புகழ்பெற்ற ஓவியரான ஃபிரைடா காலோ வாழ்க்கையை விவரிக்கும் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. ஃபிரைடாவின் டயரி மற்றும் கடிதங்களைப் பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபிரைடாவின் ஓவியங்கள் திரையில் உயிர்பெற்று இயங்குவது அழகானது. அனிமேஷன் மற்றும் ஆவணக்காட்சிகள் மூலம் ஃபிரைடா வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுகின்றன.

இதற்கு முன்னதாகச் சல்மா ஹாயக் நடித்த ஃப்ரைடா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு ஜூலி டெய்மரால் இயக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஆவணப் படம் அதிலிருந்து நிறைய வேறுபடுகிறது.
குறிப்பாக ஃப்ரைடாவின் குடும்ப வரலாறு. பள்ளி நினைவுகள். அப்பா புகைப்படக்கலைஞராக இருந்தது. ஃப்ரைடாவின் ஓவியத்தில் தந்தையின் நினைவுகள் வெளிப்படுவது போன்றவை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஃப்ரைடாவின் கணவரும் புகழ்பெற்ற ஓவியருமான ரிவேராவை சந்தித்துக் காதல் கொண்ட நாட்கள். அவர்களின் திருமணம். ஓவியக்கண்காட்சிக்காக 1931 ஆம் ஆண்டு மேற்கொண்ட முதல் அமெரிக்கப் பயணம். நியூயார்க்கில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சி. அதற்குக் கிடைத்த வரவேற்பு. பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி போன்றவற்றையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பழங்குடியினரான ஜாபோடெக் மக்களின் தெஹுவானா ஆடைகளை ஃப்ரைடா தனது அன்றாட உடையாக ஏற்றுக்கொண்டார். அந்த உடையும் அவரது அணிந்துள்ள ஆபரணங்களும் வானுலகின் தேவதையைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
அமெரிக்காவிலிருந்த நாட்களில் ஃப்ரைடா கர்ப்பமாகியிருந்தார். அந்தக் கருக் கலைந்து போன துயரத்தைப் படத்தில் பகிர்ந்து கொள்கிறார். சாலையோரம் அமர்ந்து ஓவியம் வரைவது. ரிவேரா ஃப்ரைடாவை மணவிலக்குச் செய்து விட்டு அவளது தங்கையைக் காதலித்து அவளுடன் வாழ ஆரம்பித்தார். அதை ஃப்ரைடா ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதைப் படம் உணர்ச்சிப்பூர்வமாகச் சித்தரித்துள்ளது
சர்ரியலிஸ்டுகளின் நட்பு. அவர்கள் நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட நினைவுகளைப் படத்தில் ஃப்ரைடா விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு முதுகெலும்பு முறிந்த நிலையில் படுத்து கிடந்த அவரது நாட்கள். அப்போது அனுபவித்த உச்சபட்ச வேதனை. அவற்றைத் தனது ஓவியங்களில் கனவு நிலைப்பட்டது போல ஃப்ரைடா வரைந்திருக்கிறார். தனது இருப்பை இரு நிலைகளில் இரண்டு பெண்ணாக வரைந்திருக்கிறார் ஃப்ரைடா. அவரது ஓவியத்தில் இடம்பெற்றுள்ள குரங்கும் கிளிகளும் ஆசையின் அடையாளமாக இருக்கின்றன.

ஃப்ரைடாவைப் அவரது கலையையும் புரிந்து கொள்ள, புரட்சிக்குப் பிந்தைய மெக்சிகோவின் வரலாற்றை அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் மெக்சிகோ புரட்சி தொடங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர், புதிய அரசாங்கம் கலைகளின் மூலம் தனக்கான தேசிய அடையாளத்தை உருவாக்க முயன்ற காலத்தில் அதன் முக்கியப் படைப்பாளியாக இருந்தவர் ரிவேரா. அதுவே அவர் மீது ஃப்ரைடா காதல் கொள்ள முக்கியக் காரணியாக இருந்தது
ஃப்ரைடாவின் தனிமையே அவரை ஓவியராக்கியது. பிரிவும் ஏமாற்றமும் வலியும், ஒன்று சேர்ந்து அவரை முடக்கிய போது தனது கலைப்படைப்பின் வழியே அவர் தனக்கான மீட்சியை உருவாக்கிக் கொண்டார்.
ரிவேராவின் நிழலில் வாழ்ந்த வருடங்களில் அவர் தனது கலைத்திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. பின்பு ஒரு சுயாதீன கலைஞராக வெளிப்பட்டு, 1938 இல் நியூயார்க்கில் தனது தனிக் கண்காட்சியை வைத்தபின்பே முழுமையான ஓவியராக அறியப்பட்டார்.
ஃப்ரைடாவை பற்றிப் புதிய தகவல்கள், உண்மைகளை அவரது சொற்களின் மூலம் அறிந்து கொள்ள வைக்கிறது இந்த ஆவணப்படம். அனிமேஷன் மூலம் ஓவியம் வரையும் காட்சிகளை உருவாக்கி, நேர்த்தியான இசையோடு அதைக் காட்சிப்படுத்தியிருப்பது ஆவணப்படத்திற்குப் புதிய முகத்தை உருவாக்கியுள்ளது

ஆவணப்படத்தின் முடிவில், இயக்குநர் ஃப்ரைடா மரணத்தை ஒரு உருவகமாக மாற்றுகிறார், அவரது மிகவும் பிரபலமான ஓவியங்களில் ஒன்றான The Wounded Deer ஓவியத்திலிருப்பது போல, ஒன்பது அம்புகளால் துளைக்கப்பட்ட மானின் உடலாக ஃப்ரைடா காட்சியளிக்கிறார்.
ஃப்ரைடாவின் வாழ்க்கை அனுபவங்களுக்கும் அவரது ஓவியங்களின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை இந்த ஆவணப்படம் சிறப்பாகப் புரிய வைக்கிறது. அவ்வகையில் இப்படம் சிறந்த கலைப்படைப்பாக மாறுகிறது.