்தார் .அவர்கள் வீட்டில் சமைப்பதற்கு ஒரு பஞ்சாபி இருந்தார். டிரைவர், பணியாளர்கள் என மூன்று பேர் வேலைக்கு இருந்தார்கள். சகுந்தலா கல்லூரிக்கு போய்வருவதுடன் சரி வீட்டுவேலைகள் எதையும் கவனிக்க மாட்டாள். பெரும்பான்மை நாட்கள் இரவு கிளப் விருந்து எனச் சென்றுவிட்டுப் பின்னிரவில் தான் வீடு திரும்புவாள். அந்த வாழ்க்கை முறை அப்பாவிற்குப் பிடிக்கவில்லை. அந்தக் கோபத்தை அவர் காட்டிக் கொள்ள மாட்டார்.

அப்பாவின் நண்பர் கண்ணபிரான் அசோகா காலனியில் இருந்தார். அவர் எப்போதாவது உரையாடுவதற்காக அவர்கள் வீடு தேடி வருவதுண்டு. மற்ற நாட்களில் பிடிவாதமாக அப்பா வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்தார். சில நாட்கள் இரவில் எதையோ எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறாள்.

அருண் சர்மா சொல்லும் வரை அப்பா ஐசிஎல் நடுவராக இருப்பதை அவள் அறியவில்லை. தனது பெயர் இறுதிபட்டியலில் இருப்பதைக் கண்டு அப்பா சந்தோஷப்பட்டிருப்பாரா.

ஏன் இதைப் பற்றிப் பேசவில்லை.

யாரை விருதுக்குத் தேர்வு செய்திருப்பார்கள்.

சகுந்தலா அப்பாவிற்குத் தொலைபேசி செய்தாள். அவர் போனை எடுக்கவில்லை. ஒருவேளை தேர்வுக்குழுவின் கூட்டம் இன்னமும் முடியவில்லையா.

யாரிடம் கேட்டால் தெரியும். முரளிதரனுக்கு அந்தக் கமிட்டியில் உள்ளவர்களை நிச்சயம் தெரிந்திருக்கும். அவள் முரளிதரனுக்குப் போன் செய்தாள்.

“என்ன சகுந்தலா.. ஐசிஎல் அவார்ட் என்ன ஆச்சு“ என்று கேட்டான்

“அதை கேட்க தான் அப்பா கிட்ட பேச டிரை பண்ணினேன். அவர் போனை எடுக்கலை உனக்குத் தெரியுமா“.

“மைசூர்ல கூட்டம் ஏழு மணிக்கே முடிஞ்சி போச்சே. உங்கப்பா உடனே கிளம்பிட்டாருனு சொன்னாங்க“

“யாருக்கு அவார்ட் “

“அது உங்கப்பாவுக்குத் தான் தெரியும். முகர்ஜியும் ஷியாம் பிரசாத்தும் கமிட்டில இருந்தாங்க. நாளைக்குக் காலையில அறிவிப்பு வரும்னு கேள்விபட்டேன்“

“நீ முகர்ஜிகிட்டே கேட்டு சொல்றயா“.

“அவர் இந்நேரம் பார்ல குடிச்சிட்டு இருப்பார். காலையிலே கேட்டு சொல்றேன்“

அப்பா ஏன் இது போன்ற விஷயங்களைக் கூடத் தன்னிடம் மறைக்கிறார் என்று அவளுக்குக் கோபமாக வந்தது. அவர் போனை எடுக்கவில்லை என்பதாலே தன்னைத் தேர்வு செய்திருக்கவில்லை என்பது அவளுக்குப் புரிந்திருந்தது.

••

அப்பாவின் ஆய்வுமுறைகள். அவர் முன்வைக்கும் கருதுகோள்கள் இன்று காலாவதியாகிவிட்டன. ஆய்வு வட்டத்தில் அவரை இன்று வாசிப்பவர் எவருமில்லை. ஆனால் அவர் அதை உணரவேயில்லை. அவர் வேறு ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருந்தார். அதில் ஆய்வு என்பது ஒப்பற்ற தியாகம். நிகரில்லாத உழைப்பு. பெரும் கண்டுபிடிப்பு. இன்று அப்படி எதுவுமில்லை. தனது பார்வையை, கோணத்தை உரிய சான்றுகளுடன் கோர்வையாக விவரித்து எழுதினாலே போதும். அவள் அப்படித் தான் எழுதுகிறாள். அப்பாவிற்கு அது பிடிப்பதில்லை.

அதைவிடவும் மொழியியல் துறையில் தன்னைவிட மேதை எவரும் இல்லை என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அது தான் பரிதாபம். இன்றைய ஆய்வாளர்களில் ஒருவர் கூட அவரைத் தேடி வருவதில்லை. கட்டுரைகளில் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் இவரைப் போன்றவர்களைத் தான் விருது குழுவின் நடுவராக நியமிக்கிறார்கள். அவரும் தனது கறைபடாத கரத்தை நிரூபித்துவிட்டுப் பெருமிதமாக நடந்து கொள்ளுவார். இதெல்லாம் அர்த்தற்ற நாடகம் என்று அவளுக்குத் தோன்றியது

எல்லாத் துறைகளிலும் வேண்டியவர்களுக்கு உதவி செய்வது. விருது கொடுப்பது. தேவையான ஆட்களை அணி சேர்த்துக் கொள்வது நடக்கத்தானே செய்கிறது. கோவிந்தப்பாவின் மகள் கல்லூரி முதல்வரானது அப்படித் தானே. அந்தக் கமிட்டியில் இருந்தவர்கள் கோவிந்தப்பாவின் மாணவர்கள். தங்கள் குருவை சந்தோஷப்படுத்த மகளை முதல்வராக்கிவிட்டார்கள். யாரோ சிலர் இதைக் கண்டித்துப் பேசியதை தவிர வேறு ஒன்றும் ஆகவிடவில்லை. அவள் முதல்வராக அதிகாரத்துடன் வேலை செய்கிறாள்.

அப்பா இன்றைய கல்விபுலத்தைப் புரிந்து கொள்ளவேயில்லை. அவர் அர்த்தமற்ற லட்சியக்கனவுகளுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சகுந்தலாவிற்குத் தோன்றியது.

••

கோல்டன் கிளப்பில் அன்றிரவு ரூபி மனோகரின் விருந்து இருந்தது. அதற்குப் போவதா அல்லது அப்பாவிற்காகக் காத்திருப்பதா எனத் தெரியாமல் குழப்பம் கொண்டாள் சகுந்தலா.

அப்பாவிற்கு மறுபடியும் போன் செய்தாள்.

“சொல்லும்மா“ என்றார் அப்பா

“மைசூர்ல இருந்து கிளம்பிட்டீங்களா“

“இல்லை. நான் நிம்மியை பார்க்க கோயம்புத்தூர் போயிட்டு வரலாம்னு இருக்கேன்“.

“இப்போ எதுக்குப்பா. நாளைக்கு உங்களுக்கு டாக்டர் அப்பாயிண்மெண்ட் இருக்கு. “

“வந்து பாத்துகிடலாம். “

ஐசிஎல் அவார்ட் பற்றிக் கேட்க நினைத்தாள். ஆனால் அதற்குள் அப்பா போனை வைத்துவிட்டார்

நிம்மி அவளது உறவுப்பெண். பெயர் நிர்மலா. அவள் பள்ளி ஆசிரியராக வேலை செய்கிறாள். அவளது வீட்டில் போய்த் தங்குவதை அப்பா விரும்புகிறார். நிம்மியின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லி தருகிறார். நிம்மியின் சமையலை ருசித்துச் சாப்பிடுகிறார். நிம்மியை பிடிப்பது போலத் தன்னை ஏன் அவருக்குப் பிடிக்கவில்லை என்று எரிச்சலாக இருந்தது

ஐசிஎல் அவார்ட் பற்றி ஏன் கேட்காமல் விட்டோம் என்று ஆத்திரமாக வந்தது. அப்பாவிற்கு மறுபடியும் போன் செய்தாள்

“பஸ் ஏறிட்டீங்களா. இல்லை ஹெஸ்ட் அவுஸ்ல வெயிட் பண்ணுறீங்களா“

“ஹெஸ்ட் அவுஸ்ல தான் இருக்கேன்“

“ஐசிஎல் அவார்ட் யாருக்கு முடிவு பண்ணுனீங்க“

அப்பா பதில் சொல்லவில்லை

“என் பேரு இருந்துச்சாமே“

“நான் தான் எடுத்துறச் சொன்னேன். “

“நீங்க உத்தமசீலர் ஆச்சே. அப்படிச் செய்யாம இருந்தா தான் ஆச்சரியம். “

அப்பா மௌனமாக இருந்தார். ஆத்திரத்தை அடக்கியபடியே கேட்டாள்

“யாருக்கு அவார்ட்னு சொல்ல மாட்டீங்களா“

“நாளைக்குப் பேப்பர்ல அறிவிப்பு வரும்“ என்று போனை வைத்தார் அப்பா

அவளது கோபம் உச்சத்திற்குச் சென்றது. தனக்கு இந்த விருது கிடைக்ககூடாது என்று அப்பாவே நினைக்கிறார். இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா. ஒருவேளை தான் வாங்கிய விருதை மகளும் வாங்க கூடாது என்று நினைக்கிறாரா. வாங்கினால் என்ன. அப்பா மகள் இருவரும் ஒரே துறையில் அறிஞராக இருக்கக் கூடாதா.

யோசிக்க யோசிக்கச் சிறுவயதிலிருந்தே அப்பா அவளை இப்படித் தான் நடத்திருவருவதாகத் தோன்றியது

அவள் பள்ளி பேச்சுபோட்டியில் பரிசு வாங்கிய போது அப்பா சொன்னார்

“யாரோ எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சிருக்கே. இதுக்குப் பரிசு கொடுத்துருக்காங்க. இதுல உன் ஒரிஜினலாட்டி ஒரு மண்ணும் கிடையாது. “

அம்மா தான் அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

இது போலத் தான் அப்பாவின் கண்டிப்பு எப்போதும் இருந்தது. தன் பெயரை எங்கேயும் அவள் பயன்படுத்தக் கூடாது என்பதில் அப்பா கறாராக இருந்தார். ஆனால் அவள் அதை ஒரு தங்கசாவி போலத் தேவையான போது பயன்படுத்திக் கொண்டாள். சில ஆய்வரங்குகளில் அவள் அழைக்கபட்டதற்கு அப்பா பெயர் தான் முக்கியக் காரணம். அதை அப்பா அறியமாட்டார்.

2014ல் அவளது ஆய்வுகட்டுரை அமெரிக்க ஆய்வு இதழில் வெளியான போது அப்பாவிடம் ஆசையாகக் காட்டினாள்

அவர் அதைச் சுண்டுவிரலால் புரட்டியபடியே சொன்னார்

“குக்கப் பண்ணி எழுதியிருக்கே. இந்த டேட்டா எல்லாம் நீ கலெக்ட் பண்ணினது இல்லே. அடுத்தவங்க உழைப்பிலே ஏன் பேர் வாங்க ஆசைப்படுறே“

“இப்போ ரிசர்ச் இப்படித் தான் நடக்குது“

“அந்த குப்பையில நீயும் சேராதே. அவ்வளவு தான் சொல்வேன்“

“நான் உங்க ஸ்டுடண்ட் இல்லை. உங்க மக. அதை மறந்துடுறீங்க“

“ரிசர்ச் பீல்ட்ல அப்பா மகள் எல்லாம் ஒரு முக்கியத்துவமும் கிடையாது. அதைச் சொல்லி ஏமாற்றவும் முடியாது“

அதிலிருந்து தனது கட்டுரை எதையும் அப்பாவிடம் காட்டியதில்லை.

••

யார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஷியாம் அங்கிளுக்குப் போன் செய்தாள். அவர் மாதவ் காட்கில் என்பதைச் சொன்னதோடு நான் உன்னைத் தான் சப்போர்ட் பண்ணினேன் உங்கப்பன் கேட்கலை என்றார்

தனது ஆற்றாமையை மறைத்துக் கொண்டு தேங்ஸ் அங்கிள் என்றார். அப்பா தனது குற்றவுணர்வை மறைக்க நினைக்கிறார். இதனால் தான் நிம்மியை காண கோவை செல்கிறார். அந்தக் குற்றவுணர்வை கிண்டிவிட வேண்டும் போலிருந்தது

மறுபடி அப்பாவிற்குப் போன் செய்தாள்

“கங்கிராட்ஸ்பா. மாதவ் காட்கில் நல்ல சாய்ஸ். “

“உனக்கு யாரு சொன்னது“

“நீங்க சொல்லாட்டி தெரிஞ்சிகிட முடியாதா“

“உன்னோட இந்தப் புத்தி தான் அவார்ட் தராமல் போனதுக்கு காரணம்“

“உங்களை விட நான் இன்டலிஜென்ட்பா. அதை உங்களாலே ஏத்துகிட முடியலை, நீங்க என்ன கண்டு பொறாமை படுறீங்க“

“ஹம்பக். உன் தகுதிக்கு மேல உனக்கு எல்லாமும் கிடைச்சிருக்கு. நீ அதுக்கு டிசர்வ் ஆனவ இல்லை“

“அதுக்கு உங்க பேரு தான் காரணம்னு நினைக்குறீங்களா“

“நிச்சயமா. இதைப் பற்றி நான் பேசவிரும்பலை“

“உண்மையை எப்போவாவது பேசிதானப்பா ஆகணும்“

“நான் கேட்கவிரும்பலை“

என்று அப்பா போனை வைத்துவிட்டார். அப்பாவின் அந்தத் தோல்வி ஏனோ அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.

நிம்மிக்கு போன் செய்து தனக்கு வரவேண்டிய விருதை அப்பா யாருக்கோ கொடுத்துவிட்டதைப் பற்றிச் சொன்னாள்

அவள் அப்பாவியாக “அக்கா.. உங்களுக்குக் கிடைச்சிருந்தா எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்“ என்றாள்

அப்பா அவள் வீட்டிற்கு வரப்போவதைப்பற்றிச் சொல்லிவிட்டு “நீ இதைப்பற்றிக் கேட்க வேண்டாம்“ என்றாள்

நிம்மிக்கு அது புரியவேயில்லை

••

அன்றிரவு சகுந்தலா தனது கணவர் மகாதேவனிடம் நடந்த விஷயங்களைச் சொன்னாள்

அவர் சிரித்தபடியே சொன்னார்

“உங்கப்பா அப்படி நடந்துகிடாம இருந்தா தான் ஆச்சரியம்“

“அப்போ அவர் செய்தது சரியா“

“அவரை மாதிரி ஆட்களைப் பாக்குறது சிரமம் சகுந்தலா. அந்தத் தலைமுறை இனிமே வராது“

“அப்போ எனக்கு அந்த அவார்ட் வாங்க தகுதியில்லையா“

“அது எனக்குத் தெரியாது. ஆனால் உங்கப்பா தப்பா ஒருத்தருக்கு அவார்ட் தர மாட்டார். அவர் பெரிய ஸ்காலர்“

“அவர் செய்தது சரினு சொல்றீங்களா“

“நீ தான் ஒவரா ரியாக்ட் பண்ணுறே. பாவம் உங்கப்பா. உனக்குப் பயந்துட்டு கோயம்புத்தூர் போறார்“ எனச்சிரித்தார்

அவள் பதில் சொல்லவில்லை. அன்றிரவு அவளுக்குச் சரியான தூக்கமில்லை. பழைய நினைவுகள் மனதில் தோன்றியபடியே இருந்தன. விடிகாலையில் எழுந்து கொண்டாள். அப்பா இந்நேரம் கோவை போய்ச் சேர்ந்திருப்பார். பனிமூட்டமான சாலையில் நடந்து நிம்மி வீட்டை நோக்கி போய்க் கொண்டிருப்பார். அவருக்குப் போன் செய்ய வேண்டும் போலிருந்தது. அந்த ஆசையைக் கட்டுபடுத்திக் கொண்டு காபி தயாரித்தாள். அப்பாவிற்காகவும் ஒரு கோப்பையைக் கலந்தாள்.

அவர் இல்லாவிட்டால் என்ன என்று நினைத்தபடியே தனது காபியோடு செய்தி தாளை படிக்க ஆரம்பித்தாள். அதில் அவார்ட் செய்தி வந்திருந்தது. படிக்க மனதின்றிப் பேப்பரை கிழே போட்டாள்.

அப்போது நிம்மியை நினைத்து மனதில் பொறாமை எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை

••

0Shares
0